16/08/2021

வள்ளுவர் கண்ட அகவாழ்வு

-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்



மருதத்திணை வளர்ச்சி

மனிதன் ஆதியில் பச்சை இறைச்சியைத் தின்று பல காலம் வாழ்ந்தான்; அதன் பின்னர்ப் பல்லாயிரம் ஆண்டு கள் கழித்துச் சில விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு வேலை செய்ய அவற்றைப் பயன் படுத்தினான். இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்துத்தான் 'குடும்பம்' என்ற ஒன்றை வைத்து நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கினான். இக் குடும்ப வாழ்க்கையிலேதான் தமிழ் இலக்கணங்கூறும் 'மருதத்திணை' தோன்றலாயிற்று. மருதத் திணையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வழி வகுத்துக் கொண்டன. இப்பொழுதுதான் மனிதனுடைய சமுதாய வாழ்க்கை (Social life) தொடங்கிற்று. இத்தகைய வாழ்க்கையில் பல அல்லல்களும் உடன் தோன்றின. நன்மையையும் தீமையுங் கலந்துதானே உலகம் வாழ்கிறது! இதுவரை ஒருவரைப் பற்றியுங் கவலை கொள்ளாமல் தன் நலன் ஒன்றையே கருதி வாழ்ந்த மனிதனுக்கு, இப்பொழுது புதிய அனுபவங்கள் தோன்றலாயின. இவற்றில் ஓரளவு மகிழ்ச்சியும் ஓரளவு வெறுப்புங் காணலாயினான் மருதநில மனிதன். தன்னுடன் வாழ்வை நடத்த வந்துள்ள ஒரு பெண்ணின் நலத்தீங்குகளில் தானும் பங்கு கொள்ளத் தொடங்கியதே அவனது புதிய அனுபவம். மேலும், வீட்டினுள் தங்கியிருக்கும் அவளுக்கும் சேர்த்து உணவு தேடவேண்டிய பொறுப்பும் அவனதா யிற்று. நாளாவட்டத்தில் அவர்கள் வாழ்வின் பயனாகத் தோன்றியுள்ள புது உயிர்கட்கும் உணவு சேகரிக்க வேண்டிய கடமை அவனதாயிற்று. இக் கடமைகளில் ஓரளவு மகிழ்ச்சி இருந்ததை அம மனிதன் உணராமற் போகவில்லை. இம் மகிழ்ச்சியே உலகிடை மனிதன் சமுதாய வாழ்க்கை வாழ வழி செய்தது. தனிக் குடும்பங்கள் பல ஓரிடத்தில் தங்கி வாழ வேண்டுமாயின், ஒவொருவரும் தம் உரிமையைச் சிறிது இழக்கத்தான் வேண்டும். சுதந்தரத்துடன் வாழ்ந்து பழகிய மனிதனுக்குத் தன் விருப்பம் போலச் செயல் செய்யும் உரிமை, சிறிது குறைந்தாலும் அதிக மனக் கசப்புத் தோன்றத்தானே செய்யும்? அவ்வித நிலைமையிலிருந்து அவன் விடுபட ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழிதான் ஊர் முழுவதையும் ஒரு குடும்பமாக நினைத்து வாழும் முறை. இவ்வித வாழ்க்கை முதலில் வருத்தத்தைத் தரும் ஒன்றாயினும், நாளடைவில் ஓர் இன்பத்தையும் தரலாயிற்று. பிறர்க்கென வாழும் வாழ்க்கையில் ஒப்பற்ற இன்பம் இருத்தலை உணரத் தலைப்பட்ட அன்றுதான் மனிதன் விலங்கிலிருந்து வேறு பிரிந்து வாழ்ந்தான் என்று கூற வேண்டும்.

இரு வகை அறம்

மேற்கூறிய முறையில் ஒரு சமுதாயம் அமைய வேண்டும். ஆனால், சுலபமாகக் கூறிவிட்டோமே தவிர, வாழ்க்கையில் இந்நிலை அமையப் பலகாலம் செல்லும். இத்தகைய சமுதாயத்தை அமைக்கவே குறள் அடிகோலிற்று. உலகிடைப் பிறந்த ஒவ்வொருவனும் வாழ உரிமை பெற்றவன்தான். அவ்வாழ்க்கை எத்தகையதாக அமைதல் வேண்டும்? இல்வாழ்க்கை என்று கூறப்பெறும் இருவர் கூடி வாழும் வாழ்க்கையும், துறவறம் என்று ஒருவனே வாழும் வாழ்க்கையும் உலகிடை உண்டு. இவ்விரு வகையினுள் எதனைக் குறள் போற்றிக் கூறிற்று? இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறினர். ஆனால், இவை இரண்டின் அடிப்படையையும் நன்கு ஆய்ந்தால், சில உண்மைகள் நன்கு விளங்கும். துறவி எதன்பொருட்டு வாழ்கிறான்? தன் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு என்று கூசாமல் விடை கூறலாம். ஆனால், இல்வாழ்வான் தன் வாழ்வோடு, பிறர் வாழ்வையும் பயனுடையதாகச் செய்யவே வாழ்கிறான்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை 
(குறள்-41)

என்பது குறள். எனவே, இரு பயன் எய்த வாழும் இல் வாழ்கையே வள்ளுவர் பெரிதும் விரும்புகிறார் என்பதில் ஐயமின்று. இது கருதியே அவற், 'அறன்' எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுகிறார். இல்வாழ்க்கை என்ற ஒன்றாலேயே உலகம் நன்கு வாழமுடிகிறது. தான் ஒருவன் மட்டும் வாழ வழி செய்யும் துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்தையே இத்தமிழ்ச் சமுதாயம் பெரிதும் விரும்பியது. அது கருதியே போலும் இறைவனைக்கூட 'அம்மையப்ப' னாக இச்சமுதாயம் கண்டது! மேலும், இயற்கையோடு ஒன்றிய வாழ்வு நடத்துதலே மனிதனுக்கு ஏற்றது. இயற்கை வெள்ளத்தை எதிர்த்து நீந்திச் செல்லுதல் என்பது ஒரு சிலருக்கு ஒல்லுவதே தவிர, அனைவரும் செய்தற்கு ஏற்றதன்று. மேலும், பலருடைய நன்மை கருதி வாழும் ஒரு வாழ்க்கை, தன் நன்மை ஒன்றையே கருதி வாழும் வாழ்க்கையைவிடச் சிறந்தது என்பதில் தடை என்னை? அன்றியும், உயிர் வாழ்வின் அடிப்படையில் அமைந்திருப்பது 'அன்பு' என்ற ஒன்றாகும். அதன் இன்றி யமையாமை பற்றிப் போலும் ஓர் அதிகாரமே வகுக்கிறது குறள். அனுபுடைமை அத்துணைச் சிறந்ததாயின், அதனை வளர்க்கும் வழி என்ன? இல்வாழ்க்கையைவிட அன்பை வளர்க்கும். உறுகருவி ஒன்று உண்டோ? இவை எல்லாவற்றையும் ஊன்றி நோக்கின், 'அறன்' எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதன் பொருள் ஆழம் விளங்காமற் போகாது.

அறம் என்பது யாது?

மேல் அதிகாரத்தில் அறத்தின் சிறப்பையும், உயிர்கள் அறஞ்செய்யவேண்டிய இன்றியமையாமையையும் நன்கு வலியுறுத்தினார். 'செயர்பாலது ஓரும் அறனே, அறத்தான் வருவதே இன்பம்,' என்றெல்லாம் கூறி, அறன் வலியுறுத்தி னால், 'அறன் என்பது யாது?' என்ற வினாத் தோன்றத் தானே செய்யும்? அவ்வினாவிற்கு விடை கூறுவார் போல 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்கிறார் ஆசிரியர். 'எனப்பட்டது' என்று கூறுவதால் 'அறம்' என்றாலும் 'இல்வாழ்க்கை' என்றாலும் ஒன்றே என்பதைப் பெற வைக்கிறார். இவை இரண்டும் ஒரு பொருள் குறித்த இரு சொல் என்ற பொருளும் அங்குக் காண்க. இனியும் ஐயப்படுவார் இருப்பின், அவர் தம் ஐயத்தினையும் அறுத்தற்கு 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது,' என்ற குறளால் இல்வாழ்வின் பயன் அறமாகும் என்றும் கூறினார். 'இல்வாழ்வு' அல்லது 'அறம்' என்னும் பயன் விளைய வேண்டுமாயின், ஒரு பண்பு வேண்டும்; அதுவே அன்பு என்பது. அன்பு என்னும் பண்பு அறம் என்னும் பயனை விளைக்கிறது. வேறு ஒரு வகையாகக் கூறுமிடத்து அன்பினில் அறம் தோன்றுகிறது என்னலாம். அன்பில்லா விடத்து அறம் தோன்றாது. அன்பு, இல்வாழ்வில் தோன்றும் என்றால், அறமும அங்கேதானே தோன்றும்? எனவே, எவ்வகையில் கண்டாலும் சமுதாய வளர்ச்சிக்குக் காரணமான இல்வாழ்வையே வள்ளுவர் போற்றிக் கூறுகிறார் என்பது நன்கு விளங்கும். இனி, அதுவே உலகிடை வாழும் வாழ்க்கையில் சிறந்தது என்பதை வேறொரு வகையிலும் கூறுகிறார். 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை,' என்று கூறிய குறளின் அடுத்த பாடலாகக் காட்சியளிப்பது எது? 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்' என்ற அருங்கருத்தன்றோ? வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பது இல்லறத்தில் நிற்றலே என்பதற்குப் பரிமேலழகரும் 'இல்லறத்தோடு கூடிவாழும் இயல்பினால்' என்றுதானே பொருள் கூறுகிறார்? இதுகாறுங் கூறியவாற்றான் வாழ்க்கையில் செம்மையானது இல்லறமே என வள்ளுவர் கருதிக் கூறியது அறியப்படும். இனி அவ்வில்லறம் அமைய வேண்டும் முறைபற்றிக் காணலாம்.

அன்பில்லாத இல்லறம்

குறள் கண்ட செம்மையான வாழ்க்கை இல் வாழ்க்கையே என்பதைக் கண்டோம். இல்வாழ்க்கை என்று கூறினவுடன் எத்தனை குடும்பங்கள் மனக்கண்முன் தோன்றுகின்றன! ஆம்! பொருந்தாக் குடும்பங்களைத் தான் கூறுகிறேன். 'வற்றல மரம் அனையானுக்கு இந்த மானை வகுத்திட்ட பிரமனை யான் காணப்பெறின் - அற்ற தலை போக அறாத தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ!' என்று ஔவைப் பாட்டி பாடினா ளாம் ஒரு பொருந்தாக் குடும்பத்தைப் பார்த்து விட்டு. பாவம்! பாட்டி இக்காலத்தில் இருந்திருந்தால் முற் பகுதியைப் பன்மையாக வைத்தன்றோ பாடியிருப்பாள்! அமெரிக்காவைச் சற்றுப்பாருங்கள்! ஆம்! பணத்தில் புரண்டு ஒப்பற்ற கொழுப்பில் கூத்திடும் அமெரிக்காதான்! மூன்று திருமணங்களில் இரண்டு வீதம் திருமண விடுதலை பெருகின்றனவாம்! ஏன்? வாழ்க்கையின் அடிப் படை தெரியாமையாலேதான். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' அன்றோ அது இல்வாழ்க்கை எனப்படும்? இவை இரண்டும் சிறு அளவும் இல்லாது நடைபெறும் வாழ்க்கையை என் என்பது? அது ஒரு வகைக் கூட்டு வியாபாரம். ஆனால், வாணிகங்கூட இருவர் சேர்ந்து நடத்துவதானால், ஓரளவு ஒத்து நடக்கும்; அன்பு இல்லையேல் முறியும். அங்ஙனம் இருக்கக் குடும்பம் எவ்வாறு நடைபெறும்.

எத்தகைய மனைவி?


வள்ளுவர் இல்வாழ்க்கை இன்றியமையாதது என்று கூறிவிட்டமையின் இல்வாழ்வில் ஒருவன் ஈடுபடத் தொடங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம். எப்படிப் பட்ட மனைவி இருந்தால் இல்வாழ்வு நன்கு நடைபெறும் என்பதை ஆராய வேண்டாவா? ஆராயாது ஒரு செயலைச் செய்தல் பேராபத்தில் அன்றோ கொண்டு விடும்? நட்புச் செய்தலைக்கூட ஆராயாமல் செய்தல் ஆகாது என்கிறார் ஆசிரியர். வேண்டாவிட்டால் விட்டு விட்டு ஓடிவிடக்கூடிய நட்பிற்கே 'நாடாது நட்டலிற் கேடு இல்லை,' என்றால், விட்டு ஓட முடியாத இல்வாழ்விற் புகுவான் எவ்வளவு ஆராய வேண்டும்? ஆகவே, 'எத்தகைய மனைவி வேண்டும்?' என்ற வினாவிற்கு அவரையே விடைகேட்டல் நலம் தரும். 'மனைத்தக்க மாண்புடையாளாகி' அவள் இருத்தல் வேண்டும் என்கிறார். மனை வாழ்க்கைக்கு ஏற்ற மாண்புகள் பலவற்றுள்ளுஞ் சிறந்தது 'கற்பு' என்ற ஒன்றன்றோ? கற்பு என்பது என்ன? விடை விரியு மாயினும், சுருங்கக் கூற வேண்டுமாயின், ஒரு குரளே போதுமானது.

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
(குறள் - 66)

என்பதே கற்பின் விரிவுரை. இவை அனைத்துஞ் செய்யக் கூடியவளே பெண் என்றால், இத்தகைய பெண்ணே இல்வாழ்விற்கு உகந்தவள் என்பது கூறவும் வேண்டுமோ?

பெண்ணின் புற இயல்புகள்

இவ்வளவு சிறப்பும் அமைந்திருப்பினும், அப் பெண் வேறு ஓர் இயல்பும் உடையாளை இருத்தல் வேண்டும் அதுவே குடும்பம் நடத்தும் முறை. இதனைச் சுருக்கமாகத் 'தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை,' என்று குறள் கூறுகிறது. 'வளத்தக்காள்' என்பதற்குக் கணவன் வருவாய்க்கேற்ப வாழ்வு நடத்துபவள் என்பதே பொருள். எவளோ ஒரு பெண்ணை எவனோ ஓர் ஆண்மகன் மணந்துகொண்டு வாழ்தல்தான் இல்வாழ்க்கை என்ற எண்ணம நம்மில் பலர் உள்ளத்தில் தோன்றி யிருக்கிறது. ஆனால், வள்ளுவர் வகுத்த வாழ்க்கை முறையில் காட்சி தரும் பெண், மேற் கூறிய இலக்கணம் அமைந்தவளாக இருத்தல் வேண்டும். 'இத்தகைய பெண் கிடைத்து வாழ்வு நடத்துகையில் வேறு எது இருந்தால் என்ன?' இல்லாவிட்டால் என்ன என்ற எண்ணம தோன்றத்தான் செய்யும்! இங்ஙனம் குரளாசிரியர் மனத் திலும் தோன்றியிருக்கும் போலும்! அதனாலேயே அவர்,

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை 
(குறள்-63)

என்று வினவுகிறார். இதே கருத்துப் பிற்காலத்திலும் பேசப் படுகிறது. 'இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை,' என்பது போன்ற உரைகள் இக் கருத்தை வலியுறுத்தல் காண்க. இதே கருத்தை மேனாட்டுக் கவிஞரான 'போப்பு' என்பவர்,

'All other goods by fortune's hands are given
A wife is the peculiar gift of heaven.'

என்று கூறுதல் காண்க. பழைய விவிலிய வேத நூலும் 'A Virtuous woman is a crown to her husband.' என்றே கூறுகிறது.

