பக்கங்கள்

மின்னிதழின் அங்கங்கள்

16/09/2021

கொங்கு நாட்டில் சுதந்திரப் போராட்டம்: பகுதி- 1

-சேக்கிழான்
விருப்பாச்சி பாளையக்காரர்
கோபால நாயக்கர்


இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ, 1920க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் மகாத்மா காந்தியும் மட்டுமே நடத்தியது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது முழுமையானதல்ல; அதுபோலவே, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக 1857-இல் நடைபெற்ற சிப்பாய்களின் போரே விடுதலைப் போரின் முதல் படியென்று கருதப்படுவதும் சரியல்ல. இவை இரண்டும் முழு உண்மையல்ல என்பதற்கு, கொங்குநாட்டில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிப் போர் சான்றாகும்.

கொங்குநாடு என்பது, தற்போதைய தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பொ.யு. 1300இல் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பெரும்பாலும் குறுநில மன்னர்கள், பாளையக்காரர்களால் ஆங்காங்கே சிறு பிரதேசங்களாக ஆளப்பட்டு வந்த பகுதி கொங்குநாடு. இதே நிலைதான் நாயக்கர்கள் மதுரையை ஆளும்வரை தமிழகம் முழுவதும் காணப்பட்டது.

ஆங்கிலேய அரசுக்கும், அதற்கு முன்னதாக கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் எதிராக பல வீரச்சமர்களை நிகழ்த்திய பகுதி கொங்குநாடு. அதனை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம்:

1. 1757 - 1885:

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் கால் பதித்த 1757 முதல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட காலமான 1885 வரையிலான காலகட்டத்தை குறுநில மன்னர்களின் போராட்டம் என்று வகைப்படுத்தலாம். இதில்தான் பாரத அளவிலேயே முன்னோடியான போர்களை, கொங்குநாட்டு வீரர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

2. 1885 - 1920:

அடுத்து, 1885 முதல், மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறத் துவங்கிய 1920 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை, தீவிர தேசியவாதிகளின் காலமாக வகைப்படுத்தலாம். இதிலும் கொங்குநாடு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது.

3. 1920 - 1947: 
இறுதியாக, 1920 முதல் 1947 வரையிலான இறுதிக் காலகட்டம், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியது.  ‘காந்தி யுகம்’ என்று குறிப்பிடப்படும் இந்தக் காலகட்டத்திலும், கொங்குநாடு மிகவும் அர்ப்பணிப்பான, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பலரை நாட்டிற்கு அளித்துள்ளது.

வேலு நாச்சியாருக்கு உதவி:


சொல்லப்போனால், ஆங்கிலேயரை முதன்முதலாகத் தோற்கடித்தவர், தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார் தான். அதற்கு உதவியோர், கொங்குநாட்டைச் சேர்ந்த திண்டுக்கல், விருபாச்சி பாளையக்காரர்கள் தான்.

ஆண்வாரிசு இல்லாத மன்னரின் நாட்டை கிழக்கிந்திய கம்பெனியே ஏற்கலாம் என்ற வைஸ்ராய் டல்ஹௌசியின் வாரிசிலிக் கொள்கையால் சிவகங்கை சமஸ்தானத்தில் சிக்கல் நேரிட்டது. 1772-இல் அப்பகுதி கம்பெனி வசமானது. அதை எதிர்த்து, சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத் தேவரின் மனைவியும், ராமநாதபுரம் சமஸ்தானப் புதல்வியுமான ராணி வேலு நாச்சியார் நடத்திய போராட்டமே சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த போராட்டம்.

1772-ல் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி பழனி அருகிலுள்ள விருப்பாச்சி பாளையத்துக்கு வந்த வேலு நாச்சியாருக்கு பாளையக்காரரான கோபால நாயக்கர் அடைக்கலம் கொடுத்தார். அங்கிருந்த பாளையக்காரர்கள் மற்றும் மைசூரு மன்னர் ஹைதர் அலி ஆகியோருடன் நடத்திய ஆலோசனையின் விளைவாக, புதிய படை கட்டமைக்கப்பட்டது.

