பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

தமிழகத்தைச் சூழும் பிரிவினைவாதம்

-ஈரோடு சரவணன்



    திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர்ந்தவுடன், தங்களது பிரிவினைவாதத்தைச் செயல்படுத்த வார்த்தை விளையாட்டை விளையாட முனைந்துள்ளார்கள். 1949-லிருந்து தி.மு.க. தலைவர்கள் பயன்படுத்தாத  ‘ஒன்றியம்’ என்ற ஒரு வார்த்தை தற்போது அரசாங்க ஆவணத்தில் முன்மொழியப்படுகிறது. 

தற்போது பயன்படுத்தப்படும் ‘யூனியன்’ என்ற வார்த்தைக்கு உள்ளார்த்தம் என்னவென்றால், தனி தேசியமான நான், அதாவது தமிழ்நாடு விருப்பப்பட்டு, ஒரு சௌகரியத்துக்காக உன்னோடு இருக்கிறேன்; இந்தியாவோடும் இருக்கிறேன்; எந்நேரமும் நான் உடைத்துக் கொண்டு தனியே போகலாம். சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்தது போல என்பதாகவே பார்க்கப்படுகிறது.

 தி.மு.க. பயன்படுத்தும் ‘ஒன்றியம்’ என்ற  சொல்லாடல், பிரிவினைச் சிந்தனையின் வித்து. தேசிய சிந்தனையும், தேசநலனுமே பெரிதென்று கருதும் தமிழ்நாட்டில், அதன் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பயன்பாடே ‘ஒன்றியம்’ என்ற சொல்லாடல். இது பற்றி ஒரு முழு விவாதம் நடத்தப்பட வேண்டும். 

 பல்வேறு தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள் பற்றி விவாதிப்பதற்கு முன் தி.மு.க.வின் உள்நோக்கத்திலேயே  தனித் தமிழ்நாடு என்ற சிந்தனை உண்டு என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

1967-க்குப் பின்னர், தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகள், தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளன. ஹிந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. மத மாற்றம் என்ற பெயரில் , இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டைச் சீரழிக்கும் விதமாக செயல்படும் கிறிஸ்துவ மிஷனரிகள், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள்,   இவர்களை மிஞ்சும் வகையில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. இதுவே தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களாகும்.
 
பழைய தனிநாடு கோரிக்கை

 திராவிட நாடு திராவிடருக்கே, அடைந்தால் திராவிட நாடு இல்லையோல் சுடுகாடு , தனித் தமிழ்நாடு - போன்ற கோரிக்கைகள் தமிழகத்தில் அவ்வப்போது எழுப்படுகின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தனிநாடு கோரிக்கையும், நாட்டைப் பிளவுப்படுத்தும் சிந்தனையும் வெளிப்படுகிறது. பல மேடைகளில்,  ‘தமிழர்கள் இல்லாத நாடுமில்லை, தமிழருக்கு என்று ஒரு நாடுமில்லை’ என்று  கோஷமிடுவது உண்டு. 

 2018 மார்ச் மாதம், ஈரோட்டில் திரு. ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது. தென் மாநிலங்கள் தனிநாடு கோரிக்கை வைக்குமானால் அதை வரவேற்பதாகத் தெரிவித்தார். 1963-இல் பிரிவினைவாத தடைச் சட்டம் கொண்டு வந்தவுடன், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, “கோரிக்கைதான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன. எனவே திராவிடநாடு கோரிக்கையை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது”  என அண்ணாதுரை கூறினார் என்பதை மறக்க முடியாது. 

 தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு நேரடியாகவும். மறைமுகமாகவும் தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது. 1949-இல் தி.மு.க. தோன்றிய சமயத்தில் (தற்போதைய) தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பிரதேசம் திராவிட நாடு என்ற பெயரில், முழு இறையாண்மையுள்ள தனி நாடாக இந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து இயங்க வேண்டும் என்ற கொள்கை முழு மூச்சுடன் வலியுறுத்தப்பட்டு வந்தது என்பதை மறந்து விட இயலாது.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்கு முன்பே, 1926 பிப்ரவரியில் மாநிலங்களவையில், சி.சங்கரன் நாயர், பி.சி.தேசிகாச்சாரி ஆகியோர், சென்னை மாகாணத்தில் அடங்கியுள்ள தமிழ் பேசும் மாவட்டங்களை மட்டும் தனியாகப் பிரித்து முழுத் தன்னுரிமை உள்ள தனி மாநிலமாக இயங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் (Constitution of Tamil Districts in the Madras Presidency into a province with complete Self-Government ) என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். 15.3.1926-இல் மாநிலங்களவையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

(கோப்பு எண்: இந்திய அரசு உள்துறை எண்- 241- 1926 பொது).

ஐந்தாண்டுகள் கழித்து 1931- டிசம்பரில் சி.சங்கரன் நாயர் மீன்டும் ஒரு தீர்மானத்தை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். “இந்திய கவர்னர் ஜெனரல் அவர்களுக்கு இந்தப் பேரவை பின்கண்ட முடிவை இந்திய விவகாரங்களுக்கான செயலாளருக்குப் பரிந்துரை செய்து இந்தியாவில் உள்ள எல்லா மாகாணங்களும் முழுத் தன்னுரிமை பெற்றவையாக அமைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன். அல்லது குறைந்தபட்சம் எந்த எந்த மாநிலங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தனவையாக இருப்பதாக இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் முடிவு செய்கிறாரோ அவற்றுக்கு முழுத் தன்னுரிமை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். மேற் கண்ட தீர்மானத்தை 16 பேர்கள் எதிராக வாக்களித்துத் தோற்கடித்தார்கள்.