நுண்ணிய கருத்து

இத்துணைச் சிறந்த மனைவியை ஒருவன் பெற்றுக் குடும்பம் நடத்தத் தொடங்கியவுடன் இல்லறம் என்னும் நல்லறம் நன்கு நடைபெற்றுவிடும் என்று கூறிவிட முடியுமா? இவ்வறத்தின் அடிப்படை அறியப்படாவிடின் வள்ளுவர் வகுத்த வாழ்க்கை நடைபெறுமா? பின்னர் அடிப்படை எங்கே உளது? மனிதன் குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும் சிறப்படைய வேண்டுமாயின், அதற்கு அற அடிப்படை தெரிந்து இருத்தல் வேண்டும். அந்த அடிப்படையைக் குறள் 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்திலே சொல்லிச் செல்கிறது.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. 
(குறள்-34)

என்ற குறளே அடிப்படை. இதனைக் கூறாதார் இல்லை. ஆனால், இவ்வடிப்படையில் வாழ்வாரைக் காண்டலே அருமையினும் அருமை! அறம் என்று கூறினவுடன் அஞ்சிவிட வேண்டா; மனம் தூய்மையாக இருத்தலே அறம் என்று கூறுகிறது இக் குறள். இதைவிட எளிமையாக அதைப்பற்றிக் கூறல் இயலாது. 'தருமத்தைச் செய்', என்று கூறும் வாழ்க்கை முறையைக்காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பது கூறவும் வேண்டுமோ?

குடும்பத்துப் பரீட்சை


மனத்துக்கண் குற்றம் இல்லாது இருக்க வேண்டிய கூறுபாடு ஆண் பெண் என்ற இருபாலாருக்குந் தானே கூறப் பெற்றது? எனவே, மனத் தூய்மை உடைய இருவர் இல்லறம் நடத்துதலே அறத்தின் அடிப்படையை அறிந்து வாழ்வதாகும். இங்ஙனம் வாழ்வு நடத்துபவர்கள் அறம் உணர்ந்தவர்களா என்பதை எவ்வாறு அறிவது? பிறர் அறிவது ஒரு புறம் இருக்கட்டும். வாழ்வு நடத்தும் இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ள வேண்டாவா? தெரிந்துகொள்ள எளிய ஒருவழி கூறுகிறார் ஆசிரியர். குடும்பம் நடத்துதல் அவ்வளவு எளிய காரியம் அன்று. இரண்டு வேறுபட்ட மனங்கள் கருத்து ஒருமித்து வாழ வேண்டிய சமயத்தில் எத்தனை இடர்ப்பாடுகள் தோன்றும்! எல்லாவற்றையும் விடப் பெரிய ஓர் இடர்ப் பாட்டைக் கூறுகிறது குறள். இளம்பருவம் உடைய ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து வாழும் பொழுதுதான் இப்பெரிய இடர் தோன்றும். இதுவே ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் ஐயம். ஐயோ! எத்தனை நல்ல வாழ்க்கைகள் இந்த மூன்று எழுத்துகளால் (ஐயம்) பாழாயின! ஐயம் என்ற ஒன்று புகுந்துவிட்டால், அது முற்றச் சிறிதுகாலங்கூட வேண்டுவதில்லை. ஓயாது நெருங்கிப்பழக வேண்டிய கட்டுப்பாடுடைய இருவருள் இது புகுந்துவிட்டால், அதன் பின்னர் ஒவ்வொரு சொல்லும் செயலும் புதுப் பொருளுடனே தான் காட்சி யளிக்கும். வெகுவிரைவில் இது முற்றிக் கனிந்து பயனளித்துவிடும். இதனால் விளையும் அல்லல், கொலை வரையிற் கொண்டு செல்லும் என்பதை 'ஷேக்ஸ்பியர்' எழுதிய 'ஒதெல்லோ' நாடகத்தால் அறிகிறோம். ஏன்? தினம் தினம் செய்தித்தாள்களில் வரும் இத்தகைய செய்திகளாலும் அறிகிறோம். ஆகவே, இதனைத் தடுக்கக் குறள் முற்படுகிறது. எவ்வாறு? 'மனத்து மாசில்லாது இருப் பதே அறம்,' என்று கூறி, 'செயற்பால தோறும் அறனே' என்று வலியுறுத்துவதால் மனத்தூய்மை எவ்வளவு இன்றி யமையாதது என்பதைக் காண்கிறோம். மனத்தூய்மை யுடைய இருவருள் ஒருவர் மற்றவர்மேல் 'ஐயம்' கொள்ளுதல் எவ்வளவு தவறானது! ஆனாலும், இத் தவற்றை இருபாலாரிலும் ஆண்பாலாரே மிகுதியுஞ் செய்பவராதலின், அவர்கட்காகவே இக்குறள் எழுந்தது. 'சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்?' அதாவது ஒரு பெண்ணைக் காக்க வேண்டும் என்று கருதி அவளை வெளியிற் போகவிடாது காப்பாற்றுவேன் என்று ஒருவன் புறப்படுவது எத்துணைத் தவறானது! இங்ஙனம் காவல் புரியத் துணிவது ஒரு பயனையும் விளைக்காது. போவது ஒரு புறம் இருக்க, அதற்கு எதிர்ப்பயனைச் செய்தலுங் கூடுமன்றோ? ஓயாது ஐயுற்ற மனம் வெறுப்புக் காரண மாக வேனுங்கூடத் தவற்றை இழைக்க முற்படலாம் அன்றோ? மனித மனம் இவ்வளவு 'விந்தை' நிறைந்தது! தடுப்பில் வழி அடங்கி இருக்கும் குழந்தைகூட, ஓயாது ஒருவர் தடுத்துக் கொண்டிரு்ந்தால் அத் தவற்றைச் செய்ய முற்படுதல் கண்கூடு. எனவே இத்தகைய காவல் ஒரு பயனையும் தாராது என்றார். அன்றியும் மனத்தூய்மை யுடையான் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய இழி செயலில் இறங்குதல் தகுமா? அவனவ னுடைய மனத்தூய்மையைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு வழி இதுதான், காரணமின்றியும் அற்பக் காரணங்களைக் கொண்டும் பிறர் மேல் ஐயம் கொள்ளும் ஒருவன், தன்னை மனத்துக் கண் மாசில்லாதவன் என்று எவ்வாறு கூறிக்கொள்ள இயலும்! 'என்னளவிற் காவல் செய்யத் தேவை இல்லை; காவலே வேண்டாவா?' என்றால் அதற்கும் விடை கூறுவார் போல ஆசிரியர் 'மகளிர் நிறை காக்கும் காப்பே தலை', என்கிறார்.

மனத்துக்கண் மாசில்லாத ஒருவனும் ஒருத்தியும், தம்முள் கருத்து ஒருமித்து இல்வாழ்வில் ஈடுபடுவதே அறம் என்றும், அவ்வாழ்வில் முழு நம்பிக்கையுடன் இருப்பதே அவ்வறத்தின் அடிப்படை என்றும் காணலாம். இனி இங்ஙனம் வாழும் வாழ்க்கை சமுதாயத்திற்கு உறுதுணை யாக எங்ஙன் அமைகிறது என்பதைக் காண்போம்.

வாழ்வின் பயன்

மனத்துக்கண் மாசு இல்லாத ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கருத்து ஒருமித்து இல்வாழ்வில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதுவே அறவாழ்க்கை என்று கண்டோம். இத்தகைய வாழ்க்கையின் பயன் என்ன? பெறுதற்கரிய செல்வம் ஒன்றை அடைதலாம். வற்றல் மரம் போல உள்ள வாழ்க்கை தளிர்ப்படைய வேண்டப்படுவது யாது? வாழ்க்கையென்னும் போராட்டத்தில் அலைப்புண்டு தத்தளிக்கும் மனத்திற்கு அமைதி வேண்டுமானால், எங்கே செல்வது? அறவழி நிற்கும் ஒருவன் இல்வாழ்க்கை அவனுக்கும் பிறருக்கும் பயன்பட வேண்டுமாயின், ஒரு செல்வம் அவன்மாட்டு இன்றியமையாது இருத்தல் வேண்டும். அவ்வரிய செல்வம் 'மக்கட்பேறு' என்று கூறப் படும். எத்துணைச் சிறப்புடைய வாழ்க்கையாயினும், மக்கட்செல்வம் இல்லாத வாழ்க்கை சுவையற்றதுதான்.

... ... இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே.
(புறம்-188)

என்று பாண்டியன் அறிவுடை நம்பி கூறியது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. குழந்தைச்செல்வம் பெற்ற பின்னர்த் தான் மனித மனம் விரிவடைகிறது. தன்னலம் ஒன்றால் சூழப்பட்டுள்ள மனித மனம் விரிவடைந்து, அன்பெனும் நலத்தால் பிறரைக் கட்டித் தமர் போல நேசிக்கிறது. சொல்வதற்கு மிக எளிதாக உள்ள இச்செயல், செய்வதற்கு மிகவும் அருமையானது என்பது கூற வேண்டா. பிறரைத் தமர் போல நேசிக்கும் நிலை ஒருவனிடம் வரவேண்டு மாயின், அப்பழக்கத்திற்கு முதற்படி, இல்வாழ்விலேதான் அமைந்து கிடக்கிறாது. பிறருக்காகத் தன்னலத்தை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குடும்பத்திலல்லாமல் வேறு எங்கே தோன்ற முடியும்?

மக்கட் செல்வம்

இல்வாழ்க்கையிலும், குழந்தைச்செல்வம் ஏற்பட்ட பிறகு அக்கணவனும் மனைவியும் அடைகின்ற மன மாறுதலை நாம் உலக அனுபவத்தில் நன்கு காணலாம். எத்துணை வன்னெஞ்சாயினும் இச்செல்வம் ஏற்பட்ட பிறகு அந்நெஞ்சு மாறுதல் அடையக் காண்கிறோம். பொருந்தாத் திருமணங்கள்கூட இச்செல்வம் ஏற்பட்ட பிறகு மனம் பொருந்திய வாழ்வாதலைக் காண்கிறோம்.

இம்மை உலகத்து இசையொடும் பொருந்தி
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர். 
(அகம்-66)

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒரு தமிழன் கூறினான் என்றால், இச்செல்வத்தின் பயனை இந் நாட்டார் நன்கு அறிந்திருந்தனர் என்பது கூற வேண்டுவ தின்று.

இல்வாழ்வில் புகுந்த ஒருவன் சமுதாயத்திற்கு நன்கு பயன்பட வேண்டுமாயின், அவனுக்கு இச்செல்வம் மிகவும் இன்றியமையாதது என்பது கண்ட வள்ளுவப் பெருந்தகையார் 'புதல்வரைப் பெறுதல்' என்ற ஓர் அதிகாரமே வகுத்துச் சென்றார். அம்மட்டோடு இல்லை, வாழ்க்கைத் துணை நலம் சிறப்படைய இதுதான் இன்றியமையாதது என்றும் கூறினார். அவ்வதிகாரத்தின் இறுதிக் குறள்,

மங்கலம் என்ப மனைமாட்சி;
மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு. 
(குறள்-60)

என்று கூறுதலால், முன்னர்க் கூறப்பெற்ற கருத்துக்கள் வலியுறுதல் காணலாம்.

எத்தகைய குழந்தை?

குழந்தைச் செல்வம் வேண்டுவது என்று கூறினவுடன் எத்தகைய குழந்தை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? குழந்தைகள் என்ற பெயருடன் பேயும் பிசாசும் இருந்தால் அவ் இல்வாழ்வு சிறப்படையுமா? உறுதியாகச் சிறப்படை யாது. எனவே, மக்கள் எத்தகையவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை ஆசிரியர் குறிப்பாகப் பெற வைக்கிறார்;

அறிவு அறிந்த மக்கள் (குறள் 61)
பழி பிறங்காப் பண்புடை மக்கள் (குறள் 62)

என்று கூறுவதால் இத்தகைய மக்கட்பேறுதான் வேண்டத் தகுவது என்பதைப் பெற வைக்கிறார். 'பிறந்த பிள்ளை கள் பிற்காலத்தில் நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ இருப்பதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அது அவர் களுடைய பொறுப்பே தவிர நம்மால் ஆவது ஒன்றும் இல்லை,' என்று கூறுவார் உளராயின், அக்கூற்றை மறுக்கிறார் ஆசிரியர். பிள்ளைகள், பெற்றோர்க்கும் சமுதாயத்திற்கும் நன்முறையில் பயன்படுபவர்களாக இருக்குமாறு செய்தல் நமது கடமை. பயிற்சியால் இந்நற் பழக்கங்கள் அவர்கட்கு வருமாறு செய்வது ஒருபுறம். அடுத்து இயற்கையில் அமைந்துள்ள பண்புகளாயினவும் நற்பண்புகளாக அமைதல் வேண்டும். இவை இரண்டும் நன்கு அமைந்தால் ஒழிய ஒருவன் முழுவதும் நல்லவனாக இருத்தல் இயலாது.

இயற்கைப் பண்பு

இரண்டாவது கூறப்பெற்றதை முதலிற் காண்போம். குழந்தைக்கு இயற்கையாக அமையும் பண்புகள் நல்லன வாக இல்வழி, செயற்கையில் தரும் நற்பழக்கங்கள் சிறப் படையா, இயற்கையாக அமையும் பண்புகட்கு யார் பொறுப்பாளர்? இக்கால விஞ்ஞானமும் மனத்தத்துவமும், தாய் தந்தையரே என விடை கூறுகின்றன. தாய் தந்தையர் நற்பண்புகள் உடையவராய் இருப்பின், குழந்தைகள் வேறு பண்புகள் உடையவர்களாக இருத்தல் இயலாது. மனத் தத்துவம் நன்குணர்ந்த வள்ளுவர் இக்கருத்தைப் பலவிடங் களில் வலியுறுத்திச் செல்கிறார்.

மனத்தூயார்க்கு எச்சம் நன்றாகும் (குறள்- 456)

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
(குறள்-114)

என்ற இவ்விரண்டு குறள்களும் ஒரு பெரிய உண்மையை நமக்குக் கூறுகின்றன.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன் (குறள்-34)

என்று கூறிய ஆசிரியர், ஒருவன் அற வாழ்க்கை வாழ்கிறானா என்று அறிந்துகொள்ள இங்கு வழி கூறுகிறார். எவ்வளவுதான் ஆராய்ந்தாலும் ஒருவனுடைய புற வாழ்க்கையை வைத்துக்கொண்டு அது அறவாழ்வு என்ற முடிவுக்கு வரமுடியாது. தூய்மையும் செம்மையும் உடைய வாழ்வு, பிறரை ஏமாற்றக்கூட நடத்தப்படலாம். அவ்வாழ்க்கை அத்துணைச் சிறப்புடையது அன்று என்று குறிக்கவே 'ஆகுல நீர பிற' (குறள்-34) என்றும் கூறினார். ஆசிரியர். மனத்துக்கண் உள்ள தூய்மையை அறிய, சொல்லும் செயலும் பயன்படுதல் உண்மையாயினும், சில சமயங்களில் மனத்தூய்மை இன்றியும் புறத்தூய்மை காணப் பெறுகிறது. இத்தகைய நடிகர்களின் அந்தரங்கத்தை அறிய ஏதேனும் வழி உண்டோ? விளியில் இவ்வளவு தூய்மை யுடைய இவர்களுடைய அகம் எத்தகையது என்று காண்டல் வேண்டுமே! இதோ வழி வகுக்கிறார் ஆசிரியர். யாரை ஆராய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அவர்களுடைய பிள்ளைகளைக் கொண்டு அவர்களின் அகத் தூய்மையை ஆராயலாம். 'அவர் மிகமிக நல்லவர்; ஆனால், பூர்வ சென்ம பாவம். பிள்ளைகள் மோசமாய் இருக்கின்றார்கள்!' என்று சிலரைப் பற்றி சொல்லக் கேட்கிறோம். இக்கூற்று உண்மையா? 'அன்று' என மறுக்கிறார் ஆசிரியர். மனம் தூயவராக ஒருவர் இருப்பாரேயானால், நிச்சயமாக அவருடைய எச்சமும்-பிள்ளைகளும்-நன்றாக இருக்கும் என்று உறுதியாக்க் கூறுகிறார். எவ்வளவு புற உலகத்தைத் தமது வெளி வேடத்தால் ஏமாற்றினாலும், மனத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கின்றது. இதனை இன்னும் வலியுறுத்தவே 'தக்கார் தகவிலர் என்பதையறிய அவர்கள் எச்சமே சிறந்த கருவி' என்பது மீண்டும் குறிக்கப் பெறுகிறது.

