16/08/2021

ஒரு தேடலின் பாதை - பாரிஸ் டு பாண்டிச்சேரி

- பவித்ரா 


ஸ்ரீ அன்னையுடன்  ‘பவித்ரா’

(அரவிந்தம்-150)

உலகப் போர் பற்றி நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கலாம். முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் உள்ள முக்கியமான, நடைமுறை வேறுபாட்டை நீங்கள் கவனித்திருக்கலாம். நான்கு ஆண்டுகாலம் நீடித்த முதல் உலகப் போரின் போர் முறையை ‘பதுங்குகுழி போர்முறை’ என்பார்கள். பதுங்கு குழி வெட்டி, அதில் பகல்- இரவு என நாட்கணக்கில் குளிர், மழையைப் பொருட்படுத்தாமல் முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. நோயிலும், வெறுமையிலும் , சிலநேரங்களில் எதிரிகளின் குண்டுப் பொழிவிலும் என நாட்களை நகர்த்த வேண்டி இருந்தது.

1914-இல் எனது இருபதாவது வயதில் இளம் ராணுவ அதிகாரியாக இருந்தேன். எக்கோல்* பாலிடெக்னிக்கில் ஓராண்டு படிப்பை முடித்து இருந்தேன். அங்கு சேர்வதற்கு முன்பே எனக்கு கொஞ்சம் ராணுவப் பயிற்சி இருந்தது. எனவே 1914 ல் முதல் உலகப் போர் தொடங்கியதும் ஆகஸ்ட் மாதத்தில் நான் ராணுவ பணிக்கு அழைக்கப்பட்டேன். அப்போது பிரான்ஸ் பெருமைப்பட்டுக் கொண்ட 105 பேட்டரி எனப்படும் பீரங்கிப் படையில் சேர்க்கப்பட்டேன்.

அந்த நேரத்தில் என் வயதையொத்த மற்ற இளைஞர்களைப் போல நானும் ஆசாபாசங்களைக் கொண்டிருந்தேன். நான் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து அவ்வாறு வளர்க்கப்பட்டாலும், எனக்கு மத விஷயங்களில் பெரிய ஆர்வம் இல்லை. பாலிடெக்னிக்கில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்ததால் இவ்வாறு இருந்திருக்கலாம். அதேபோல ஓய்வு நேரத்தில் அமானுஷ்யம் - மனக் கண்ணால் பார்த்தல், டெலிபதி (புலன்கள் இல்லாமல் உள்ளத்தினால் தொடர்பு), மீடியம் (ஆவி உலகத்துடன் தொடர்பு), பெண்டுலம் (ஊசல்) போன்றவை பற்றிப் படித்திருந்தேன். ஆனால் பழகவில்லை.

இப்படி ஒரு புத்தகம், அடுத்த புத்தகம் என யூத மரபில் உள்ள கபாலா (ரகசிய தீட்சை இயக்கம்) பற்றியும், அதன்பின் ரசவாதம் பற்றி என்று, நவீன அமானுஷ்ய வாதிகள் என்று, இந்தியா பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

பிரம்ம ஞான சபை நூல்கள் மூலம் மறுபிறப்பு, கர்மா, ஜீவன் முக்தி, என்றெல்லாம் படித்தேன். மறுபிறப்பு, கர்மா எல்லாம் எனக்குப் புரிந்தது மட்டுமல்ல, அவை சரியானதுதான் என்றும் ஏற்றுக் கொண்டேன். அறிவியலின்படி நிரூபிக்க முடியாது என்று தெரிந்தாலும் என் மனம் அவற்றை இயல்பாக ஒப்புக்கொண்டது; ஏற்றுக்கொண்டது. இந்தியாவிலிருந்து வந்த கருத்துக்களால் என்னுடைய புரிதல் மாறியது. அவை என்னை வேறு ஒரு படிநிலைக்குக் கொண்டு சென்றன.

இந்திய மதங்களை இரண்டு வகையாகத் தெரிந்து கொள்ளலாம். ஒன்று, அதைப் பற்றிப் படிப்பது, வெளியிலிருந்து ஆய்வு செய்வது- மேற்கத்திய மற்றும் பிரஞ்சுக்காரர்கள் செய்வதைப் போல; ஒரு எறும்புப் புற்றை , தேனீக் கூட்டத்தை வெளியிலிருந்து ஆராய்ந்து தெரிந்து கொள்வதைப் போல. மற்றொன்று, வாழ்ந்து பார்ப்பது. எனக்கு இரண்டாவது மிகவும் பிடித்திருந்தது. இவை உண்மை என்று தெரிகிறது, அதை ஏன் வாழ்ந்து பார்க்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.