தனித் தமிழ்நாடு கோஷம் எழுந்த சமயத்தில், சென்னை அடையாறு பகுதியில் உள்ள செட்டிநாடு மாளிகையில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் பலரும், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் எங்கள் கதி என்ன? என்று கேள்வியைக் கேட்கத் துவங்கியதன் காரணமாகவே  ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற புதிய கோஷம் எழுந்தது. 

இந்நிலையில் 1942 மார்ச் மாதம் இந்தியாவில் வகுப்புவாரியாக சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பிரித்துக் கொள்வதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழு இந்தியா வந்தது. 30.3.1942-ல் திராவிட கழகத்தவர்கள் இந்தக் குழுவைச் சந்தித்து,  ‘சென்னை மகாணத்தை மட்டும் தனி மாகாணமாகப் பிரித்து, மாட்சிமை தாங்கிய ஆறாம் ஜார்ஸ் மன்னரின் நேரடி ஆளுமையின் கீழ் வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்தார்கள். இது இவர்களின் அடிமைப் புத்தியைக் காட்டுகிறது.

1938 செப்டம்பர் 11ஆம் தேதி  ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் ஏற்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வேலூரில் நடந்த தமிழர் மாநாட்டில் தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றிப் பேசப்பட்டது. அதாவது தனித் தமிழ்நாடு ஒன்றே தீர்வு என முடிவெடுக்கப்பட்டது. 

 1938 டிசம்பர் மாதம் 29ஆம் தேதி ஜஸ்டிஸ் கட்சியின் சென்னை மாகாண மாநாட்டில் ‘தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. 1939 டிசம்பர் 10 ஆம் தேதி ‘தமிழ்நாடு தமிழருக்கு’என்ற திட்டத்தை விளக்கி விழா எடுக்கப்பட்டது. 

 1942-இல் கிரிப்ஸ் குழுவின் முன்பு, பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஊ.பு.அ. சௌந்தரபாண்டியன், முத்தையா, சாமியப்பன் ஆகியோர் திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர்கள். ஆனால், அத்தகைய கோரிக்கையைச் சட்ட மன்றத்தில் தீர்மானமாகவோ அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாகவோதான் எழுப்ப முடியும் என்று கிரிப்ஸ் குழு கூறி, அதனை நிராகரித்தது.

பெரியார் ஈ.வெ.ரா, திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு கேட்டு முகமது அலி ஜின்னாவைச் சந்தித்தார். திராவிடஸ்தான், இந்துஸ்தான், பாகிஸ்தான், பெங்களிஸ்தான் என்று நாடு நான்காகப் பிரிக்கப்பட வேண்டும் என்று ஜின்னா கருத்துத் தெரிவித்தார். ஜின்னாவின் கருத்துக்கு ஆதரவாகவே பெரியார் ஈ.வெ.ரா. நடந்து கொண்டதாக பின்னர் கூறப்பட்டது.

தனித் தமிழ்நாடு கோருபவர்கள், வன்முறையைத் தூண்டும் விதமாக பல மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படுவதில்லை. 

 “இலங்கைத் தமிழர் சிக்கல் அனைத்துலகப் பார்வைக்கு வளர்ந்துவிட்ட நிலையில், தமிழ்த் தேசிய இனம் ஒரு புதிய எழுச்சி பெற்று, தமிழர்களுக்கென ஒரு தனிநாட்டைச் சமைத்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்தக் கால நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத் தமிழர்களும், என்றோ எழுப்பப்பட்டுப் பலவகையான அரசியல் சட்டச் சூழல்களால் கைவிடப்பெற்ற அல்லது தள்ளி வைக்கப் பெற்ற, தனித்தமிழ்நாடு கோரிக்கையை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது என்றே நாம் கருதுகிறோம்” என வெளிப்படையாக பிரிவினையை முன்வைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த பின்னர் கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

 (ஆதாரம்: வேண்டும் விடுதலை/ பக்கம் 192, 
தமிழ்நிலம், இதழ் எண் 30, சனவரி 1984)

ஒரு மாநாட்டில் கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கஸ்தூரி, தனித் தமிழ் மட்டும் வந்து விட்டால் போதுமா என்று கேட்டார்கள். அவரகட்குச் சொல்வேன், சான்றாக  தினமணியில் ‘கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு’ என்று போடுகின்றான். பார்ப்பான் எழுதுகிறான். இப்படி விடுதலை ஏன் அப்படி எழுத வேண்டும்? தினமணி அலுவலகத்திலிருந்தே தனித்தமிழ்க் கொள்கையைப் பற்றித் தெரிந்து போக நான்கு பேர்கள் வந்தனர் . அவர்கள் போகும் போது,  “இதைச் சொல்லுங்கள்” என்று சிவராமனுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தனுப்பினேன். இன்னும் கொஞ்ச நாட்களில் தன் போக்கை தினமணி மாற்றிக் கொள்ளவில்லையானால் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் போகும். இன்று சொன்னால் தினமணி அலுவலகம் நாளை இல்லாமல் போய்விடும். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளலாம்... தினமணி மட்டுமன்று , வேறு எந்த அலுவலகமும் இருக்காது  என்ற வன்முறைப் பேச்சு பற்றி கருத்து சொல்லக் கூட தி.மு.க.வினர் எவரும் முன்வரவில்லை. 

