17/07/2021

தமிழர்களின் மதம் எது?

-சுந்தர்ராஜசோழன்


மாமல்லபுரம்- மஹிஷாசுர மண்டபம் சிற்பம்

எதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம், ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இந்து மத வெறுப்பைக் கொட்டுவதற்கு அந்த வார்த்தைகள் ஒரு பயன்படு கருவி, அவ்வளவுதான். பெளத்தம், சமணத்தைப் பற்றி இவர்களுக்கு எள் முனையளவும்கூடத் தெரியாது.

அத்திவரதர் புத்தர் சிலையாம். ஏனென்றால் படுத்திருக்கிறாராம். இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக்கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும். இனிமேல் காற்று வரவில்லை என்று திண்ணையில் படுத்திருப்பவரை புத்தர் என்று சொற்பொழிவு கேட்காமல் இருந்தால் சரி.

அதாவது சிலப்பதிகாரம் ஒரு சமண நூல். ஆனால் அது தமிழகத்தின் இந்து மத தொன்மத்தையும்,சான்றுகளையும் மிக நேர்மையாக பதிய வைக்கிறது. ஆயர்களிடம் மகாபாரதம் இருந்ததைச் சொல்கிறது.

"திருஅமர்மார்பன் கிடந்த வண்ணமும்" 

"செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்"

திரு அமர் மார்பன் என்றால் ஸ்ரீநிவாஸன் என்பதன் தமிழ் வடிவம். அவர் படுத்திருக்கும் திருவரங்கத்தையும், அவர் நின்று அருள்புரியும் திருப்பதியையும் காண வந்தேன் என மாங்காட்டு மறையவன், ஏன் தான் தமிழகம் வந்தேன் என்று கோவலனிடம் சொல்கிறான்.

மேலும் சில முது தமிழ் சான்றுகள்...

----------------------------------------------------------------------------------------------------------- 

"ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப்பெற்று" 

- பதிற்றுப்பத்து.

அகன்ற இடத்தில் வேள்விச்சாலை அமைத்து வேள்வி செய்த போது கருமை வண்ணம் கொண்ட திருமாலை மனத்திலே நினைத்துக் கொண்டான் என்று பதிற்றுப்பத்தில் வேதவேள்வியில் திருமாலை நினைத்துக் கொண்டதை பற்றி குறிப்பிடுகிறார் கபிலர். 

----------------------------------------------------------------------------------------------------------- 

"பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல் நிற உருவின் நேமியோனும் என்று இருபெருந்தெய்வம்" 

- புறம் 58

வெள்ளை நிறத்தவனும் பனைக்கொடியை உடைய பலராமனும், நீல நிறத்தையும் சக்கரத்தையும் உடைய திருமாலும் இரண்டு பெரும் தெய்வம் என்று காரிக்கண்ணனார் புகழ்கிறார்- சோழனையும் பாண்டியனையும்.

----------------------------------------------------------------------------------------------------------- 

"மண்ணுறு திருமேனி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்" 

- புறம் 56

மாசற்ற அழகிய நீலநிற உடல் அழகும், வானுயரப் பறக்கும் கருடக் கொடியை உடையவனும் என்று- நக்கீரர் பாண்டியனை திருமாலோடு ஒப்பிட்டுப் புகழ்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------- 

"வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன" 

- புறம் 57

அறிவற்றோர் ஆயினும், அறிவில் வல்லவராயினும் போற்றிப் புகழ்பவர்களை காத்தருள்வதில் திருமாலை ஒத்தவன் என்று பாண்டியன் நன்மாறனைப் புகழ்கிறார் காரிக்கண்ணனார்.

----------------------------------------------------------------------------------------------------------- 

அடுத்தது மிக முக்கியமான ஒரு சங்கப்பாடல் உள்ளது.

மன்மருற் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல ” 

- அகம் 220

பரசுராமன் இம்மண்ணுலகிலேயே ஷத்திரிய அரசத் தரப்பினர் ஒருவர்கூட இல்லாமல் பூண்டோடு ஒழிப்பேன்” என்று சபதம் செய்து, மிக்க முயற்சியோடு ஒரு பெரிய வேள்வியைச் செய்து முடித்தான் என்ற புராணத்தைத் தொட்டுச் செல்கிறது இந்தப் பாடல். அவர் திருமாலின் அம்சம் என்பதாலே மழுவாள் நெடியோன் என்கிறது. 

----------------------------------------------------------------------------------------------------------- 

"உருவின் நெடியோன்கொப்பூழ், நான்முகன் ஒருவற்
பயந்தபல் இதழ்த் தாமரைப் பொகுட்டின்”

- பெரும்பாணாற்றுப்படை (402-405)

பத்மநாபன் என்ற பதத்திற்கான விளக்கத்தை பெரும்பாணாற்றுபடையே கொடுத்துவிட்டது-  திருமாலின் தொப்புளில் இருந்து பிரம்மா வந்த புராணத்தை குறிப்பதன் மூலம்.

