17/07/2021

இயற்கையும் வழிபாடும்...

-திருநின்றவூர் இரவிக்குமார்


கரையான் புற்று:
அறிய இயலாத இயற்கையின் அதிசயம்

1. புற்றும் தெய்வமும்


அண்மைச் செய்தி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மேற்கூரை எரிந்தது; விசாரணை தொடக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டு அம்மன் என்று சொன்னால் தெரியாதவர்கள் குறைவு. கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் நிகழும் கொடைவிழாவுக்கு மாவட்ட அளவில் விடுமுறை விடுவார்கள்.

ஆனால் 1982-இல் அந்தக் கோயில் மாசி கொடைவிழாவின்போது கிறிஸ்தவர்கள் இந்துப் பெண்களை கடற்கரையில் மானபங்கம் செய்தனர். இதையொட்டி ஏற்பட்ட கலவரத்தினால் அது நாடு முழுவதும் தெரியலாயிற்று.

கோயில் பின்னணி

மண்டைக்காட்டு அம்மன் இன்று பகவதியாக வழிபடப்படுகிறாள். பகவதி என்பது துர்க்கையைக் குறிக்க கேரளத்தில் பயன்படுத்தப்படும் பெயர். கன்னியாகுமரி பகவதி முதல், மேற்குக்கரை ஓரமாக நூற்றுக்கணக்கான பகவதி ஆலயங்கள் உண்டு.

மற்ற பகவதி ஆலயங்களில் துர்க்கையின் சிலை அமைந்திருக்கும். மண்டைக்காட்டு பகவதியின் ஆலயத்தில் உள்ள முக்கியமான வேறுபாடு- இங்கு உள்ளது ஒரு சிதில் புற்று (மண்ணுக்குள் வாழும் கரையானின் புற்று) என்பதுதான். இருபது அடி உயரமும் இரு சிகரங்களும் கொண்ட இந்த மாபெரும் புற்று மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்மேல் பகவதியின் முகம் பதிக்கப்பட்டு அம்மனாக வழிபடப்படுகிறது.

புவியியலும் அறிவியலும்

நெல்லை மாவட்டம்- நாங்குநேரி முதல் குமரி மாவட்டம்- கருங்கல் வரையிலான பகுதி செம்மண் நிலம். இப்பகுதியில் அன்றுமின்றும் சிதல் புற்றுகள் மிக அதிகம். மிகப்பெரிய கூடுகளைக் கட்டும் சிதல்கள் இவை. மண்ணுக்கு அடியில் முப்பது அடி ஆழம் வரை இவை வேரோடிச் சென்றிருக்கும். மண்ணுக்கு மேல் முப்பது அடி வரை கூம்பாக வளரும்.

இப்படிப்பட்ட பெரிய சிதறல்கள் பொதுவாக பெரும் காடாக இருந்து, பின்னர் பாலைவனமாக ஆன நிலங்களில் உருவாக்கக் கூடியவை. ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற புற்றுகள் உண்டு. பெரிய மரங்கள் விழுந்து மண்ணுக்குள் போய்விட்டு இருப்பதால் அவற்றை உண்ணும் சிதல்கள் உருவாகி வந்திருக்கின்றன.

அறிவியலும் உயிரியலும்

புற்று எப்படி தெய்வமாகிறது?

இயற்கையின் பயங்கரம், மனிதன் புரிந்துகொள்ள முடியாத மகத்துவம் வெளிப்படும் இடங்களை தெய்வமாக வழிபடுவது ஒருவகை ஆன்மிக நிலையே. அதை மூட நம்பிக்கை என்று மூடர்கள் சொல்லலாம்.