 (ஆதாரம்: வேண்டும் விடுதலை / பக்கம் 121)

 இதைப் போலவே, தனித் தமிழ்நாடு கோருபவர்களின் பேச்சு வன்முறையைத் தூண்டும் விதமாக பல இடங்களில் பேசப்பட்டது. இதற்குரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு, தமிழகத்தில் பல பகுதிகளில் பிரிவினைவாதிகளின் கொட்டம் கொடிகட்டிப் பறக்கிறது.

தனித் தமிழ்நாடு கோரிக்கை என்பது தமிழகத்தில் தி.முக. ஆட்சிக்கு வந்த தினத்திலிருந்து பல்வேறு திசைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரிவினையைக் கோரும் அமைப்பு அல்லது அதன் தலைவர்கள் மீது சட்டம் பாயவில்லை. 

 10.6.1972 மற்றும் 11.6.1972 –ல் திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், தமிழகப் பிரிவினைக் கொள்கையை வலியுறுத்துவதற்கும், செயற்படுத்துவதற்கும் தமிழக விடுதலை இயக்கம் எனுமோர் இயக்கத்தை அமைப்பது என்று கூறப்பட்டது. பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்கள் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்கள்.  

 (ஆதாரம்: வேண்டும் விடுதலை  / பக்கம் 109) 

1975-இல் இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனப்படுத்திய போது, தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியிருந்த தொழில் துறை அமைச்சரான க.ராஜராம், அமெரிக்கத் தூதரகத்தின் மூத்த அதிகாரியைச் சந்தித்ததாகவும், தற்போதுள்ள சூழ்நிலையில், இந்திரா காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், தமிழ்நாடு தனியாக பிரிந்து போக, அமெரிக்க உதவி புரியுமா எனக் கேட்டதாகவும், அதற்கு முடியாது என பதில் கொடுத்தாகவும், விக்கி லீக்ஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திக்கு தி.மு.க. சார்பாக எவ்விதமான மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர் ராஜாராம் சந்தித்திருக்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.

தமிழகத்தில் தனி நாடு கோருபவர்கள்,  இரண்டு முக்கியமான விஷயங்களை மக்கள் முன் வைத்து, தங்களது பிரிவினைவாதத்தை விதைப்பார்கள். ஒன்று மொழிக் கொள்கையில், ஹிந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது; இரண்டாவது விடுதலைப் புலிகளை முன்னிலைப்படுத்தி, தமிழ் ஈழம் மலர்ந்திடும்; அச்சமயத்தில் தமிழகமும் பிரிந்து ஈழத்துடன் இணைந்து விடும் என்ற கருத்தையும் விதைப்பார்கள். பெரும்பாலான தனித் தமிழ்நாடு கோருபவர்கள் மேற்கூறிய இரண்டு விஷயங்களையே முன்னிலைப்படுத்துகிறார்கள்.

திரு. சி.என்.அண்ணாதுரை:

தனித் தமிழ்நாடு கோரிக்கை வைப்பதற்கு முன், சுய நிர்ணய உரிமை பற்றிய விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திருவாளர் அண்ணாதுரை ஆற்றிய உரையிலிருந்து அதனைத் தெரிந்து கொள்ளலாம்:

 “சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையில் நாங்கள் தனி நாடு அமைய வேண்டும். நாம் தனிப்பட்ட பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற நேரத்தில் பிரிவினை என்று நீங்களாகத் தப்பு அர்த்தம் எடுத்துக் கொண்டு ஐயையோ உள்ளதிலிருந்து பிரிக்கலாமா? என்று நீங்கள் எடுத்துக் கொண்டு அடிப்படையை ஆராய மறுக்கிறீர்கள்” 

 (ஆதாரம்:  இராஜ்ய சபையில் இன முழக்கம் / பக்கம் -53).

 “பொதுப்படையாகப் பேசும்போது கொச்சை மொழியில் பிரிவினை என்று சொல்லப்பட்டாலும், இருப்பதிலிருந்து பிரிந்து எடுப்பது அல்ல. தனியாக இருந்ததை, யாரோ எடுத்துக் கொண்டு போய் இணைத்து விட்டிருக்கிறார்கள். , இந்த இணைப்பு நல்லதல்ல என்று தோன்றியிருப்பதால் அதிலிருந்து விலக வேண்டும், தனித்து இயங்க வேண்டும், தனி அரசாக வேண்டும் என்ற சொல்கிறோம்” 

(ஆதாரம்: இராஜ்ய சபையில் இன முழக்கம் /  பக்கம் 53)

மேலும் அண்ணாதுரை பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணத்தைக் கூறியுள்ளார்.  “பிரிவினையினால் ஏற்பட்ட பாகிஸ்தானைப் பார்ப்போம் என்று சொல்லுகிறார் நிதி அமைச்சர், பாகிஸ்தானைத்தான் பார்ப்போம். பாகிஸ்தான் பிரிவினையினால் ஏற்பட்ட பயங்கர சம்பவத்திற்குக் காரணம், ஏற்பட்ட சோகத்திற்குக் காரணம், பிரிவினையினால் ஏற்பட்டதல்ல – பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் இருக்க வேண்டிய இந்துக்கள் பாகிஸ்தானத்திலும், பாகிஸ்தானுக்குச் சொந்தக்காரர் என்று நீங்கள் சொல்லுகிற முஸ்லிம்களும், இந்தியாவில் இருந்த காரணத்தினால் இந்த கலவரங்கள் ஏற்பட்டன. அங்கு ஏற்பட்டது பிரதேசப் பிரிவினையே தவிர மக்கள் பிரிவினை அல்ல”  

(ஆதாரம்: இராஜ்ய சபையில் இன முழக்கம் /  பக்கம் 53).

