17/07/2021

எப்பிறப்பில் காண்பேன் இனி?

-இரா.மாது


பேரா. சோ.சத்தியசீலன்
(1933 ஏப். 14  -  2021 ஜூலை 9)


(தேசிய சிந்தனைக் கழகத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்த 
அமரர் பேரா. சோ.சத்தியசீலன் அவர்களுக்கு அஞ்சலி- 1)
 

நீண்ட நெடிய பராம்பரியத்தின் நிறைவான கனி மரம் ஒன்று சாய்ந்தது. குரு பரம்பரையின் தெளிவான எடுத்துக் காட்டாய் விளங்கிய பெருமகன் நம் கண்ணை விட்டு மறைந்தார். குருவிற்கேற்ற சீடராய்ப் பிறர் நலன் குறித்து வாழ்ந்த நயனுடையாளர் இவ்வுலகு வாழ்வு நீத்தார். நற்றமிழால் நாளும் தொண்டு செய்த நாவீறு நம்மைத் தவிக்கவிட்டுப் பறந்து சென்றுவிட்டது. "டேய், நான் யார் பேச்சைக் கேட்டும் அழுததில்லை. உன் கர்ணன் பேச்சைக் கேட்டு அழுதேன் அடா!" என்று பேராசிரியர் அ.ச.ஞா.போற்றிய பெருந்தகை எங்கு சென்றார்?

1984 ஆம் வருடம், ஜனவரி மாதம் 17 ஆம் தேதி என் தந்தையார் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு தத்தளித்த நின்ற எம் குடும்பத்தைக் காத்து நின்றவர் அண்ணன் நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள். அன்று என் கரம் பற்றி "நானிருக்கிறேன்" என்றார். அவர் மறைவு வரை பற்றிய என் கரத்தை அவர் விடவில்லை. 'பற்றுக அப்பற்றான் பற்றினை' என்பது போல அவர் கரம் பற்றிய நானும் விடவில்லை. அவர் விடவில்லை என்பதைக் காட்டிலும், நானும் குரங்குக் குட்டியைப்போல் அவரைப் பிடித்துக் கொண்டேன் என்பதே உண்மை.
 

1984 ஆம் வருடம் ஈரோட்டிற்கு அருகே அமைந்துள்ள பவானி, சங்கமேஸ்வரர் கோயிலில் சக்தி சர்க்கரை ஆலையின் முதலாளி அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கட்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்திற்கான பாராட்டு விழாவில் சத்தி அண்ணனுக்கு வாழ்த்துரை. என்னையும் உடன் அழைத்துச் செல்கிறார். அங்கிருந்த கள்ளிப்பட்டி திரு. கோதண்டராம கவுண்டர் மூலமாக நான் அருட்செல்வருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறேன். "நம்ம திருச்சி இராதாகிருஷ்ணன் மகனா!" என்று என்னை அரவணைத்துக் கொண்டு, தன் ஆலையில் வடிப்பகப் பிரிவில் தட்டச்சு செய்யும் வேலையை வழங்கினார். மனநிறைவோடு சத்தி அண்ணனை அன்று கண்டேன்.

1994 அண்ணனுக்கு மணிவிழா நடைபெறுகின்றது. அதற்காக திருச்சி வந்தேன். "போதுமடா! அங்கு வேலை இங்கு வந்துவிடு. பார்த்துக் கொள்கிறேன்" என்கிறார். ஏது மறுபேச்சு? அப்போதுதான் முதுகலை தமிழ் படித்திருந்த எனக்கு, என் தந்தையின் நெருங்கிய தோழரும், திருச்சி, தேசியக் கல்லூரியின் செயலருமான வித்யா சேவாரத்தினம் ஆடிட்டர் சந்தானம் அவர்கள், மகாத்மா காந்தி பள்ளியில் தமிழாசிரியர் பணியினை வழங்கினார். 1997 ஆம் ஆண்டு இறுதியில் அண்ணன் மூலமாக அரசு உதவி பெறுகின்ற உருமு தனலட்சுமி வித்யாலய மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தேன்.

பல இளந்தலைமுறைச் சேர்ந்த பேச்சாளர்கள் எல்லாம் சிறந்த இடம் பெற்றிருந்த காலத்தில் ஏறத்தாழ என்னுடைய 33 வயதில் மேடையில் நான் முழுநேரமாகப் பேசுவதற்கு அடியெடுத்து வைக்கிறேன். வலிய வந்து என் கரம் பற்றி இலக்கிய மேடைகளை எனக்குக் காட்டத் தொடங்கினார். ஆயிரக் கணக்கான மேடைகளை அவர்மூலம் கண்டேன். என் தந்தையினுடைய பேரும் சத்தி அண்ணனின் சிஷ்யன் என்பதும் என்னைப் பல இன்னல்களிலிருந்து காத்தது. தகுதியில்லாத என்னைத் தகுதியுடையவனாக மாற்றியவர் அவர்.

பட்டிமண்டபங்களில் என்னை எப்போதும் ஆய்வுரைத் திலகம் அறிவொளி அவர்களுக்குப் பிறகே பேசச் சொல்வார். பேச்சுலகின் மணிமுடியில் இருந்த அவர் சபையைத் தன் வசம் வைத்துவிட்ட பிறகு என்னால் எப்படிப் பேச இயலும்? சத்தி அண்ணனிடம் சொல்வேன், "அண்ணா! என்னை அறிவொளி அண்ணன் கட்சியில் போடுங்களேன். என்னால் அவர் பேசிய பிறகு பேச முடியவில்லை" என்பேன். "பேசுடா! அப்பதான் நீ வளர்வாய். அவரை வெல்ல வேண்டும் என்று கருதிப் பேசாதே! அவருடன் போட்டி போட முடியும் என்று நிருபித்து விடு" என்பார். இன்று நான் ஏதேனும் மேடைகளில் பேசுகிறேன் என்றால் என்னை வழிநடத்திய அண்ணன். அவர் இன்று என்னிடம் பேசாது சென்று விட்டார்.