சிதல் புற்றுகள் இன்றும் அறிவியலால் விளங்கிக்கொள்ள முடியாத பெரும் மர்மமாக நீடிக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள சில சிதல் புற்றுக்கள் மூவாயிரம் வருடம் பழையவை; நூறு அடி ஆழம் கொண்டவை; இருநூறு அடி வரை உயரம் கொண்டவை; இன்றும் வாழ்பவை. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

உயிரியலும் பொறியியலும்


அவற்றின் உள்ளே உள்ள கட்டட அமைப்பு மிகவும் சிக்கலானது. உள்ளே காற்றுப் போக வழிகள் உள்ளன. போகவும் வரவும் தனித்தனிப் பாதைகள். அவற்றின் பொறியியலை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அதிலிருந்து பல நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.

அந்த சிதல் புற்றுகளைக் கட்டிய சிதல்கள் ஒருவார காலம் மட்டுமே உயிர் வாழ்பவை. அவற்றின் மூளை மிகவும் சிறியது. ஒரு தனிச் சிதல் அந்தக் கூட்டைப் பார்க்கவோ, உணரவோ முடியாது. அப்படி என்றால், அந்தச் சிதல் புற்றின் வடிவமும், அதன் பொறியியல் நுட்பங்களும் எங்கே இருக்கின்றன?

உயிரியலின் உன்னதம்


அவை சிதல் என்னும் உயிரின் ‘கூட்டு மனத்தில்’ உள்ளன. அவற்றுக்கு தனித்தனியாக ஒன்றும் தெரியாது. கூட்டாக அவற்றுக்கு இருக்கும் அறிவு பிரம்மாண்டமானது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்ற அனைத்துக்கும் தனி மனம் இல்லை. ஆனால் கூட்டாக மிகப் பெரிய மனம் உள்ளது. நாம் ஒரு பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தால், அவை அந்த மருந்தைப் புரிந்துகொண்டு, அதற்கு எதிராக தங்களை மாற்றிக் கொள்வது அப்படித்தான்.

நம் உடலில் செல்கள் எப்படி தனித்தனியாகச் செயல்படுகின்றனவோ அப்படித்தான் ‘சிதல்கள்’ செயல்படுகின்றன. அந்த சிதல்கூடு நம் உடல் போல ஒரு அமைப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு செல்லுக்கு நம் உடல் என்ன செய்கிறது என்று தெரியாது. அது வாழ்வது தன் சொந்த வாழ்க்கையை. ஆனால் செல்கள் சேர்ந்ததுதான் நமது உடல்.

அறிவியலும் ஆன்மிகமும்

இந்த மாபெரும் வித்தையைத் தான் புற்றுவடிவில் காண்கிறோம். ஆகவேதான் தொன்மையான குடிகள் புற்றை வழிபடுகிறார்கள். இந்தியா முழுக்கவே புற்று வழிபாடு உள்ளது. அது எப்போதுமே நாட்டுப்புற வழிபாட்டில்தான் இருக்கும். மெல்ல மெல்ல அது மைய வழிபாட்டுக்கு சென்று சேரும்.

புற்று பகவதியாக ஆனதன் பின்னணியில் உள்ளது, இயற்கை பற்றிய இந்த வியப்புத்தான். புற்றை பகவதி என்று சொல்லலாமா என்று பகுத்தறிவுடன் கேட்கலாம்.

புற்றாக வெளிப்படும் இயற்கையின் பிரம்மாண்டம்தான் பகவதியின் தோற்றம். நாம் பகவதியை அப்படித்தான் அறிய முடியும் என்று ஆத்திகர்கள் பதில் சொல்வார்கள்.
 