தி.மு.க. பிரிவினையைக் கைவிடவில்லை, அதற்குரிய வழிகளில் முயலுவோம் என அண்ணாதுரை நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டுள்ளர்.  “இனி பிரிவினை இல்லை என்று சொன்னார். அப்படி அவர் சொன்னதிலிருந்து பார்க்கும் போது முன்பு ஏதோ ஒரு பிரிவினைக்கு வழி இருந்தது போலவும், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஊகிக்க முடிகிறது. எது எப்படியிருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் சூழ்நிலை இவர்களை நிச்சயம் இணங்க வைக்கத்தான் போகின்றது. நாங்கள் அந்தச் சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டு வருகிறோம். நேரம் வருகின்ற காலத்தில் அது தானாகவே பயனைக் கொடுக்கும்” என கூறியுள்ளார். 

 (ஆதாரம்: இராஜ்ய சபையில் இன முழக்கம் / பக்கம் 57).

மேற்படி கருத்துக்கள் திரு. அண்ணாதுரை அவர்கள் நாடாளௌமன்ற மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) பேசியவை. இந்தப் பேச்சுகள், அவர்களின் பிரிவினை மனப்பான்மையையே காட்டுகின்றன.

முன்னோடியான நீதிக்கட்சி:

தி.மு.க.வின் முன்னோடி அமைப்பான நீதிக் கட்சியால் தனது கொள்கையைப் பிரகடனப்படுத்த தனியாக பத்திரிகை தொடங்கப்பட்டது.  ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில பெயரைத் தாங்கி 26.2.1917 –ல் வெளியான முதல் இதழின் தலையங்கத்தில்,  “நமக்கு எவ்வளவோ நன்மை தந்து உதவிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் மீது இடையறாத அன்பையும் தளர்வுறாத விசுவாசத்தையும் என்றென்றும் காட்டிச் செல்வதே இணையில்லாத நமது நோக்கமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளது. 

 இந்த வாசகம், அக்கட்சி  நாடு விடுதலை பெறுவதை விரும்பவில்லை என்பது எடுத்துக்காட்டாகும். இந்த வழியில் வந்தவர்கள் ‘ஜெய் ஹிந்த்’ என கூறத் தயக்கம் காட்டுவார்கள். ஏனென்றால் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதந்திர வேட்கையை வெளியில் காட்டவும், தேசப்பற்றை பறைசாற்றவும் உதவிய  ஜெய்ஹிந்த் என்ற சொல், நாட்டையே தட்டி எழுப்பியது.

1917 மார்ச் மாதம் சென்னையில் டவுன்ஹாலில் நடந்த பொதுக் கூட்டத்தில் , டி.எம். நாயர் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கூட்டத்திலிருந்து ஒரு குரல்,  “நீங்கள் ஏன் காங்கிரஸை விடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்புவாதத்தால் நாடு சுயராஜ்ஜியம் பெறுமா? அப்படி யாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா?” என கேள்வி கேட்டது. கேட்டவர் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார். இதற்கு முறையான பதில் நாயரிடமிருந்து வரவில்லை. 

1939 ஆகஸ்ட் 10ந் தேதி ஈரோட்டில் நடந்த நீதிக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. நீதிக் கட்சியின் பிரதானக் கொள்கையில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டது. குடியேற்ற நாட்டு நிலை பெறுவது என்பதை மாற்றி, முழுத்தன்னாட்சி பெறுவதே நோக்கம் என திருத்தப்பட்டது. அதாவது 1939-லேயே பிரிவினைக்கு வித்திட்டவர், தி.மு.க.வின் ஆத்மார்த்த தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர். அவர் கொண்டுவந்த  திருத்தம் அது.

இனியும் இந்தியாவுடன் இணைந்திருப்பதில் அர்த்தம் இல்லை. எங்களைப் பிரித்து விடுங்கள் என ஜின்னா கூறியவுடன், உற்சாகமடைந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கரால், 1940 ஜூன் மாதம் 2ஆம் தேதி  ‘திராவிடநாடு பிரிவினை மாநாடு’ என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,  “இந்தியா, இந்திய தேசம், இந்தியர் என்னும் பிணைப்புகளில் இருந்து திராவிடநாடு (சென்னை மகாணம்) தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கென தனி அரசாங்கத்தை அமைத்து, தனி ஸ்டேட் ஆக ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்பதாகும். திரு. அண்ணாதுரை தமிழ்நாடு பிரிவினையை பற்றிப் பேசிய பேச்சுகள் மூலம் தி.மு.க.வின் உள்ளக்கிடங்கை நன்கு அறியலாம்.

