16/08/2021

ஞானபாநு (வாழ்த்துக் கவிதை)

-மகாகவி பாரதி


(மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்புப் பதிவு- 5)

திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு. 1

கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள். 2

அனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3

பண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்கும் ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின். 4



குறிப்பு:

விடுதலைவீரர் சுப்பிரமணியசிவா நடத்திய ‘ஞானபானு’ இதழின் மூன்றாமாண்டு துவக்க இதழுக்கு (ஏப்ரல் 1915) மகாகவி பாரதி எழுதிய வாழ்த்துக் கவி இது.


No comments:

Post a Comment