Lycan

2. பேயும் தெய்வமும்

ஹாலிவுட் பேய்ப் படங்களைப் பார்த்தவர்களுக்கு லைகனைத் தெரியும். லைகன் (Lycan) என்பது ஐரோப்பிய நாட்டுப்புறத் தொன்மங்களில் இருந்து வந்த ஒரு பேய் வடிவம். ஓநாய் வடிவம் கொண்ட பேய் அது. மண்ணுக்கு அடியில் இருட்டில் வாழ்வது. இருண்ட இரவுகளில் மேலே வந்து மக்களை வேட்டையாடும். Werewolf என்றும் சொல்வார்கள். Vampire எனப்படும் ரத்தக் காட்டேறிகளும் இவையும் இணைந்தே இருக்கும். வாய் பிண நாற்றம் அடிக்கும்; பூச்சிகள் போல் பறக்கவும் சுவர்களில் பல்லிகள் போல தொற்றி ஏறவும் அவற்றால் முடியும்.

உண்மையில் இவை ஐரோப்பாவில் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த தொன்மையான நாட்டார் வழிபாட்டில் வழிபடப்பட்ட தெய்வங்கள். அதிலும் குறிப்பாக ஓநாய் பழைய வேட்டை சமுதாயத்தின் முக்கியமான தெய்வம். ஓநாயை தெய்வமாக வழிபடுவது பற்றிப் பேசும் சீன நாவலான ‘ஓநாய் குலச்சின்னம்’ தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓநாய்க்கு பலிகள் கொடுத்து வழிபடுவது உலகமெங்கும் உள்ள வேட்டைப் பழங்குடிகளின் வழக்கம். மகாபாரதத்தில் பீமன்கூட ஓநாய் என்று (விருகோதரன் என) சொல்லப்படுகிறான்.

ஐரோப்பாவில் இருந்த தொல்மதங்களை பொதுவாக பாகன் (Pagan) மதங்கள் என்பார்கள். பொ.யு.பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரியின் பேரரசர்களால் கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் பரப்பப்பட்டபோது அனைத்து பாகன் மதங்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. அவர்களின் வழிபாட்டு இடங்கள் இடிக்கப் பட்டன. கூடவே அந்தத் தெய்வங்கள் எல்லாம் பேய்கள், பிசாசுகள் என்று விளக்கப்பட்டன. அவை அழிவையும் நோய்களையும் அளிப்பவை என்று கூறப்பட்டன. இன்றும்கூட அந்நம்பிக்கை ஐரோப்பாவில் வலிமையாக உள்ளது.

இவ்வாறு நோய்களை அளிக்கும் பேய்களை திருப்தி செய்வதற்காக ஒரு பலிச் சடங்கை குளிர்காலத் தொடக்கத்தில் செய்தனர். பேய்களை அடக்கும் புனிதர்களை வழிபடும் நாள் அது. அனைத்துப் புனிதர்களின் நாள் என்ற பொருளில் அது ஹாலோவீன் (Halloween) என்று அழைக்கப்படுகிறது. அன்று விதவிதமான பேய்களின் வேடங்களை அணிந்துகொண்டு கொண்டாடுகிறார்கள்.

தடை செய்யப்பட்டாலும் மக்கள் மேலும் நெடுங்காலம் தங்கள் தெய்வங்களை ரகசியமாக வழிபட்டனர். அவர்களைத் தேடித் தேடி வேட்டையாடியது ரோமாபுரி அரசு. இந்த மதவேட்டை ‘இன்குவிசிஷன்’ (Inquisition ) என்று சொல்லப்பட்டது. அப்படி ரகசிய வழிபாடுகள் செய்தவர்களை சூனியக்காரர்கள் என்று சொல்லப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். ஜோன் ஆஃப் ஆர்க் போன்ற மாபெரும் வீராங்கனைகள் அப்படி எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

உலக வரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்கு தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகமெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்கள் வழிபட்ட தெய்வங்கள் தான்.

இந்தியாவிலும் அது நிகழ்ந்தது. அசுரர்கள் என்று புராணங்களில் சொல்லப்படுபவர்கள் தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள். நாகர்கள் தோற்கடிக்கப்பட்டபோது அவர்கள் பாதாளத்தில் வாழ்பவர்களாக மாற்றப்பட்டார்கள்.

