-பொன்.பாண்டியன்
பகுதி-1
14. நக்கீரர்
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு குகையில் ஒரு பூதம் வாழ்ந்து வந்தது. அதன் பெயர் அண்டாபரணன். அது ஒரு விரதம் மேற்கொண்டு இருந்தது. அஃது என்னவெனில், யார் ஒருவர் சிவத்தியானம் செய்யும்பொழுது இறைவன்மேல் கவனம் செலுத்தாமல் கவனத்தைச் சிதறடிக்கிறார்களோ அவர்களைப் பிடித்து உண்பது என்பதாகும்.
அதிலும் ஒரு சிறு உட்பிரிவு யாதெனில், அவ்வாறு தியானம் வழுவியர்கள் 1000 பேர் சிக்கிய பிறகுதான் அவர்களை ஒட்டுமொத்தமாக உண்பது என்பதாகும். ஏதோ ஒரு யுக்தியைப் பயன்படுத்தி அந்தப் பூதம் இதுவரை 999 பேரைப் பிடித்து விட்டது.
அவர்களை குகையில் அடைத்து விட்டு ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தது அந்தப் பூதம். அந்தவேளையும் வந்தது.
மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். குளக்கரையில் சிவத்தியானத்தில் அமர்ந்தார். அப்போது பூதம் ஓர் இலையைக் கிள்ளி நக்கீரர்மேல் வீசியது. அந்த இலை அப்படியே காற்றில் தவழ்ந்துபோய் நக்கீரரை உரசிச்சென்று குளத்தில் விழுந்தது. எப்படி விழுந்தது தெரியுமா? பாதிப்பகுதி நீரிலும் மீதிப்பகுதி நிலத்திலும் விழுந்தது.
சிறிதுநேரத்தில் நீரில் விழுந்த பகுதி மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி சிறு பறவையாகவும் மாறியது. இருவேறு உருவங்களும் ஒட்டிக்கொண்டிருந்ததால் அந்த உயிர் வானத்தில் பறக்கவும் இயலாமல் நீரில் நீந்தவும் இயலாமல் தத்தளித்தது.
சிவத்தியானம் சிதறிய நக்கீரர் அதன் நிலைகண்டு மனம் இரங்கினார். மேலும் அந்த நிகழ்வை வாழ்க்கையோடு இணைத்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். இதுதான் சமயம் என்று பூதம் அவரைப் பிடித்துவந்து குகையில் அடைத்தது.
அதுவரையில் குகையில் சொகுசாக இருந்த மற்ற தவசிகள் மிகுந்த வருத்தம் அடைத்தனர். ஏனெனில் நக்கீரரோடு எண்ணிக்கை 1000 ஆனதே. பூதமானது மிகுந்த ஆச்சாரம் உடையது. "நீராடிவிட்டு வந்து உங்களை உட்கொள்ளுகிறேன் என்று கூறி குகையை அடைத்துவிட்டுச் சென்றது. எல்லோரும் நக்கீரரிடம் முறையிட்டனர். நக்கீரர் உடனே,
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
-என்று சில காப்புச்செய்யுள்களைப் பாடி 'திருமுருகாற்றுப்படை' என்னும் நூலை இயற்றிப் பாடி முருகப் பெருமானை மனமுருகி வேண்டினார். அவர்தம் தமிழுக்கு மகிழ்ந்து முருகப் பெருமான் தோன்றி அந்தப் பூதத்தை வதம்செய்து தவசிகளை விடுவித்தார்.
தவசிகளும் இனி கவனம் சிதறாமல் தியானம் செய்வோம் என்று மனம் திருந்தி தம்வழி ஏகினர். இந்த நிகழ்வால் நமக்குக் கிடைத்தது திருமுருகாற்றுப்படை என்னும் தமிழ்ப் பொக்கிஷம்.
அண்டாபரணனுக்கு கற்கிமுகி என்றும் பெயர் உண்டு. அவனை சம்ஹாரம் செய்து அவனிடமிருந்து சான்றோரை விடுவிக்க நக்கீரர் முருகனைக் குறித்து 'திருமுருகாற்றுப்படை' பாடினார். அதுவே சங்க இலக்கியத்தின் 'பத்துப்பாட்டில்' முதலாவதாக விளங்குகிறது. இதில் நக்கீரர் முருகனை குறிஞ்சி நிலத்துக்கு மட்டும் உரியவனாகக் காட்டாமல் பாலைநிலம் தவிர்த்து நால்வகை நிலங்களுக்கும் உரியவனாகக் காட்டியுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் திருஆவினன்குடி எனப்படும் பழனி மற்றும் குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணிகை குறிஞ்சிநிலமாகும். பழமுதிர்ச்சோலை முல்லை நிலமாகும்.
