பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

அற்புத மலையில் அருளாட்சி புரிந்த அதிசய மஹரிஷி

- ச.நாகராஜன்


ரமண மஹரிஷி
(அவதார தினம்: மார்கழி - திருவாதிரை)
(ஆங்கிலத் தேதி: டிசம்பர் 30, 1879 - சமாதி தினம்: ஏப்ரல் 14, 1950) 



    திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட. அங்கு அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!

அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் அண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மிகத்தில் உயர்த்த வழி வகுத்தார்.

ரமண அவதாரம்

அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள திருச்சுழியில் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி, ஆருத்ரா தரிசன நாளன்று சுந்தரம் ஐயருக்கும் அழகம்மாளுக்கும் குழந்தையாக வந்துதித்தார் ரமணர். அவருக்கு வேங்கடராமன் என்று பெயரிடப்பட்டது.

மற்றவர்களைப் போலவே இருந்தாலும் கூட இள வயதிலேயே சகஜ சமாதி எனப்படும் அரிய நிலை வேங்கடராமனுக்கு இயல்பாக வாய்த்திருந்தது. ஒரு நாள் அவரது உறவினர் ஒருவர் நான் திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன் என்றார். திருவண்ணாமலை என்ற சொல் அவரை வெகுவாகப் பாதித்தது.

1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் அவருக்கு மரண பயம் தோன்றியது. தொடர்ந்து ஏற்பட்ட அனுபவத்தில் பெறுதற்கரிய ஞானத்தில் உயர் நிலையை அவர் பெற்றார். 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ரயிலில் ஏறிய அவர் திருவண்ணாமலையை அடைந்தார். தொடர்ந்து சமாதி நிலையை எய்திய 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை திருவண்ணாமலையை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் அவர் செல்லவில்லை.

கடுமையான தவத்தின் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி பரமாசார்யர், நாராயண குரு உள்ளிட்ட மகான்கள் வியந்து போற்றும் மஹரிஷியாக, காவ்யகண்ட கணபதி சாஸ்திரி அவரை அழைத்த ரமணர் என்ற பெயரால் அவரை உலகம் அறிந்து கொண்டது. ஏராளமானோர் அவர் அருள் நாடி வரவே ரமணாசிரமம் உருவானது.

அற்புதங்கள் ஆயிரம்!

ரமணரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களுக்கு எண்ணிக்கையே இல்லை; பல்வேறு அன்பர்களும் நவீன காலத்திற்கேற்றபடி அவற்றைக் குறிப்புகளாக எடுத்ததோடு புத்தகங்களாக எழுதியும் வெளியிட்டனர்; ஆகவே தான் அதிகாரபூர்வமான ஆவணங்கள் மூலம் அவை அனைத்தையும் அறிந்து பரவசப்பட முடிகிறது.

கட்டுரையின் இடம் கருதி சில சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம். அமுதத் துளியில் எந்தப் பகுதியைச் சுவைத்தாலும் இனிக்கும் என்பது போல பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த சம்பவமும் சுவையானதே; அரிய ரகசியத்தையோ செய்தியையோ அது சொல்வதும் இயல்பானதே.

ரமணரிடம் வந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ்

நூற்றுக் கணக்கான மேலை நாட்டோர் திருவண்ணாமலை வந்து ரமணரை தரிசனம் செய்து பயன் பெற்றனர்; தங்கள் அனுபவங்களைப் பல்வேறு நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

முதன் முதலாக வந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ் என்பவர். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸிஸ்டண்ட் சூபரிடெண்டெண்டாக பம்பாய்க்கு வந்தார். பம்பாய் வரும் போதே அவரது உடல் நிலை மோசமானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது மனதை வலியிலிருந்து திருப்ப முயற்சி செய்து ஆவி உடலில் மேலெழும்பி சஞ்சரிக்க ஆரம்பித்து வெல்லூர் வரை வந்தார். அங்கு நரசிம்மய்யா என்பவரைப் பார்த்தார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு ஒருவாறாக அவர் மார்ச் மாதம் உடல் நிலை தேறினார். அதே மாதம் 18ஆம் தேதி வெல்லூருக்கு அவர் வந்தார். அங்கு தான் ஆவி உடலில் பார்த்த நரசிம்மய்யாவை நேரில் கண்டு வியந்தார். மீண்டும் உடல் நிலை மோசமாகவே ஊட்டிக்குச் சென்ற அவர் அதீதமான தனது அனுபவங்களை நரசிம்மய்யாவிற்குக் கடிதம் மூலம் எழுதி விளக்கம் கேட்டு வந்தார். ஏதேனும் ஒரு பெரிய மகானைச் சந்திக்க முடியுமா என்ற தனது ஆவலைக் கடிதம் மூலம் தெரிவித்த அவர் வெல்லூர் வந்த போது தன் மனதில் தோன்றிய ஒரு குகையின் படத்தையும் குகை வாயிலில் நிற்கும் மகானின் படத்தையும் வரைந்து நரசிம்மய்யாவிற்குக் காட்டினார். அந்த மகான் தான் ரமணர்.