அண்ணாவின் பார்வையில் இந்தியா ஒரு கண்டம். அதில் பல்வேறு இனங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சியில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிரிட்டிஷார் வெளியேறினால் இந்தியாவில் ரத்தக்களறி எற்படும். இந்தியாவில் ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க ஒரே வழி இந்தியாவை இனங்களின் அடிப்படையில் துண்டு துண்டாகப் பிரிப்பது மட்டும் தான். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்றால், இந்தியா மரணங்களின் விளைநிலம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

 “பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகிறார்கள். மத்திய அரசுக்குப் பலம் எதிற்காக? அந்தப் பலம் யாருக்கு எதிராக? என்பதையும் சிந்தித்துப் பார்த்திட வேண்டும்”  என பிரிவினைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அண்ணாதுரை. 

 பெரியார் திராவிட நாடு என்பதற்கு எப்படியெல்லாமோ விளக்கம் கொடுத்தது மட்டுமல்லாமல்,  பிரிவினை ஏற்பட வேண்டும் என்பதற்காக எவ்வாறு பேசினார் என்பதையும் கவனிக்க வேண்டும்:  “ஆகவே, இந்தப் பெருங்கேட்டிலிருந்து தமிழ்நாடும், தமிழனும் தப்பிப் பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால் இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி, தமிழ்நாட்டை சுதந்திரத் தமிழ்நாடு ஆக ஆக்கிக் கொண்டாலன்றி, வேறு எக் காரணத்தாலும் எக் கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். 

 (விடுதலை – தலையங்கம் - 13.5.1960 ).

 “இதற்காக தமிழ்நாட்டு அரசாங்கத்தோடு முட்டிக் கொள்வதை விட இந்த அநீதிக்குக் காரணமான ஆதிபத்திய டெல்லி ஆட்சியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதுதானே அறிவுடமை. எனவே தாய்த் திருநாட்டிற்குத் ‘தமிழ்நாடு என்று பெயரில்லையே என்று கொதிக்கும் உள்ளங்கொண்ட இளைஞர்களே - தோழர்களே - புலவர்களே - பெருமக்களே - எழுத்தாளர்களே - பேச்சாளர்களே - நாடு பிரிவினையைத் தவிர வேறு வழி உண்டா? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். நேர்மை விடை காணுங்கள். உண்மையில் நாட்டின் பெயர் மாற்றத்தில் யாருக்காவது நாணயமான கவலை இருக்குமானால் ஜூன்-5ந் தேதி இந்திய யூனியன் படத்தை ஒரு கையிலும், தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்- தீ மூட்டுங்கள் - தீ மூட்டுங்கள்”. 
 
(விடுதலை – அறிக்கை - 18.5.1960)

மத்திய அரசு மீது பிரிவினைக்காக தொடுத்த போர் எனக் குறிப்பிடலாம் இந்த அறிக்கையும் பெரியாரின் கை வண்ணத்தில் எழுதப்பட்டது.  “தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆகி விடும்? 1. வரலாற்றுப்படி நாம், டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? 56 நாடுகளில் நாம் ஒரு நாட்டாரய் இருந்து வந்தவர்கள். இந்நிலையில் எதற்காக நாம் டெல்லி ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும்? ஆண்டு ஒன்றுக்கு 66 கோடி ரூபாய் எதற்காகக் கப்பம் கட்ட வேண்டும்? சிந்தியுங்கள் - சிந்தியுங்கள் - ஏன இந்தியத் தோழர்களே நன்றாகச் சிந்தியுங்கள்.  தெளிவடைவீர்களானால், ஜூன் 5ந் தேதி மாலை இந்தியத் தேசப் படத்தில் தீ வையுங்கள் - நாடு பிரிக்க , மேற்கூறிய அநியாய அக்கிரமங்களைக் கண்டிக்க, அடக்கி ஒழிக்க இது ஒன்று தான் வழி , வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் – இல்லை என்றால் நீங்கள் எங்கள் வழிக்கு வாருங்கள் - நாங்கள் சொல்வதை கேளுங்கள் - பந்தத்தை ஏந்துங்கள் - படத்தைப் பொசுக்குங்கள்”.

(விடுதலை - 22.5.1960)

 “தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய்விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”.

(விடுதலை 29.8.1956)
(ஆதாரம்: வே.ஆனைமுத்து பெரியார் ஈவெரா. சிந்தனைகள் /  பக் – 742) 

ஆகவே தமிழ்நாடு தனியாக பிரிய வேண்டும் பிரிக்கப்பட வேண்டும் என்பதில் திராவிட இயக்கத்தினருக்கு உள்ள வேகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

திரு. அண்ணாதுரை ஆச்சார்ய வினேபாவைச் சந்தித்த போது, தனி தமிழ்நாடு சம்பந்தமாக நடைபெற்ற உரையாடலில்...
வினோபா- அப்படி என்றால் தனிநாடு – தனி அரசு – சிலோனை போல்...
அண்ணாதுரை - ஆமாம்.
வினோபா- பாகிஸ்தான் போல் ஆகிவிடும்.
அண்ணாதுரை - நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால் பாகிஸ்தான் போல் ஆகி விடும்.
வினோபா- தனி நாடு என்றால் தனி பட்டாளம் கூட இருக்கும்.
அண்ணாதுரை - ஆமாம் தனிபடை இருக்கும். (

(ஆதாரம்: யான் பெற்ற இன்பம் -  இணைய தளம்/ பெரியார் – அண்ணா – பாவாணர் - திராவிடம் - 23.9.2016 ) 