இக்குறளுக்குப் பல்வேறு வகையாகப் பொருள் கூறப் பெறுகிறது. ஒப்பற்ற உரையாசிரியராகிய பரிமேலழகருங் கூட மாறுபட்டே பொருள் கொள்கிறார். ஆசிரியர் வள்ளுவரின் மனத்தத்துவ நுணுக்கம் அறியப்படாமையின், இப்பிழைபாடு நேரிட்டதோ என்றுகூட நினைக்க வேண்டி யுளது. அன்றியும் பரிமேலழகரின் வடநாட்டு நாகரிகக் கொள்கையும் இவ்வாறு பொருள் கூறக் காரணமாய் இருந்திருக்கலாம். இக்காலத்தில் எச்சம் என்பதற்கு 'எஞ்சி நிற்கும் புகழ்' என்றுகூடப் பொருள் விரிக்கப்படுகிறது. எவ்வாற்றானும் தகுதி இல்லாதவர் புகழ் பெற்று வாழ்தலைக் கண்ட நாம், இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிற நாம், இவ்வாறு பொருள் கூறினால் அது பெருந் தவறாக அன்றோ முடியும்? இனி இக்கருத்தைச் சற்று விரிவாகக் காண்போம்.

தாய் தந்தையர் காரணம்

தாய் தந்தையரின் அகமனம் எத்தகைய பண்பாட்டை அடைந்திருக்கிறதோ, அந்த அளவிற்குத்தான் மக்கள் மனமும் பண்பட்டு நிற்கும். ஒரோ வழி தக்கார் என்று நம்மால் கருதப்படுகிறவர்களுக்குத் தகவில்லாத பிள்ளை கள் பிறக்கக் காண்கிறோம். இத்தகைய சந்தருப்பங்களில் கொஞ்சம் நின்று ஆராயவேண்டும். ஒருவரைத் தக்கார் என்று நாம் முடிவு செய்ய என்ன முயற்சி எடுத்துக் கொண்டோம்? அவருடைய புற வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பது ஒன்று தவிர, வேறு என்ன வழியைக் கையாள முடியும்? பிறர் தன்னை நன்கு மதிக்கவேண்டும் என்று கருதுகிற ஒருவன், அப் பிறர் தன்னைக் காணும் நேரம் அனைத்திலும் செம்மையாகத்தானே நடந்துகொள்வான்? அதிலும் தன்னை எத்தகையவனாக உலகம் கருத வேண்டும் என்று நினைகிறானோ, அவ்வகையில் தான் வாழ்வதாகப் பிறர் கருதுமாறு செய்வது ஒரு பெரிய காரியமா? உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்; ஒருவன் 'பத்தான்' என்று தன்னைப் பிறர் கருத வேண்டும் என்று நினைக்கிறான். ஆகவே, காலையில் இரண்டு மணி நேரம் பூசையில் இருந்து பலத்த சத்தத்துடன் மணி அடிக்கிறான்; உட்கார்ந்தாலும், எழுந்தாலும் 'சிவ சிவா' என்று பலத்த சத்தம் இடுகிறான்; பத்தனுக்குரிய ஏனைய கோலங்களை அணிந்துகொள்கிறான். பலகாலம் இந்நிலையில் அவனைக் காண்கிற உலகம் அவனைச் 'சிறந்த பக்தன்' என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், பூசையில் அமர்ந்த அவன், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' இறைவன் புகழை ஒதுகிறானா இல்லையா என்பதை யார் கூறமுடியும்? கைகள் மணி அடிக்க, வாய் தேவாரத்தை ஓதலாம். ஆனால் இவை இரண்டின் செயலிலும் ஈடுபடாமல் அவன் மனம் கறுப்புச் சந்தையில் பொருள்சேகரிக்கும் வழியை ஆராய்ந்து கொண்டிருக்கலா மல்லவா? அல்லது வருமான வரியை ஏமாற்றப் பொய்க் கணக்கு எவ்வாறு புனைவது என்ற ஆழ்ந்த சிந்தனையில் செல்லலாமல்லவா? முன்னர்க் கூறிய இரண்டு செயல் களையுங் கொண்டு அவனை அன்பன் என்று கூறும் பிழை யாருடையது? இப்படிப்பட்ட அன்பர்கள் என்றும் இருந்திருப்பார்கள் போலும்! அல்லாவிடில்,

பொக்க மிக்கவர் பூவும்நீ ருங்ககண்டு
நக்கு நிற்பன் அவர்தமை நாணியே 
(திருமுறை 5:90:9)

என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறுவாரா? இத்தகைய ஒருவனுக்கும் பிள்ளை பிறந்து அவன் தவறான வழியில் சென்றால், அதில் வியப்பு என்ன இருக்கிறது? சில நாட்களுக்கு முன்னர் 'தேச பக்தர்' பலரைக் கண்டோம். அவர்களுடைய புறவாழ்க்கை ஒன்றை மட்டுங்கண்டு விட்டு மகாத்துமாவின் உண்மைச் சீடர்கள் என்று நாம் நினைத்தது உண்டு. ஆனால், சந்தருப்பம் வாய்த்தவுடன் இந்த உண்மைச் சீடர்கள் அரிசியைப் பதுக்கவும், 'கள்ள மார்க்கெட்டு' வாணிபம் செய்யவும் சிறிதும் பின்வாங்க வில்லை. இத்தகைய கல் மனம் உடையார்க்கு எச்சம் (மக்கள்) எவ்வாறு நன்றாய் இருக்க முடியும்?

அகமனம்

பிறர் தம்மைக் காணுங்காலம் அனைத்தினும் போலியாகத் தூயவர் போல நடிக்கும் இவர்கள் மனம் உண்மையில் கருங்கல் தளமிட்டு மூடப்பட்ட சாக்கடை யேயாகும். குழந்தை தரிக்கின்ற காலத்தில் இச் சாக்கடை திறக்கப்படுகிறது. கருத்தரிக்கும் காலத்தில் தாய் தந்தையர் என்ற இவருடைய மனமும் எந்நிலையில் ஈடுபட்டிருக் கிறதோ, அதே பண்பு அமைந்துதான் குழந்தைகள் தோன்றும். இற்றை னால் மனவியல் நூலார் கூறுவது ஒரு புறம் இருக்க, பழந்தமிழனும் இதை நன்கு அறிந்திருந்தான் என்பதை உதாரண முகத்தாலும் அறியலாம்.

உதாரணம்

ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி தேவையாய் இருந்தது. அப் புரட்சியை நடத்தி வைக்க ஒருவர் தேவைப்பட்டார். தேவையைத் தமிழ் நாட்டார் பலரும் உணர்ந்தனர். ஆனால், இருவர் மட்டுந்தான் அத்தகைய புரட்சியாளர் தம்மிடம் தோன்றவேண்டும் என்று ஒருதலையாக நினைத்தனர். ஒருவர், பாண்டிமா தேவியரான 'மங்கையர்க்கரசியார்,' இரண்டாமவர், சோழ நாட்டில் சீர்காழியில் வாழ்ந்த 'சிவபாத இருதயர்' என்ற பெரியார். ஆனால், முதலாமவராய் உள்ள அரசியாருக்கு இந்நினைவு பயன்பட வழியில்லை. ஏன்? அவர் இல் வாழ்க்கை பயனற்றதாகிவிட்டது. மேலும், அவர் மட்டும் இந்நினைவு கொண்டிருக்க, அவருடைய கணவன் வேறு நினைவில் இருந்தான். இரண்டு மாறுபட்ட கருத்துடைய அவர்கட்கு இத்தகைய குழந்தை பிறத்தல் இயலாத தொன்று. எனவே, சீர்காழிக் குடும்பத்தார் எண்ணம பூர்த்தியாகிறது. ஊராரைப்போல ஒரு சாதாரணக் குழந்தை வேண்டும் என்று மட்டும் அத்தாய் தந்தையர் நினைக்கவில்லை. தமிழ் நாட்டைச் சீர்படுத்த ஒரு புரட்சி யாளர் தங்கட்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்றே அவர்கள் அல்லும் பகலும் நினைந்தார்கள். அவர்கள் நினைவையும் வாழ்க்கையையும் இதோ கவிஞர் சேக்கிழார் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மனையறத்தில் இன்பமுறும் மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும்
தவம்புரிந்தார்.
(பெரிய புராணம்- 1922)

திருஞானசம்பந்தர் ஏன் சீர்காழியில் தோன்றினார்? அப்படியானால், இன்றைக்கு நாட்டில் உள்ள குறைபாடு களைப் போக்க ஏன் ஒருவர் தோன்றக் கூடாது? என்றெல்லாம் பிதற்றும் பேதைகட்கு விடை கூறுவார் போலச் சேக்கிழார் பாடுகிறார். இதே குறிக்கோளுடன் தாயும் தந்தையும் இருந்ததனாலேதான் ஞான சம்பந்தர் அக்குடும்பத்தில் தோன்றினார். தாய் தந்தையர் தக்க மனத் திண்மையுடையவராயின், குழந்தையும் அவ்வாறே தோன்றும், 'உரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி' என்ற மாபெரு நூலை இயற்றிய பெரியாராகிய 'கிப்பன்' என்பார், வீழ்ச்சியின் காரணங்கள் பல கூறுகிறார். அவற்றுள் ஒன்று வருமாறு: 'ரோமாபுரிப் பெண்கள்' வீர வழிபாடு செய்து ஓயாது வீரர்களைப் பற்றியே தியானம் செய்து கொண்டிருந்த நாளில் நல்ல வீரர்கள் அவர்கள் வயிற்றில் தோன்றினார்கள். ஆனால், அவர்கள் அக்குறிக் கோளை மறந்து களியாட்ட வாழ்க்கை நடத்த ஆரம்பித்த வுடன் அவர்கள் வயிற்றில் கோழைகள் தோன்றலானார் கள், இக்கூற்றை நன்கு ஆராய்ந்தால், நாம் இது வரையிற் கூறியன எவ்வளவு உண்மை என்பது விளங்கும்.

உண்மை வெளிப்பாடு


கருத்தரிக்கும் காலத்தே மனிதனுடைய அகமனம் எவ்வாறு உளதோ, அவ்வாறே குழந்தை தோன்றும் என்பது எவ்வாறு எனக் காண்போம். போலி வாழ்வு வாழும் ஒருவன், ஓயாது விழித்திருந்து தன் சொற்கள் செய்கை என்ற இரண்டையும் காத்துக்கொள்கிறான்; இவை இரண்டினும் பிறரறியத் தவறு நேராமல் கவனித்துக் கொள்கிறான். ஆனால், உறக்கம், புணர்ச்சி தடுக்கி விழும் நேரம், தும்மல் வந்த நேரம், எல்லையற்ற துக்கம் வந்த நேரம் ஆகிய இவற்றில் இப் போலி மனிதன் தான் வழக்கமாகக் கையாளும் விழிப்புத் தன்மையைக் கையாள இயலுவதில்லை. இந் நிலைகளில் இவன் மனத்தில் எந்த எண்ணம குடிகொண்டிருக்குமோ, அதுவே வெளிப்படும். ஒரு மனிதன் உண்மைத் தன்மையை அறிய மேலே கூறிய நேரங்களே மிகவும் சிறந்தவைகள். கோபமே வராது தனக்கு என்று கூறிப் பிறர் தாண்கையில் அவ்வாறே நடந்துகொள்ளும் ஒருவனை ஆழ்ந்த தூக்கத் தில் திடீரென்று எழுப்பினால், உண்மை விளங்கும். அவன் பழகாத நாய் போல எழுப்பியவரைப் பிடுங்கு தலைக் காணலாம். ஓயாது வேலும் மயிலுந்துணை, என்று கூறுபவன், தும்பியவுடன் 'ஐயோ!' என்று கூருதளையும் உலகிடைக் காணலாம். அகமனம் தூய்மை பெற்ற பெரியோர்கள் மட்டுமே இந்நிலையிலுங்கூடத் தவறாமல் இருப்பார். இது கருதியே போலும்,

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது எந்நா;
' இடரினும் தளரினும் உன்கழல்
தொழுது எழுவேன்
(திருமுறை 4:1)

என்று ஞானசம்பந்தரும்,

வழுக்கி வீழினும் உன் திருப்பெயர் அல்லால்
மாற்று நான் அறியேன் மறுமாற்றம் 
(திருமுறை 54:1)

எனச் சுந்தரமூர்த்திகளும் அருளினார்!

அகமனம் தூய்மை பெற்ற ஒருவனுக்குத்தான் கூடற் காலத்தும் மனம் தூய்மையாக இருக்கும். அப்பொழுது தோன்றும் பிள்ளைகளும் உயர்ந்த பண்பு உள்ளவர்களாய் இருப்பார்கள். இக்கருத்துடன்,

மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும் (குறள் 456)

தக்கார் தகவிலர் என்பது அவரவரர்
எச்சத்தாற் காணப் படும் 
(குறள்-114)

என்ற குறள்கட்குப் பொருள் காண்டல் எவ்வளவு எளிதாய் உள்ளது? இக்கருத்தை மேலும் வலியுறுத்துவார் போன்று ஆசிரியர்,

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும் 
(குறள்-958)

என்றுங் கூறுதல் காண்க,

இவ்வாறு பொருள் கூறுவதால் இழுக்கின்மையும் அறிதல் வேண்டும். தக்கார் ஒருவருக்குப் பிள்ளை இல்லை எனில், அதனால் அவரைக் குறையுடையார் எனக் கூறல் வேண்டா. இவ்வாறன்றிப் பரிமேலழகர் 'தக்கார் தகவிலர்' என்ற குறளுக்குப் பொருள் கொள்வது போலக் கொண்டால் பல இடையூறுகள் வருதல் கண்கூடு. ஆசிரியர் பரிமேலழகர் இக்குறளுக்கு, 'இவர் நடுவுநிலை உடையார், இவர் நடவு நிலை இலர் எனும் விசேடம் அவரவருடைய நன்மக்களது உணமையானும் இன்மை யானும் அறியப்படும்,' என்று கூறுகிறார். இவ்வாறு கூறினால், மணஞ்செய்தும் பிள்ளைப் பேறில்லாத சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஞானசம்பந்தர், பெரியாழ்வார், சாக்கிரட்டீஸ் போன்ற பெரியார்கள் நடுவு நிலையற்றவர் கள் என்று கூறவேண்டிய இடர்ப்பாடு வருதல் காண்க.

எனவே, நல்ல அறவாழ்க்கை உடைய ஒருவன் நடத்தும் இல்வாழ்க்கை செம்மையுடையதுதானா என்று காண வேண்டுமாயின், அவன் மக்களே தக்க உரைகல் என்ற ஆசிரியர் கூறுகிறார்.

பேருக்குப் பிள்ளை

வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் இறுதிக் குறள் நன்கு சிந்திக்கற்பாலதாகும். வழக்கம் போலப் பின்னர் வரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயாக மட்டும் இக்குறள் அமையவில்லை. மனித வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கோ, அன்றி இழப்பதற்கோ காரணமாக இருப்பது மனை வாழ்க்கைதான். மனையாள் நற்பண்புடையவளாயின், வாழ்க்கை பயன் பெறலாம்; அன்றேல், அனைத்தும் இழந்ததாகவே கருதப்படும். இது கருதியே 'மங்கலம் என்ப மனைமாட்சி' என்றார். இனி இவ் இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு என்றார். அதுவும் நன்மக்கள் பெற்றால் ஒழியப் பயனாகக் கருதப் படுவதில்ல. தம் குளம் விளங்கவோ, அன்றிப் 'புத்து' என்னும் நரகில் வீழாமல் பெற்றோரைக் காக்கவோ 'புதல்வர்ப் பேறு' வேண்டும் எனப் பலரும் நினைய லாயினர். ஆனால், வள்ளுவர் அவ்வாறு நினைத்தாரல்லர். முன்னவர் கருத்துப்படி பிறக்கும் குழந்தை எப்படி இருப்பினும் சரியே. 'பேதையாய் இருப்பினும் பிள்ளை பிள்ளைதானே? பேருக்கு ஒரு பிள்ளை என்று இருந்து விட்டாலும் சரி,' என்பார் கருத்து வள்ளுவருக்கு உடன் பாடு அன்று போலும்! அதனாலேயே மக்கள் என்று குறிப்பிடும் இடங்கள் அனைத்திலும் பெரும்பாலும் அடைமொழி கொடுத்தே கூறுகிறார். 'நன்கலம் நன்மக்கட் பேறு' 'அறிவு அறிந்த மக்கட்பேறு' என்பன போன்ற இடங்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

பண்புடை மக்கள்

புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் முதலிரண்டு குறள்களும் மக்கள் என்ற பொதுச் சொல்லையே ஆள்கின்றன. எனவே ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியே ஆசிரியர் பாடுகிறார் என்பது நன்கு தெரியப்படும். இந்த இரண்டு பாடல்களும் சிறந்த உட்கோளோடு திகழ்கின்றன.

பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 
(குறள்-61)

எழுபிறப்பும் தீயவை தீண்டா; பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
 (குறள்-62)

வெண்பாவிற்கு அழகுசெய்யும் மோனையைக்கூடத் துறந்து விட்டு மக்கள் என்ற சொல்லுக்கு ஆடை வழங்குகிறார் ஆசிரியர். எத்தகைய மக்கள் வேண்டும்? அறிவு நிரம்பிய மக்களே வேண்டும். மனிதனை ஏனைய விலங்கு உலகினின்றும் பிரிப்பது அவன் பெற்றுள்ள அறிவு ஒன்றேயாகும். எனவே, அதன் இன்றியமையாமை அதிகம் வலியுறுத்தப்பட வேண்டுவதில்லை. என்றாலும் மக்களாய்ப் பிறந்தோர் பலர் இவ்வறிவு இல்லாதும், இருந்தும் பயன் படுத்தாதும் இருப்பைக் காண்கிறோமாகலின், அறிவுடை மக்கள் வேண்டும் என்றார். எத்துணைச் சிறப்புடைய தாயினும், இவ்வறிவு கூர்மையான வாள் போன்ற ஒன்றாகும். இதனைப் பெற்ற ஒருவன் தக்க பண்பில்லாத வனாயின், இவ்வறிவாகிய வாளைக்கொண்டு தனக்கும் பிறர்க்கும் தீங்கையே இழைப்பான். எனவே, அறிவு எனும் வாள் நன்கு பயன்பட வேண்டுமாயின், இதனினும் மேம்பட்ட ஒன்று கூடவே இருத்தல் வேண்டும். அதனை மனத்துட் கொண்ட ஆசிரியர் விடாது அதனை அடுத்த குறளில் கூறியுள்ளமை காண்க. சிறந்த அறிவாயினும், அது நன்முறையில் தனக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு செய்வது நற்பண்பே ஆகும். அப் பண்பு இல்வழி, அறிவு, நலன் விளைக்காததன்றித் தீமையே புரிதலுங்கூடும். இது கருதியே ஆசிரியர் அடுத்த குறளில் ‘பண்புடை மக்கள்’ வேண்டும் என்றார்.

பண்புடன் கலந்த அறிவு

அறிவின் செயலும் பண்பின்செயலும் பகுத்தறியப்பட்ட வேண்டுவனவாகும். இன்றைக்குப் பலரும் அறிவுக்குத் தலைமை இடம் அளித்து வழிபடத்தொடங்கி உள்ளனர். அவர் கருத்துப்படி அறிவு ஒன்று மட்டும் உலகை ஆளத் தொடங்கி விட்டால், அந்நாள் நன்னாளன்று. உலகம் அழியும் நாள் அன்றேயாகும். பொருள்களின் வேறுபாட்டைக் கூர்ந்து அறிவது அறிவு. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்ட இயல்புகள் வாயந்த இரு பொருள்களை ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமை கருதி இரண்டாகப் பிரித்துக் கூறுவது அறிவின் வேலை. பயன் கருதாது ஆராய்ந்து சென்று பொருளின் உண்மைத் தன்மையைப் புலப்படுத்துவது அறிவின் தொழிலாகும். ஆனால், இங்ஙனம் செய்வதால் உள்ள நலந் தீங்குகளைப் பற்றி அறிவு கவலைப்படுவதில்லை. அணுவைப் பற்றி ஆராய முற்படுவது அறிவு.  ‘அணு’ என்பது பகுக்க முடியாத ஒன்று, என்று ஒரு காலத்தில் நினைத்ததும் கூறியதும் அறிவுதான். அதே அணுவைப் பயன்கருதாது உடைத்து அதனுள் இருக்கும் பொருள்களைக் காணத் துடித்துக் கண்டதும் அறிவுதான். இவ்வணுவின் சக்தி எவ்வளவு என்று காண முற்பட்டதும் அறிவுதான். அணுவைத் துளைத்து அளவற்ற ஆற்றலை வெளியிட்ட அறிவுக்கு வணக்கம்! ஆனால், இன்று நம்மில் பலரும் இவ்வாற்றலை வெளியிட்ட அறிவைப் போற்றி வியவாது தூற்றுகிறோம். நாகாசாக்கி, ஹிரோஷிமா என்ற நகரங்களில் வாழ்ந்து இன்று எஞ்சியவர்கள் இந்த அறிவைப் போற்று கிறார்களா என்பதை அவர்களைக் கேட்டாள் அல்லவோ தெரியும்! காரணம் என்ன? அறிவு பண்பாட்டுடன் கலவாமல், கேவலம் அறிவு மாத்திரையாய் நின்று தொழிற்படுவதனால் இந்நிலைக்குத்தான் வர நேரிடும். தம் அறிவின் பயன் மக்கட் சமுதாயத்திற்கு நலம் விளைவிப்பதா, தீங்கு விளைப்பதா என்பது பற்றிக் கவலையுறாமல் செய்யப்படும் அறிவின் செயல் எதுவாயினும் அது உலகோரால் பழிக்கவே படும்.

இனிப் ‘பண்புடைமையாவது யாது? எனக் காண்டல் வேண்டும். இச்சொற்கும் பொருள்கூற வந்த ஆசிரியர் பரிமேலழகர், 'பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்று 'எல்லா இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்' எனப் பொருள் கூறினார். கலித்தொகையில் 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலி. 133) என வருவதும் காண்டற்குரியது. இப்பண்பாடு இல்லாத அறிவு, பெருந்தீங்கை விளைத்து 'அணுகுண்டு' தோற்றுவதற்கே பயனாம். இது கருதியே போலும் ஆசிரியர்,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் 
(குறள்-997)

எனக் கூறினார்! பண்பாடு இல்லாதவர் அறிவு, அழித்தல் ஒன்றிற்கே காரணமாகும் என்பதை இதனால் நன்கு அறியலாம். பண்பாட்டிற்கு, ஆசிரியர் தரும் சிறப்பு இத்துணையது என்று அறிந்தபின், மக்கட்பேற்றில் எடுத்துக் கட்டப்பெற்ற குரல்களின் பொருளை நன்கு சிந்திக்க முற்படல் வேண்டும். பிள்ளைகள் கூர்மையான அறிவும், சிறந்த பண்பும் அடையப்பெற்றவராக இருத்தல் வேண்டும் என்று கூறுவதன் கருத்தென்ன? பிள்ளைகலி தீர்ப்ப தொன்றற்காகவே பிள்ளைப்பேறு வேண்டும் என ஆசிரியர் கூறி இருப்பின், இத்தனை அடைமொழிகள் தந்திரார். எனவே, இதன் உட்கோள் ஒன்று இருத்தல் வேண்டும் அது யாது? பிள்ளைகள் நாளைச் சமுதாயத்தின் தூண் களாக இருக்க வேண்டுபவரல்லரோ? அவர்களின் சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கித்தானே நாளைச் சமுதாயம் அமையப் போகிறது? எனவே, நல்ல சமுதாயம் நாட்டில் அமைய வேண்டுமாயின், நன்மக்கட்பேறு வேண்டும் என ஆசிரியர் வலியுறுத்துகின்றார். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஆசிரியர், நன்மக்கட் பேற்றையும் அதில் ஒரு கூறாக வைக்கிறார்.

சமுதாயப் பிராணி

ஒரு மனிதன் வாழ்க்கை, அகம்-புறம் என இரு பகுப்பாகி இயல்கிறது. அகம் பெரும்பாலும் வீட்டினுள் தலைவன் தலைவி மக்கள் சுற்றத்தார் என்பவருள் அடங்கி விடுதலின், அதில் சமுதாயம் பற்றிய வினாவிற்குத் தேவை இல்லை. ஆனால், எத்தகைய மனிதனும் வீட்டினுள்ளேயே தங்கித் தன் காலத்தைக் கடத்திவிட முடியாது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தன்னை ஒத்த மனிதர் களிடம் கூடிப் பழக வேண்டி உளது. அங்ஙனம் பழகுங்கால் தன் இயற்கையோடு ஒத்தவர்களுடன் நட்புக் கொள்ளவும், மாறுபட்டவர்களுடன் மாறு கொள்ளவும் தொடங்குகிறான். இந்நிலை மாறிப் பிறர் இயற்கை தன்னியற்கையுடன் ஒத்ததாக அமையாதவிடத்துங்கூட அவர்களுடன் சேர்ந்து வாழ முனைகிறான். இம்முயற்சி யால் சகிப்புத் தன்மை பிறக்கிறது. தன்னினும் வேறுபட்ட கருத்துடையாருங்கூட இப்பரந்த உலகில் வாழ உரிமை பெற்றவர்களே என்று முழுவதும் உணரும் நிலையிலே தான் ஒரு மனிதன் பண்பாடு பெற்றவன் ஆகிறான். இத்தகைய பண்பாடு இல்லை எனில், வாழ்க்கை வறண்ட பாலைவனம் ஆகிவிடும். 'மனிதன் சமுதாயப்பிராணி' (Man is a social animal) என்ற பழமொழி உண்மையானது இந் நிலையிலேதான், உலகிடைப் பிறந்ததன் பயன் இரு வகைப்படும். ஒன்று, ஆன்ம முன்னேற்றம். அது பிறர் உதவி இன்றித் தன் முயற்சியாலேயே நடைபெறுவது. இரண்டாவது, சமுதாயத்தில் உள்ள தன் போன்ற பிறர் நலமடையத் தன் வாழ்க்கையைச் செலுத்துவதாகும். இவ்விரு வகைப் பயனையும் அடைய வள்ளுவர் நூல் வகுக்கிறார். ஏனையோர் நூலினும் குறள் சிறப்படைவது இத் துறையிலேயே ஆம். இவ்விரு பயனையும் அடைய இருவேறு வழி வகுக்காமல், ஒன்றன மூலமே மற்றொன்றை அடையக் குறள் அடி கோலுகின்றது; இரண்டாவது பயனை அடையச் செய்யும் முயற்சியிலேயே முதற் பயனையும் அடைய வழி செய்கிறது.

சமுதாயத் தொண்டன்

இல்லறவியல் முழுவதும் இவ்விரண்டாம் வழியை வகுப்பதேயாகும். அதிலும், 'புதல்வரைப் பெறுதல்' என்ற அதிகாரத்தின் இவ்விரு குறள்களும் சமுதாயம் நன்கு நடைபெறவே வழிகாட்டுகின்றன. ஒருவன் எத்துணைச் சிறந்தவனாயினும், பிறர் வாழத் தன் வாழ்க்கையைச் செலுத்துபவனாய் இருப்பவனாயினும், அவன் எச்சமும் அவ்வாறு பயிற்றுவிக்கப்பட இல்லை எனில், பயனின்றாய் முடியும்.

பிள்ளைகட்கு இயற்கை, செயற்கை என இரு இயல்புகள் உண்டு என்பது முற்கூறப்பெற்றது. செயற்கை முறையால் அவர்களை நல்லவர் ஆக்கும் வழி,

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
(குறள் - 67)

என்ற குறளால் கூறப்படுகிறது. எனவே, இயற்கையாக அவர்மாட்டு அமையவேண்டுவன கூர்த்த அறிவும் சிறந்த மக்கட்பண்பும் ஆகும் என்பதை இங்குக் குறிப்பிட்டு விட்டார். இங்ஙனம் இயற்கையாகவே இவ் விரண்டும் அமைந்து செயற்கையால் பெற வேண்டிய அவையத்து முந்தி இருக்கும் நிலையையும் பெற்று விட்டால், ஒருவன் பெறவேண்டிய பகுதி முழுவதும் பெற்றவனாவான். இத்தகைய மைந்தனைப் பெற்றவன் மகிழ்ச்சியடையக் கேட்பானேன்? அதிலும் அம்மகனைச் 'சான்றோன்' என்று பிறர் கூறக் கேட்ட தாய், ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் என்பதிலும் வியப்பு என்னை? குறைபாட்டை அறியத் தாய் மனப்பான்மையால் முடியாது ஆகலானும், குணமும் குற்றமும் நாடிக் குணம் மிக்க வழியே 'சான்றோன்' என்று பிறர் கூறுவார் ஆகலானும், அவர்கள் கூறியதைக் கேட்டபொழுது அவள் பெரிதும் உவக்கும் எனக்கூறினார் ஆசிரியர்.

இத்தகைய பிள்ளைகளைப் பெருவதாலேதான் மனித மனம் விரிவடைகின்றது. தன்னலம் குடிகொண்டிருந்த மனத்தில் மனைவி இடம் பெற்று ஓரளவு விரிவடையச் செய்யினும், புதல்வர்ப் பேற்றின் பின்னரே மனிதன் முழுத் தன்மை அடைய முடிகிறது. அதன் பின்னரே சமுதாயத்தின் முழு உறுப்பாக ஒருவன் வாழ முடிகிறது. வாழை இருந்து பயன் உதவிய பின்னர் அதன் கீழ்க் கன்று தோன்றி அதே பயனை நல்குதல் போல, அவன் பிள்ளைகளும் ஏற்கெனவே பெற்றுள்ள அறிவு, பண்பு, கல்வி நலன் இவற்றால் சமுதாயத்திற்கு உதவும் சான்றோர்கள் ஆகின்றார்கள்.

வாழ்வாங்கு வாழ்தல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலின் அடிப்படை எங்கு உளது? இவ்வினாவிற்கு விடை பலர் பலவாறாகக் கூறுவர். ஆனால், எல்லா விடைகளையும் சேர்த்து ஒரு முடிபு காண முற்படல் வேண்டும். எத்தகைய வாழ்க்கையில், தனக்கும் பிறருக்கும் மிகுதியான பயன் உண்டாகிறதோ, அத்தகைய வாழ்க்கையையே 'வாழ்வாங்கு' வாழும் வாழ்க்கை என்ற முடிபுக்கு வருதல் கூடும். இந்த நிலையையும் சுருக்கிக் கண்டால், பிறர் பொருட்டு வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம் என்ற உண்மை தெற்றெனப் புலனாகும். மேலாகப் பார்க்கும் பொழுது அனைவரும் கடைபிடிக்க முடியாத ஒரு கொள்கை போலத் தோன்றும் இது. ஆழ்ந்து சிந்தித்தால், நாம் அனைவருமே வாழ்க்கையின் பெறும் பகுதியை பிறருக் காகவே வாழ்கிறோம் என்று அறிதல் கூடும். இது எவ்வாறு என்பதைக் காண்போம்.

தன்னலப் பிண்டம்

சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது ஒவ்வொரு வரும் தன்னலப் பிண்டமாகவே இருக்கிறோம் என்பதில் ஐயமின்று. புத்ததேவன்கூட இவ்விதிக்கு விலக்கன்று. தாய் தந்தையரை அறிந்து கொள்ளும் நிலை வந்த பின்புகூட இந்நிலை முற்றிலும் மாறுவதில்லை. பிறருடைய நலந் தீங்குகளை ஆராயாமல் தன்னுடைய நலத்தைக் கவனிக்கவே அனைவரும் உளர் என்ற மன நிலையில் குழந்தை இருக்கக் காண்கிறோம் அல்லவா? சாதாரண மாகத் தானே விளையாடிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை, ஆனால், தன் தாயுடன் யாராவது ஒருவர் பேச வந்தவுடன் தாயின் கவனம் வேறு இடம் செல்வதைக் குழந்தை பொறுப்பதில்லை. அவள் கவனம் முற்றும் தன்பால் வரவேண்டும் என்ற எண்ணத்தால், இது வரை சும்மா விளையாடிய குழந்தை, தாய் பிறருடன் பேச ஆரம்பித்தவுடன் அழத் தொடங்குகிறது. பேச்சை நிறுத்தித் தன்னைத் தாயானவள் தூக்கியவுடன் அழுகை நின்று விடுகிறது. ஆனால், சில வினாடிகளில் தாயின் மடியி லிருந்து இறங்கி விளையாட ஓடி விடுகிறது. இங்ஙனம் தொடங்கும் 'தன்னலம்' எளிதில் நம்மை விட்டுப் போவதில்லை. தோழர்களுடன் சேர்ந்து விளையாடும் குழந்தை கையில் வைத்திருக்கும் ஒரு பொருளைக்கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். தன்பொருளைப் பிறரிடம் தர எளிதாக அக் குழந்தை உடன்படுவதில்லை.