இப்படி எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பல அயல் நாட்டினருக்கும் அருள் பாலித்து அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் ரமணர்.

உலகின் மிகப் பெரும் எழுத்தாளரான பால் பிரண்டன் (Paul Brunton) ரமணரைச் சரண் அடைந்த சம்பவம் சுவையான ஒன்று. காஞ்சி மஹாபெரியவாளைச் சந்தித்த பிரண்டன் அவரைத் தனக்குக் குருவாக இருந்து வழிகாட்ட முடியுமா என்று கேட்ட போது அவர் ரமணரைத் தரிசிக்குமாறு அருளுரை புகன்றார். அதன் படி ரமணரைச் சந்தித்த பிரண்டன் தான் கேட்க விரும்பிய கேள்விகளுக்கெல்லாம் அவர் சந்நிதியில் உடனுக்குடன் தன் மனதிலேயே பதில் கிடைப்பது கண்டு வியந்தார்.

பகவான் ரமணருடனான தன் அனுபவங்களையும் ரமணரின் உபதேசங்களையும் பல நூல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார்.

உலகம் முழுவதும் ரமணரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பால் பிரண்டனின் ‘எ செர்ச் இன் சீக்ரட் இந்தியா” (A Search In Secret India) பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான அருமையான ஒரு புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

மிகவும் பிரபலமான ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் (Somerset Maugham) திருவண்ணாமலைக்கு ரமணரை தரிசிக்க வந்தார். தான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவர் சந்நிதியின் முன் அமர்ந்தார். ஒவ்வொரு கேள்வியாக அவர் மனதில் எழ அதற்கான அற்புதமான பதில் அவர் மனதிலேயே தோன்றியது. ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை. ஹிந்து மதம் பற்றிய அவரது ‘பாயிண்ட்ஸ் ஆப் வியூ’ என்ற புத்தகம் அரிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கொண்ட நூலாகும்.

ரமணர் பற்றி அரவிந்த மஹரிஷி

மஹரிஷி அரவிந்தர் புதுவை அடைந்தவுடன் ஆரம்ப நாட்களில் அவரை மாலை நேரங்களில் அன்பர்கள் சந்தித்து அளவளாவி அவரது அருளாசி பெறுவது சாத்தியமாக இருந்தது.

வருடம் 1938. டிசம்பர் மாதம் 23ஆம் தேதி.

சாதகர் ஒருவர் ரமணாசிரமத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ரமண மஹரிஷி வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அரவிந்தர் விவரித்தார்.

ஆசிரமச் செயல்பாட்டிலும் பக்தர்கள் நடந்து கொண்ட விதத்திலும் சற்று அதிருப்தி கொண்ட ரமணர் மலையை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். குன்றின் இடையே ஒரு சிறு இடைவெளியை அவர் கடக்க வேண்டியிருந்தது. அந்த இடைவெளியில் காலை குறுக்காக நீட்டி வைத்துக் கொண்டு ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தாள். மஹரிஷி அவரது காலை எடுக்குமாறு வேண்டினார். ஆனால் அவரோ மறுத்தார். மஹரிஷி அவரைக் கோபத்துடன் கடக்க யத்தனித்தார். கோபம் கொண்ட கிழவி, ”ஏன் இப்படி அமைதியற்று இருக்கிறாய்? அருணாசலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்காமல் ஏன் இப்படி அலைகிறாய்? திரும்பிப் போ, சிவனை அங்கே வழிபடேன்” என்றார்.

கிழவியின் பேச்சு ரமணரின் சிந்தனையைத் தூண்டி விட்டது. அவர் திரும்பி வழி நடந்தார். சிறிது தூரம் சென்ற பின் அவர் திரும்பிப் பார்த்த போது அந்தக் கிழவியை அங்கே காணோம். அப்போது தான் அவருக்கு திடீரென்று தோன்றியது, மஹா சக்தியே கிழவி ரூபத்தில் அங்கு வந்து அவருக்கு அருணாசலத்திலேயே இருக்குமாறு அருளியதாக!