1780 ஐப்பசி மாதம் நடைபெற்ற அந்தப் படையினரின் அதிரடித் தாக்குதலால் சிவகங்கைச் சீமை மீட்கப்பட்டு, ராணி வேலு நாச்சியார் அரசியானார். ஆங்கிலேயப்படை தோற்றோடியது.

பழனி சதித் திட்டம்:

1800ஆம் ஆண்டில் நடைபெற்ற கோயமுத்தூர் கோட்டை மீதான தாக்குதல் முயற்சி, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிட வேண்டியது. ஆனால், அதைப் பற்றிய எந்த ஒரு சிறு பதிவும் நமது சரித்திரப் பாடநூல்களில் இல்லை. ஆங்கிலேய அரசின் ஆவணங்களில் ‘பழனி சதி வழக்கு’ என்று குறிப்பிடப்படும் இந்த மகத்தான போராட்டம், ஆங்கிலேய அரசின் நவீன ஆயுதப்படையால் முறியடிக்கப்பட்டது. இந்தப் போரில் பலநூறு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதன்பிறகே வேலூர் கோட்டைப் புரட்சி 1806இல் நடைபெற்றது என்பதையும், 1857-இல்தான் நாட்டின் வட பகுதியில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் துவங்கியது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு அடித்தளமிட்டவர், விருப்பாச்சி கோபால நாயக்கர். ஆங்கிலேயரை தமிழ்மண்ணிலிருந்து விரட்ட 1800களில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்துப் போரிட்ட இவர், திண்டுக்கல் - பழநிக்கு இடையிலுள்ள விருப்பாச்சி என்ற ஊரை, அன்றைய நாயக்கர்கள் பாளையம் என்ற முறையில் ஆட்சி செய்த குறுநில மன்னர்.

ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராடிய குறுநில மன்னர்களையும் போர்ப்படைத் தளபதிகளையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பை உருவாக்கியவர் கோபால நாயக்கர். இந்தக் கூட்டமைப்பில், கன்னட மராட்டியப் பகுதி மன்னரான தூந்தாஜி வாக், காளையார் கோவிலின் மருது பாண்டியர்கள், கன்னட நாட்டின் கிருஷ்ணப்ப நாயக்கர், மலபாரின் கேரள வர்மா, ஓடாநிலையின் தீரன் சின்னமலை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மைசூரு மன்னராக இருந்த திப்பு சுல்தானின் ஆதரவும் இவர்களுக்கு இருந்தது.

1799இல் நடைபெற்ற நான்காவது மைசூருப் போரில் திப்பு கொல்லப்பட்டார். அடுத்து பாஞ்சாலங்குறிச்சி பாளையமும் வெல்லப்பட்டு வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர் 1799 இல் தூக்கிலிட்டனர். கீழைப் பாளையக்காரர்களும் ஒடுக்கப்பட்டனர். இவற்றுக்குப் பழிவாங்கத் துடித்த கோபால நாயக்கர், கோயமுத்தூரில் படைத்தளம் அமைத்திருந்த கிழக்கிந்திய கம்பெனியாரின் கோட்டையைத் தாக்கத் திட்டமிட்டார்.

நாட்டில் கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆதிக்கம் பரவி வந்த சூழலில், திருநெல்வேலியிலும், மைசூரிலும் எஞ்சியிருந்த புரட்சியணியினர் சிவகங்கைக் காடுகளுக்கும் பழனிக்காடுகளுக்கும் வந்து சேர்ந்தனர். அடர்ந்த காடுகளில் படைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது பாண்டியன் ஆகியோரின் ஊக்கத்தால் புரட்சியாளர்கள் மீண்டும் இயக்கத்தைக் கட்டமைத்தனர். ஆங்கிலேய எதிர்ப்புக் குழுக்கள் கூட்டணி அமைத்து, திட்டமிட்ட ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டதன் விளைவாக, கிளர்ச்சியின் தாக்கம் திருநெல்வேலியிலிருந்து மலபாருக்கும், மலபாரிலிருந்து குவாலியருக்கும் பரவியது.

