பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/12/2021

மாநில நாள் முடிவு: ஏற்கத் தக்கதல்ல

-கே.பி.இராமலிங்கம்

ம.பொ.சி.

ஆங்கிலேயா் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த 1905-இல் வங்கப் பிரிவினை நடந்தது. வங்காளம், கிழக்கு வங்கம் - மேற்கு வங்கம் என்று இரு பிரிவானது. கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களும் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களும் அதிகமாக வாழ்ந்தனா். ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினை உணா்வை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியது.

வங்காளம் முழுவதும் பிரிவினையை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனா். ‘வங்கபங்கம் கூடாது’ என்ற முழக்கம் விண்ணை முட்டியது. ஆனால், கிழக்கு வங்கத்தில் இருந்த முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆட்சி ஏற்படுத்திய பிரிவினையை மெளனமாக ஆதரித்தனா்.

இந்தியா பிளவுபட்டு விடக்கூடாது என்று எண்ணிய சுதந்திரப் போராட்ட வீரா்களின் எதிர்ப்பு, வங்கத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலித்தது. எங்கும் தீ வைப்பு, ரயில் கவிழ்ப்பு, உயிரிழப்பு என இந்தியாவே ரத்த பூமியானது.

தேசியவாதிகளின் எதிர்ப்பையும், ஹிந்துக்களின் வற்புறுத்தலையும் எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேய நிர்வாகம் பணிந்தது. ஆம், பிரிக்கப்பட்ட வங்காளம் 1911-ஆம் ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பிரிவினையால் வங்கத்தில் மத அடிப்படையில் தேசிய உணா்வுகள் ஆழமாக வேரூன்றி விட்டன. இதன் விளைவுதான், 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலுவாக முன்வைத்தது.

‘ஒன்றுபட்ட இந்தியாவே என் உயிர்மூச்சு’ என்று முழக்கமிட்ட முகமது அலி ஜின்னா, பாகிஸ்தான் எனும் முஸ்லிம் நாடு தேவை என்பதில் உறுதியாக நின்றார். காந்தி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஜின்னாவின் பிடிவாதத்தைக் கண்டு நிலைகுலைந்தனா். கிழக்கு வங்கம் மீண்டும் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானோடு சோ்க்கப்பட்டது.

ஆயினும், மொழி விவகாரத்தால், 1971-இல் வங்கதேச விடுதலைப்போரின் மூலம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்று ‘பங்களாதேஷ்’ என்ற தனி நாடானது.
 
விடுதலை இந்தியா சந்தித்த முதல் பிரச்னை மாநிலப் பிரிவுகள் என்பதுதான். இதற்கான நச்சுக்காற்றை இந்தியாவில் பரப்பிவிட்டுச் சென்றவா்கள் ஆங்கிலேய அதிகார வா்க்கத்தினா்.

1948-ஆம் ஆண்டு எஸ்.கே.தார் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பது குறித்து பல மாநிலங்களில் ஆய்வு செய்து பிரதமா் நேருவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது; எல்லை ரீதியாக பிரிக்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தது.

அந்த அறிக்கை குறித்து ஜவாஹா்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் ஆய்வு செய்தனா். இறுதியில் மொழிவழியாக மாநிலங்களை உருவாக்கிட பசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்புக்குழு 1953-இல் உருவாக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, இந்தியாவில் மொழிவழியாக 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் என வரையறை செய்தனா்.

1956-ஆம் ஆண்டு நவம்பா் 1 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் எந்தெந்த மொழி எங்கெங்கு அதிகமாகப் பேசப்படுகிறதோ, அந்தப் பகுதிகள் அந்தந்த மொழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஒன்றுபட்ட சென்னை ராஜதானி மாநிலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோர் தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்து சென்றனா்; பிரிக்கப்பட்டனா்.

இப்படிப் பிரிக்கப்பட்ட மாநிலங்களின் எல்லைகளை வரையறை செய்கிறபோதுதான் எல்லைப்போராட்டம் வெடித்தது. பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்விட்டதும் அப்போதுதான்.