பெரியோர் தன்னலம்

 ‘தன்னலம்; என்று கூறினால் வெறுக்கத்தகுந்த சொல்லாய் அது விளங்குகிறது. ஆனால், நடைமுறையில் நடைபெறுவது அதுதான். குழந்தை தன் தின்பண்டத்தைத் தர மறுப்பதும், ஒரு நாட்டார் பிற நாட்டாருக்கு விடுதலை தர மறுப்பதும் இதே அடிப்படையில் தோன்றுவனவே. பாரசீக எண்ணெய்க் கிணறுகளை அந்த நாட்டினர் தேசிய மயமாக்கக் கூடாது என்று ஆங்கிலேயர் ஏன் கரைந்தனர்? வடகொரியர் தென்கொரியர் மேல் படையெடுப்பது பற்றி அமெரிக்கரும் இரஷியரும் கரைவதன் கருத்தென்ன? சுருங்கக் கூறினால்,  ‘சுயநலம்’ என்ற சொற்பொருள்தான் இச்செயல்கள் எனலாம். ஆனால் இவ்வாறு கூறினால் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். என்றாலும், உண்மை உண்மையே, இளமையில் உடன் பிறக்கும் இத்தன்னலம் இறுதி வரை மனிதனை விடாது பற்றி இருத்தலும் உண்டு; வயது ஏற ஏற அதிகப்படுதலும் உண்டு. ஒரோவழி ஒரு சிலரிடம் இது குறைந்து நாளாவட்டத்தில் அற்றுப் போதலும் உண்டு.

இரு வகைத் தன்னலம்

இங்கு தன்னலம் என்று கூறுவது தனிப்பட்ட ஒருவனுடைய நலத்தையும், ஓர் இனத்தின் நலத்தையும் குறிப்பிடுவதாகும். தனிப்பட்ட ஒருவன் தன் சொந்த நன்மையை விட்டுவிட்டுப் பிறருடைய நலத்தை நாட முற்படும் பொழுது அது உயர்ந்த ஒன்றாகக் கருதப் படுகிறது உண்மைதான். ஆனால், ஓர் இனம் முழுவதும் கூடித் தன் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு அதன் பொருட்டு பிற சமூகத்தின் அல்லது இனத்தின் நலனைப் பாதிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், அதுவும் தன்னலம் என்றுதானே குறிக்கப்படும்? இந்தப் பரந்த பொருளிலும் முதலிற் குறித்த குறுகிய பொருளிலும், ஆக இரு பொருள்களிலுமே  ‘தன்னலம்’ என்ற சொல் இங்குப் பயன்படுத்தப் படுகிறது.

தன்னலம் குழந்தையிடம் மிகுதியாகக் காணப்படு வதற்கு மனத்தத்துவ நூலார் பல்வேறு காரணங்கள் காட்டுவர். அவை நமக்குத் தேவை இல்லை. தன்னிடம் உள்ள இப்பண்பைக் குழந்தை மறைக்க முயல்வதில்லை. ஆனால், பெரியவர்கள் கூடுமான வரை இதைப் பிறர் அறியாதபடி நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு அனைவ ரிடத்திலும் காணப்பட்டாலும், இப்பண்பு உயர்ந்தது என்று கூறுவதற்கில்லை. மிகத் தாழ்ந்த ஒரு குணந்தான் இது. இப்பண்பு நிறைந்த ஒருவன் சமுதாயப் பிராணி அல்லன். பலருடன் கூடி வாழ அவன் தகுதி அற்றவன் ஆவன். ஆனால், இப்பண்போடு பிறக்கும் ஒருவன் தக்க வகையில் சமுதாயத்தில் வாழ வேண்டுமாயின் அதற்கு ஒரு வழிதான் உண்டு. அதாவது, இதனைக் கூடுமானவரை களைந்து எறிவதுதான். எவ்வளவுக்கெவ்வளவு இது ஒருவனிடமிருந்து கலையப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் சிறந்தவன் ஆகலாம்; சமுதாயத்தில் சிறப்புடனும் வாழலாம்.

சீர்திருத்தம்

எவ்வாறு இதனைக் களைவது? நம்மையும் அறியாமல் நாம் சீர்திருந்தத்தான் செய்கிறோம். குழந்தையாய் இருந்த பொழுது ஒருவருக்கு ஒன்று தர மறுத்தவன், பெரியவன் ஆனவுடன் தன் மனைவி மக்கள் என்பவர்க்குத் தன் பொருளைப் பகிர்ந்து கொடுக்க முன் வருகிறான்; ஏன்? பல சமயங்களில் தன் நலந்தீங்குகளைப் பாராது அவர்கள் நலத்துடன் இருக்கப் பாடுபடுகிறான். இப்பொழுது பழைய தன்னலம் ஓரளவு அகல்கிறது. இன்னுஞ் சில காலங் கழித்துத் தன் மனைவி மக்கள் என்ற நிலைக்குப் பிறகு தன் சுற்றத்தார் என்பவர்கட்காகவும் தன்னுடைய வாழ்க்கை உளது என்பதை உணரத் தலைப்படுகிறான். அதன் பின்னர்த் தான் வாழ்க்கை நடத்தும் இடம், தெரு, ஊர், மாவட்டம், நாடு என்று அவனுடைய பற்று விரிவடையக் காண்கிறோம். ஆதியில் இருந்த தன்னலமே மாறி இங்ஙனம் விரிந்து இடம் தருகிறது. ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் என்றும் ஒரே மாதிரியாக இருப்பதையும் உலகிடைக் காண்கிறோம். மனைவி மக்களுக்குச் சோறு போடுவதைகூடத் தருமக் கணக்கில் எழுதும் ஒப்பற்ற பிறவிகள் அவர்கள். ஆனால், பெரும்பாலார் முன்னர்க் கூறிய முறைப்படி விரிந்து செல்லும் பற்றுடையவரேயாவர்.

இனி இத்தன்னலம் ஏன் இவ்வாறு பரிணமித்து விரிகிறது என்பதைக் காண்டல் வேண்டும். இது தானாக விரிவடையும் ஒன்றா, அல்லது நாமாக இதனை விரிவடையச் செய்ய வேண்டுமா? நாமாகத்தான் இதனை விரிவுபடுத்த வேண்டும். மனித மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கல்லாகும் இத்தன்னலம் என்பது. இதனை அப்பால் புரட்ட வேண்டுமானால், வலுவான ஓர் இரும்புக் கம்பி வேண்டும். அக்கம்பிதான் 'அன்பு' என்பதாகும். அன்பு எனும் கம்பியின் அடியில் 'உறுதி' என்னும் ஆப்பை வைத்து நெம்பினால், தன்னலம் என்னும் பெறுங்கல் புரண்டு விடும்.

அன்பு

அன்பு என்பதும் இயற்கையில் மனித மனத்தில் அமைந்து விட்ட ஒரு பண்பாகும். இதனை நன்கு வளர்ப்பவர் முழு மனிதன் ஆகமுடியும். இஃது இல்லாதவரை மனித இனத்திற்கூடச் சேர்த்தல் அரிது என்பர் ஆசிரியர் வள்ளுவர்.

என்புஇல் அதனை வெயில்போலக் காயுமே
அன்புஇல் அதனை அறம்.
(குறள்-77)

அன்பின் வழியது உயர்நிலை; அஃதுஇல்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 
(குறள்-80)

என வரும் குறட்பாக்கள் இக்கருத்தை வலியுறுத்தல் காண்க. இவ்வன்புடையாரே சமுதாயத்தில் நன்கு வாழ முடியும். தன்னைத்தானே பெரிதும் பற்றி நிற்கும் இந்த அன்பு விரிந்து முதல் முதலில் குடும்பத்தில் படருகிறது.

அந்நிலையை எளிதில் அறிந்துகொள்ள இயலும். எப்பொழுது ஒருவனுக்குக் குழந்தைகளிடம் உண்மை அன்பு சுரக்கிறதோ, அப்பொழுது 'குழலும், யாழும்' ஓரளவு அவனுக்குச் சுவை குறைந்துவிடும். அவர்கள் மெய் தீண்டியவுடன் உடலுக்கு ஒரு புதிய இன்பம் தோன்றும். அவர்கள் சிறு கை அளாவிய கூழ் அமிழ்தினும் ஆற்ற இனிமையுடையதாகக் காணப்படும். தனது ஐம்பொறிகளா லும் அவர்களுடைய இன்பத்தை ஒருவன் அனுபவிக்கத் தொடங்குகையிலேதான் அவன் அன்பு முழு விளக்கம் பெற்றதென்று கூறமுடியும்.

இத்தகைய அன்பு ஒன்றே மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ வகை செய்து, பின்னர் அவனை வானுறையும் தெய்வத்துள்ளும் ஒருவனாகச் செய்கிறது. தன்னலம் போல இயற்கையாகவே ஒருவன்மாட்டுத் தோற்றுகிற இந்த அன்பானது, அவனாலேயே போற்றி வளர்க்கப்படல் வேண்டும். அவ்வாறு வளர்ப்பதனாலேயே அவன் சமுதாயத்தில் சிறந்த உறுப்பினன் ஆதல் கூடும். முன்பின் அறியாதாரிடத்து அன்பு செலுத்திப் பழகுதல் எளிதன்று. எனவே, தன் மக்களிடத்திலேயே அதனை முதலிற்செய்து பழக, ஆசிரியர் வழி வகுத்தார். தன்னலம் என்னும் பேய் பிடித்தவனை அப் பேயினிடத்திருந்து விடுவிக்கவே குழந்தைச் செல்வம் பயன்படுகிறது.

இசை வெறுக்கிறதா?

இசை வெறுக்கிறதா உங்கட்கு? குழலும், யாழும் வெறுப்புத் தட்டுகின்றனவா? இவ் வினாவைக் கேட்டாள் விடை தரப் பலரும் கூசுவர். உலக மகாகவி 'ஷேக்ஸ்பியர்' கூறியது போல 'இசையில் ஈடுபடாதவன் எக் குற்றவமும் செய்வான்,' என்ற முறையில் தம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற கருத்தால் உண்மை கூற மாட்டார்கள். உலகில் பிறந்த மக்கள் அனைவரும் ஓரளவாவது இசையில் ஈடுபடத்தான் செய்வர். விலங்கினங்களிற்கூடப் பல இசையில் ஈடுபடும் என நூல் கள் கூறுகின்றன. மதங்கொண்ட யானையும் இசைக்குக் கட்டுப் பட்டு நிற்குமாம்.

காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கியாங்கு 
(பாலைக்கலி-1)

எனக் கலித்தொகை கூறுவதால் இவ்வுண்மை நன்கு விளங்குகிறது.

இனிய மழலை

கண்ணன் குழல் வாசித்தபொழுது மாடுகளும் ஏனைய கொடிய விலங்குகளும் அவன் இசையில் ஈடுபட்டு அப்படியே நின்றுவிட்டன என்றும், ஆனாயர் குழல் ஊதியபொழுது,

'மரங்கள் மலர்ச்சினை சலியா; கான்யாறும் கலித்து ஒடா'

என்று கூறப்படுகிறது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இசையில் ஈடுபடாத மனம் உடையார் இருக்கவும் கூடுமா? இவ்வாறு இருக்கவும், ஆசிரியர்,

குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் 
(குறள்-66)

என்று கூறக் காரணம் என்னை? இக்குறளுக்கு உரை கூற வந்த ஆசிரியர் பரிமேலழகர், 'இசையைக் கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பார் என்பது குறிப்பெச்சம்.' என்று பொருள் எழுதிச் சென்றார்.

இக்குறளில் வள்ளுவப் பெருந்தகை கூறியது உயர்வு நவிற்சி அணியா என்பது ஆராய்தற்குரியது. இதற்கு முன்னர் உள்ள குறளிலும் 'அவர்தம் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு' என்று கூறப்பெறுகிறது. இவ்வாறு இரண்டு இடங்களிற் கூற்றவேண்டுமாயின், தக்க காரணம் இல்லாமல் ஆசிரியர் கூறமாட்டாரன்றோ?

இசையில் ஈடுபடுபவர்

குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளில் இசை தோன்றுகிறது. இந்த இசையில் அனைவருமா ஈடுபடு கின்றனர்? இல்லையே! காரணம் என்ன? சிலர் இசையில் தம்மையே மறந்துவிடுகின்றனர்; சிலர், இசையைத் தலையிடியாகக் கருதுகின்றனர். ஈடுபடுத்தும் இயல்பு இசையினிடம் மட்டும் காணப்படுமானால், அனைவரையு மல்லவா அது ஈடுபடுத்த வேண்டும்? எனவே, இசையில் ஈடுபடுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு என்பது விளங்கும். ஒன்று, இசை ஈடுபடுத்தும் தன்மை பெற்றதாய் இருத்தல் வேண்டும். இரண்டாவது, அதனைக் கேட்பவர் தக்க மனநிலை உடையவராய், பண்பட்ட மனம் உடையவராய், இருத்தல் வேண்டும். இவை இரண்டும் சேரும் பொழுது இசை இனிமையாய் இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடைபெறுகிறது என்பதைக் காண்டல் வேண்டும்.

நல்ல பண்பட்ட மனம் உடைய ஒருவர் இசையைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நான்கு பொறிகளும் வேலை அடங்கச், செவி ஒன்று மட்டுமே தொழிற்படுகிறது. மனமும் அச் செவிக்கு உறுதுணையாய் இருந்து இசை இன்பத்தில் ஈடுபடுகிறது. கேட்கக் கேட்க மனம் அடங்கி ஒன்றிவிடுகிறது. இந்த 'ஒன்றல் தன்மை' (Harmony) தான் இசை நமக்குத் தரும் பெரிய செல்வம். இந்நிலையில் ஒன்றி இருக்கும் ஒருவருக்கு மனம் மாறுபட்டாலும் இசை 'அபஸ்வரம்' ஆகிக் கேட்டாலும் மறுபடியும் ஒன்றல் தன்மையை அடைவது இசையில் இயலுமாயினும், அவ்வொன்றலின் பயனாக அன்பு பிறப்பதில்லை. ஒன்றல் தன்மை நாளா வட்டத்தில் தன்னலம் என்ற இயல்பை மறக்க உதவும் என்பது உண்மையே. கலைஞன் 'தான்' என்ற அகங்காரத்தை மறந்து உயர்நிலை அடைவது இவ் ஒன்றல் தன்மையாலேயே ஆகும்.

இசை ஈடுபாடு போதாது

ஆனால், சமுதாயத்தில் ஓர் உறுப்பாய் இருந்து பிறருக்கும் தனக்கும் பயன்படும்படி வாழ்வை நடத்த வேண்டிய கடப்பாடு உடைய ஒருவன், இத்தகைய ஒன்றல் தன்மை மட்டும் பெற்றிருந்து பயன் இல்லை. அவனுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு அது பயன்படுமாயினும், பிறருக்கு அவன் பயன்படமாட்டான். இசையில் ஈடுபட்டுத் தன்னை மறக்கும் இயல்பால் சமுதாயத்திற்கு ஒருவன் என்ன பயனை விளைக்க முடியும்? எனவே, சமுதாயத்தில் வாழும் ஒருவன் மனம், வேறு வகையில் பழக்கப்படுத்தப்பட வேண்டும். அவன் வாழ்க்கை நன்கு நடைபெற ஒரே வழிதான் உண்டு. அதாவது அவன் அன்பு நிறைந்த மனத்தைப் பெறல் வேண்டும். அன்பைப் பெற வழி யாது? குழந்தைகளிடந்தான் மனிதனுடைய அன்பு நன்கு வளர்கிறது. குழந்தைகளிடத்தில் பழகுவதில் தனிப்பட்ட ஓர் இன்பத்தையும் அவர்கள் மழலையைக் கேட்பதில் ஒரு தனி மகிழ்ச்சியையும் எவன் பெற முடிகிறதோ, அவனே முழுத் தன்மை பெற்ற மனிதனா கிறான். மனிதன் முழுத் தன்மை பெற இது ஒரு வழி என்பதைப் பழங்காலத் தமிழன் நன்கு கண்டிருந்தான். இதனாலேயே இலக்கியத்திலும் குழந்தை இடம் பெற்றது. பிற்காலத்தில் குழந்தையைப் போற்றப் 'பிள்ளைத் தமிழ்' என்ற தனி இலக்கியமே தோன்றலாயிற்று.