 மேலே குறிப்பிட்டுள்ள செய்தியின் மூலம் தி.மு.க.வின் உண்மை சொரூபம் நன்கு தெளிவாகிறது. தனிநாடு என்பதே  தி.மு.க.வின் நோக்கமாகும் என்பது தெளிவாகிறது. தி.மு.க. பேச முடியாதவற்றை  (அமரர்) பெருஞ்சித்திரனார் என்பவர் மூலம் பேச வைப்பது தி.மு.க.வுக்கு கை வந்த கலை. 1975-ல் தென்மொழி (சுவடி 12 ஓலை 1) இதழில் “இந்து மதத்தினின்றும் , மதப்பூசல்களின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே, தமிழக விடுதலை தான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்”  என்றார் பெருஞ்சித்திரனார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம்: 

தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் அமைப்புகளில் முதன்மையானது தமிழ்த் தேசியப் பேரியக்கம். இதன் தலைவர் பெ.மணியரசன். இவர் முன்னாள் கம்யூனிஸ்ட், சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியவர். இவருடன் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய கி.வெங்கட்ராமன் பொதுச் செயலாளராக இருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தும், இந்திய இறையாண்மையை எதிர்த்தும் பேசி வருபவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்தவர். 

இவர்  சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி எம்.சி.பி.ஐ. என்ற பெயரில் பிகாரைச் சார்ந்த ஸ்ரீவஸ்தவ தலைமையில் இயங்கிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். பின்னர் எம்.சி.பி.ஐ. என்ற கட்சியின் பெயர் இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் தேசியம் என்ற கருத்தை ஏற்க மறுத்ததால், அதிலிருந்து வெளியேறி 1990 பிப்ரவரி 25ஆம் தேதி, சென்னையில் பெரியார் திடலில் நடந்த மாநாட்டில், இந்தியத் தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை  தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல், தமிழ்த் தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையன், சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் இன்குலாப் போன்றவர்கள் உரையாற்றினார்கள். ஆனால் மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைக் கூட்டத்தில் இம்மாநாடு குறித்து விளக்கம் தறுமாறு, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டார். இதன் காரணமாக பெ.மணியரசன் சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டார். வழக்கு 8 ஆண்டுகள் நடந்தது. 

இவர்களின் துணை அமைப்பான, தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, தமிழ் கலை இலக்கியப் பேரவை, மகளிர் ஆயம், இளந்தமிழர் இயக்கம், தமிழக உழவர் முன்னணி போன்ற அமைப்புகளும் தனி தமிழ்நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரிக்கும் இயக்கங்கள் ஆகும்.  

நாம் தமிழர் இயக்கம்:

திரு.ஆதித்தனார் அவர்கள் 1958-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் முக்கிய நோக்கமே ஒன்றுபட்ட தனித்துவமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அப்போதைய தமிழகத்தின் மிக முக்கியமான கட்சியாக விளங்கிய திராவிடர் கழகத்தின் கொள்கைகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் கட்சியின் கொள்கைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்து வந்தன. 1960-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியானது மாநில அளவிலான போராட்டத்தை நடத்தியது. அப்போராட்டத்தில் இந்திய வரைபடத்தை எரித்து (தமிழக பகுதியைத் தவிர்த்து) தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் கட்சியின் நிறுவனர் திரு.ஆதித்தனார் கைது செய்யப்பட்டார். திரு. சிவஞானம் அவர்கள் மெட்ராஸ் மாகாணம் என்னும் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றக்கோரி மேற்கொண்ட போராட்டங்களில் நாம் தமிழர் கட்சியும் பங்கு கொண்டது.

மதுரையில் மே 18, 2009இல் திரு. சீமான் அவர்கள் நாம் தமிழர் இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தினார். அன்றிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து மே 18, 2010-ம் ஆண்டு அதாவது தமிழர் இனப்படுகொலை நாளான அன்று, நாம் தமிழர் இயக்கமானது நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. சீமான் பொறுப்பேற்றார். 

தமிழகத்தில் மாற்று அரசியலுக்காகவே நாம் தமிழர் கட்சி தொடங்கப்பெற்றதாக திரு,சீமான் தெரிவித்திருந்தார். தனித் தமிழ் ஈழம் அமைப்பதே அக்கட்சியின் முதல் மற்றும் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், “நாம் கட்சியை தாங்கள் தொடங்கவில்லை என்றும், திரு.ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய கட்சியை எடுத்து நடத்தி அவர் வழியில் பயளிப்பதாகவும்  கூறினார். 

இவரது முதன்மைக் கொள்கைகள்:   1) தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்! 2) ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான்! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்! 3) மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்! அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட போராடுவதே நமது இலட்சியம்! 4) தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!

எனவே சீமானின் நாம் தமிழர் கட்சியும், தனி ஈழம் என்பது தனி தமிழ்நாடு என்ற நோக்கத்தின் முதல்படி என்றே  பலர் தெரிவித்தார்கள்

 தமிழகத்தில் நீதி கட்சியிலிருந்து, தி.க.வில் தொடங்கி, தி.மு.க.வும், பாரதி ராஜா துவங்கியுள்ள தமிழ் கலை, இலக்கிய பண்பாட்டுப் பேரவை வரை பலரும் தமிழ்ப் பிரிவினைவாத கோஷங்களை எழுப்பத் தயங்குவதில்லை. இவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு பிரிவினைக்கு வித்திடுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். 