இன்னும் எத்தனையோ சொல்ல இருக்கிறது. சொல்லி முடித்து விடுவாயா என்றால் 'கடலினைக் கண்டோம் என்பார் யாவரே முடியக் கண்டார்' என்பது போல அக்கருணைக் கடலின் ஆழ்ந்து அகன்ற நுண்ணியத் திறத்தில் நான் கரையில் நின்று அநுபவித்த பலவற்றில் சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன்.

இனி அண்ணனோடு வாழ்ந்த வாழ்க்கையை முகந்து கொண்டுவந்து தர வேண்டும். என் கையில் இருப்பதோ சிறிய சொம்பு. முயல்வேன். முற்றிப் பழுத்த கனியொன்று விதையாய் மண்மேல் விழுந்திருக்கிறது. நீர்ப் பாய்ச்சி, உரமிட்டு, வளர்த்து, பல்லுயிர்களும் பலன் பெற நல்ல பல சந்ததியினரை விட்டுச் சென்றிருக்கிறது. வளர்த்தெடுப்போம் என்று உறுதியுடையேன் நான்.

இராமனைப் பற்றிக் கூறும்போது 'கம்பன் தாய் கையில் வளர்ந்திலன் தவத்தால் வளர்த்தது கேகயன் மடந்தை' என்பான். அதுபோல, என்னை என் வளர்ச்சியை இருந்து காண வேண்டிய என் தந்தை என் கல்லூரிப் பருவம் முடிந்த நிலையில் மறைந்தார். அதன்பிறகு இந்த மாது தந்தை கையில் வளர்ந்திலன் வளர்த்தது அண்ணன் சத்தியசீலன்.

அவரை நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் வர, சென்று விட்டார். உயிருள்ளவரை நான் அழுது கொண்டேயிருக்கப் போகிறேன்.


குறிப்பு: 



திரு. இரா.மாது, திருச்சியில் வசிக்கும் பிரபல தமிழ் மேடைப் பேச்சாளர்; ஆசிரியர்;  தேசிய சிந்தனைக்கழகத்தின் நிறுவனரான அமரர் திரு. பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணனின் புதல்வர். அவரது முகநூல் பதிவு இது.


***
 பேரா. சோ.சத்தியசீலன் காலமானார்

(தினமணி - 10.07.2021 செய்தி)


திருச்சி, ஜூலை 10:
மூத்த தமிழறிஞரும், தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான ‘சொல்லின் செல்வர்' பேராசிரியர் சோ. சத்தியசீலன் (89) வயது முதிர்வால் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) நள்ளிரவு காலமானார்.

திருச்சியின் அடையாளமாகவும் விளங்கிய இவர், பள்ளி ஆசிரியராக தனது தமிழ் பணியைத் தொடங்கியவர். சென்னை பல்கலைக்கழகத்தில் வள்ளலார் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்று, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். பின்னர் உருமு தனலட்சுமி கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சத்தியசீலன், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்ற மேடைகளில் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பட்டிமன்ற நடுவராக இருந்தவர்.
 
அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், குவைத், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் பணியாற்றியவர். வள்ளலார் குறித்து இவர் பேசிய தொகுப்பு 6 ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளது. இதுமட்டுமன்றி, ஆங்கிலத்தில் மூன்று நூல்கள், தமிழ் மொழியில் 40 நூல்களை எழுதியுள்ளார். 

அவர்கள் இப்படி-நீங்கள் எப்படி?, இலக்கியம் பேசும் இலக்கியம் (தன்வரலாறு), திருக்குறள் சிந்தனை முழக்கம், கண்டறியாதன கண்டேன், அழைக்கிறது அமெரிக்கா ஆகிய இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பல்வேறு முனைவர் பட்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர் இவர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக திட்டக் குழு உறுப்பினராகவும் சத்தியசீலன் பணியாற்றியுள்ளார்.
திருச்சி மாவட்ட நலப்பணிகள் குழு, கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளி, உருமு தனலட்சுமி பள்ளி உள்ளிட்டவற்றில் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தவர். குன்றக்குடி அடிகளாரிடம் ‘நாவுக்கரசர்’ பட்டத்தைப் பெற்றவர்.
 
தமிழக அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் விருதுகளைப் பெற்றவர். மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் நட்புப் பாராட்டியவர். இலக்கிய அமைப்புகளிடம் இருந்து கம்பன் காவலர் விருது, கம்பன் விருது, சடையப்ப வள்ளல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

பல்வேறு தரப்பினர் அஞ்சலி: 

மறைந்த சத்தியசீலன் உடலுக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி என்.சிவா, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சிவக்கொழுந்து, திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் வனிதா, தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி சேதுராமன் பிள்ளை காலனியில் குடும்பத்துடன் வசித்து, மறைந்த சத்தியசீலனுக்கு,  மனைவி தனபாக்கியம், மகள் சித்ரா, மருமகன் திருவள்ளுவன் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனர். சனிக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, தென்னூர் உழவர்சந்தை அருகிலுள்ள மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 தொடர்புக்கு: 98424-10733, 96554-97862.





No comments:

Post a Comment