இத்தகைய அரிய, குழந்தை இன்பத்தில் ஈடுபடுவது எளிது என்பதும் நோக்கற்பாலது. மனிதன் பொறிகளின் வழி இசையை அனுபவித்துத் தன்னினும் வேறுபட்ட அந்த இசையில் சென்று ஒன்றுவதைக் காட்டிலும் சுலப மானது குழந்தையினிடம் ஒன்றுவது. குழந்தை என்பது தந்தையின் 'நகல்' அல்லது 'பிரதி' தானே? தானே வேறு வடிவமாய் இருக்கிறது அக்குழந்தையிடம் ஒருவன் ஒன்றுவது எளிது அன்றோ? எனவே, குழந்தையிடம் உண்மையான அன்பு நிறைந்த ஒருவனுக்குக் குழலும் யாழும் ஓரளவு வெறுத்துவிடும் என்பது உண்மையன்றோ? இக்கருத்தை வலியுறுத்தும் அகநானூற்றுப் பாடல் ஒன்று நினைவு கூர்வதற்குரியது.

குழல் வெறுத்த தலைவன்

தலைவன் ஒருவன் பரத்தை வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டான். புதிய ஆடை அணிகளால் தன்னை அலங்காரம் செய்துகொண்டு தேர்மேல் ஏறி வருகின்ற அத்தலைவன், தன்னுடைய புதல்வன் வீதி வழியே தளர நடையுடன் நடந்து வருவதைக் கண்டான்; தேர்ப் பாகனுக்குத் தேரை நிறுத்துமாறு உத்தரவிட்டான்; கீழே இறங்கிக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான்; குழந்தை அவனை விட மறுத்து, அழத் தொடங்கி விட்டது. தலைவன் வேறு வழியின்றித் தவித்தான். பரத்தை வீட்டில் அவன் வரவை எதிர்பார்த்து இசை முழக்கம் நடைபெறுகிறது. அவனை வா என அழைப்பது போல் அந்த இசை அவனுடைய காதில் வந்து விழவும் குழந்தையினிடம் கொண்டுள்ள அன்பால் தலைவன் பரத்தை வீடு செல்லாமல் நின்றுவிட்டான். இக் கருத்தை அழகிய அகப்பாடல் குறிக்கிறது.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மருவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோர்எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி!
நிறைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்தொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து
காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவஎன்று இழிந்தனன் தாங்காது
மணிபுரை செய்வாய் மார்பகஞ் சிவண புல்லிப் பெரும .....
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனை
பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்
.....அழுங்கினன் அல்லனோ....

 (அகம்-67)


இசையில் ஈடுபடுகிற ஒரு மனம் மட்டுமன்று இப் பாட்டில் காணும் தலைவனுடைய மனம்; அதையும்விட அவன் பரத்தைமாட்டு விருப்புக்கொண்டு புறப்பட்டான் அன்றோ? இவ்வாறு இருந்தும் அவன் இரண்டு இன்பங்களையும் துறந்துவிட்டு இருப்பதற்குக் காரணமாய் இருந்தது எது? தலைவிக்கு வருத்தம் உண்டாகும் என்ற பெருநோக்கத்தால் அவன் நின்றுவிடவில்லை. அவ்வாறா யின், அவன் புறப்பட்டிருக்கவே மாட்டான். ஊரார் அவனை ஏளனம் செய்வர் என்பதற்காகவும் அவன் நின்றுவிடவில்லை. அவ்வாறாயின், பலர் அறியத் தேரில் ஏறிக்கொண்டு புறப்பட்டிருக்கமட்டான். பின்னர் ஏன் அவன் செலவு தடைப்பட்டது? மனைவிமாட்டுக் கொண்ட காதலினும், பிறர் பழிச்சொல்லில் கொண்ட அச்சத்தினும், வலிய ஒன்றால் அன்றோ அவன் போவது தடைப்பட்டது? அது எது? அவன் குழந்தைமாட்டுக் கொண்டிருந்த அன்புதான். குழந்தையிடம் இத்தகைய அன்புடைய ஒருவனுக்கு இசை வெறுத்து விடும் என்பதில் ஐயம் என்ன? ஆம்! குழல் இனிது, யாழ் இனிது என்பர்; யாரென்றால், 'தம் மக்கள்' மழலைச் சொல் கேளாதவர். 'தம் மக்கள்' என்று ஆசிரியர் கூறியது ஆராயத்தக்கது. மேலும் 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்' என்றும் கூறுகிறார் அன்றோ? பொது வாகக் குழந்தைச் செல்வதில் ஈடுபட்டு இன்பம் அடையும் ஒரு நிலை எளிதன்று.

இல்வாழ்க்கையை அன்புப் பெருக்கத்திற்கு அடிப் படியாக வைக்கிறார் ஆசிரியர் என்பது முன்னமே கூறப பெற்றது. அந்த அன்பு பெருக வேண்டின், அவன் குழந்தையிடந்தான் அவனுக்கு அன்பு பெருகமுடியும். இத்தகைய அன்பைத் தம் குழந்தையிடங்கூடப் பெறாது வாழும் சில 'புண்ணியவான்களும்' இவ்வுலகில் உண்டு. ஆனால், மனிதன் மனிதத் தன்மை அடையக் குழந்தை ஒரு நல்ல 'சாதனமாகும். ஒருவனுடைய அன்புவளர்ச்சி எந்நிலையில் உள்ளது என்பதை அறியத் தகுந்த அளவு கோலாகும் இது. என்றைக்கு ஒருவனுக்குத் தன் மக்களின் மழலை, இசையைவிட இனிமையுடையது ஆகின்றதோ, அன்று அவன் இல்வாழ்வின் பயனைப் பெற்றுவிட்டான் என்றே கூறிவிடலாம்.

அதிகார முறை வைப்பு

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால், 'அன்பு' என்ற ஒரு பண்பு அவனிடம் நிறைந்து இருத்தல் வேண்டும். இப்பண்பு ஒருவனிடம் காணப்பெறும் அளவை நோக்கித்தான் ஒருவனை ஆத்துமா என்றும் மகாத்துமா என்றும் பிரித்துக் கூறுகிறோம். வேண்டத்தக்க இப்பண்பை வளர்க்கும் வழி அறிந்துகொள்ள வேண்டாவா? அதற்கு உற்ற வழி இல் வாழ்வும் அதன் பயனாகிய குழந்தைப் பேருமே என்று ஆசிரியர் வள்ளுவர் குறிக்கிறார். அன்புடைமை என்ற அதிகாரம் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் பின்னர் அமைந்திருப்பது அறிந்து மகிழ்தற்குரியது. இவ்வதிகார முறை வைப்பு வள்ளுவர் செய்ததுதானா என்ற உண்மை இன்று பலராலும் ஆராய்ச்சி செய்யப்படினும் இங்ஙனம் சில அதிகாரங்கள் அவர் வகுத்தவை என்பதற்கு ஐயமின்று.

இது வாழ்வா?

சிறு குழந்தை முதல் பெரியவர் வரை காணப்படும் இவ்வகன்ற உலகம் நன்கு வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒரு கருவியாகும் அன்பு என்பது. இஃது இல்லையாயின், வாழ்க்கை அல்லது குடும்பம் என்று ஒன்று நடைபெற முடியுமா என்பதை நினைந்து பார்க்க வேண்டும். தாய்க்குக் குழந்தையிடம் அன்பு இல்லை யானால் குழந்தை வளர்வது எப்படி? தந்தைக்குக் குடும்பத்தில் அன்பு இல்லையானால், குடும்பம் நடைபெறுவது எங்ஙனம்? சுருங்கக் கூறின், உலகமும், அதில் மக்களும் வாழ முடியாது, அன்பு இல்லையாயின் இது கருதித்தான் ஆசிரியர்,

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று. (குறள்-78)

என்று கூறினார். வலிய பாறையில் விறகுக் கட்டை தளிர்க்கப் போவதுமில்லை; அன்பு இல்லாத குடும்பம் நன்கு வாழப் போவதுமில்லை.

போலி வாழ்வு


அன்பு என்னும் பண்பை ஒருவர் பெற்றிருக்கிறார் என்பதை எவ்வாறு அறிவது? இத்துணைச் சிறப்புப் பொருந்திய இப்பண்பை ஒவ்வொருவரும் பெற்றுள்ளது. போலவே நடித்தால் அதனை எவ்வாறு நம்புவது? உண்மை அன்புடையாரை அறிதற்கு அவர் வாய்மொழியைக் கருவியாகக் கொள்ளலாமா? கூடாது என்கிறார் ஆசிரியர். அன்பிலாருங்கூட, வாய்ச் சாமர்த் தியத்தால் அன்புடையார் போல நடிக்கவுங் கூடுமன்றோ? எனவே, அன்புடையாரை அறிய ஒரு வழி வகுக்கிறார் ஆசிரியர். அன்பு செய்யப்பட்டோரைக் கண்ட மாத்திரத்தே பொங்கி வழியும் கண்ணீரே அன்பை வெளிப்படுத்தும் சாதனமாகும். அன்புடையார் வாய் பேசாதுகூட இருக்கலாம். என்றாலும், அவர் கண்கள் உண்மையை உலகறியப் பறை சாற்றிவிடும். அன்புடைய ஒருவனுக்கும், அவன் கொண்டுள்ள அன்புக்கும் தொடர்பு எவ்வாறுளது? அன்பு என்ற பண்பை ஒருவன் எவ்வாறு பெறுவது? பெற்று வளர்க்கக் கூடிய ஒன்றா அது? இருக்கலாம். ஆனால், பெற்றுவிட்ட பின் ஒருவனுடைய புறத்துணையாகிய வேட்டி, சட்டை போன்று வேண்டுமான பொழுது போடவும் கழற்றவும் கூடிய ஒன்று அன்று அது. மனிதன் உடம்பு எடுத்ததன் பயன் அன்பு செய்தலேயாம் என்று கூறுகிறார் ஆசிரியர்.

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 
(குறள்-73)

என்ற குறளால் பெறுதற்கு அரிய ஓர் உண்மையைக் கூறுகிறார். கேவலம் இந்த உலகில் மட்டும் செம்மையாக ஒருவன் வாழ்ந்தாற் போதுமா? மறுமையிலும் அவன் சிறப்புடைய ஒரு வழி உண்டானால், அதுவே அன்புடைமை ஆகும் என்கிறார். அன்புடையார் இம்மை மறுமை என்ற இரு பயன்களையும் பெறுவர். வீடு பேற்றை இப்பிறவியில் பெற்றுயர்ந்த பெரியார் அனைவரும் கையாண்ட சுருங்கிய வழி இஃது ஒன்றுதான். இயேசு நாதர், இராமகிருஷ்ணர் போன்ற ஜீவன் முக்தர்கள் வேறு என்ன அரிய காரியத்தைச் செய்தனர்? அன்புடைமை ஒன்றே அவர்கட்கு வீட்டை அளித்தது. திருத்தொண்டர் புராண வரலாறுகளை அறிந்தவர்கட்கு இவ்வுண்மை நன்கு விளங்கும். சிறுத்தொண்டர், இயற்பகையார், மெய்ப் பொருள் நாயனார் போன்ற அடியார்கள் செயற்கருஞ் செய்கை செய்தார்கள். ஆனால், ஆனாயர் போன்றார் எவ்விதச் செயற்கரிய செயலையுஞ் செய்யவில்லை. அன்புடைமை ஒன்றே அவர்கள் வாழ்வை ஈடேற்றியது. இத்தகையவர்கள் கொண்டிருந்த அன்பு எப்படிப்பட்டது?

அன்பே தாமாதல்

இவர்கள் கொண்டிருந்த அன்பு வேறு, இவர்கள்வேறு என்று பிரித்துக் காண்பது இயலாத காரியம். அன்பு எனும் பண்பைத் தாங்கினார்கள் இவர்கள் என்று கூறுவதற்கில்லை. இவர்களே அன்பின் வடிவம் என்று தான் கூறவேண்டி உளது. கண்ணப்பரைப் பற்றிக் கூற வருகிறார் சேக்கிழார். தான் என்ற முனைப்பை அறவே களைந்துவிட்டு இறைவரைத் தம் தோழராகவே மதித்து, அவருக்காக வேட்டை ஆட வந்த அப்பெருந்தகையை என்னவென்று வழங்குவது?

அன்பு பிழம்பாய்த் திரிவார், அவர் பெருமை அளவிற்றோ
(பெரிய புராணம் -803)

என்று கூறுகிறார் கவிஞர். இறைவனைப்பற்றிக் கூறிய இடங்களில் எல்லாம்,

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில் புகும் அரசே! 
(திருவருட்பா-1)

என்றெல்லாம் கூறினார் வள்ளலார். ஆனால் சாத்திரஞ் செய்த திருமூலர்,

அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார் 
(திருமந்திரம்-279)

என்று கூறியதோடு அமையாது, 'அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்' என்றும் அல்லவா கூறிப் போந்தார்? 'அன்பே சிவமாவது' என்பதன் கருத்து என்ன? இறைவர் அன்பே வடிவாக உடையார் என்ற ஒரு பொருள் நிற்க. அன்பே இறுதியில் சிவமாக ஒருவரை ஆக்கிவிடும் என்பதும் ஒரு பொருள் அன்றோ? பிறவிக்கடல் நீந்த வேண்டும் என்று நினைப்பவர்க்கு அன்புதான் புணையாகிறது. ஏனைய துறவு நிலை முதலியனவும் வீடு பேற்றைத் தரினும், இவ்வுலகில் கடுந்துன்பத்தை அனுபவிக்கச் செய்கின்றன அவை. ஆனால், இவ்வுலகிலும் இன்பம் அனுபவித்து மறுமையிலும் வீடுபேற்றை அளிக்கவல்லது ஒன்று உண்டு எனில், அது 'அன்பு' என்ற ஒன்றுதான். இது கருதியே ஆசிரியர்,

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு. 
(குறள்-75)

அன்பின் வழியது உயிர்நிலை;,அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 
(குறள்-80)

என்றும் கூறினார்.

அன்பின் இரு பயன்கள்

பிறவிக்கடல் நீந்தப் பெரும்புணையாகும் இவ்வன்பு, சமுதாயத்தில் ஒருவன் நன்கு வாழவும் வழிவகுத்துத் தருகிறது. இக்கால உலகில் வாழும் ஒருவன் காலையி லிருந்து மாலை வரை எத்துணைப் பேர்களுடைய உதவியை நாடி வாழ வேண்டியவனாய் உள்ளான்? கேவலம் பணம் ஒன்று மட்டும் இருந்தால் மன அமைதியுடன் வாழ்ந்துவிட முடியுமா? எவ்வளவு பணம் இருப்பினும் மனிதர் உதவி வேண்டும்', என்பன போன்ற பழமொழிகள் எவ்வளவு உண்மையை அறிவுறுத்துகின்றன! மனிதர் உதவி தேவை என்றால் அதைப் பெறுதல் யாங்ஙனம்? எல்லா மனிதரையும் விலைக்கு வாங்குதல் என்பது நடைபெறக் கூடியதா? பணத்தைக் கண்டு பரக்க விழிக்காதவர்களை என் செய்வது? இத்தகையவர்களை நமக்கு நண்பர்களாகச் செய்வது எது? ஆசிரியர்,

அன்புஈனும் ஆர்வ முடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
(குறள்-74)

என்ற குறளால் விடை கூறுகிறார். ஏனைய வசதி ஒன்றும் இல்லாதவர் பலர், பல நண்பர்களைப் பெற்று அரிய காரியங்களைச் சாதித்தலைக் காண்கிறோம். இவர்கள் செல்வாக்கின் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், 'அன்பு என்ற ஒன்றைக் கொண்டே இவர்கள் இப்பெருநிலையை அடைந்தார்கள் என்பதை நாம் நன்கு அறியலாம். அன்புடையார் சமுதாயத்தில் பெருஞ்செல்வாக்கு அடையக் காரணம், அவர்கள் தமக்கு என ஒன்றையும் ஏற்காமைதான் 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' (குறள்-2) என்ற குறளை உண்மையிலேயே நடத்திக் காட்டும் இயல்பினர்க்கு வேண்டும் சிறப்புத் தானே வந்து எய்தும்.

