17/07/2021

ஐந்தடுக்கு கோபுரம் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா



பார்ப்பனர் தொடங்கி
பஞ்சமர் வரைக்கும்
ஐந்தடுக்கில் அமைந்த
அன்றைய சமுதாயத்தில்
தேவ சிற்பங்களாய் சமைந்திருந்தோம்.

கலசநுனி காட்டும்
அகண்டவெளி அன்று 
அத்தனை பேருக்கும் இலட்சிய எல்லை.

பூமியைக் கிண்டி புழுக்களைத் தேடு; 
வானத்து நட்சத்திரங்கள்
வயிற்றுப் பசி தீர்க்குமா என்று-
சிறகிருந்தும் நிலத்தையே கீறிய
குப்பைக் கோழிகளின் உலகியல் வாதம்
உவப்பாகவும் இல்லை.

மேலும்,
கோபுரச் சிலைகளின்
முகங்களுக்கு எதிரே
முகிலும், மின்னலும், நட்சத்திரங்களும்
நாடகம் நிகழ்த்தும்
அகண்டவெளியின் தரிசனமிருந்தது
ஒவ்வொரு தோளிலும் புறாக்கள் அமர்ந்தன-
புத்தன் மீது அமர்ந்தது போல.

மழைத்துளியும் எல்லா முகத்திலும்
சிலிர்த்து வழிந்தது.

அது ஒரு காலம்.

பரங்கியன் பார்வைக்கு
அது புதிர். 
விளங்காத வினோதம்.

என்ன இது! ஒருவன் தலைக்கு மேல்
ஒருவன் அமரும் கோபுர அடுக்கு.
வட்ட மேஜை போடு.
வட்டத்தில் எல்லா முகங்களும் சமம்.
வட்டத்தில்தான் முதலும் முடிவுமில்லை-
புரிகிறதா என்றான் அவன்.

இந்த யோசனைக்கேற்ப
அடுக்கிலிருந்து குதித்து
வட்ட மேஜைமுன் கூடிய முகங்கள்
பிற முகம் பார்த்துப் பார்த்து
சலிப்பேறி கதறுகின்றன இன்று.

தன் முதுகைத் தான் பார்க்க முடியாத
சங்கடம் வட்ட மேஜைகள்
வழங்கிய ஒன்று.

அதே பழைய அடுக்கு வட்டமும்
ஒன்பது வட்டமாய் உருவான
வர்க்க பேத வட்டமும்
கட்சி வட்டமும் கபோதி வட்டமும்,
இலக்கிய வட்டங்களுக்குள்
இஸங்களின் வட்டமும்,
மத வட்டமும் மாலைப் பொழுதின்
குடிகார வட்டமுமாக 
எத்தனை வட்டங்கள்
அதில் எத்தனை கொட்டங்கள்!

எங்கும் கூச்சல்
எதிலும் அடாவடி
இதயம் தோறும்
நாறும் துவேசம்.

மௌனம் கலக நாசம்.


***

கவிதை- 2

மாந்திரீகன்

மனையிற் புதைத்த
வஞ்சனைத் தகடை
மாந்திரிகன் எடுத்ததும்
மலர்ந்தன முகங்கள்.

‘இனி உம்மை
எந்தத் துயரமும்
வழிமறித்துத் தாக்காது.
ஏணி வைத்தும் எட்டாத
வெற்றிக்கனிகள்
தானே மடியில் விழும்.
சங்கடங்கள் ஓடிவிடும்’.

மாந்திரீகப் புளுகுகளை
மனைவி நம்பினாள்-
நான் நம்பவில்லை.

‘இத்தனை துயருக்கும்
இந்தச் செப்புத் தகடா காரணம்?
இல்லவே இல்லை.
மூவாயிரம் வருஷம் முந்தி நம்
மூளைக்குள் பதித்த
பார்ப்பனீயம் என்னும்
ஈயத் தகடுதான் காரணம்.
அதை எடுத்துவீசாமல்
விடிவு கிடையாது’ என்றான்
நண்பன்.

அதையும் நான்
நம்பவில்லை.

‘ஏலேய் செப்புத்தகடில்ல...
ஈயத் தகடுமில்ல...
ஏகாதிபத்தியத்தின்
ஏவல்வேலைதான் நம்
எலும்பைக் கடிக்குது.
குருதி குடிக்குது’ என்றான்
மற்றொருவன்.

அவன் சொன்னதை
இவன் நம்பவில்லை.

வல்லமை கொண்ட
வாஸ்து நிபுணர்கள்-

சமூக அமைப்பே
வாஸ்து விரோதம்தான்
இடித்துக் கட்டணும்...

சட்டத்தைத் திருத்தினால்
போதும்...

பொருளாதாரக் குழாய்கள்
மேல் நோக்கிப் போவதைச்
சரி செய்யணும்...

அரசியலை மாத்தணும்...

-நால்வகை பரிகாரம்
நல்தெனச் சொன்னார்கள்.

எதிலும் நம்பிக்கை இல்லை.

ஐ.நா.சபை மிரட்டி
மழை பொழியப் போவதில்லை.
குபேரனாய் மாறினும் நாம்
மனம் குளிரப் போவதில்லை.
வள்ளுவன் சொன்னபடி,
தனக்குவமை இல்லாதான்
தாளைச் சரண்டைந்து
மனக் கவலை மாற்று என்றால்
மற்றவர்கள் நம்பவில்லை.

அவரவர் நடப்பது
அவரவர் வழியில்.
அவரவர் கிடப்பது
அவரவர் குழியில்.

வீட்டிலும் வாழாமல்
வெளியிலும் செல்லாமல்
திகைக்குது மானுடம்-
திண்ணைப் படியில்.

குறிப்பு:


கவிஞர் நந்தலாலா
திரையிசைக் கவிஞர். சென்னையில் வசிக்கிறார்.

காண்க:







No comments:

Post a Comment