1800ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் எதிர்ப்புப் படையினர் தமது செயல்திட்டத்தை வகுப்பதற்காகக் கூடினர். ‘பழனி சதித் திட்டம்’ என்று குறிப்பிடப்படும் இக்கூட்டத்தில், புரட்சிப்படையின் தலைவர்களும் அவர்களது உதவியாளர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்கு கோபால நாயக்கர் தலைமை வகித்தார். 1800 ஜூன் 3 ஆம் நாள் கோயமுத்தூர் கோட்டையைத் தாக்குவதென்றும் ஆங்கிலேயர் குதிரைப்படையின் ஐந்தாவது படைவகுப்பை அழிப்பதென்றும் இக்கூட்டம் முடிவு செய்தது.

போராளிகள் ஷேக் ஹுசைன் தலைமையில் அருகிலிருந்த மலைகளின் ஒளிந்துகொண்டு காத்திருக்கவும், திண்டுக்கல்லைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஷேக் ஹுசைனுக்கு ஆதரவாக உரிய வேளையில் வந்து சேர்ந்துகொள்ளவும் தீர்மானித்திருந்தனர்.

தூந்தாஜி வாக் தனது குதுரைப்படையை கோயமுத்தூருக்கு அனுப்புவதென்றும், அக்குதிரைப்படை வந்ததும், மருதுபாண்டியரும் அவரது கூட்டாளிகளும் ஒரே நேரத்தில் கலகத்தில் இறங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆயுத வலிமை பற்றி அறிந்திருந்ததால், கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றுவதென அவர்கள் முடிவு செய்தனர்.

1800 ஆம் ஆண்டு மே மாதம், புரட்சிப்படை ஐந்து பகுதிகளாகப் பிரிந்து பழனி - திண்டுக்கல் பகுதிக் காடுகளிலிருந்து தாராபுரம் நோக்கி முன்னேறியது. ஈரோடு சின்னண கவுண்டர் இவ்வைந்து பிரிவுகளுக்கும் தலைமை வகித்தார். ஜூன் 3ஆம் நாள் 600 பேர் கொண்ட புரட்சியாளர் படை கோயமுத்தூர்க் கோட்டை கண்ணுக்குத் தென்படும் ஓர் இடத்தை அடைந்து, முகமது ஹாஷமின் படைத் தொகுதியும் தூந்தாஜி வாக்கின் குதிரைப்படையும் வந்து சேரும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் காத்திருந்தது.

ஆனால், ஆங்கிலேயர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வடக்கிலிருந்து வந்துசேர வேண்டிய படைகள் வந்து சேரவில்லை. முன்கூட்டியே திட்டமிடாமல் சிலர் தாக்குதலைத் தொடங்கியதால், சத்தியமங்கலம் அருகிலுள்ள தலைமலையில் ஏற்பட்ட பின்னடைவால், புரட்சியாளர்கள் பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஆங்கிலேய படை சுதாரித்துக் கொண்டது. அதன் விளைவாக, பீரங்கிப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு கோவையில் புரட்சிப் படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர்; கோவை கோட்டை மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

அதில் கைதான பரமத்தி அப்பாச்சி கவுண்டர் உள்ளிட்ட 42 புரட்சியாளர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு கலகம் நிகழ்ந்த இடங்களான கோயம்புத்தூர், தாராபுரம், சத்தியமங்கலம் முதலிய இடங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனினும் புரட்சிப் படையினர் தக்காணத்தில் குந்தா, கன்னடப் பகுதி, பெல்ஹாம், மைசூர் ராஜ்ஜியத்தின் மேற்குப்பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஜமலாபாத், வனவாசி, கோண்டா ஆகிய ஊர்களில் இருந்த ஆங்கிலேய ராணுவ நிலைகளைத் தாக்கி, அவற்றையும் மீட்டனர். மலபாரின் கேரள வர்மாவும், விருப்பாச்சி கோபால நாயக்கரும் மலைக்கோட்டைகளிலிருந்த ஆங்கிலேய சிப்பாய்களை விரட்டிவிட்டு ராணுவப் பண்டகசாலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடக்கத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த ஆங்கிலேயர், மராட்டிய பேஷ்வா, நிஜாம் முதலிய நட்பு அரசுகளின் உதவியுடன் மராட்டிய கர்நாடக, மலபார் பகுதிகளைச் சேர்ந்த கலகக்காரர்களை ஒடுக்கியது. கர்னல் வெல்லெஸ்லி படை நடவடிக்கைக்குத் தலைமையேற்றார். இச்சண்டையில் 1800, செப். 10 இல் தூந்தாஜி வாக் கொல்லப்பட்டார். கேரள வர்மா 1805, நவ. 30 ல் கொல்லப்பட்டார்.