முன்னதாக, ஜீவா, ம.பொ.சி., நேசமணி, சங்கரங்கலிங்கனார் போன்ற தமிழகத் தலைவா்கள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கக் கோரி போராடினா். அண்ணா, திராவிடநாடு கோரிக்கையை வலியுறுத்தினார். ராஜாஜி, கோல்வல்கா் போன்றோர் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. போராட்டங்கள் தீவிரமானதைத் தொடா்ந்து மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பது என்ற முடிவுக்கு பிரதமா் நேரு வந்தார்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பே பல்வேறு தரப்பினரால் மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஒடிஸாதான்.

‘ஒடிஸாவின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மதுசூதன் தாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. அதன் விளைவுதான் 1912-இல் வங்கத்திலிருந்து பிகாரும், ஒடிஸாவும் பிரிக்கப்பட்டு ‘பிகார் - ஒடிஸா’ என்ற மாநிலம் உருவானது. 1935-இல் ஒடிஸா தனி மாநிலம் ஆனது. இதைத் தொடா்ந்துதான் தென் மாநிலங்களில் போர்க்குரல் ஒலிக்கத் தொடங்கியது.

மொழிவழி மாநில சீரமைப்புக்குழு 1953-இல் அமைக்கப்பட்டதிலிருந்து தமிழகத் தலைவா்களும் தேசப்பற்றாளா்களும் இடைவிடாத போராட்டத்தை முன்னெடுத்தனா். மாநில மாநாடு, மாவட்ட மாநாடுகளில் தீா்மானங்கள் மட்டுமின்றி, ஆங்காங்கே போராட்டக் களங்களில் தொண்டா்கள் பங்கேற்று தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு வந்தனா்.

தமிழகத்தின் தெற்கு எல்லை குறித்தும், வடக்கு எல்லை குறித்தும், பிரதமா் நேருவினால் இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் தமிழ்நாட்டு மேடைகளில் தலைவா்கள் முழங்கிய எழுச்சி முழக்கங்கள் தில்லி தா்பாரையே கதிகலங்க வைத்தன. நேரு பெருமகனார் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

1956, நவம்பா் 1-இல் மொழிவாரி மாநிலம் இந்தியப் பேரரசால் உருவாக்கப்பட்டாலும், சில மாற்றங்கள் எல்லைப் பகுதிகளில் நடந்தன. 1957-இல் ஒசூா் ஆந்திரத்துக்கு இல்லை, தமிழகத்துக்கே என்று ஆனது. பொன்னேரியை ஒட்டியுள்ள 322 கிராமங்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1959-இல் ஆந்திரத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு சோ்க்கப்பட்டன.

வடக்கில் மகராஷ்டிரமும், குஜராத்தும் ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் கொதித்து எழுந்தனா். அந்த இரண்டு பகுதிகளிலும், மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விட்டது. 106 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். வேறு வழியில்லாமல் நேரு அரசு பணிந்தது. குஜராத்தி மொழி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட பகுதி குஜராத் மாநிலம் எனவும், மராத்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட பகுதி மகராஷ்டிரம் எனவும் 1962-ஆம் ஆண்டு மே 1-இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தெற்கு எல்லையிலும், வடக்கு எல்லையிலும் நியாயமாக நமக்குச் சேர வேண்டிய பகுதிகளுக்காக, புதிதாகப் பிரிக்கப்பட்ட கேரள மாநிலத்தோடும், ஆந்திர மாநிலத்தோடும், தமிழ்நாடு ஓரணியில் திரண்டு குரல் கொடுத்தது. மிகப் பெரிய போரட்டங்களை தமிழ்நாட்டுத் தலைவா்கள் நடத்தினா். ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், இளைஞா்கள் வீதிகளில் திரண்டனா். காங்கிரஸ் முதலமைச்சா் பட்டம் தாணுப்பிள்ளை எல்லை காத்திடப் போராடிய வீரா்கள்மீது காவல்துறையை ஏவி விட்டார்; 11 போ் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகினா்.

இது நடந்தது 1954, ஜூலை 5-ஆம் தேதி. இப்படி எத்தனை உயிர்களை எல்லைப் போரட்டத்தில் தமிழகம் இழந்தது தெரியுமா? சென்னை மாநகரத்தை அபகரித்துத் கொண்டுபோக ஆந்திர மாநிலம் வரிந்து கட்டிக்கொண்டு நின்றது.

