17/07/2021

ஆடி - 2021 மின்னிதழ்

 

உள்ளடக்கம்

1. அமுதமொழி - 19

-மகரிஷி அரவிந்தர்

2. நாட்டு வணக்கம் (கவிதை)

-மகாகவி பாரதி

3. ஆடித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு

4. இயற்கையும் வழிபாடும்

-திருநின்றவூர் இரவிக்குமார்

5. முதலையுண்ட பாலகனை மீட்ட பதிகம் (கவிதை)

-சுந்தரமூர்த்தி நாயனார்

6. நேதாஜி- ஓர் ஆவணம்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்

7. பிரமுகர்களின் அகங்காரம்

-ஆர்.நடராஜன்

8. கருப்பூரம் நாறுமோ? (கவிதை)

-ஆண்டாள் நாச்சியார்

9. ‘நீட்’ தேர்வு மூலம் அதிகரிக்கும் சமூகநீதி!

-பேரா. ப.கனகசபாபதி

10. தமிழர்களின் மதம் எது?

-சுந்தர்ராஜசோழன்

11. பௌத்தமும் தமிழும் - ஒரு பார்வை

-பத்ரி சேஷாத்ரி

12. ஐந்தடுக்கு கோபுரம் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா

13. அறிவுசார் சொத்துரிமை: தேவை விழிப்புணர்வு

-சேக்கிழான்

14. அன்னைத் தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள்- 13

-பொன்.பாண்டியன்

15. எப்பிறப்பில் காண்பேன் இனி?

-இரா.மாது

16. பேரா. சோ.சத்தியசீலன்: பாடவும் தெரிந்த மயில்

-திருப்பூர் கிருஷ்ணன்

17. WAY TO RAMA RAJYA

-SRI SWAMI SIVANANDA

18. மேதா ஸூக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு

19. திராவிட மாடல்  X குஜராத் மாடல் 

-திருநின்றவூர் இரவிக்குமார்

20. பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 2

-பேரா. பூ.தர்மலிங்கம்


.

அமுதமொழி - 19


இந்த நாட்டை வயல்களும், ஆறுகளும், காடுகளும் அடங்கிய நிலப்பரப்பாக நினைக்காமல், இதனை அன்னை என நினைத்து வழிபடுகிறேன். 

அன்னையின் மார்பிலே ஒரு அரக்கன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய குருதியை உறிஞ்சுவானாகில் மகன் கவலை யாதுமின்றி, தனது மனைவி மக்களுடன் உல்லாசமாகக் காலம் கழிப்பானா? தன் அன்னையைக் காப்பாற்ற உடனே வழி தேடுவான் அல்லவா! 

இழிநிலை அடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வலிமை எனக்குண்டு. இதனை நான் உணர்ந்திருக்கிறேன். 

எனக்கு உடல் வலிமை இல்லை. ஆனால் நான் கத்தியையோ, துப்பாக்கியையோ, ஏந்திப் போர் புரியப் போவதில்லை. அறிவின் வலிமையினாலேயே போர் புரியப் போகிறேன்.

-மகரிஷி அரவிந்தர்

நாட்டு வணக்கம் (கவிதை)

-மகாகவி பாரதி


பாரத நாடு - சுதேச வந்தனம்
(ராகம்: காம்போதி; தாளம்: ஆதி)


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ? 
1

ஆடித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும் (2021)

-ஆசிரியர் குழு



ஆடி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய ஆன்றோர், சான்றோரின்
நினைவிற்குரிய நாட்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.


ஸ்ரீ பிலவ வருடம், ஆடித் திங்கள் 
(16.07.2021 - 16.08.2021)

இயற்கையும் வழிபாடும்...