அரவிந்தர் கூறிய இந்த சம்பவம் போல ரமணர் காட்டினுள் ஏகாந்தமாக இருப்பதற்காகச் சென்ற போதெல்லாம் அன்னை மீனாட்சியே அவரை ஆசிரமத்திற்குத் திரும்பி அங்கிருந்து பக்தர்களுக்கு வழிகாட்டுமாறு உணர்த்தி இருப்பதை அவரே குறிப்பாகச் சொல்லி இருக்கிறார்.

ஒவ்வொரு கணத்திலும் மஹாசக்தியே ரமணரை வழி நடத்தி வந்தாள். ஆசிரமம் ஆரம்பிப்பதிலோ அல்லது அதை நடத்துவதிலோ ரமணருக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனால் மஹாசக்திக்கோ அவர் மூலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்ற சங்கல்பம் இருந்தது.

ஒரு கட்டத்தில், “என்னை இம்சிக்கிறா” என்று கூறிய ரமணர், அந்த இம்சையை அன்னையின் கட்டளையாக சிரமேற்கொண்டு ஆசிரமத்தை நடத்த அனுமதி தந்தார் – ஆனால் ஆசிரம விதிமுறைகளை மிகக் கடுமையாகப் பின்பற்றினாலும் அதில் பற்று சிறிதுமின்றி இருந்தார்.

அற்புதமான ரமண அவதாரம் பராசக்தியின் சங்கல்பம் என்றே முடிவு செய்யலாம்.

கடவுளின் அருள் அனைவருக்கும் உண்டா?

பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.

அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!

ரமணர்: ஆமாம்.

பக்தர்: அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!

ரமணர்: ஆமாம்

பக்தர்: அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.

ரமணர்: நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!

பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.

மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.


இடையன் பூவனுக்கு 
ரமணரின் அருள்!

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். இன்னும் மைசூர் மஹாராஜா, பரோடா மஹாராஜா, மஹாத்மா காந்திஜியின் செயலாளரான மஹாதேவ தேசாய், பரமஹம்ஸ யோகானந்தா, நாராயண குரு, காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக், சாமர்செட் மாம் உள்ளிட்ட ஏராளமான துறவிகள், தேசியத் தலைவர்கள், பேரறிஞர்கள், எழுத்தாளர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது. உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.

ஒரு சம்பவம்...

பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!

ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!

பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான். கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.

முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான Talks with Sri Ramana Maharshi என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவில் கூறப்படும் சம்பவம் தான் மேலே உள்ள சம்பவம்!

ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோற்றம்

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தவர் வெளியில் வந்திருக்கிறார் போலும் என்று நினைத்த நான் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி (உள்ளே இருப்பவரை வெளியேயும் பார்த்ததை) பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பது போன்ற இந்த மாதிரியான அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார். அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படிச் செய்தார்.

நாகம் காத்த ரமணபக்தை

மா பிரோஜா தலயார்கான் (Ma FirozaTaleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.

ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.

ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.

ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.

திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.

தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். ‘பாம்பு பாம்பு’ என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.

திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான் ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர். 

சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார். திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.

அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.

அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் திருமதி தலயார்கான்.

உடனடியாக அவர் ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.

பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.

இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.

“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.

ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!

வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.

ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும் வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.

முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.

அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.

இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.

திருவண்ணாமலை ரகசியம்

திருவண்ணாமலை அப்படி என்ன ஒரு அற்புதமலை? இந்தக் கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜமே.

ஒரு முறை பால் பிரண்டன் திருவண்ணாமலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ரமணரைக் குடைந்தார்.

மலைக்குள்ளே குகைகள் உள்ளனவா என்று கேட்டார் பிரண்டன்.

ரமணர், “ எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.

சித்தர்கள் அதனுள் இருக்கின்றனரா என்று கேட்டார் பிரண்டன். “பெரிய சித்தர்கள் இருக்கின்றனர்” என்றார் ரமணர்.

சித்தர்கள் இமயமலையில் இருப்பதாக அல்லவா சொல்கின்றனர் என்று அடுத்து கேட்ட பிரண்டனுக்கு விடையாக ரமணர், “கைலாயம் சிவனின் இருப்பிடம் தான்; ஆனால் சிவனே தான் இந்தத் திருவண்ணாமலை” என்று கூறினார்.

திருவண்ணாமலையின் ரகசியத்தை இப்படி விண்டுரைத்த ஒரே ரிஷி ரமணர் தான்.