பழைய குறள்- புதிய பொருள்


உலகிடை நடைபெறும் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து பார்த்தால் அனைத்தும் அன்பின் வழிப்பட்ட செயல்களாகவே இருக்கக் காணலாம். ஒருவனுக்கு மற்றவன் செய்யுந் தீங்குகூட அன்பினால் செய்யப்படுவது தான் என்றால், யார் நம்புவார்கள்! ஆனால், உண்மையில் உலகில் நடைபெறும் அனைத்துச் செயல்களும் அன்பினாலேயே நடைபெறுகின்றன. செயலளவில் இன்பம் பயப்பனவும், துன்பம் பயப்பனவும் எனச் செயல்கள் இருவகைப்படும். ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு குழந்தைக்கு வெப்பு நோயும், மற்றொன்றுக்கு வயிற்றுக் கடுப்பும் இருக்கின்றன. முதற் குழந்தைக்குக் கசப்பு மருந்தும் மற்றொன்றிற்கு இனிப்பு மருந்தும் தருகிறாள் தாய்; கசப்பு மருந்தை உட்கொள்ளாத குழந்தையைக் காலில் போட்டுப் பிடிவாதப்படுத்திப் புகட்டுகிறாள். அதனால் அக்குழந்தை தன் தாய்க்குத் தன்மாட்டு அன்பு இல்லை என்றும், தனக்குக் கசப்பு மருந்தே தருகிறாள் என்றும், அடுத்த குழந்தைக்கு அன்புடைமையின் இனிப்பு மருந்து தருகிறாள் என்று நினைத்துக் கொண்டால், இப்பிழை யாருடையது? கசப்பு மருந்தை ஊட்ட வேண்டித் தாய் குழந்தையின் துன்பத்தைப் பாராது காலில் போட்டு அமுக்கினது உண்மைதான். செயலளவில் இது அன்புச் செயலன்று; மறச் செயல்; கொடுமை உடைய செயல் என்றுதான் கூற வேண்டும். வழியே செல்கின்ற ஒருவனை மற்றொருவன் கத்தியால் குத்திவிடுகிறான் என்றால் அதற்குரிய தண்டனை என்ன என்பதை நம்மில் பலரும் அறிவோம். ஆனால், அறுவை வல்லுனரான ஒரு வைத்தியர் நோயாளி ஒருவரை அறுக்கிறார்; அதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், நோயாளி யின் நன்றியறிதலையும் பரிசிலாகப் பெறுகிறார். ஏன்? செயலளவில் மருத்துவர் செய்வது மறச் செயல்தான்? 'ஐயோ! அம்மா!' என்று நோயாளி கதறுவதையும் பொருட்படுத்தாமல் அவனுடலை அறுத்தல் மறச்செயல் தானே? ஆனால், செயலளவில் மறமாய் இருப்பினும் அவருடைய கருத்து நோயாளிக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதன்றோ? இது கருதித்தான் ஆசிரியர்,

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை 
(குறள்-76)

என்று கூறினார். தாய் தந்தையர் மகனைக் கடிவதும், மருத்துவர் அறுத்து ஊறுபோக்குவதும் அன்பால் விளைந்த செயலேயன்றி வேறு இல்லை.

எனவே, சமூகத்தில் வாழ்பவனுக்கும், துறந்து வீடுபேற்றை நாடுபவனுக்கும் அன்பு இன்றியமையாது வேண்டப்படும் என்பது இதனாற்பெறப்படும்.

இல்லறப் பயன்

அன்புடையார் செய்யும் இல்லறத்தில் விருந்தோம்பல் மிகுதியாகக் காணப்பெறும். விருந்தை உபசரிப்பதில் என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்று வினவத் தோன்றுகிறதன்றோ? விருந்தினரை எவ்வளவு தூரம் ஒருவன் போற்றி வாழ்கிறானோ, அவ்வளவு தூரம் அவன் சமுதாயத்தில் சிறந்து வாழ முடியும். விருந்து என்றவுடன் தன் உற்றார் உறவினருக்கு ஒருவன் செய்யும் உபசரிப்பைப் பற்றி நினைந்து விடக்கூடாது. உற்றார் உறவினர் என்பவர் வேறு, விருந்து வேறு என்பதைக் காட்டவே 'தென்புலத்தார், தெய்வம் விருந்து ஒக்கல், தான்' (43) என்று ஐந்து வகைப்படுத்திக் காட்டினார் ஆசிரியர். இங்கு ஒக்கல் என்று அவர் குறிப்பிடுவது உற்றார் உறவினர் என்பவரை யேயாகும். எனவே, விருந்து என்றது இவரினும் வேறுபட்டாரையாகும். புதியவர்களாக வருபவர்களும், என்றோ ஒரு நாள் வருகின்றவர்களுமே விருந்து என்ற தொகையில் அடங்குவார்கள். மேலே கூறிய ஐந்து வகையினரையும் உபசரிக்க வேண்டுவது இல்லறத்தானின் கடைமையாய் இருப்பினும், அவ்வைவர் உள்ளும் தலையா யவர் 'விருந்தினர்' என்பதைக் காட்டவே 'அன்புடைமை' என்ற அதிகாரத்தின் பின்னர் 'விருந்து ஓம்பலை' வைத்துள்ளார் ஆசிரியர்.

சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவனும் தன் கடமைகளில் ஒன்றாக விருந்தோம்பலைக் கொள்ள வேண்டும் என்பதே ஆசிரியர் கருத்துப் போலும்! அன்றேல்,

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற்பொருட்டு. 
(குறள்-81)

என்று கூறியிருக்க மாட்டார். விருந்தினரை வரவேற்பதற் காகவே இல்லறம் நடத்துகிறோம் என்று அவர் கூறுவதில் எவ்வளவு உண்மைகள் அடங்கி உள்ளன! இல்லறம் நடத்துபவன் சமுதாயட்டில் ஓர் உறுப்பாகிறான். எனவே, நாட்டிற்கும் அவன் உற்ற ஒரு துணை ஆகிறான். அத் தகையவன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்றால், அவனுக்கு நட்பு அதிகமாக இருத்தல் வேண்டும். நட்பினர் மிகுதியாதற்கு விருந்தோம்பல் ஒரு சிறந்த வழி அன்றோ?

ஓர் அறம்

இதன்றியும் மனிதனின் கடமை ஒன்றை நிறைவேற்ற வும் விருந்தோம்பல் பெரிதும் பயன்படுகிறது. பசித்து வந்தவர்க்கு ஒரு பிடி சோறு தருதலைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு யாது உளது? ஏற்றலுக்கு உரிய மனப் பான்மை இல்லாமலும் அதற்கு மனம் துணியாமலும் உள்ள ஒருவரை எவ்வாறு உச்சரிப்பது? அவர் எக் காரணத்தாலும் ஒருவரிடம் சென்று உணவு வேண்டும் என்று இரக்கமாட்டார். அத்தகைய ஒருவரை விருந்தின ராகக்கருதி அழைத்து உபசரித்தாலன்றி, வேறு எவ்வழியில் அவரைப் போற்ற முடியும்? இது கருதியே போலும் விருந்தினரைப் புறத்தே வைத்து உண்ணலாகாது எனக் கட்டளை இடுகிறார்.

விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. 
(குறள்-82)

என்ற குறளை உற்று நோக்குக. சாவாமையைத் தரும் அமிழ்தமாயினும் விருந்தைப் புறத்தே வைத்து உண்ணற்க என்று பொருள் கூறுவதைக் காட்டிலும் திரு அரசன் சண்முகனார் கூறியதாகக் கூறும் உரை இன்னும் அழகாக அமைவதைக் காணலாம், 'விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவாம்' என்று கூறுவாராம் அவர். விருந்தைப் புறத்தே வைத்துவிட்டு உண்ண வேண்டாவென்று கூறுவதைக்காட்டிலும், உண்டால் அது சாவைத் தவிர வேறு அன்று என்பதே இதன் பொருள். 'உண்பது மருந்தாக இருந்தால் என் செய்வது? நோயுடையார் மட்டுமே உண்ண வேண்டிய மருந்தாயின் என்செய்வது?' என்பாரை நோக்கி. 'மருந்து எனினும், அவ்வாறு தனியே உண்டல் வேண்டற்பாற்று அன்று' என்று கூறுவது எவ்வளவு ஆழமும் அழகும் உடையது! பிறருக்குச் சோறு கொடுத்து அதனால் வறுமை அடைந்தோர் உலகத்து இல்லை என்ற உண்மையைத் தெளிவுறத்தவே விருந்தோம்பு பவனுடைய வாழ்க்கை தரித்திரத்தால் பாழாகாது என்று பின்னும் கூறுகிறார்.

பரந்த மனப்பான்மை

எதிர்மறை முகத்தான் அவன் தரித்திரத்தால் வாட மாட்டான் என்று கூறிய ஆசிரியர், அடுத்து உடன்பாட்டு முகமாகக் கூறத் தொடங்கி, 'விருந்து ஓம்புவான்' என்றும் கூறினார். கூடி வாழும் இயல்புடையவனாகிய மனிதன் விருந்தோம்பலின் மூலம் தனது இந்த இயல்பை வளர்த்துக் கொள்கிறான். மேலும், இவ்வுலகில் வாழத் தொடங்கிய அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் 'தன்னலம்' என்ற பேயினுடைய பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? அதற்குரிய வழி துறைகள் யாவை? அவ்வழி துறைகளில் ஒன்றுதான் விருந்து ஓம்பலாகும். விருந்தினரை வெற்று வாய்ச் சொல்லால் மட்டும் உபசரித்தல் போதுமா? அவர்கட்கு உணவு கொடுப்பது என்றால், அதனால் ஆகும் செலவு எவ்வளவு ஆகும்? ஒருவன் உடலை உழைத்துச் சம்பாதிக்கும் பொருளைச் செலவு செய்ய இதுதானா? 'ஆம்' என்கிறார் ஆசிரியர். அவருக்கும் முன்னரே நக்கீரர் என்ற பெரியார் 'செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்புந பலவே!' என்று கூறியுள்ளார். ஒரு மனிதன் தானாகப் பாடுபட்டு உழைத்துப் பெற்ற பொருளை எளிதில் ஈந்துவிட்ட விரும்ப மாட்டான். ஆனால், இந்தப் பற்று உள்ளமே அவனுக்குப் பெருந்தீங்காகப் பின்னர் விளையப்போகிறது. மனிதனைப் பற்றிய தன்னலப் பேய் ஒழிய, விருந்தோம்பல் முதற்படி ஆகும். அதிலும், வேளாண்மை செய்பவன் பிறருக்குச் சோறு கொடுத்தலை ஒரு பெரும்பாரமாகக் கருத மாட்டான். எனவே, விருந்தோம்பலின் மூலமே அவனுக்குப் பரந்த மனப் பான்மை வருமாறு செய்யலாம்.

புதிய காரணம்

விருந்தோம்பலை இவ்வளவு அழுத்தமாக வள்ளுவர் கூறுவதற்குப் பிறிது ஒரு காரணமும் இருக்கலாமோ என ஐயுற வேன்டி உளது. இன்றுங் கூடத் தமிழ்நாடு உணவு நிலைமையில் ‘சுயதேவை’ அளவுக்குக் குறைவாகவே உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளது. இன்றைய நிலைமையே இவ்வாறு என்றால், இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னர் இந்நிலை இன்னும் மோசமாகத்தானே இருந்திருக்கும்? இன்றுள்ள அளவுகூட அன்று விளை நிலங்கள் பயன்படுத்தப்பெற்றுப் பயன் தந்திருக்கமுடியாது.

இன்று தமிழ்ச் சமுதாயம் பெருகியுள்ள அளவு தமிழ் மக்கள் கூட்டம் அன்று இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, உணவு நெருக்கடியும் இவ்வளவும் இல்லாமல் இருந்திருக்கலாமெனில். விளை நிலங்களும் குறைவாகவே இருந்திருத்தல் வேண்டும், மேலும், தமிழ் மக்கள் இடையே ஓயாத போர் ஏற்பட்டு வந்தமையின், அமைதியாக இருக்கும் காலத்தில் மட்டுமே அதிகமான வேளாண்மை நடைபெற முடியும். ஓயாது போர் என்றால், அதனால் ஏற்படும் பொருள் அழிவும் ஆள் சேதமும் எவ்வளவு என்று எண்ணிப் பார்க்கவும் மணம் நடுங்குகிறது! இந் நிலையில் உள்ள பயிர் நிலங்களைக்கூடச் செம்மையாகப் பயிர் செய்யப் போதிய ஆட்கள் இருக்க வியலாது அன்றோ? எனவே, உணவுப் பஞ்சமே நாட்டிலிருந்திருக் கும் என்பதில் ஐயமென்னை? இம்மட்டோடு இல்லை. உள்ள பயிர் நிலங்களும் இன்று போலப் பலரிடம் இருந்திருக்க இயலாது. உடையார் சிலரும் இல்லார் பலருமாகவே இருந்திருப்பார். 'இலர் பலராகிய காரணம்' என்ற குறளால் (270) இவ்வுண்மை அறியப்படுகிறதன்றோ? உடையாராகிய சிலரும் தம்பால் உள்ள பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து தாராவிடின், இல்லார் கதி என்ன ஆகும் என்பது கூற வேண்டுவதின்று. அதிலும் ஏனைய பொருள்களைத் தாராளமாக வழங்கி விட்டு உணவைத் தாராவிடினும் பயன் இல்லை. தரத் தக்கனவாய பொருள்களில் தலை சிறந்தது உணவே என்பது விளங்கும். ஆகவே, எல்லா வகை ஈகையினும் சிறந்தது உண்டி கொடுக்கும் ஈகையேயாகும். பழந்தமிழ்ப் பாடல்களை ஒரு முறை படிப்பவரும்,  ‘பாணர், கூத்தர்’ என்பவரை மறத்தல் இயலாது. இப்பாணர்கள் ஓயாது வறுமையில் உழலும் திருக்கூட்டத்தார்; இவர் விரும்புவது நல்லுணவே ஆகும். அரசர்கள் தரும் பொன், வெள்ளி முதலிய பரிசில்களைக் காட்டிலும் அவர்கள் தரும் உணவையே பெரிதும் விரும்பி உள்ளனர் என்பது இவர்கள் கூற்றாக அமைந்த பாடல் களைப் படிப்பார் நன்கு உணர இயலும். இந்நிலையான பாடல்கள் நாட்டில் அன்றும் இருந்த உணவுப் பஞ்சத்திற்கு அறிகுறியோ என நினைய வேண்டி உளது. இத்தகைய சூழ்நிலையில் பாட வந்த ஆசிரியர், விருந் தோம்பலை மிகுதிபடுத்திக் கூறியது சாலப் பொருத்தம் உடையதே.