திருவேரகம் எனப்படும் சுவாமிமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியன மருதநிலமாகும். திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் நெய்தல் நிலமாகும். குறிஞ்சி முல்லைகளின் திரிபு
பாலை என்பதை நாம் அறிவோம். ஆக ஐவகை நிலங்களிலும் முருகன் இறைவனாக வணங்கப் பாடுகின்றார்.
வேதமும், “பஞ்சக்ருஷி, பஞ்சக் குஷ்ட்யாந்யா உஷவா: பத்யா ஜனா:னாம்” ( ரிக் lll 24-3) என்கிறது; பஞ்சக்ஷிதீ எனவும் ஐவகை நிலப் பாகுபாடு மற்றும் மக்களையும் குறிப்பிடுகிறது.
திருமுருகாற்றுப்படை முருகனின் தோற்றத்தையும் அவனின் ஆறுமுகங்களின் அழகையும்; பன்னிரு கரங்களின் அருட்செயல்களையும் விவரிக்கிறது.
செய்யன் சிவந்த காவிநிற ஆடையை அணிந்திருக்கின்ற முருகப் பெருமானை ஐவகை நிலத்து மக்களும் தத்தமது வழக்கத்தின்படி வழிபட்டதையும் உரைக்கிறது.
நமது தேசத்தின் வடஎல்லையாகிய இமயத்தில் தோன்றிய முருகன் தமிழ் ல்லவன்; வேதம் ஓதும் பிராமணர்களுக்குப் பிரியமான சுப்ரமண்யன்; குறிஞ்சி நிலக் குறவர்களின் தலைவன். உலக நன்மைக்காக வேதங்களின் மந்திர விதிகள் மாறாமல் முறைமைகளிலிருந்து வழுவாத அந்தணர்கள் நடத்தும் வேள்விகளை நிறைவேற்றித் தருபவன் முருகன் என்றெல்லாம் நக்கீரர் போற்றுகிறார்.
முருகனடியார்களை முருகனிடம் ஆற்றுப்படுத்தும் இந்நூல் மொத்தம் 317 அடிகள் கொண்டது. இந்நூல் மூலமாக சங்ககாலத்துத் தமிழ்மக்கள் வேதநெறி வழுவாது வாழ்ந்திருக்கின்றனர் என்பதும் புலனாகின்றது.
திருமுருகாற்றுப்படை பின்னாளில் சைவத் திருமுறைகளில் (11-ஆம் திருமுறை) இணைக்கப்பட்டது.
'முருக' என்ற தமிழ்ச் சொல்லுக்கு இளமை என்று பொருளாகும். 'குமர' என்ற வடமொழிச் சொல்லுக்கும் இளமை என்றே பொருளாகும். அப்படியானால்,
முருக= ம்+உ+ர்+உ+க்+அ
குமர = க் +உ+ம்+அ+ர்+அ
இவ்விரு மொழிகளிலும் அ, உ, க், ம், ர் என ஒரே எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இடங்கள் மாறி இருந்தாலும்கூட ஒரே பொருளைத் தருகின்றன. எனவே இரு மொழிகளும் அடிப்படையில் ஒன்றாகவே தோன்றுகின்றன. ஆகவே முருகன் இரு மொழிகளுக்கும் ஒரு பெருந்தெய்வமாவன். இப்படிப் பலவிதங்களில் ஒத்திருக்கும் தமிழும் வடமொழியும் இணைந்து நமது தேசத்தையும் கலாச்சாரத்தையும்;
பண்பாட்டையும் ஸனாதன ஹிந்து தர்மத்தையும் காத்து நிற்பதில் முன்னணியில் உள்ளன.
வடமொழி என்றால் வடக்குப் பகுதியில் பேசும் மொழி எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
'வடம்' என்ற சொல் இணைப்பு- சங்கிலி- விழுது- கயிறு- சேர்த்தல்-தாங்குதல் என்றெல்லாம் பொருள்படும். விழுதுகள் கொண்ட ஆலமரத்திற்கு 'வடா விருக்ஷம்' என்ற பெயருண்டு.
வடமொழியாகிய 'ஸம்ஸ்க்ருதம்' இமயம் முதல் குமரி வரையிலான மக்களை இணைக்கும் இணைப்பு மொழியாதலால் அது வடமொழி எனப்படுகிறது.