ஆனால் இந்துமதம் ஒரு தலைமை அமைப்போ, ஒரு மையக் கட்டுப்பாடோ இல்லாதது. ஆகவே தோற்கடிக்கப்பட்ட தெய்வங்கள்கூட அழிவதில்லை. அவை வெறும் பேய்களாக மாறி விடுவதில்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவை வேறு வடிவில் மைய மதத்துக்குள் எழுந்து வந்துவிடுகின்றன. நாகங்கள் இன்று நம் ஆலயங்கள் அனைத்திலும் தெய்வமாக அமைந்துள்ளன. நாகம் துணையாக இல்லாத தெய்வமே நமக்கு இல்லை!

பண்பாடுகள் நடுவே போட்டியும், போரும், வெற்றி- தோல்வியும் இல்லாத இடமே இல்லை. ஆனால் ஒரு பண்பாடு இன்றுடன் உரையாடலை தொடங்கியது என்றால் படிப்படியாக அது பண்பாடுகளின் இணைவுக்கே இடமளிக்கும். இரு பண்பாடுகளும் ஒன்றாக மாறி வாழும்.
 
Totem Worship

3. இருட்டும் வெளிச்சமும்

இந்து மதத்தில் எருது, நாகம், யானை, பசு, குரங்கு போன்று பல மிருகங்கள் தெய்வங்களாக உள்ளன. மிருகங்கள் தெய்வங்களாக வழிபடுவதை இந்து மதத்தை ஆராய்ந்த ஆரம்பகால மேல்நாட்டு அறிஞர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆப்பிரிக்காவிலும் பிற பகுதிகளிலும் உள்ள பழங்குடிகளின் பழக்க வழக்கங்களை இங்கும் பொருத்திப் பார்த்து அதை புரிந்துகொள்ள முயன்றனர்.

அங்குள்ள பழங்குடிகள் தங்களை சில விலங்குகளின் வழித்தோன்றல்கள் என எண்ணிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. முதலை, ஆமை, எருது, கரடி, போன்ற பல விலங்குகள் அவ்வாறு மூதாதையாக எண்ணிக் கொள்ளப்பட்டன. அவ்வாறு தங்களை ஒரு விலங்கின் மக்கள் என என்னும் பழங்குடியினர் அதை தங்கள் குல அடையாளமாக கொண்டனர். இந்த அடையாளங்கள் டோட்டம் (Totem) எனப்பட்டன.

இந்தக் குல அடையாளங்களை காலப்போக்கில் அவர்கள் தெய்வங்களாக ஆக்கினர்; பலியும் படையலும் இட்டு வணங்கினர். அவர்களின் வேடம் புனைந்தவரை தெய்வமாக எண்ணி வழிபட்டனர். பின்னர் அத்தோற்றத்தை மரத்திலும் கல்லில் செதுக்கி தெய்வமாக வழிபட்டனர். இதை வெள்ளையர் Totem Worship என்றனர்.

இந்து மதத்தின் விலங்கு தெய்வங்களை இதேபோல குலதெய்வங்கள் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர். ஆனால் அது முற்றிலும் தவறான புரிதல். இந்தியாவிலும் எங்கும் எந்தப் பழங்குடியும் தன்னை விலங்கு குலத்தைச் சேர்ந்ததாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. விலங்குகள் குலச் சின்னமாக எங்கும் இல்லை.

அப்படியென்றால் ஏன் விலங்குகள் தெய்வமாகின்றன? மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடி மக்களின் வழிபாடுகளையும் சரி, தொன்மையான நம்பிக்கைகளையும் சரி, ஒருவகையான ஏளனத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். அவை அம்மக்களின் அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள்.

மாறாக அவை அம்மக்களின் நுண்ணுணர்வால் உருவானவையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இப்பிரபஞ்சத்தை விளக்க தொன்மையான மக்கள் அறிவியலைப் பயன்படுத்தவில்லை. கவித்துவத்தையே பயன்படுத்தினர். அந்த கவித்துவப் புரிதலில் இருந்து உருவானவையே இயற்கை வழிபாடும் விலங்கு தெய்வங்களும் எல்லாம்.