 இன எழுச்சி கருத்தரங்கம் என்ற பெயரில், சீமானின் நாம் தமிழர் கட்சி கடலூரில் நடந்த மாநாட்டில், காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவரான யாசின் மாலிக்கை கலந்துகொள்ள வைத்தார்கள்.

 1963 அக்டேபார் 3ஆம் தேதி அரசியல் ஷரத்து 19-இல்  ‘இந்திய இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம்’ என திருத்தம் செய்த பின்னரும் கூட, தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

பிரிவினை கோரிய அரசியல் கட்சிகள் தமிழகத்தில் 1967க்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்ததால், பிரிவினைவாதிகள் எவ்வித ஐயப்பாடும் இல்லாமல் உலா வருகிறார்கள். தமிழ் பிரிவினைவாதத்திற்கு கிறிஸ்தவ நிறவனங்கள்தான் காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழக மண்ணில் கால்வைத்த போதே தமிழ்ப் பிரிவினைவாதம் விதைக்கப்பட்டது. அதாவது ஆரிய – திராவிட இன வாதத்தைப் பரப்பி தமிழர்களை தனி இனமாகக் கட்டமைத்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள்.  

இதேபோல, மே 17 இயக்கமும்  ஒரு பிரிவினைவாத அமைப்பு. இதன் அமைப்பாளர் திருமுருகன் காந்தி என்று வெளியே தெரிந்தாலும், ஒரு கிறிஸ்தவர். இந்திய- இலங்கை நட்புறவைச் சீர்குலைத்து, இலங்கையிலிருந்து தனி ஈழத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். பாரத தேசத்திலிருந்து தமிழகத்தையும் தனியாகப் பிரித்து, பின்னர் ஈழத்துடன் தமிழகத்தை இணைத்து தனித் தமிழ்நாடு என ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் இவர்களது முதன்மையான நோக்கமாகும். இவர்கள் பல்வேறு மத பிரிவினைவாதிகளுடன் தொடர்ப்பு கொண்டுள்ளார்கள்.  

மேலும் சில அமைப்புகள்:

மக்கள் அதிகாரம், 
புரட்சி மாணவர் இளைஞர் முன்னணி, 
மக்கள் கலை இலக்கிய சங்கம், 
புரட்சி மாணவர்கள் முன்னணி, 
புதிய ஜனநாயக மையம், 
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், 
பூவுலகின் நன்பர்கள், 
எதேச்சதிகார எதிர்ப்பு இயக்கம், 
பெண்கள் எழுச்சி இயக்கம், 
அரசு ஒடுக்கல் எதிர்ப்பு கூட்டமைப்பு, 
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, 
சமூகநல மாணவர்கள் எழுச்சி இயக்கம், 
பி.யு.சி.எல்., 
சமநீதி வக்கீல்கள் சங்கம், 
சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம், 
சட்டப் பஞ்சாயத்து, 
உக்கடம் மக்கள் உரிமை பாதுகாப்பு இணைப்பு மையம், 
தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி, 
தமிழ் நீதிக்கட்சி, 
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், 
தமிழ் தேசிய மக்கள் கட்சி, 
தமிழ் தேசியப் பாதுகாப்பு இயக்கம், 
தமிழ் தேச விடுதலை இயக்கம், 
சாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி, 
தமிழ்ப் பேரரசு கட்சி, 
ஈழத் தமிழகம் இயக்கம், 
இளம் தமிழகம், 
தமிழ் தேசிய முன்னணி, 
தமிழக வாழ்வுரிமை கட்சி, 
தமிழர்கள் இலக்கிய பண்பாட்டு பேரவை, 
தமிழ் மையம், 
தமிழ்ப் புலிகள் 
-போன்ற அமைப்புகள் தமிழகத்தில் உலா வருகின்றன. இவையெல்லாம், தமிழ்நாடு பிரிவினையை முதன்மையான கொள்கையாகக் கொண்டு இயங்கும் அமைப்புகளாகும்.

தற்போது தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற கோரிக்கையை அவ்வப்போது எழுப்பும் அமைப்புகளில், சீமானின் நாம் தமிழர் கட்சி, திருமுருகன் காந்தி என்கின்ற டேனியல் நடத்தும் மே17 இயக்கம், திராவிட கழகத்தில் பிரிந்த பல அமைப்புகளுடன் முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் கைகோர்த்து கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களின் கோரிக்கைக்கு அவ்வப்போது ஆதரவு கரம் நீட்டுவது, தி.மு.க.வும்,  அ.தி.மு.க.வும்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான தமிழ்நாடு விடுதலைப் படை (Tamil Liberation Army) ஐச்  சேர்ந்த கலைலிங்கம் என்பவர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெடிகுண்டு வைத்ததற்காகவும் தற்போதைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது காரில் குண்டு வைத்ததற்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் முன்னிலையில்,   தேசிய புலனாய்வு அமைப்பினரால் சில துண்டுப் பிரசுரங்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவற்றைப் பார்த்தபின், NGOக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போர்வையில் தமிழகத்தில் தான் அதிக அளவில் அரசு சாரா அமைப்புகள் செயல்படுவதாகவும், இவை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து மக்களை போராட்டத்திற்குத் தூண்டி, அச்சம் மற்றும் வெறுப்பைப் பரப்பி தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார். 