இவையெல்லாம் எனக்குள் நடந்துகொண்டிருந்தபோது, புறவுலகில் நான் போரில் ஈடுபட்டிருந்தேன். பிரான்ஸ் படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்தது 1918 நவம்பரில். நான் ஜெர்மனிக்குள் நுழைந்த பின் எனக்கு காய்ச்சல் வந்தது. அது  ‘ஸ்பானிஷ் காய்ச்சல்’ என்ற கொள்ளைநோய். ஜெர்மனியில் மட்டுமல்ல உலகமெங்கும் பரவியது. சுமார் இரண்டு கோடி மக்கள் அந்தக் கொள்ளை நோயால் உயிரிழந்தனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. என்னுடன் மருத்துவமனையில் இருந்தவர்கள் நாள்தோறும் நாலைந்து பேர்கள் இறந்து போனார்கள்.

நான் மரணத்தின் வாசலில் நின்றிருந்தேன். எனக்குள் ஒரு உணர்வு தீவிரமாக எழுந்தது. உயிர் பிழைத்தால், என்னுடைய ஆன்மிக இலக்கை அடைவது; ஆன்மிகக் கருத்துக்களை வாழ்ந்து பார்ப்பது; அதற்காக என்னையே ஒப்புக் கொடுப்பது என்ற எண்ணம் மேலோங்கியது. அந்த எண்ணமே என்னை மரணத்தில் இருந்து காப்பாற்றியது என்று நினைக்கிறேன்.

போர்முனையில் இருந்த என்னை தலைமையகத்துக்கு மாற்றினார்கள். எனக்கு அப்போது வயது இருபத்தி நான்கு. படிப்பை பாதியில் விட்டுவிட்டு படையில் சேர்ந்ததால் படிப்பை முடிக்க நினைத்தேன். மீண்டும் எகோல் பாலிடெக்னிக் வந்து சேர்ந்தேன். படிப்பை முடித்த பிறகு பாரிஸில் என்ஜினீயராகப் பணி அமர்ந்தேன். பாரிஸ் மாநகரில் பாலங்கள், சாலைகள் அமைப்பது, பழுது பார்ப்பது எல்லாம் என் கட்டுப்பாட்டில் நடந்தன. ஆனாலும் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருந்தது.

நான் வேலையை விட்டுவிட்டேன். என் குடும்பத்தினருக்குப் பெரிய அதிர்ச்சி அது. புத்த மதமும் இந்து மதமும் நெருக்கமானவை என்று நான் கருதினேன். சில நண்பர்கள் உதவியுடன் ஜப்பான் போனேன். அங்கு ஒரு என்ஜினீயராக நான் போகவில்லை; சாதாரணமானவனாகப் போனேன். இந்தியாவில் வெளிநாட்டுக்காரர்களை ஏற்றுக்கொள்வதை போல ஜப்பானில் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே என் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது. வாழ்க்கை மிகவும் சிரமமாக இருந்தது. நான்காண்டு காலம் இருந்தேன்;  இந்திய, ஜப்பானிய, சீன ஆன்மிகப் பயிற்சிகளை கற்றேன்.

அந்தக் காலத்தில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். எனக்கு ஏதாவது ஆன்மிக சமிக்ஞைகள் கிடைக்கின்றனவா என்று விழிப்புடன் கவனித்து வந்தேன். மத்திய ஆசியப் பகுதி, குறிப்பாக இமயமலை சார்ந்த விஷயங்கள் என் மனதில் அடிக்கடி தோன்றியபடி இருந்தன.

அப்போது மங்கோலியத் துறவிகளின் குழு ஒன்று ஜப்பான் வந்தது. நான் அப்போது வேலை பார்த்த தொழிற்சாலையை அவர்கள் பார்வையிட வந்தார்கள். நான் இமயமலைப் பகுதிகளுக்குச் செல்ல விரும்பியதால், அந்த மங்கோலியர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்களுடன் மொழிப் பிரச்னை காரணமாக பேச முடியவில்லை. அவர்களுடன் வந்த ஒருவரின் மனைவிக்கு ஆங்கிலமும் சீன மொழியும் தெரிந்திருந்தது. அவர்மூலம் ஓரளவு தொடர்பு கொண்டேன். ஒரு மங்கோலியத் துறவி மூலம் மங்கோலிய மொழியைக் கற்க ஆரம்பித்தேன். அது மிகக் கடினமாக இருந்தது. அந்த மொழியைக் கற்க எந்தப் புத்தகங்களும் இல்லை.