தொன்மையான மனிதர்கள் புயலையும் சூரியனையும் கண்டு பயந்தோ புரிந்து கொள்ளாமலோ வழிபடவில்லை. அவற்றை கவித்துவமான குறியீடுகளாகவே வழிபட்டனர். இந்தப் பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அளவிட முடியாத ஆற்றலையே சூரியனாகவும் புயலாகவும் கண்டனர். சூரியனையும் வாயுவையும் பற்றிய நம் பக்திப் பாடல்களில் உள்ள வர்ணனைகளைப் பார்த்தாலே அதை உணரலாம். அவர்கள் தெய்வத்தை ‘கோடி சூரியன்’ என்று வாழ்த்துவதை நாம் அறியலாம்.

அதை உணராமல் பண்டைய மனிதர் சூரியனைக் கண்டு அஞ்சினார்கள்; ஆகவே சூரியனைத் தெய்வமாகக் கும்பிட்டார்கள் என்று சொல்லுவது மடமை. அதேபோன்றுதான் விலங்குகளை வழிபடுவதை ‘குலக்குறி வழிபாடு’ என்று சொல்வதும். இன்றைக்கும் நம் கல்லூரிகளில் ‘நாட்டாரியல்’ என்ற பெயரில் வெள்ளையர்கள் அரைவேக்காட்டுத் தனமான எழுதி வைத்தவற்றை பேராசிரியர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.

விலங்குகள் அனைத்தும் பல்வேறு விஷயங்களில் குறியீடுகள்தான். நாய் மரணத்தின், இருட்டின் குறியீடு என்றால், காளை வெளிச்சத்தின் குறியீடு. மிகப் பெரிய ஆற்றல் மிக மெல்ல வெளிப்படுவதே காளை என்பது. மிக விரைவாக அணுகும் இருட்டே நாய்.

முருகனின் கையிலுள்ள செந்நிறமான சேவல், தீயின் அடையாளம். நீலமயில், நீரின் அடையாளம். இப்படித்தான் நம்முடைய அனைத்து விலங்கு தெய்வங்களும் பொருள்படுகின்றன. சிந்திக்க ஆரம்பித்தால் உங்களுக்கே தெரியும்.

நாக வழிபாடு

4. நாகமும்  ஆன்மிகமும்

பாம்புகள் மீது உலகம் முழுக்க மனிதனுக்கு பெரும் கவர்ச்சி இருந்துள்ளது. கால்கள் இல்லாத இந்த உயிர் மிக விரைவாகச் செல்லக் கூடியது. காதுகள் இல்லாத இது மிக நுட்பமாகக் கேட்க கூடியது. நகமோ கொம்போ இல்லாத இது யானையைக் கொல்லும் ஆற்றல் கொண்டது.

அனைத்துக்கும் மேலாக பாம்பு மிகவும் அமைதியானது; இமைக்காத விழிகள் கொண்டது. அதன் அமைதியும், இமையாத கண்களும்தான் அதை மர்மமான விலங்காக ஆகியிருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக அதன் அழகு. தீயின் நெளிவும் நீரின் நெளிவும் ஒரு உயிரில் நிகழ்வதைப் போல அற்புதம் வேறென்ன இருக்கிறது? நாகம் பற்றிய தொன்மம் இல்லாத பண்பாடுகளே உலகில் இல்லை.