ஜாமீன் மனுவை நிராகரித்து வெளியிட்ட 48 பக்க தீர்ப்பில், பல அரசியல் கட்சிகள் அரசியல் லாபத்துக்காக மொழிவாதத்தை ஊக்குவிப்பதாகவும் பஞ்சாப், திரிபுரா, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் காலிஸ்தான் போன்ற பிரிவினைவாத அமைப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்த மத்திய அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நக்சல் அமைப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது என்று அச்சம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நீதிபதியின் முன் தாக்கல் செய்த அஃபிடவிட்டில், தமிழ்நாடு விடுதலைப்படை தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றின் போர்வையில் கலவரங்கள் செய்துள்ளது என்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி உள்ளது என்றும் கூறி தேசிய புலனாய்வு முகமையின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜாமீன் கொடுக்க கூடாது என்று கோரி இருக்கிறார். மேலும் கலைலிங்கம்  ‘ஏகாதிபத்திய இந்தியாவைத் தகர்த்து தமிழ்நாட்டை மீட்போம்! புரட்சி செய்வோம்! தமிழ்மொழி, தமிழ்தேசியம் வீரவணக்கம்!’ என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது எதிரி நாடுகளை விட நம் நாட்டுக்குள்ளேயே இருக்கும் ஐந்தாம் படையான  சிலரிடமிருந்து தான் இந்தியாவுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, அண்மையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவம் நம் நாட்டை விட அண்டை நாட்டை அதிகமாக நேசிப்பவர்களைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக இத்தகையோர் ஊடகங்களில் அதிகம் இருப்பதை பற்றி நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். ஊடகத்தினர்  ‘நேரிடையாக செய்திகளை வழங்காமல் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செய்தி என்ற பெயரில் அவர்களது கருத்துக்களையே பரப்பி வருகிறார்கள். இவர்கள் நமது தேசத்திற்கு ஆபத்தானவர்கள்’ என்று நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை செய்துள்ளார். 

மேலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைகள் அமைப்புகள் என்ற பெயரில் பல தேச விரோத சக்திகள் செயல்பட்டு வருவதாக கூறியுள்ள அவர்,  ‘அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் நாட்டுக்கே எதிராகப் போராடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இத்தகைய அமைப்புகள் நமது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் கேடு விளைவிப்பதால் மக்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 “இந்தியாவைக் கூறு போட முயலும் செயலுக்கு அனுமதி தர முடியாது.”  -இவ்வாறு கூறியது, தமிழக அரசு அல்ல. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. என்.ஆனந்த் வெங்கடேஷ் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும் போது கூறிய வார்த்தைகள். 

 நாகை மாவட்ட தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் நிர்வாகிகள், பொதுக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கில் தான் நீதிபதி அவ்வாறு கூறினார்.

 “தமிழினம், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி சிலர் தங்களது பிரிவினைவாதக் கொள்கைகளை நிறைவேற்ற நினைக்கிறார்கள்” என்று எச்சரித்த நீதிபதி,  “ஒரு குறிப்பிட்ட மொழியைப் புறக்கணிக்கும் வகையிலான எந்தச் செயலும் இத்தகைய அமைப்புகளின் பிரிவினைவாதக் கருத்தாக்கத்திற்கு வலுச் சேர்த்து நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். இறுதியாக நீதிபதி “அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரிவினைவாத சக்திகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

சமூக சேவை என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து நிதியைப் பெற்றுக்கொண்டு, தொண்டு நிறுவனங்கள் தொடங்கி, அரசுத் திட்டங்களுக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைப் போராடத் தூண்டும் செயலில் பல சமூகச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக People's Watch, மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு அடிக்கடி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. ஹென்றி திபேன் என்ற வழக்கறிஞரால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. Centre for Promotion of Social Concerns (CPSC) என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பின் ஒரு குழு/அலகு தான் மக்கள் கண்காணிப்பகம். 

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக CPSCன் FCRA உரிமம் கடந்த 2016ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. தங்களது உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது மட்டுமே இந்த அமைப்பின் உண்மையான பெயர் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டது

இன்று பூதாகரமாக வளர்ந்து நிற்கும் தமிழ் பிரிவினைவாதத்துக்கும் கிறிஸ்தவ நிறுவனங்கள்தான் காரணம். ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழக மண்ணில் கால்வைத்த அன்றே தமிழ்ப் பிரிவினைவாதம் விதைக்கப்பட்டுவிட்டது என்றால் அது மிகையாகாது. 

நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை, தரங்கம்பாடி, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் காலூன்றி ஆரிய- திராவிட இனவாதத்தைப் பரப்பி தமிழரை தனி இனமாக கட்டமைத்தனர் கிறிஸ்தவ மிஷனரிகள்.
அவர்கள் கட்டமைத்த இனவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட திராவிட இனவெறி இயக்கங்கள் கிறிஸ்தவ நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு  ‘திராவிட நாடு’ என்கிற கோட்பாட்டை உருவாக்கினர். 

பின்னர் நாளடைவில் திராவிட இயக்கங்கள் பலவாறாகப் பிரிந்து போய் திராவிட பிரிவினைவாதம் மங்கிப் போனாலும், கிறிஸ்தவ நிறுவனங்கள் திராவிடக் கட்சிகளின் மீதான தங்களுடைய பிடியை விடாமல் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் பிரிவினைவாதத்தைத் தூபம் போட்டு வளர்த்து வருகின்றன.



No comments:

Post a Comment