அந்தத் துறவி காட்டியபடி எப்படியோ சீனாவின் வடக்குப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மடாலயத்தை அடைந்தேன். அங்கு ஒன்பது மாதங்கள் இருந்தேன்;  கஷ்டமாக இருந்தது. ஆனால் என் மனதில் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. நான் இந்த பூமியில் பிறப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதை நிறைவேற்றவும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அது தெருப் பெருகுவதாக இருந்தால் கூட மகிழ்ச்சியாகச் செய்வேன். அதுதானா என்பதை இறைவா, எனக்குக் காட்டு என்று என் மனம் அரற்றிக் கொண்டிருந்தது.

அப்போது எனக்கு அரவிந்தர் பற்றியும் அன்னை பற்றியும் ஓரளவுக்குத் தெரியும். நான் பிரான்ஸில் இருந்தபோது அரவிந்தரின் ‘ஆர்யா’ பத்திரிக்கை என் கையில் கிடைத்தது. அது சுவாரசியமாக இருந்தது. ஆனால் தொடர்பு ஏற்படவில்லை. ‘தெய்வீக வாழ்வு’ முதல் அத்தியாயம் படித்திருந்தேன். ஆனாலும் நான் ஈர்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. நான் ஜப்பானுக்கு வந்தபோது அன்னை ஜப்பானை விட்டு கிளம்பிப் போய்விட்டார். நண்பர்கள் மூலமாக அவரைப்பற்றி அறிந்திருந்தேன். எனவே பாண்டிச்சேரிக்கு கடிதம் எழுதினேன். இரண்டு முறை எழுதினேன். ஆனால் பதில் வரவில்லை.

மங்கோலியாவில் கடுமையான குளிர்காலத்தைக் கடந்த பிறகு அங்கிருந்து கிளம்ப நினைத்தேன். எங்கு போவது? அடுத்து இந்தியாவுக்குப் போக நினைத்தேன். இந்தியா வழியாக பிரான்ஸுக்கு வருகிறேன் என்று நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால் பிரான்ஸுக்கு போவதில்லை என்று நான் உறுதியாக இருந்தேன். இலங்கை வந்து சேர்ந்தேன். அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு வாசல் அது. இலங்கைக்கு அருகில் இருந்தது பாண்டிச்சேரி. அதன் பிறகு அடையாறு (பிரம்ம ஞான சபை ) போகலாம் என்று கருதினேன். இலங்கையில் இருந்து ரயில் பயணமாக பாண்டிச்சேரி வந்தேன்.

‘ஹோட்டல் ஐரோப்பா’வில் அறை எடுத்தேன். உடனே கிளம்பி ஆசிரமம் வந்து அரவிந்தரைப் பார்த்தேன். என்னைப் பற்றி சொன்னேன். ‘‘மறுநாள் வா” என்றார் அவர். அன்று மாலை அன்னையைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு, அவரது கண்களின் ஒளி, இப்போதும் நினைவில் உள்ளது. அவர் என்னிடம் சில வார்த்தைகள் பேசினார். மறுநாள் காலை மீண்டும் சென்று அரவிந்தரைப் பார்த்தேன். அவரிடம் எனது தேவையை எடுத்துரைத்தேன்.

“எனக்குத் தேவை முக்தி. மறுபிறப்பில் இருந்து விடுதலை. எனது கர்வம், அறியாமை, போலித்தனம், பாவம் ஆகியவற்றிலிருந்து விடுதலை வேண்டும். மோட்சமே எனது லட்சியம். அதற்காக கஷ்டங்களைத் தவிர்க்க நான் விரும்பவில்லை. ஆனால் நான் தேடுவது ஒளியை, ஞானத்தை, உண்மையை” என்றேன்.

அரவிந்தர் சொன்னார்: நீ கேட்பதைக் கொடுக்கக்கூடிய சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியனான உன்னால் அவர்களை எளிதில் அணுக முடியாது. நீ தேடுவது பிரம்மானுபவம். அது முதல் படி தான். ஆனால் அவசியமான படி. அதற்கு அடுத்த நிலை ஒன்று உள்ளது. தெய்வீக சக்தியை மனித விழிப்புணர்வில் இறங்கச் செய்வதும், அதன்மூலம் மனித இனத்தை அடுத்த படிநிலைக்கு உயர்த்துவதும் ஆகும். நான் அந்தப் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நீயும் விரும்பினால் அந்தப் பணியில் ஈடுபடலாம். இங்கே தங்கிக் கொள்ளலாம்.

நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதித்தார். அதுவரை இருந்த என் வாழ்வு முடிந்தது. உண்மையைத் தேடுவது, ஒளியின் ஊற்றுக்கண் தேடுவது என்ற என் தேடல் முடிந்தது. வேறொன்று தொடங்கியது. நடைமுறைப்படுத்துவது, அனுபவம் ஆக்குவது தொடங்கியது. ஏனெனில் இம்முறை நான் என் குருவை- ஸ்ரீ அரவிந்தரைக் கண்டடைந்தேன்.

அவர் என்னை ஏற்றுக் கொண்டபோது ஆசிரமம் உருவாகவில்லை. சில வீடுகள், அதில் சில சீடர்கள் இருந்தார்கள். ஓராண்டு கழித்து 1926-இல் தான் ஆசிரமம் உருவானது. நான் பேறு பெற்றவன். அவரை தினமும் பார்த்தேன். அவர் பேச்சைக் கேட்டேன். என் சந்தேகங்களைக் கேள்விகளாக்கி தெளிவு பெற்றேன்.

என் அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான்: நீங்கள் எதைச் செய்தாலும் அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அரைமனதுடன் செய்யாதீர்கள். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் ஈடுபடுங்கள். உங்கள் தொழில், பணி என எதுவாக இருந்தாலும் அவற்றில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுங்கள்.

இது சின்னதாக இருக்கிறது, சுலபமாக இருக்கிறது, பாதுகாப்பாக இருக்கிறது,  நிறைய பிரச்னைகள், தொல்லைகள் அற்றது என்பதற்காக எதையும் தேர்ந்தெடுக்காதீர்கள். இந்த விஷயங்கள் எல்லாம் முக்கியமற்றவை. உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். அதில் முழுமையாக ஈடுபடுங்கள்.

உங்களுக்கு வழிகாட்டுதல் தானே கிடைக்கும். தவறுகள், முட்டாள்தனங்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் உங்களுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு கை இருக்கும். இறுதியில் உங்கள் எல்லாவிதமான அனுபவத்திற்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும். அப்படித்தான் நான் அடைய வேண்டிய இடத்தை அடைந்தேன்.


* எக்கோல் பாலிடெக்னிக் 

எக்கோல் பாலிடெக்னிக் என்பது, பாரிஸ் நகரின் தென்மேற்குப் பகுதியான பாலிசோவில் உள்ளது. நெப்போலியன் காலத்தில் (1804-இல்) ராணுவ அகாதெமியாக இருந்தது. அதில் உயர்குடியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். படிப்பு முடிந்த பின் பெரும்பாலோர் ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்வார்கள். இந்த பாலிடெக்னிக் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் முதல் உலகப்போரில் இறந்தார்கள் என்று குறிப்பு உள்ளது. காண்க சிலை. இப்போது அது ராணுவ அகாதெமியாக இல்லை என்றாலும் அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் தான் நடக்கிறது.

 ***

ஆசிரியர் அறிமுகம்: 

பவித்ரா (எ) பிலிப் பார்பியார் செயின்ட் ஹில்லாரி
(1894 ஜனவரி 16  - 1969 மே 16)


அரவிந்தரின் சீடர் திரு. பிலிப் பார்பியார் செயின்ட் ஹில்லாரி ஒரு பிரெஞ்சுக்காரர். அரவிந்தரால்  ‘பவித்ரா’ என்று பெயர் சூட்டப்பட்டவர். 

1894 ஜனவரி 16 இல் பிறந்தவர். அரவிந்தர் ஆசிரமம் உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளார். 44  ஆண்டுகள் ஆசிரமத்தில் வாழ்ந்தார். 

அரவிந்தர் மற்றும் அன்னையின் பேச்சுக்கள், எழுத்துக்களை மூன்று நூல்களாகத் தொகுத்துள்ளார். அவரே கல்வி பற்றி ஒரு நூலையும் எழுதியுள்ளார். 

1969 மே மாதம் 16 தேதி தனது எழுபத்தி ஐந்தாம் வயதில் காலமானார்.



 




No comments:

Post a Comment