----------------------------------------------------------------------------------------------------------- 

"வடா அது வண்புனல் தொழுதை
வார்மணல் அகன்றுறை அண்டர்மகளிர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல ” 

- அகம் 59

ஆயர் பெண்கள் யமுனை ஆற்றின் கரையில் ஆடைகளையெல்லாம் வைத்துவிட்டு, நதியில் நீராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அறியாவண்ணம் கண்ணன் அவர்களது உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.

அது கண்ட ஆயர்மகளிர் தங்கள் கைகளால், தங்கள் அங்கங்களை மறைத்துக்கொண்டு, உடையினைத் தரும்படி கண்ணனை வேண்டிக் கொண்டனர். கண்ணணோ எல்லோரும் தங்கள் இரு கைகளையும் நீட்டி வெளியில் வந்து கேட்டால் தருவதாகக் கூறிக்கொண்டு இருக்கும்போது, கண்ணனுக்கு மூத்த பலராமன் அவ்விடம் வந்தான். அது கண்ட கண்ணன், குருந்த மரத்தின் கிளையினை மிதித்து அதனைத் தாழும்படி செய்து அதில் அப்பெண்களை மறைத்துக் கொள்ளும்படி செய்தான்.

இந்தச் செய்தியை தெளிவாகவும் நேரடியாகவும் குறிக்கிறது அகப்பாடல்.


----------------------------------------------------------------------------------------------------------- 

"நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்" 

- பெரும்பாணாற்றுப்படை 371- 373)


அதாவது மலையில் அமர்ந்த யானைபோல பாம்பனைமீது பள்ளி கொள்பவன் என்று புகழ்கின்றது! இதன்மூலம் திருவெஃகா (காஞ்சிபுரத்தின்) பழமையும் அங்கு திருமால் பள்ளி கொண்டிருக்கும் தோற்றத்தையும் நாம் நன்கு உணர முடியும்.

----------------------------------------------------------------------------------------------------------- 

இன்னும் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போக முடியும். தமிழ் இலக்கியத்தில் இந்து மத தொன்மம் இல்லாத நூல் எது? 

தொல்காப்பியமே இந்திரன், வருணன், மால் என வேதமூலக் கடவுள்களையே திணை தெய்வமாக சொன்ன பிறகு, இதையெல்லாம் ஏமாற்றி, தனித்தமிழ் வரலாறு எழுத நினைக்கும் அயோக்கியர்களின் நோக்கம் என்ன என்று நமக்குத் தெரியும். ஆனால் இதற்கு தமிழர்கள் இணங்கிப் போகக்கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள்.

திருமால் தமிழ் நிலத்தின் பெருந்தெய்வம். அவருக்கு கோயில் இருக்காதாம்.
ஆனால் புத்தருக்கு மூலைக்கு மூலை இருந்ததாம்; அதை நமது திராவிட ஆய்வாளர்கள் பார்த்தார்களாம்.

"சார்பில் தோற்றமும் சார்பறுத் துய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு"

- மணிமேகலை

மணிமேகலை நூல் ஆரியன் அதாவது மேம்பட்ட குரு என்ற பொருளில் புத்தரைச் சொல்கிறது. இதை என்றாவது படித்துப் பார்த்துள்ளார்களா நமது போலி ஆய்வாளர்கள் என்று தெரியவில்லை.

தமிழ் இலக்கியங்களை ஒழுங்காக வாசிக்கும் ஒருவன் இந்து மத வெறுப்பு, தனித்தமிழ் கலாசாரம், திராவிட நாகரிகம் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்க மாட்டான். பாரதக் கலாசாரம் ஒத்தமைய நோக்குக் கொண்டது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்வான்.

கலித்தொகை, பரிபாடலில் இருந்து நான் பாடல்களை குறிப்பிடவில்லை. தயவு செய்து அதை வாசிக்காதவர்கள் வாசித்துப் பாருங்கள். ஒருமுறை.பிறகு தமிழர்களின் மதம் எதுவென்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

***
2. சங்க இலக்கியங்களில் வேள்வி

இங்கு மேடைதோறும் திமுகவும் சரி, தமிழறிஞர்கள் என்ற போலிகளும் சரி, இல்லாத ஒரு சங்ககால வாழ்வியலை வரைந்து காட்டுகிற அபத்தத்தைத்தான் செய்தார்கள். உண்மையான பேரரறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு அரைவேக்காடுகள் அறிஞரென மேலெழுந்தனர்.

யாருமே சங்கப்பாடலைப் படிக்கப் போவதில்லை, தமிழில் இலக்கியங்களை படிக்கப்போவதில்லை என்ற உறுதியாலும், அதை வாசித்து நேர்மையுடன் கேள்வி கேட்கும் ஒருவரை  ‘பார்ப்பன அடிமை’ என்று சொல்லி புறந்தள்ளிவிடக் கூடிய அரசியல் ஆயுதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையிலும் வாயில் வந்ததைப் பேசியிருக்கிறார்கள்.

