17/07/2021

பேரா. சோ.சத்தியசீலன்: பாடவும் தெரிந்த மயில்!

-திருப்பூர் கிருஷ்ணன் 


 பேரா. சோ.சத்தியசீலன்

(பேரா. சோ.சத்திய சீலன் ஐயாவுக்கு அஞ்சலி- 2)

பகுத்தும் தொகுத்தும் மிக அழகாகப் பேசக்கூடிய ஆற்றல் மிகுந்த இலக்கியச் சொற்பொழிவாளர், ‘நாவுக்கரசர்’ முனைவர் சோ.சத்தியசீலன்.

நாவுக்கரசர் என்ற பட்டம், எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட அவருக்குப் பொருந்துவதுபோல வேறு எவருக்கும் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்துவதில்லை.

நான் மிகவும் விரும்பும் என் பெருமைகளில் ஒன்று, அவரது மாணவன் நான் என்பது. திருச்சி தேசியக் கல்லூரியில் சிறிதுகாலம் நான் பயின்றபோது அவரது தமிழ் மாணவனாய் இருக்கும் பேறு பெற்றேன்.

அப்போதைய தேசியக் கல்லூரியில் ஏறக்குறைய வாயில் கதவுகள் என்று சொல்லத்தக்க அளவு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றிற்குக் கதவுகள் உண்டே தவிரக் கம்பிகள் கிடையாது.

மாணவர்கள் தாழ்வான அந்தச் சாளரத்தின் வழியே வெளியே போய்விட முடியும்.

ஆசிரியர் வருகைப் பதிவேடைப் பதிவு செய்யும்போது இருக்கையில் இருந்து  ‘உள்ளேன் ஐயா!’  எனக் குரல் கொடுக்கும் மாணவர்கள், அவர் வருகைப் பதிவேட்டை வாசித்து முடித்து நிமிர்வதற்குள் சாளரத்தின் வழியே மாயமாய் விடுவார்கள்!

ஆசிரியர்களும் அதைக் கண்டுகொள்ளாமல், வகுப்பில் எஞ்சியிருக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள்.

சத்தியசீலன் வகுப்பில் மட்டும் ஒரு புதுமை நிகழும். பிற வகுப்பு மாணவர்களும் கூட அவர் வகுப்பில் தாமே விரும்பி வந்து உட்கார்ந்து அவர் தமிழை அனுபவிப்பார்கள்.

வகுப்பு முழுவதும் மாணவர்களால் நிறைந்து வழியும். மாணவர்களிடம் அவர் தமிழுக்கு அப்படியொரு ஈர்ப்பு இருந்தது.


கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குரல் போலத் தோன்றும் சிறப்பான குரல்வளம். திருத்தமான முகம்.

எந்த அங்க சேஷ்டைகளும் இல்லாமல், இனிமை தவழும் தோற்றத்துடன், திருந்திய உச்சரிப்போடு அவர் பாடம் நடத்தும் நேர்த்தி வெகு அழகு.

அவர் பேச்சு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் சங்கீதம் போன்றது. தீபம் நா.பார்த்தசாரதியின் ‘பொன்விலங்கு’ நாவலில் வரும் ஆசிரியரின் தோற்றத்தைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம் நான் சத்தியசீலனை ஞாபகப்படுத்திக் கொள்வேன்.

ஓர் ஆசிரியரின் நூலுக்கு அவரின் மாணவன் அணிந்துரை எழுதுவது என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு. சத்தியசீலன் அவர்கள், தம் பெருந்தன்மை காரணமாக அவரது  ‘அவிழ்க்கப்படாத முடிச்சுகள்’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

அந்த நூல் அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட என்பதற்கான சாட்சி. நூலைப் படிக்கப் படிக்க அவர் பேச்சில் இருக்கும் அதே கவர்ச்சி நூலிலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

உண்மையில் நூலைக் காதில் வைத்துக் கேட்டால் அவர் குரலே கேட்கும்போலத் தான் தோன்றுகிறது! அப்படி தங்கு தடையற்ற இயல்பான ஓட்டத்தோடு, நூல் படிக்கப் படிக்க விறுவிறுவென்று வளர்கிறது.

பேச்சாளர் எழுத்தாளரானால் அந்த எழுத்தில் ஒரு கவர்ச்சி இருக்குமென்றும் எழுத்தாளர் பேச்சாளரானால் அந்தப் பேச்சில் ஒரு கட்டுக்கோப்பு இருக்குமென்றும், சத்தியசீலனே சொல்வதுண்டு.

எழுத்தாளராகி இருக்கிற சத்தியசீலன் என்ற பேச்சாளரின் எழுத்தில் கவர்ச்சியும் இருக்கிறது; கட்டுக்கோப்பும் இருக்கிறது. மயில் ஆடும்; குயில் பாடும். ஆனால் இவரோ பாடவும் தெரிந்த மயில்! ஆடவும் தெரிந்த குயில்!

மெல்லிய நகைச்சுவை இந்நூலில் இயல்பாக ஆங்காங்கே தென்படுவது இதன் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல எழுதுகிறார் விநாயகர்.  ‘நான் எழுதும் வேகத்திற்குத் தக்கவாறு நீ வேகமாகச் சொல்ல வேண்டும்’ என்பது விநாயகரின் நிபந்தனை. ‘நான் கூறுவதைப் புரிந்துகொண்டு நீங்கள் எழுதவேண்டும்’ என்பது பதிலுக்கு வியாசரின் நிபந்தனை.