' ஸம்ஸ்க்ருதம்' என்றால் செம்மொழி எனப்படும். அது நூல்வழக்கு-இலக்கிய வழக்கு- மேடை வழக்கு- கற்றோர் வழக்கு ஆகும். 'பிராக்ருதம்' என்றால் மக்கள் வழக்கு- பெரு வழக்கு-பேச்சு வழக்கு ஆகும்.
நமது ஒவ்வொரு மொழியிலும் ஸம்ஸ்க்ருதம்- ப்ராக்ருதம் என உண்டு. 'வாருங்கள்' -இது ஸம்ஸ்க்ருதம். 'வாங்க' இது ப்ராக்ருதம். காற்று-ஸம்ஸ்க்ருதம்; காத்து-ப்ராக்ருதம்; முகம்- ஸம்ஸ்க்ருதம்; மூஞ்சி-ப்ராக்ருதம் என அந்தத் தன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் வடமொழி நமது பாரத தேசத்தின் இணைப்பு மொழியானதால் வெவ்வேறு மாநிலத்து மக்கள்தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் நூல்வழக்காக- ஸம்ஸ்க்ருதமாக மட்டும் உள்ளது. அதனால் வடமொழிக்கு ' ஸம்ஸ்க்ருதம்' என்ற பெயர் ஏற்பட்டது.
மேலும் நமது தேசம் ஆரிய தேசம் ஆனதால், தேசம் முழுதும் பரவியிருந்த அம்மொழி 'ஆரியம்' எனப்பட்டது. அதனால் ஆன்மிகம், அறிவியல், நுண்கலைகள், தத்துவம் ஆகியவற்றை அவரவர் மாநில மொழிகளிலும் இயற்றினர்; ஸம்ஸ்க்ருதத்திலும் இயற்றிவைத்துப் பாதுகாத்தனர்.
தமிழகத்திலும் கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியன மாநிலத்தவர்க்காகத் தமிழிலும், பிற மாநிலத்தவர்க்காக ஸம்ஸ்க்ருதத்திலும் பொறித்துவைத்து த்தேசியத்தைக் காத்தனர்.
இதை அறியாத பேதை குயக்கொண்டான் என்பவன் தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவர் நக்கீரர் முன்னிலையில் ஆரியத்தை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் பேசினான். இரண்டில் எதைத் தாழ்த்தியிருந்தாலும் நக்கீரருக்கு சினம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். அவன் தமிழைத் தாழ்த்திப் பேசியதும் வந்ததே கோபம் நக்கீரருக்கு.
உடனே அவன்மீது தமிழில் அறம் பாடிவிட்டார். அவ்வாறு அறம் பாடியதால் குயக்கொண்டான் அங்கேயே வீழ்ந்து இறந்து போனான்.
பின்னர் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும், அவனுடைய அறியாமை குறித்து இரங்கியும் மீண்டும் தமிழ்ப்பா பாடி அவனை உயிர்ப்பித்தார். இவ்வாறு தமிழின் தெய்வீக ஆற்றலை உலகறியச்செய்தார் அருந்தவப்புலவர் நக்கீரர்.
நக்கீரர் தமிழின்பால் அளவிறந்த பற்றுக் கொண்டிருந்தார். வந்திருப்பது இறையென்று அறிந்திருந்தும், பாட்டின் சொல்லில் குறையிருக்கலாம், ஆனால் பொருளில் குறையிருக்கலாகாது என உண்மைக்காக வாதாடினார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என, தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். இறைவனார் நடத்திய சோதனையில் இறைவனே வியக்கும் வண்ணம் தேர்ச்சி அடைந்தார்.
நக்கீரர் இறைநம்பிக்கை நிரம்ப உடையவர். மன்னரை வாழ்த்திப் பாடும்போது இறைவனோடு இணைத்துப் பாடுவார். அது ஹிந்து ஸநாதன தர்மத்தின் ஸம்பிரதாய மரபும் ஆகும்.
நக்கீரர் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சியநன்மாறனை புறநானூறு 56-இல் புகழ்ந்து பாடும்போது, சினத்தால் மணிமிடற்றோனாகிய சிவனாகவும்; வலிமையில் பனைமரக்கொடியையும் ஏர்க்கலப்பைப் படையையும் உடைய கடலில் தோன்றும் அழகிய சங்கின் வெண்நிறத்தை உடைய பலராமனைப் போன்றும்; மனம்கவரும் புகழில் கருடக்கொடியுடைய திருமாலைப் போன்றும்; வெற்றி காண்பதில் என்றும் தோல்வி என்பதையே காணாத வேலை உடையவனும் 'பிணிமுகம்' என்னும் ஆண்மயில்மீது அமர்ந்து வருபவனாகிய முருகப்பெருமானைப் போன்றும் விளங்குகிறாய் என்று புகழ்கிறார்.