இந்தியாவில் நாகம் எப்பொழுதுமே வழிபடு தெய்வமாக, குலக்குறியாக இருந்து வந்துள்ளது. நாகர்கள் என்ற மக்கள் இந்தியாவின் நிலம் முழுக்க பரவி இருந்திருக்கிறார்கள். மகாபாரதத்தில் பேசப்படும் கதைகளில் கணிசமானவை நாகர்களைப் பற்றியவை. பீமன் நாகர்களின் உலகம் சென்று நஞ்சு அருந்திய பின்னரே மாவீரன் ஆனான். அர்ஜுனன் நாகர்குல இளவரசி உலூபியை மணந்து அரவானைப் பெற்றான். அதில், ஏராளமான நாகர்களும் நாக அரசர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இன்றும் நாகர்கள் என்ற பெயரில் ஒரு இனம் வடகிழக்கிலே எஞ்சி இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் பல தீவுகள் நாகர்களுடையவையாக சுட்டப்படுகின்றன. நாகநாடு என பல மலைநாடுகள் சொல்லப்படுகின்றன. நாகன், இளநாகன் போன்ற பெயர்கள் பழந்தமிழ் நாட்டில் சாதாரணமாக புழக்கத்தில் இருந்துள்ளன.

இந்து தெய்வங்களில் நாகங்களுடன் தொடர்பற்றவை அரிது. சிவனின் கழுத்து மாலையாக, திருமாலின் படுக்கையாக, முருகனின் மயிலுக்குத் தோழனாக, பிள்ளையாரின் இடைக்கச்சையாக, அம்பாளின் கைகளில் கங்கணமாக நாகங்கள் உள்ளன. நாகம், நாம் அன்றாடம் வணங்கும் தெய்வம். நாக சந்நிதி இல்லாத ஆலயங்களே இல்லை.

நாகம் இந்துமதத்தின் பெரும் குறியீடுகளில் ஒன்று. ஒன்றை ஒன்று விழுங்கும் இரு நாகங்கள், சித்தும் ஜடமும் (கருத்தும் பொருளும்) கொள்ளும் முடிவில்லா உறவை சுட்டிக்காட்டுகின்றன. வால் சுற்றி முகத்தோடு முகம் நோக்கி நிற்கும் நாகங்கள் காலமும் வெளியும் (Time & Space ).

சமண மதத்திலும் நாகங்கள் முக்கியமானவை. சமண தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் சின்னம் பாம்பு. அவர் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்திருக்கும். தமிழகத்தில் சமணம் வேர்விட்டபோது இங்கிருந்த நாகவழிபாடு அப்படியே சமணத்துக்குள் சென்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் இந்து மரபுக்குள் வந்தது. நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் ஒரு சமணத்தலமாக முன்னர் இருந்தது என்று சொல்லப்படுகிறது.

நாகத்தின் நாவின் அடியில் இளநீல ஒளி எழுப்பும் மணி (மாணிக்கம்) ஒன்று உண்டு என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. முதிர்ந்த நாகத்தின் நாவிலேயே அது உருவாகி இருக்கும். ஒரு நாகம் தன் நஞ்சை வாழ்நாள் முழுக்க ஒருமுறைகூட எதையும் கடிக்காமல் சேர்த்து வைத்தது என்றால், அது இறுகி ஒளிகொண்டு மணி ஆகிறது. நாகமணி கொண்ட பாம்பு நாகங்களிலே ஒரு யோகி. அதற்கு சிவன் நேரில் தோன்றி முக்தி அளிப்பார் - என்கின்றன பழங்கதைகள்.

நாகம் மின்மினியை விரும்பி உண்ணும். பாம்பின் நாவில் மின்மினியை கண்ட எவரேனும் உருவாக்கிய தொன்மமாக இது இருக்கலாம். ஆனால் கனிந்த நஞ்சு மணியாகி சுடர்விடும் என்பதைப் போல அற்புதமான கவித்துவம் வேறொன்று இல்லை. அதில் உள்ளது இந்து மெய்ஞான மரபின் சாராம்சமான தரிசனம்.

இந்த ஆண்டு (2021) நாகசதுர்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.


காண்க:



No comments:

Post a Comment