16/08/2021

மழையில் நனைந்த யானை (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்


பிரமாண்டமாய் யானை வந்தது
யானை வந்ததும் வீதி சிறுத்தது.

யானைச் சாணம் மிதிக்க வந்தவர்
துவார விட்டம் கண்டு சிரித்தனர்.

குரைக்க பயந்து நாய்கள் பதுங்கின
சிறகுகள் உதிர கோழிகள் ஓடின.

மாராப்பு விலகலை பெண்கள் மறந்தனர்
மாயானை நடை கண்டு கண்கள் வியந்தனர்.

கர்ப்பிணியின் அசைவாய் யானை வந்தது
கால் முளைத்த பெருமலையாய் நடந்துவந்தது.

நீண்டு வளர்ந்த தும்பிக்கை நெளிய
முறக்காது விசிறிவரும் யானைக்கு
வால் மட்டும் பம்பரக் கயிறளவு.
பெரிய மனிதர்க்கு சின்னப்புத்தியென
வாலாட்டிச் சொல்லிவரும் யானை.

வீதியெங்கும் வேடிக்கை பார்க்க
வானுருகிப் பெய்தது பெருமழை.
ஒரு துளி இரு துளி பல துளிகளென
சட்சட சட்சட சட்சடவென
அடித்துப் பெய்தது பேய்மழை.

கூட்டம் ஓடியது கூரை தேடி...
நாய்கள் ஓடின வீடு தேடி...
யாவரும் ஒதுங்க கூரையிருந்தது.
யானைக்கு வெட்டவெளி தானிருந்தது.

தாய்க் கூட்டம் பேன் பார்க்க
குமரிகள் கூட்டம் வேடிக்கை பார்த்தது.
திண்ணையில் நின்று சிறுநீர் கழித்து
யானையைப் பார்த்து சிறுவர் சிரித்தனர்.
பீடிப்புகை கதகதப்பில் ஒதுக்கமாய்
முடங்கினான் யானைப்பாகன்.

நனையப் பெய்தது மழை
நின்று நனைந்தது யானை.

யானை அழுமோ ?
என்றது குழந்தை.
ஞானம் கலங்குவதில்லை என்றேன்.

யானைக்கு குளிருமோ?
என்றது குழந்தை.
ஞானத் தீயிற்கு நடுக்கமில்லை என்றேன்.

யானைக்கு சளி பிடிக்குமோ ?
என்றது குழந்தை.
ஞானத்திற்கென்றும் கேடில்லை என்றேன்.

யானையை உட்காரச் சொல்
என்றது குழந்தை .
ஞானத்தை நடக்க விடுதலே நன்று என்றேன்.

யானை கரைந்து விடுமோ ?
என்றது குழந்தை.
ஞானத்திற்கு அழிவில்லை என்றேன்.

யானை ஒதுங்க இடமில்லையே....
பரிதவித்தது குழந்தை.
ஞானத்திற்குரிய இடமில்லையே
என்றேன் நான்.





No comments:

Post a Comment