நெருடலான கேள்விகளுக்குப் பதில்

ரமணாசிரமத்திற்கு வரும் அனைவருமே பெரும் பக்தர்கள் என்று சொல்லி விட முடியாது. ரமணரின் மீது தங்கள் கருத்துக்களை ஏற்றி அதன் மூலம் ஆதாயம் பெற நினைத்தோரும் உண்டு. அப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு அவர்கள் மனம் நோகாமல் பதில் சொல்லி அனுப்பி விடுவார் ரமணர்; சாதாரணமாக அவர் பேசுவதே அபூர்வம். என்றபோதிலும் இடைவிடாது அன்றாடம் நூற்றுக் கணக்கில் வந்து அவரை தரிசித்த பலருக்கு அவர் அருளுரையாகச் சிலவற்றைச் சொல்வதுண்டு.

ஒரு முறை வெளிநாட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் பகவான் ரமண மஹரிஷியைத் தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவரிடம் அவர், “பகவான்! நாங்கள் பெர்த் கண்ட்ரோலுக்காக (குடும்பக் கட்டுப்பாட்டிற்காக) ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் போகிறோம். பர்த் கண்ட்ரோல் (Birth Control) பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்” என்றார்.

ரமணர் மௌனமாக இருந்தார்.

வந்த பத்திரிகையாளர் திருப்பித் திருப்பித் தான் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

உடனே பகவான், “அன்பரே! நீங்களும் நானும் ஏற்கனவே பிறந்து விட்டோம். அதை இந்த நிலையில் கட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நீங்களும் நானும் நிச்சயமாக ஒரு நாள் இறக்கப் போகிறோம். ஆகவே அது பற்றி நீங்கள் இன்னும் அதிகக் கவலைப்பட வேண்டாமா? தயவுசெய்து டெத் கண்ட்ரோல் (Death Control) பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்!”

வந்த பத்திரிகையாளர் நகர்ந்தார்.

என்ன ஒரு அற்புதமான பெரிய உபதேச உரையை ரமண மஹரிஷி எளிய சொற்களால் அருளி விட்டார் என அனைவரும் வியந்தனர்!

சாமர்த்தியமான கேள்விக்கு பதில்!

அன்பர் ஒருவருக்கு ‘இன்ஸ்டண்ட் ஞானி’யாக வேண்டும் என்று ஆசை. ரமண பகவானிடம் வந்தார்.

“நீங்களோ பகவான். ஆகவே எனக்கு எப்போது ஞானம் பிறக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போது ஞானி ஆவேன் என்பதைச் சொல்லுங்கள்” என்றார் அவர்.

ரமணர் அவரை நோக்கி, “ நான் பகவான் என்றால் ஆத்மாவைத் தவிர இரண்டாவது வஸ்து இல்லை. ஆகவே ஞானியோ அல்லது அஞ்ஞானியோ, இரண்டாவதாக ஒருவர் இல்லை. நான் பகவான் இல்லை என்றால் நானும் உங்களைப் போல ஒருவன் தான்! எனவே உங்களுக்குத் தெரிந்த அளவே தான் எனக்கும் தெரியும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது.”

கேட்டு அறிவதில்லை ஞான அனுபவம்! உணர்ந்து அறிவதே ஞானாநுபூதி!

ரமணரிடம் சாமர்த்தியமாகப் பேசித் தங்கள் கருத்துக்களை அவர் மேல் ஏற்றி அவரைப் பயன்படுத்த நினைத்தோர் ஏமாந்தே போனார்கள். இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு.

நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன?

நிஷ்காம்ய கர்மம் – பலனை எதிர்பாராமல் செயலைப் புரிவது – என்றால் என்ன?

ரமணர் பெரிய கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலைத் தருவார். ஒரு சம்பவம் இது:

வெல்லூர் வர்கீஸ் கல்லூரியைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரங்காச்சார் என்பவர் ஒரு நாள் (25-12-1935 அன்று) ரமண மஹரிஷியிடம் நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன என்று கேட்டார். பதிலே இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து ரமணர் அருணாசலமலையை மீது ஏறலானார். பக்தர்கள் பின் தொடர்ந்தனர். பண்டிதரும் தொடர்ந்தார்.

வழியிலே முள் நிறைந்த கம்பு ஒன்று கீழே கிடந்தது. அதை மஹரிஷி கையில் எடுத்துக் கொண்டார். ஓரிடத்தில் உட்கார்ந்து மெதுவாக அந்த முள்களைச் செதுக்கி எடுத்தார். கம்பில் இருந்த முண்டு முடிச்சுகளைத் தேய்த்து அதைச் சீராக்கினார். ஒரு சொரசொரப்பான இலையை எடுத்து அதைத் தேய்த்து வழவழப்பாக்கினார்.