-திருநின்றவூர் இரவிக்குமார்


கரையான் புற்று:
அறிய இயலாத இயற்கையின் அதிசயம்

1. புற்றும் தெய்வமும்


அண்மைச் செய்தி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மேற்கூரை எரிந்தது; விசாரணை தொடக்கம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காட்டு அம்மன் என்று சொன்னால் தெரியாதவர்கள் குறைவு. கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் நிகழும் கொடைவிழாவுக்கு மாவட்ட அளவில் விடுமுறை விடுவார்கள்.

ஆனால் 1982-இல் அந்தக் கோயில் மாசி கொடைவிழாவின்போது கிறிஸ்தவர்கள் இந்துப் பெண்களை கடற்கரையில் மானபங்கம் செய்தனர். இதையொட்டி ஏற்பட்ட கலவரத்தினால் அது நாடு முழுவதும் தெரியலாயிற்று.

கோயில் பின்னணி

மண்டைக்காட்டு அம்மன் இன்று பகவதியாக வழிபடப்படுகிறாள். பகவதி என்பது துர்க்கையைக் குறிக்க கேரளத்தில் பயன்படுத்தப்படும் பெயர். கன்னியாகுமரி பகவதி முதல், மேற்குக்கரை ஓரமாக நூற்றுக்கணக்கான பகவதி ஆலயங்கள் உண்டு.

மற்ற பகவதி ஆலயங்களில் துர்க்கையின் சிலை அமைந்திருக்கும். மண்டைக்காட்டு பகவதியின் ஆலயத்தில் உள்ள முக்கியமான வேறுபாடு- இங்கு உள்ளது ஒரு சிதில் புற்று (மண்ணுக்குள் வாழும் கரையானின் புற்று) என்பதுதான். இருபது அடி உயரமும் இரு சிகரங்களும் கொண்ட இந்த மாபெரும் புற்று மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்மேல் பகவதியின் முகம் பதிக்கப்பட்டு அம்மனாக வழிபடப்படுகிறது.

புவியியலும் அறிவியலும்

நெல்லை மாவட்டம்- நாங்குநேரி முதல் குமரி மாவட்டம்- கருங்கல் வரையிலான பகுதி செம்மண் நிலம். இப்பகுதியில் அன்றுமின்றும் சிதல் புற்றுகள் மிக அதிகம். மிகப்பெரிய கூடுகளைக் கட்டும் சிதல்கள் இவை. மண்ணுக்கு அடியில் முப்பது அடி ஆழம் வரை இவை வேரோடிச் சென்றிருக்கும். மண்ணுக்கு மேல் முப்பது அடி வரை கூம்பாக வளரும்.

இப்படிப்பட்ட பெரிய சிதறல்கள் பொதுவாக பெரும் காடாக இருந்து, பின்னர் பாலைவனமாக ஆன நிலங்களில் உருவாக்கக் கூடியவை. ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற புற்றுகள் உண்டு. பெரிய மரங்கள் விழுந்து மண்ணுக்குள் போய்விட்டு இருப்பதால் அவற்றை உண்ணும் சிதல்கள் உருவாகி வந்திருக்கின்றன.

முதலையுண்ட பாலகனை மீட்ட பதிகம் (கவிதை)

-சுந்தரமூர்த்தி நாயனார்


(கொங்குநாட்டில் உள்ள  ‘திருப்புக்கொளியூர்’ எனப்படும் அவிநாசி திருத்தலத்தில், முதலையுண்ட பாலகனை மீட்க, அருந்தமிழாம் தனது மந்திரப்  பதிகம் பாடி உயிர்ப்பித்தார் சுந்தரமூர்த்தி நாயனார். அந்தப் பாடலே இங்கு பதியப்பட்டுள்ளது. பண்: குறிஞ்சி)


திருச்செங்கோடு
ஆலயத்தில் உள்ள சிற்பம்

1.
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.


2.
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.

நேதாஜி - ஓர் ஆவணம்

-சி.எம்.அமிர்தேஸ்வரன்


Resignation letter of Netaji Subash Chandra Bose,
from the then Indian Civil Services, 1921.