இப்பாடலை உற்று நோக்கும்போது சில குறிப்புகளை தேசிய சிந்தனை அடிப்படையில் காணலாம். சிவபுராணம், ஸ்கந்தபுராணக் குறிப்புகள்; சைவ- வைணவ பேதமின்மை; பலராம-கிருஷ்ணர்களைக் குறிப்பிட்டுப் புகழ்வதன்மூலம் வடநாடு-தென்னாடு ஒற்றுமை என தேசிய ஒருமைப்பாட்டைப் பதிவிடுகிறது அந்தப் பாடல்.
அதிலேயே 189-ஆவது பாடல் அரசன்- ஆண்டி; கற்றான்– கல்லாதான் யாவரும் உண்பது- நாழி உடுப்பது- இரண்டு என்று கூறி, உண்பதுநாழி; உடுப்பது நான்குமுழம் என்று ஒளவையாருக்கும், ஈத்துவக்கும் இன்பம் என்ற திருவள்ளுவருக்கும் முன்னோடியாக விளங்குகிறார். செல்வத்துப்பயனே ஈதல் (தானாயலக்ஷ்மி) என்னும் வேதநெறியை விளக்குகிறார்.
நக்கீரர் வேளாப்பார்ப்பனர் மரபைச் சார்ந்தவர். அதாவது சங்கினால் ஆபரணங்கள் செய்யும் விஸ்வப்பிராம்மணர் பிரிவைச் சேர்ந்தவர்
என்பர். இவர்தம் தந்தையார் மதுரைக்கணக்காயனார் ஆசிரியர் ஆவார். நக்கீரருடைய புதல்வரின் பெயர் கீரங்கொற்றனார் என்பதாகும்.
'கீர' என்னும் சொல் வடமொழியில் கீர-க்ருத- க்ருதம்- ஸம்ஸ்க்ருதம்-ப்ராக்ருதம் என்று பரிணாமம் பெற்றது; தமிழில் கீர- கிள-கிளவி-கிளத்தல் என்று பரிணாமம் பெற்றது. கீரம் என்றால் பேசும் அதாவது கிளத்தல்திறன் பெற்ற கிள்ளை- கிளிஎனலாகும்.
' நக்கீரர்' என்னும் பெயரின் பொருள் நன்மைதரும் மொழிகளைப் பேசுபவர் என்றும், மொழியை நன்றாகப் பேசுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். அவரது இயற்பெயரே காரணச் சிறப்புப்பெயராகி பண்புப்பெயராகிப் பின்னர் பட்டப்பெயராகவும் நிலைபெற்றுவிட்டது.
நக்கீரர் மதுரை தமிழ்ச் சங்கத்தில் அதாவது கடைச்சங்கம் எனப்படும் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைமைப்புலவராக இருந்த காலம் இயற்கைப்பேரிடர் ஏதும் நிகழாத அமைதியான பொற்காலம். அப்போதுதான்எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினெண் மேல்கணக்கு என்ற நிலையில் தமிழிலக்கிய உலகில் பரிணமித்து ஒளிவீசின.
பதினெண் மேல்கணக்கு நூல்கள் யாவும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்குவித புருஷார்த்தங்களுக்கும், நால்வேத நெறிகளுக்கும் அரணாக விளங்கி, ஐவகை நிலத்து மக்களின் பலவிதமான நாகரிகங்களையும் வெளிக்காட்டுகின்றன.
நக்கீரரின் படைப்புகள்:
குறுந்தொகை- 7,
நற்றிணை- 7,
அகநானூறு- 17,
புறநானூறு- 2,
பத்துப்பாட்டில் முதலாவதாக திருமுருகாற்றுப்படை, ஏழாவதாக நெடுநல்வாடை என நூல்கள் -2.
இவை, தமிழின் பெருமையையும் நக்கீரரின் புலமைத்திறத்தையும் பறைசாற்றுகின்றன. நெடுநல்வாடை, வானியல்-வாஸ்து- ஆன்மிகம்- வீரம் குறித்த கருத்துக்களைக் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாது, வருத்தந்தரும் வாடைக்காலத்தை மனக்கண்ணில் எழிலும் இன்பமும் நிறைந்த ஒரு சிறிய திரைக்காட்சி போல உருவாக்கியுள்ளார். நக்கீரர் தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்பது மிகையாகாது.
(தொடர்கிறது)
No comments:
Post a Comment