-சேக்கிழான் இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனிநபராயினும், தொழில் நிறுவனங்களாயினும், தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் சிறப்பாக உயரவும், தங்கள் தயாரிப்பின் அடிப்படையைப் பாதுகாக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில், அதிக முதலீட்டு செய்யத் திறனுள்ள எவரும், எந்த ஒரு உற்பத்திப் பொருளையும் எளிதாக நகலெடுத்துத் தயாரித்துவிட முடியும். அதனால், அந்தக் குறிப்பிட்ட பொருளை முதன்முதலில் கண்டுபிடித்தவர் அல்லது தயாரித்தவர் எதிர்பாராத நஷ்டத்தை அடைய நேரிடும்.
இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கவே,
அறிவுசார் சொத்துரிமை (Intellectual Prortey Right) என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டினுள்ளும், பல நாடுகளுக்கிடையேயும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான படைப்புக்கும் தனிநபரோ, ஒரு நிறுவனமோ உரிமையைப் பதிவு செய்யலாம். அந்த உரிமை உள்ள தனி நபர் அல்லது நிறுவனத்தின் படைப்பு அல்லது பொருளைப் பயன்படுத்துவோர், அதற்கு உரிமைத் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கும். இதுவே அறிவுசார் சொத்துரிமைக்கான எளிய விளக்கம்.
இந்த அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் இந்தியாவில் இன்னமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. உலகமய பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைக்கு பிரதான இடம் இருப்பதால், அண்மைக்காலமாகத் தான் இந்தியாவில் இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.
உலக அளவில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருவனவாக அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமங்கள் உள்ளன. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் உடனடியாக காப்புரிமம் பெறுவது அந்த நாடுகளில் சுமார் 100 ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சாதாரண செயலிக்கும் கூட காப்புரிமம் பெறுவது அங்கு ஒரு வர்த்தக நடவடிக்கையாக உள்ளது. அதன்மூலமாக, அந்தச் செயலியைப் பயன்படுத்தும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான உரிமைத் தொகையை அளிக்கின்றன. இது ஓர் உதாரணம் மட்டுமே.
இயந்திரங்கள், ஆயுதங்கள், சாதனங்கள், மருந்துப் பொருட்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி- ஆராய்ச்சி நிறுவனங்களால் உருவாக்கப்படும்போது, அதனால் அந்தக் கல்வி நிறுவனமும், சார்ந்த நாடும் காப்புரிமங்களால் லாபம் அடைகின்றன. இந்த விஷயத்தில் நமது நாட்டின் கல்வி- ஆராய்ச்சி அமைப்புகள் மிகவும் பின்தங்கி உள்ளன. நமது அரசு 1990களுக்குப் பிறகே இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்தது; அப்போதுதான் அதற்கான சட்டங்களும் வடிவமைக்கப்பட்டன.