சுமார் ஆறு மணி நேரம் இந்த வேலை தொடர்ந்தது. கம்பு பளபளவென்று பாலிஷானது. அனைவரும் இதைப் பார்த்து எப்படி இருந்த கம்பு இப்போது எப்படி மாறி உள்ளது என வியந்தனர்.

பிறகு ரமணருடன் பக்தர் குழு நகரத் தொடங்கியது.

அப்போது ஒரு இடையன் அங்கே வந்தான். தனது கம்பைத் தொலைத்து விட்டு மிக்க கவலையுடன் இருந்த அவனைப் பார்த்த மஹரிஷி தன் கையிலிருந்த கம்பை அவனிடம் கொடுத்து விட்டு மேலே நகரலானார்.

தனது கேள்விக்கு பிராக்டிகல் பதிலே – நடைமுறை பதிலே – கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தார் பண்டிதர்.

பிரதிபலன் எதிர்பாராமல் தம் கடமையைச் செய்வதே நிஷ்காம்ய கர்மம்!

பகவானின் உபதேச மொழிகள்


மிக நீண்ட சொற்பொழிவுகளோ பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ ரமணரிடம் இல்லை.

அவரது உபதேசம் மிக மிக எளிமையானது; சாமான்யரான எந்த ஒருவர் நினைத்தாலும், இறைவன் அருளும் கூட இருந்தால், சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடியது! செலவில்லாததும் கூட!

‘நான் யார்’ என்பதை தொடர்ந்து தியானித்து வா என்றார் அவர்.

உன்னைக் கண்டுபிடித்து அறிந்து விட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய் என்பது அவர் அருள் உபதேசம்.

தன்னை அறிவதே ஆன்மிகம்!

அவர் அரிதாக அவ்வப்பொழுது இயற்றிய அருமையான ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம், உபதேசவுந்தியார், உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், அப்பளப்பாட்டு உள்ளிட்ட நூல்கள் ரமணாசிரமம் வாயிலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரமண பக்தர்கள்,  ஆயிரக்கணக்கான சுவையான சம்பவங்களைப் புத்தக உருவத்தில் தந்துள்ளனர். அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏன் இதர மொழிகளிலும் கூட உள்ளன. இவற்றை ரமணாசிரமத்தில் வாங்கிப் படித்துப் பயனடையலாம்.

ரமணர் யாத்திரை இடங்கள்

ரமணரின் அருளைப் பெற விரும்பும் ஒருவர் நினைத்த இடத்திலிருந்து அவரை வணங்கலாம்; அருளைப் பெறலாம். அவர் வாழ்ந்த திருவண்ணாமலை ரமணாசிரமம், ஜெனித்த திருச்சுழி இல்லம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுரத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ள தெருவில் அவர் ஞானம் பெற்ற இல்லம் ஆகியவை அன்பர்கள் ஆன்மீக உயர்வுக்காக நாடிச் செல்லும் யாத்திரை இடங்களாக அமைந்துள்ளன.

இறுதி நாட்களில் அவர் கையில் கட்டி ஒன்று தோன்றவே அன்பர்கள் மனம் கலங்கினர். ஆனால் ரமணரோ, “நான் எங்கு போகப் போகிறேன். இங்கே தான் இருப்பேன்” என்று அருளினார்.

ஆகவே அந்த அருள் வாக்கினால் அவரை அங்கு துதிப்போர் அனைவரும் ஆன்மீக அனுபவங்களை இன்றளவும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.

உலகாயத நோக்கில் ஒவ்வொருவருக்கும் எதிர்ப்படும் பிரச்சினைகள் அவரை வணங்கியவுடன் தீர்ந்து போவது ஒரு ஆச்சரிய அனுபவமாகும்.

1950ஆம் ஆண்டு எப்ரல் 14ஆம் நாள் இரவு 8.47க்கு அவர் மேலாம் நிலையை அடைந்து விண்ணில் கலந்த அதே கணத்தில் வானில் ஒரு பெரும் ஜோதி வேகமாகச் சென்றது.

ரமண ஜோதி பூவுலகில் தன் உடலை உகுத்து விண்ணில் ஜொலிக்கும் ஜோதியாக மாறியதைப் பார்த்தோர் அதிசயித்தனர்.

அற்புதமான அண்ணாமலையில் அருளாட்சி புரியும் அதிசய மஹரிஷி ரமணரை நினைத்தாலும் துதித்தாலும் குறைகளை எல்லாம் களையலாம்;கோடி நலம் பெறலாம் என்பது திண்ணம்!

நன்றி:  ‘தமிழ் அண்ட் வேதாஸ்’ இணையதளம்






No comments:

Post a Comment