சங்காலத்தில்தான் பிராமணர்கள் மெல்லப் புகுந்து சதி செய்ய ஆரம்பித்தார்கள் என்று தெளிவாகச் சொல்வார்கள்.  சரி அதற்கும் முன்னால் பிராமணக் கலப்பற்ற நூல்கள், வரலாறு எதுவென்றால் கடலுக்குள் போய்விட்டது என்பார்கள். இதுவெல்லாம் ஒரு வாதமா?

தமிழர்களுக்கும் வேதத்திற்கும் தொடர்பில்லை; பாரதத்தின் மரபார்ந்த ஞானத்திற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என வெட்டியெறியத் துடித்த ஆபிரஹாமிய வெறித்தன வார்தைகளை திராவிட இயக்கம் தங்கள் பொய்களால் மேடைகளில் முழங்கியது.  

சில உதாரணங்களைத் தருகிறேன்... எத்தனை சங்கப்பாடல்களில் யாகம் பற்றி பயின்று வருகிறது என்று பாருங்கள். ஆராய்ச்சி உணர்வே இல்லாத அடிப்படை அறிவு இருக்கும் ஒருவர் படித்தாலும் இவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

----------------------------------------------------------------------------------------------------------- 

சங்க இலக்கியத்தின் மிக பழைய பாடல்களில் ஒன்று, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி குறித்ததும்.

"நல் பனுவல், நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பல கொல்? 

- புறம் 15

அதாவது அறநூல் சொன்னபடி, வேதவிதிப்படி, நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? என்பது பொருள்.

இந்த பாடலின் நோக்கம் முதுகுடுமி பெருவழுதிக்கு முன்னால் தோற்று ஓடிய மன்னர்கள் தொகை அதிகமா, அல்லது வேள்வி செய்து நடத்திய யூபஸ்த்தம்பம் அதிகமா? என்று புலவர் நெட்டியமையார் பாண்டியனின் வீரத்தையும் அவனது வேதநெறி தவறாத ஆட்சியையும் குறிப்பிடுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------- 

"எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்" 

- புறம் 227

வட்ட வடிவமாகச் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தன்.

கரிகால் சோழன் இறந்த பிறகு அவன் பெருமைகளைச் சொல்லி கருங்குழல் ஆதனார் பாடிய பொதுவியல் திணை, கையறுநிலை துறையைச் சேர்ந்த பாடல் இது.

----------------------------------------------------------------------------------------------------------- 

"வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே" 

- புறம் 367

அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.

சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி-பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி-சேரமான் மாவண்கோ மூன்று பேரும் ஒரிடத்தில் சேர்ந்திருப்பதை பெருமை கொண்டு ஔவையார் சொல்லும் பாடல் இது. 

இந்தப் பாடலே, அந்த ராஜசூயத்தையோ அல்லது வேறேதெனும் வேள்விச் சூழ்நிலையையோ குறிக்கிற நிகழ்வாகக்கூட இருக்கலாம். இதில் அந்தணர்களை இரு பிறப்பாளர்கள் என்று நேரிடையாகவே குறிக்கப்படுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------- 

"ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே " 

- புறம் 26

இதன் பொருள்: தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு, நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய,
நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே - என பாண்டியன் நெடுஞ்செழியன் போர்களத்தில் மறக்கள வேள்வி செய்யும் அதே நேரத்தில், அறிவார்ந்த சான்றோர் மூலம் அறக்கள வேள்வியும் செய்கிறான். எனவே அவனை எதிர்த்து நின்று மரணமடைபவர்கள் ஒரு வகையில் நோன்பிருந்து சிறந்தவரைப் போல வீரசுவர்க்கம் புகுவார்கள் என்று மாங்குடி மருதனார் அரச வாகையில் பாடுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------- 

"மறவர் மலிந்த தன்
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து" 

- புறம் 400

அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும், கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------- 

"கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை"
 
- புறம் 362

இதன் பொருள், பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.

பெயர் தெரியாத வீரனைப் பற்றி கயமனார் பாடிய பாடல் இது.

----------------------------------------------------------------------------------------------------------- 

ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, நலங்கிள்ளி, கரிகாற் பெருவளத்தான், நெடுஞ்செழியன் என்ற ஆகப்பெரிய மன்னர்களின் யாகத்தைப் பற்றியும், வேத ஆதரவுத்தன்மையைப் பற்றியும் தெளிவான தரவுகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன.


குறிப்பு:


திரு.சுந்தர்ராஜசோழன், தமிழ் இலக்கியம், சமகால அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வரும் இளைஞர்; மயிலாடுதுறையில் வசிக்கிறார். 

அவரது முகநூல் பதிவு இது.

காண்க: சுந்தர்ராஜசோழன் 




No comments:

Post a Comment