சூழ்நிலை நாட்டில் இவ்வாறு இருந்தமையின் விருந்து இடுபவர் தம்மைப் பெரியாராக நினைத்துக் கொண்டு, விருந்தினரை மட்டமாக நினைக்கவும் இடம் உண்டு அன்றோ? அனைவரும் இவ்வளவு மோசமாய் இராவிடி னும், ஒரு சிலராவது இத்தவற்றைச் செய்தல் இயல்பே யன்றோ? இது கருதியே ஆசிரியர்,

மோப்பக் குழையும் அனிச்சம்; முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து 
(குறள்-190)

என்று கூறுவாராயினார். விருந்திடுபவர் தாம் செய்வதை ஏதோ பெரிய உபகாரமாக நினையாமல், கடமையைச் செய்வதாகவே நினைக்கவேண்டும். அதிலும், மகிழ்ச்சி யோடு கடமையைச் செய்வது எவ்வளவு சிறப்புடையது! வெறுஞ்சோற்றை இட்டு, இன்முகம் காட்டவில்லை யாயின், இட்டும் பயன் இல்லையாய் விடும். எனவே, இன்முகம் காட்டலே விருந்திடுவதினும் இன்றியமையாதது என அறிவுறுத்துகிறார் ஆசிரியர். விருந்தோம்பல் இல்லறத் தானுக்கு இன்றியமையாத கடமை என்றால், இன்முகங் காட்டி விருந்தினரை உபசரித்தல் அவ்விருந்து இடுதலினும் தலையாய கடைமையாகும். அன்றைய தமிழர்களுக்கு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப் பொன்மொழிகள் இன்றைய தமிழ் நாட்டிற்கும் எவ்வளவு தேவை என்பதை உன்னிப பார்ப்போமாக.

தலைவியின் கண்கள்

அகவாழ்வின் இன்றியமையாத உறுப்பாவாள் தலைவி, பின்னர்க் காணப்போகும் நற்றிணைப் பாடல்கள் அனைத்திலும் தலைவியின் அழகு முதலியன விரிவாகப் பேசப்படும். ஆனால், குறள் அத் தலைவியின் அழகு பற்றிப் பேசுவதே ஓர் அலாதியான அழகு. இதோ தலைவியின் கண்களைப் பற்றிக் குறள் பேசுகிறது.

பெண்ணைப்பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரே இல்லை என்று கூறிவிடலாம். புலவரனைவரும் கலைஞர்; கலைஞரோ அழகில் ஈடுபடுபவர்; பெண்களோ, அழகின் இருப்பிடம்; எனவே, பெண்களைப் கவிஞர்கள் பாடுவதில் வியப்பொன்றுமில்லை.

பெண் அழகில் ஈடுபடுவதும் அவ்வழகு பற்றிக்கவிதை புனைவதும் கவிஞர் அனைவருக்கும் பொதுவெனில், சிறந்த கவிஞரைக் காண்பது எவ்வாறு? அனைத்துக் கவிஞரும் இவ்வொரு பொருளைக் பற்றிப் பாடினாலும் அவரவர் தம் அனுபவத்தின் விரிவு, ஆழம், கற்பனை என்பவற்றிற்கேற்ப அவர்கள் கவிதைகளும் மாறுபடும். அழகில் ஈடுபடும் இயல்பு போதுவாயினும், அவ்வழகை எங்கே, எவ்வாறு காண்பது என்பதில் வேறுபாடுகள் தோன்றக் கூடும். அழகைப் புறத்தே காண்பவர்களும் அகத்தே காண்பவர்களும் உண்டு.

பொருளில் அழகு எங்கே உறைகிறது என்பது பற்றித் தத்துவப் பேராசிரியர்கள் இன்னும் முடிந்த முடிபாக ஒன்றுங் கூறவில்லை. பொருளிலேயே அழகு இருக்கிறது எனில், அப்பொருளைப் பார்ப்பவர் அனைவர்க்கும் அவ்வழகு காட்சி நல்க வேண்டும். உலகானுபவத்துடன் காணும்பொழுது இவ்வாறு இல்லை என்பது நன்கு விளங்கும். ஒருவர் அழகுடைய பொருள் என்று கூறுவதை மற்றவரும் அழகுடையது என்று ஒப்புமாறு இல்லை. இன்னுங் கூறப்போனால், அழகே வடிவமானது என்று ஒருவரால் மதிக்கப்படும் பொருள், மற்றொருவரால் அழகற்றது என்றுங் கூறப்படுதலைக் காண்கிறோம்.

அவ்வாறாயின், அழகென்பது பொருளினிடத்து இல்லை; காண்பான் மனத்திடமே உள்ளது என்றாவது கூறிவிடலாமா? எனில், அதுவும் இயலுவதாக இல்லை. காண்பான் மனத்திடத்தேதான் அழகு இருக்கிறதெனில், பொருள் இல்லாமலும் அவன் அழகை அனுபவிக்க வேண்டும். அதுவும் இயலாத காரியம். எனவே, 'அழகென்பது பொருளினிடத்தும் காண்பான் மனத்தும் ஒருசேரத் தோன்றுகிற ஒன்று' என்றுதான் நினைய வேண்டியுளது. இக்கருத்தை மனத்துட்கொண்டு பார்க்கும் பொழுது பெண்ணிடத்துக் காணப்படும் அழகும் இம்முறையில் அமைவதே என்பது விளங்கும்.

பென்னிடத்து இருக்கும் அழகு காண்பானுடைய மனநிலைக்கு ஏற்பக் காட்சி நல்குகிறது. தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு தன் மனத்தை அவளிடம் பறிகொடுக்கிறான். அவள் புற அழகே முதன் முதலில் அவன் காதல்கொள்ளக் காரணமாயிற்று. அவனுக்கு இக் காதல் உணர்ச்சி தோன்றுவதன் முன்னர்த் தோன்றிய உணர்ச்சி யாதாய் இருத்தல் கூடும்? அழகுடையவர்களை அவன் இதற்குமுன் கண்டதில்லையா? நூற்றுக்கணக்கான வர்கள், சிறந்த அழகுடையவர்களைக் கண்டதுண்டு; ஆனால், அவர்களிடம் ஈடுபட்டு அவன் மனத்தை இழக்க வில்லை. இப்பொழுதோ எனில், இந்தத் தலைவியைக் கண்ட மாத்திரத்தில் தன்னையும், தன்மனத்தையும் இழந்துவிட்டான். இவ்வாறு இழக்க மூல காரணமாய் இருந்த உணர்ச்சி யாது? எவ்வளவு ஆராய்ந்து பார்த்தா லும் 'வியப்பு' என்ற உணர்ச்சியே அவன் முதலில் பெற்றது என்றுதான் கூறல்வேண்டும். இவ்வாறு வியப்படைய அத் தலைவன் அவளிடம் யாது கண்டான்?

நிறைந்த அழகைக் கண்டிருக்கலாம். ஆனால், அவளுடைய அழகைப் பிறகும் கண்டிருப்பாரல்லரோ? அவர்கள் ஏன் அவளிடம் ஈடுபடவில்லை? எனவே, 'அவளுடைய அழகு மட்டும் அவனுடைய ஈடுபாட்டுக்குக் காரணமாகாமல், அவனுடைய மன நிலையும் ஒரு துணைக் காரனமாயிருத்தல் கண்கூடு.'

அவளுடைய அழகின் எப்பகுதியில் ஈடுபடக் கூடிய மனநிலை தலைவனுக்கிருந்தது? தூரத்தே தலைவியைக் கண்டான்; 'இவள் மானிடப் பெண்ணோ, அன்றித் தேவமகளோ!' என்று ஐயுற்றான்; பின்னர் அவள் நடை பயில்வதைக் கண்டவுடன் மயிலோ என்று ஐயுற்றான்; இன்னுஞ் சற்று நெருங்கிச் சென்று காண்கையில் அவளுடைய கனமான காதணிகள், அவள் தன் இனத்தைச் சேர்ந்தவளே என்று முடிவு செய்யச் செய்தன. இதுவரை அவனுடைய கட்புலன் வேலை செய்ய, அதன் பின் சென்ற மனத்திரையில் ஓடும் எண்ணங்களைக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை தம்முடைய காமத்துப் பாலின் முதற்குறளில்:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு 
(குறள்-1081)

தலைவியின் பொது அழகையும், நடை அழகையும் கண்ட தலைவன், அடுத்துக் கண்டது தலைவியின் கண்களையேயாம். காமத்துபாலின் இரண்டாவது குறளிற் காட்சி தரும் தலைவியின் கண்கள் அப்பால் முழுதும் விரவிக் காட்சி தருவதுடன் 'குறிப்பறிதல்' என்ற அதிகாரம் முழுவதையும் பெற்று விளங்குகிறது. காமத்துப் பாலில் மிகுதியும் இடம்பெற்று விளங்கும் தலைவியின் உறுப்பு கண்களேயாம். 'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை', என்ற பழைய மூதுரையை நினைத்து இவ்வாறு கண்களுக்குப் பெருமை தருகிறாரா ஆசிரியர்? ஆம், ஆம் முது மொழியின் சிறப்பை உள்ளவாறு உணர்ந்தமையாலே தான் வள்ளுவர் இவ்வாறு கண்களை விவரிக்கிறார்.

தலைவியின் அழகில் தலைவன் ஈடுபடுவது இரு வகைகளில் அமையலாம். ஒன்று அவளுடைய புற அழகில் ஈடுபடுபவது. தோல், தசை இவற்றாலாய கூட்டின் அழகில் ஈடுபடுபவர் பலருண்டு. கவிஞரிலும் பலர் இத்தகையரே. ஆனால், சிறந்த கலைஞருக்கு இவ்வழகு மட்டும் போதாது. எனவே, அவர் அக அழகைக் காண முற்படுகின்றனர். சங்ககாலப் பாடல்களில் தலைவியை வருணிக்கின்ற பாடல்கள் எண்ணில. என்றாலும், அவற்றுள் பெரும்பான்மையானவை அவளுடைய கண்களைக் கூறாமல் விடுவதில்லை. தலைவியின் கண்களைத் தாமரை, வண்டு, கயல் என்பவற்றோடு உவமிக்கும்பொழுது வடிவு உவமையாக மட்டும் இராமல் வேறு காரணங் கருதியும் உவமிக்கப்படும். தலைவியின் உடல் அழகு சிறந்துளதென்பதில் ஐயமின்று.

ஆனால், இத்துணை அழகுடைய உடம்பினுள் உறையும் மனம் எத்தகையதோ! எவ்வாறு இம் மனத்தைக் காண்பது? அவளுடைய பேச்சால் ஓரளவு காணலாம் என்பது மெயம்மைதான். ஆனால், பேசும் முன்னர், பேசக் கூடிய இயல்பும் தகுதியும் வாய்ந்தவளா என்பதை அறிவது யாங்ஙனம்? தலைவியின் மனம் உடலைப் போல் மென்மையும் கருணையும் நிரம்பியதா என்று அறிய வேண்டும். அவள் உறுதிப்பாடு உடையவளா என்பதையும் அறிதல் வேண்டும். இவை அனைத்தையும் அறிய ஒரே ஒரு வாய்ப்புத்தான் உண்டு. அவளுடைய மனத்தை அறியும் ஒரு பலகணி (ஜன்னல்) வேண்டும். மனத்தைப் பிறர் காணுமாறு காட்டும் பலகணி யாது?

ஒருவருடைய கண்களே மனத்தை அறிவிக்கும் பலகணி என்பர். ஏனைய புலவர்களைப் போலத் தலைவியை வருணிக்கப் புகுந்துவிடாமல், வள்ளுவர் இரண்டாம் குறளிலேயே தலைவியின் கண்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். தலைவன், 'இவள் தேவப் பெண்ணோ, மயிலோ!' என்று ஐயுற்றுத் தெளிந்தான் என்று முதற் குறளில் கூறிய கவிஞர், இரண்டாம் குறளில்,

நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து. 
(குறள்-1082)

என்று தலைவன் ஈடுபடும் உறுப்பினைக் கூறியது அறிதற் குரியது. 'நோக்கினாள்' என்று தலைவன் கூற்றாகத் தலைவி குறிக்கப்படுகிறாள். தலைவியை எத்தனையோ சொற்களால் தலைவன் குறிக்கலாம். அவ்வாறிருந்தும், 'நோக்கினாள் (பார்க்கின்றவள்) என்று கூறுதல் வியப் பன்றோ? இதிலிருந்து அறியப்படுவதொன்று உண்டு. தலைவன் தலைவியினுடைய பார்வைக்கு அடிமையாகி விட்டான். எனவே, அவளைக் குறிக்க நேர்ந்த முதல் சொல்லிலேயே எந்த உறுப்பில் ஈடுபட்டானோ அந்த உறுப்பாலேயே அவளைக் குறிக்கிறான். அன்றேல், 'நோக்கினை உடையாள்' என்று குறிப்பது பொருளற்றுப் போய்விடும்.

அடுத்து வரும் குறள்களிலும் தலைவியின் கண்கள் ‘பேர் அமர்க்கண்’,  ‘அமர்த்தன கண்’, ‘நோக்கம் இம் மூன்றும் உடைத்து’,  ‘இவள் கண்’, 'மடநோக்கு' என்று ஐந்து இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.

தலைவியின் கண்களுக்கு இத்துணைப் பெருமை தந்தது போதாது என்று கருதிய வள்ளுவப் பெருந்தகை அடுத்துக் ‘குறிப்பறிதல்’ என்றோர் அதிகாரம் ஏற்படுத்திப் பத்துக் குறளிலும் கண்ணின் பெருமையைப் பேசுகிறார். எனவே, பெண்ணிடத்து அழகைக் காண முற்படுபவன் அவள் கண்ணிடத்தே அதனைக் காண முற்படவேண்டும். இது அத்துணை எளிதானதன்று. பலகாலம் ஒருவரிடத்துப் பழகியவிடத்தும் அவருடைய கண்ணிலிருந்து மன நிலையை அறிதல் பலருக்கு இயலாததாம். இது கருதியே ஆசிரியர்,

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். 
(குறள்-709)

என்று கூறுகிறார். எனவே, கண்கள் மூலம் ஒருவர் மன நிலையை அறிய அனைவராலும் முடியாதென்பதும், ஒரு சிலர்க்கே அது இயலும் என்பதும் பெற்றாம். தலைவியின் கண்களைக் கொண்டே காதலை அறிதல் வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் குறிக்கிறார் என்பதுங் கண்டோம். அவ்வாறாயின், அனைவரும் கண்களைக் கொண்டு காதலை அளக்க அறிந்திருந்தால் ஒழியக் காதல் வாழ்வு வாழ முடியாது. கண்கள் மூலம் மனநிலையை அறிதல் அனைவர்க்கும் இயலாது எனில், காதல் வாழ்வு வாழ்வதும் அனைவர்க்கும் இயலாது என்பது பெறப்படும். இக்கருத்தை மனத்துட்கொண்டு,

மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் 
(குறள்-1289)

என்ற குறளை ஆராயும் பொழுது உண்மை விளங்கும். பலரும் காதல் வாழ்வு வாழ்கிறோம் என்று நினைத்திருப் பினும் உண்மையில் காதலின் இயல்பை அறிந்தவர் மிகச் சிலரே என்பதைத் தலைவியின் கண்களை நேரடியாக 45 இடங்களிலும், கண்ணின் தொழிலை 23 இடங்களிலும் கூறுவதன் மூலம் வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

வள்ளுவப் பெருந்தகை வகுத்த அக வாழ்வின் சில சிறந்த பகுதிகளை இதுகாறுங்கண்டோம். சிறந்த முறையில் வாழவேண்டும் என்று அவர் இலக்கணம் வகுத்ததற்கேற்ப பழந்தமிழ் நாட்டில் சிலரேனும் வாழ்ந்திருத்தல் கூடும். அவ்வாறு வாழ்ந்தவர் வாழ்வை ஒட்டி இலக்கியம் தோன்றிற்று. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்கள் சிறிய பாடல்களின் மூலம் இவ் வகவாழ்வின் ஒவ்வொரு பகுதியைச் சிறப்பித்தன. அந் நூல்களுள் அதிகம் பயிலப்படாத ஒரு நூல் நற்றிணை யாகும். எனவே அகவாழ்வின் ஐந்து திணைகட்கும் சில உதாரணங்கள் அந்நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளன. அவையே அடுத்து அமையும் ‘இலக்கியத்தில் வாழ்வு’என்னும் தலைப்பில் காணப் பெறுபவை.


நன்றி: அகமும் புறமும் (2வது அத்தியாயம்)
காண்க: அ.ச.ஞானசம்பந்தன் 

 

No comments:

Post a Comment