இதைச் சொல்கிறபோது, ‘மகாபாரதம் எழுதப்படும் காலத்திலேயே புரியாமல் எழுதுகின்றவர்களும் இருந்திருக்கின்றார்கள் என்பது புரிகிறதல்லவா?’ எனக் கேட்டு, இன்றைய சில எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றி நம்மை நினைக்கச் செய்து முறுவல் பூக்க வைக்கிறார் நூலாசிரியர்.

 ‘மயிலின் சாயலையும் குயிலின் குரலையும் புறாவின் மென்மையையும் தேனின் இனிமையையும் கூட்டிக் குழைத்து அதோடு கொஞ்சம் நல்ல பாம்பின் விஷத்தையும் கலந்தால் அதுதான் பெண்’ என்பது ஒரு பாரசீகப் பழமொழி என அவர் மேற்கோள் காட்டும்போது ஒரு மெல்லிய முறுவலாவது நம் உதடுகளில் பரவாமல் இராது.

நூலாசிரியர் எடுத்துக்காட்டும் கண்ணதாசனின் மேற்கோளும் நம்மை மலர்ந்து நகைக்க வைக்கின்றது:

 ‘பெண்ணால் வஞ்சிக்கப்படுவதால் அவளை வஞ்சி என்று அழைக்கின்றோம். அவளால் வஞ்சிக்கப்பட்டு உள்ளம் கன்னிப் போவதால அவளைக் கன்னி என்று குறிப்பிடுகின்றோம். உள்ளம் கன்னிப் போய்க் குமரிக் கடலில் விழுந்து சாகலாம் என்பதால் அவளைக் குமரி என்று சொல்கின்றோம். நாம் சம்பாதிப்பதையெல்லாம் அவள் இல்லாமல் செய்து விடுவதால் அவளை இல்லாள் என்கின்றோம்’. 

பல முக்கியமான ஆய்வுக் கருத்துக்கள் நூலில் உண்டு. தோழி தேவந்தி கண்ணகியிடம், பிரிந்த கணவன் மீண்டும் வர வேண்டி காமவேள் கோட்டம் சென்று தொழலாம் என அழைக்கிறாள். அவளிடம் பீடன்று என்ற ஒரு சொல் சொல்லி அதை மறுத்துவிடுகிறாள் கண்ணகி.

 ‘கடவுளிடம் கூட என் கணவனைப் பற்றி இழிவாகக் கூற என் மனம் ஒருபோதும் இடம் தராது’ என்பதனாலேயே கண்ணகி பீடன்று என்னும் ஒரே சொல்லால் தன் உள்ளத் திண்மையை உணர்த்தி விடுகின்றாள்  என அந்தச் சொல் பிறந்ததன் பின்னணியில் இருந்த மனக்குறிப்பை எடுத்து விளக்குகிறார் நூலாசிரியர்.

 ‘அன்பால் இணைந்த குகன் இராமனுக்குச் சமமாக குகப்பெருமாள் ஆனான். ஆசையாலும் அச்சத்தாலும் இணைந்த சுக்கிரீவன் மகாராஜா ஆனான். ஞானத்தால் இராமனுடன் இணைந்த வீடணன் ஆழ்வார் நிலை அடைந்தான்’  போன்ற வரிகள் ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலனுக்கு எடுத்துக்காட்டு.

பூசலார் நாயனாரைப் பற்றி எழுதும்போது மன்னனுக்குக் கனவில் காட்சியளித்த சிவபெருமான் பூசலார் நாயனாருக்கு அவ்வாறு காட்சி அளிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்புகிறார்.

காரணம் பூசலார் உறங்காமலேயே மனக்கோவில் கட்டியதால் கனவில் காட்சிளிக்கவில்லை என்று அந்தக் கேள்விக்கு ஒரு விடையும் தருகிறார்.

இலக்கணத்தால் இலக்கியம் செழித்த இடம் ஒன்று வில்லிபாரதத்தில் உண்டு.  ‘யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்’  எனக் கர்ணன் தன் புண்ணியத்தைக் கண்ணனுக்குத் தானம் செய்யும் இடம்.

 ‘செய்புண்ணியம்’ என வினைத்தொகையாக அமைத்ததால்-  செய்த, செய்கின்ற, செய்யவிருக்கின்ற புண்ணியத்தையும் கர்ணன் தானம் செய்துவிட்டான் என நூலாசிரியர் விளக்கும் இடம் அருமை. அந்த அத்தியாயமும் முழுவதுமே அருமையிலும் அருமை.

உரைநடையாக அமைந்த பகுதிகளின் நடுவே பொருத்தமான மேற்கோள்களாக ஆங்காங்கே இடம்பெறும் பாடல் வரிகள் முத்து மாலையின் இடையேயுள்ள பவழங்களைப் போல் நம்மைக் கவர்கின்றன.

 ‘அவிழ்க்கப்படாத முடிச்சுகள்’ நூலைப் படிக்கும் போது ஒன்று புரிகிறது, பேராசிரியர் சத்தியசீலனின் மறைவு பேச்சுத் துறைக்கு மட்டுமல்ல, எழுத்துத் துறைக்கும் ஒரு பேரிழப்பு.


குறிப்பு:


திரு. திருப்பூர் கிருஷ்ணன்,  ‘அமுதசுரபி’ மாத இதழின் ஆசிரியர். மூத்த பத்திரிகையாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர்.

அவரது முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.




No comments:

Post a Comment