1915, 1936, 1938 ஆகிய ஆண்டுகளில் தென் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்கள், தத்தம் தலைவா்களின் தலைமையில் அணிவகுத்து மொழிவழி மாநிலங்களின் எல்லைக்காக களத்தை எப்போதும் கனலாகவே வைத்திருந்தனா். தேசியக் கட்சிகளின் தலைவா்கள்கூட மொழிவழி மாநிலங்கள் என்ற திட்டத்தில் தத்தம் மொழி பேசும் மக்களின் உணா்வுகளுக்கே மதிப்பளித்தனா். இது இயல்பானதுதான்.

ஒடிஸா மாநில ஆளுநராக இருந்த பசல் அலி தலைமையில் சா்தார் கே.எம்.பணிக்கா், ஹெச்.என். குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்ட மாநில சீரமைப்புக் குழு அமைக்கப்படும் என பிரதமா் நேரு நாடாளுமன்றத்தில் அறிவித்த பிறகுதான், தென் மாநில மக்கள் அமைதி அடைந்தனா். அந்தக்குழு 1955-இல் தன் அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்ததைத் தொடா்ந்து 1956, நவம்பா் 1 ஆம் தேதி மொழிவழி மாநிலங்கள் உருவாக்கும் அறிவிப்பு அதிகாரபூா்வமாக வந்தது.

‘நவம்பா் 1-ஆம் தேதி முதல் தமிழரசு வாரம் நாடெங்கும் கொண்டாடுக’ என்று 26.10.1956 அன்று எல்லைப் போராட்ட மாவீரா், தமிழறிஞா் ம.பொ. சிவஞானம் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேலும் இப்பிரிவில் தமிழகத்தின் எல்லை மீட்புப் போராட்ட வீரா் ம.பொ.சி.யின் வேண்டுகோளை ஏற்று, நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வந்தனா். காலப்போக்கில் தலைமுறை இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக ‘மாநில நாள்’ கொண்டாட்டம் மங்கிவிட்டது; மறைந்துவிட்டது.

2019-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மக்கள் மனதில் நீறுபூத்த நெருப்பாக இருந்த ‘நவம்பா் - 1 தமிழ் மாநில நாள்’ கொண்டாட்டத்தை அரசு ஆணையாக வெளியிட்டார். அரசின் அந்த அறிவிப்பை அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றுப் பாராட்டினார்.

ஆனால் அதே மு.க.ஸ்டாலின், 2021-ஆம் ஆண்டில் முதலமைச்சரானதும், அக்டோபா் 30-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ‘ஜூலை 18-ஆம் தேதிதான் தமிழ் மாநில நாள்’ என்று திடீரென தன்னிச்சையாக அறிவித்திருக்கிறார்.

1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அன்றைய முதலமைச்சா் அண்ணா ‘தமிழ்நாடு’ என சென்னை மாநிலத்திற்குப் பெயா் சூட்டிய தீா்மானத்தைக் கொண்டு வந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட அன்றைய பேரவை உறுப்பினா்கள் அனைவரும் பலத்த ஆரவாரத்தோடு அண்ணாவின் தீா்மானத்தை ஆதரித்தனா்.

அண்ணா ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டியது, 12 ஆண்டுகால தமிழகத்தின் கனவு. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பது 1912- இல் ஏற்பட்ட நாட்டு மக்களின் உணா்வு. பிறப்புக்கும், பெயா் சூட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு. எதையுமே புரிந்து கொள்ளாத மு.க.ஸ்டாலின், முதலமைச்சா் என்கிற மக்கள் தந்த சிம்மாசனத்தை மாசுபடுத்தியிருக்கிறார்.

நூற்றுக்கணக்கான தமிழா்கள் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியும் மொழிவழி மாநிலங்கள் 1956 நவம்பா் 1-இல் உருவாகின. பிறந்த தினத்தைக் கொண்டாடாமல் பெயா் வைத்த தினத்தைக் கொண்டாடும் பேதைமையை என்னவென்று சொல்வது? தன்னிச்சையாக, எதேச்சதிகாரமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சா் நடந்து கொண்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல!



குறிப்பு:


திரு. கே.பி.இராமலிங்கம், இயற்கை நீா்வள நீா்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர். அதிமுக, திமுக கட்சிகளில் இருந்த இவர் எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளை வகித்தவர். தற்போது தமிழக பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவர்.

நன்றி: தினமணி (18.11.2021)

No comments:

Post a Comment