1801, செப்டம்பரில் மருது பாண்டியர்களின் வலிமையான தளமாக விளங்கிய காளையார் கோவிலை ஆங்கிலேயப் படையின் மூன்று பிரிவுகள் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்கிக் கைப்பற்றினர். மருது பாண்டியர்கள் 1801 அக். 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

தப்பியோடிய பிற புரட்சியாளர்கள் ஊமைத்துரை தலைமையில் கோபால நாயக்கரின் படைக்குப் பக்கபலமாகச் சென்று சேர்ந்தனர். 4,000 பேருடன் பழனிமலைத் தொடரைப் பிடித்துகொண்ட ஊமைத்துரை எதிரி முன்னேறி வருவதைத் தடுக்க தடுப்புச் சுவர் எழுப்பினர். இருப்பினும் புரட்சியாளர்கள் இறுதியில் முறியடிக்கப்பட்டனர். ஊமைத்துரை உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். 73 பேர் பிணாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

1800 அக்டோபரில், ஆங்கிலேயர் படை லெப்டினட் கர்னல் இன்னஸ் தலைமையில் விருப்பாச்சியை முற்றுகையிட்டது. விருப்பாச்சி, இடையகோட்டை, வேலுர் பாளையத்தைச் சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர்வீரர்களும் சத்திரபட்டி பாளைய அரண்மனை முன்பு போர் புரிந்தனர். இந்தப் போரில் விருப்பாச்சி வீழ்ந்தது.

1801 செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல் ஊருக்கு வெளியே குளக்கரையில் கோபால நாயக்கர் தூக்கிலிடப்பட்டார். அந்தக் குளம் ‘கோபாலநாயக்கர் சமுத்திரம்’ என்ற பெயரில் இன்றும் உள்ளது. கோபால நாயக்கரின் அரண்மனையையும் ஆங்கிலேயர் இடித்து தரைமட்டமாக்கினர்.

இவ்வாறாக, நாட்டுக்கே முன்னுதாரணமான குறுநில மன்னர்களின் கூட்டுப் படை முன்னெடுப்பு ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டது.

பழி வாங்கிய எத்தலப்பர்:

1800ஆம் ஆண்டுகளில் தென்கொங்கு நாடு என்று அழைக்கப்பட்ட பழநி, விருப்பாச்சி, ஆயக்குடி, இடையகோட்டை, ஊத்துக்குழி, தளி ஆகிய 6 பகுதிகளில் பாளையக்காரர்கள் ஆட்சிசெய்து வந்தனர். இறுதியாக மலையாண்டி எத்தலப்ப நாயக்கர், அவரது தம்பி வெங்கிடபதி எத்தலப்பர் ஆகியோர், உடுமலை அருகிலுள்ள தளி பாளையத்தை ஆட்சி செய்தனர்.

1799-இல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் கைது செய்து தூக்கிலிட்ட செய்தி, எத்தலப்ப நாயக்கருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், திப்பு சுல்தானையும், வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டுவரும் நோக்கில், பாளையங்களுக்கு தூதர்களை அனுப்பினர். அந்த வகையில், தஞ்சாவூரில் இருந்து தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் அந்திரை கேதிஷ்.

ஆங்கிலேயருக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட வெள்ளையருக்குப் பாடம் புகட்டவும், அவரை மட்டும் தனியே கைது செய்து தூக்கிலிட்டார் எத்தலப்ப நாயக்கர். திணைக்குளம் கிராமத்தில் அவரைத் தூக்கிலிட்ட அந்த இடம் ‘தூக்குமரத் தோட்டம்’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அங்கு அந்நிரை கோஷுக்கு சமாதியும் உள்ளது.

