-பொன்.பாண்டியன்
பகுதி-114. நக்கீரர்
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்
திருப்பரங்குன்றத்திற்கு அருகாமையில் உள்ள
ஒரு குகையில் ஒரு
பூதம் வாழ்ந்து வந்தது. அதன் பெயர் அண்டாபரணன். அது ஒரு விரதம் மேற்கொண்டு இருந்தது. அஃது என்னவெனில், யார் ஒருவர் சிவத்தியானம் செய்யும்பொழுது இறைவன்மேல் கவனம் செலுத்தாமல் கவனத்தைச் சிதறடிக்கிறார்களோ அவர்களைப் பிடித்து உண்பது என்பதாகும்.
அதிலும் ஒரு சிறு உட்பிரிவு யாதெனில், அவ்வாறு தியானம் வழுவியர்கள் 1000 பேர் சிக்கிய பிறகுதான் அவர்களை ஒட்டுமொத்தமாக உண்பது என்பதாகும். ஏதோ ஒரு யுக்தியைப் பயன்படுத்தி அந்தப் பூதம் இதுவரை 999 பேரைப் பிடித்து விட்டது.
அவர்களை
குகையில் அடைத்து விட்டு ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தது அந்தப்
பூதம். அந்தவேளையும்
வந்தது.
மதுரை
தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். குளக்கரையில்
சிவத்தியானத்தில் அமர்ந்தார். அப்போது பூதம் ஓர் இலையைக் கிள்ளி நக்கீரர்மேல்
வீசியது. அந்த
இலை அப்படியே காற்றில் தவழ்ந்துபோய் நக்கீரரை உரசிச்சென்று குளத்தில் விழுந்தது. எப்படி
விழுந்தது தெரியுமா? பாதிப்பகுதி நீரிலும் மீதிப்பகுதி நிலத்திலும்
விழுந்தது.
சிறிதுநேரத்தில்
நீரில் விழுந்த பகுதி மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி சிறு பறவையாகவும் மாறியது. இருவேறு உருவங்களும் ஒட்டிக்கொண்டிருந்ததால்
அந்த உயிர் வானத்தில் பறக்கவும் இயலாமல் நீரில் நீந்தவும் இயலாமல் தத்தளித்தது.
சிவத்தியானம்
சிதறிய நக்கீரர் அதன் நிலைகண்டு மனம் இரங்கினார். மேலும் அந்த நிகழ்வை வாழ்க்கையோடு
இணைத்துச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். இதுதான் சமயம் என்று பூதம்
அவரைப் பிடித்துவந்து குகையில் அடைத்தது.
அதுவரையில்
குகையில் சொகுசாக இருந்த மற்ற தவசிகள் மிகுந்த வருத்தம் அடைத்தனர். ஏனெனில்
நக்கீரரோடு எண்ணிக்கை 1000 ஆனதே. பூதமானது மிகுந்த ஆச்சாரம்
உடையது. "நீராடிவிட்டு வந்து உங்களை
உட்கொள்ளுகிறேன் என்று கூறி குகையை அடைத்துவிட்டுச் சென்றது.
எல்லோரும் நக்கீரரிடம்
முறையிட்டனர். நக்கீரர் உடனே,
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
-என்று
சில காப்புச்செய்யுள்களைப் பாடி 'திருமுருகாற்றுப்படை' என்னும்
நூலை இயற்றிப் பாடி முருகப் பெருமானை மனமுருகி வேண்டினார். அவர்தம் தமிழுக்கு மகிழ்ந்து
முருகப் பெருமான் தோன்றி அந்தப் பூதத்தை வதம்செய்து தவசிகளை விடுவித்தார்.