அதையடுத்து நடைபெற்ற போரில் எத்தலப்பர் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த தளி அரண்மனையும் சூறையாடப்பட்டது.

ஆங்கிலேயரை வென்ற சின்னமலை:


கொங்கு நாட்டில் ஈரோட்டை அடுத்த ஓடாநிலை அருகே கோட்டை கட்டி ஆண்டவர் தீரன் சின்னமலை (1756 -1805). தமிழகத்தில், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து, கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர். பழையகோட்டை பட்டக்காரர் மரபைச் சேர்ந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டர்.

இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் ஒன்றுசேரா வண்ணம் இடையில் பெரும் தடையாக சின்னமலை விளங்கினார் 1782இல், ஐதர் அலியின் மறைவுக்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்து போர் செய்து வந்தார்.

ஒரு காலத்தில் ஹைதர் அலியை எதிர்த்திருந்தபோதும், பொது எதிரியான ஆங்கிலேயரை வீழ்த்துவதற்காக, சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு திப்புவுக்கு ஆதரவாக மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை, சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. பிரான்ஸ் நட்டின் நெப்போலியனிடம் படையுதவி கேட்டு திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில், சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்ப சேர்வையும் இடம் பெற்றிருந்தார்.

1799-இல் நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் போர்க்களத்தில் கொல்லப்பட்ட பின், சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டினார். சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் ‘தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார்’ என்று தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக்கொண்டு, கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய வீரர் தூந்தாஜி வாக், பரமத்தி அப்பாச்சி ஆகியோருடன் இணைந்து 1800ஆம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார் சின்னமலை. ஆனால், முந்தைய நாளே போராளிகள் சிலர் அறிவிப்பின்றி சண்டையைத் தொடங்கியதால் கோவைப் புரட்சி தோல்வியுற்றது.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து பீரங்கிப்படை வந்தது. கோட்டையும் வீழ்ந்தது. சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பி பழனிமலைத் தொடரில் உள்ள கருமலைக்குச் சென்றார். அங்கு அவரை சூழ்ச்சி மூலம் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டுசென்று, போலி விசாரணை நடத்தி, 1805 ஜூலை 31இல் (அன்று ஆடி 18ஆம் நாள்) தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்ப சேர்வையையும் தூக்கிலிடப்பட்டனர்.

இவ்வாறாக, நாட்டுக்கே முன்மாதிரியான போராட்டங்களை நடத்திய பெருமை கொங்குநாட்டுக்கு உண்டு. குறுநில மன்னர்கள், பாளையக்காரர்களின் இந்த வீரம் செறிந்த போராட்டம், ஆங்கிலேயர்களின் பீரங்கிகள், நவீனத் துப்பாக்கிகள் முன்னர் சாரமிழந்தன. அதன் விளைவாகவே ஆங்கிலேய அரசு மேலும் வலுவாக காலூன்றிக் கொண்டது.

இந்தப் புரட்சியாளர்கள் அடைந்த மாபெரும் தோல்வி காரணமாகவே, அடுத்த பல பத்தாண்டுண்டுகளுக்கு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் நிகழவில்லை. 1857இல் நிகழ்ந்த முதல் இந்திய சுதந்திரப் போரின்போது தமிழகம் அமைதியாக இருந்ததும், ஏற்கனவே குறுநில மன்னர்கள் கொடூரமாக நசுக்கப்பட்டு விட்டதால்தான்.

அதன்பிறகு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து, ஆங்கிலேய அரசின் நேரடி காலனி ஆதிக்க ஆட்சி துவங்கியது. 1885இல் காங்கிரஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், சுதந்திரப் போராட்டம் அரசியல் ரீதியான போராட்டமாக வடிவெடுத்தது. 1947 வரையிலான அந்தப் போரிலும் இரு கட்டங்களாக கொங்குநாடு பெரும் பங்களிப்பை நல்கி இருக்கிறது. அதனை அடுத்த பகுதியில் காணலாம்.



  




No comments:

Post a Comment