ஐ.சி.எஸ். மாணவரான சுபாஷ் சந்திர போஸ், பரீட்சை முடிவுகள் வெளியானதும் இந்தியாவுக்குத் திரும்பி வந்து அதிகாரியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆங்கிலேய அரசில் கௌரவத்துக்குரிய பதவிகளை வகித்திருக்க அவருக்கு சிறந்த வய்ப்பு இருந்தது. ஆனால், அவர் சுதந்திரப் போரில் குதிக்க முடிவெடுத்தார். எனவே,  தனது  ஆர்டர் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

1921 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் காணப்படும் அவரது கையெழுத்தின் அழகையும் நேர்த்தியையும் விவரிக்கிறது இந்தப் படம்.

மேலும் ஐ.சி.எஸ். பரீட்சைக்கு முன்னர் தான் பெற்றுக் கொண்ட அலவன்ஸ் தொகையான £ 100 (நூறு பவுன்ட்கள் மட்டும்) பணத்தை, தனது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்தியா அலுவலகத்தில் செலுத்தி விடுவதாக உத்தரவாதத்தையும் அந்த ராஜினாமா கடிதத்தில் உறுதி செய்துள்ளார்.

அவர் மக்களின் மனம் கவர்ந்த தலைவன் ஆனது வியப்பில்லை அல்லவா?




பிரமுகர்களின் அகங்காரம்!

-ஆர்.நடராஜன்


சாலையில் செல்லும் VVIPயின் காரை ஒரு கான்ஸ்டபிள் நிறுத்தினார்.  ‘இது என்ன, ஆயிரம் என்கிற எண்ணை தலைகீழாக எழுதியிருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். காரின் உள்ளே இருந்தது அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. அவருக்கு முதலாம் எண் கார் ஒதுக்கப்பட்டது. வெறுமனே 1 என்று எழுதுவதற்கு பதிலாக 0001 என்று எழுதச் சொன்னார் அவர்.

முதலமைச்சரின் காரை கான்ஸ்டபிள் நிறுத்தும் நிலையும் ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? நல்லன எல்லாமே, ஓ அது அந்தக் காலம் என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது.

ஜெயலலிதா எங்காவது பயணப்படுகிறார் என்றால் அவர் செல்லும் சாலைகள் மணிக்கணக்கில் மக்களுக்குச் சொந்தமில்லை. அவருக்கு முன்னும் பின்னும் இதுவே சடங்கு என்றாலும், அவர் காலத்தில் இது ரொம்ப ரொம்ப அதிகம் என்றிருந்தது.

நம் மாநிலத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் மந்திரிமார்கள் செல்கிறார்கள் என்றால் அந்தப் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை. யார் எந்த அவசரம் என்றாலும் பாதுகாப்புக்குட்பட்ட அந்தச் சாலையை தாண்ட முடியாது.

மத்திய மந்திரி, பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் வரும்போதும் போகும்போகும் சாலைகள் அடைக்கப்படுகின்றன. என்ன அவசரம் என்றாலும் யாரும் சாலையைத் தாண்டிப் போக முடியாது.

கருப்பூரம் நாறுமோ? (கவிதை)

- ஆண்டாள் நாச்சியார்



(கலிவிருத்தம்)


567:
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1


568:
கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2

'நீட்' தேர்வு மூலம் அதிகரிக்கும் சமூகநீதி!

-பேரா. ப.கனகசபாபதி


மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான ’நீட்’ தமிழகத்திற்குத்  தேவையில்லை என்று சில அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் சில கூறி வரும் நிலையில், வரும் செப். 12-இல் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு இறுதியாக அறிவித்து விட்டது. இந்நிலையில், நீட் தேர்வின் அவசியம், அதன் சிறப்பு குறித்து, இக்கட்டுரை பேசுகிறது...

மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ‘நீட்’ என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை 2016 ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது, மத்திய அரசு அந்த வருடம் முதலே நாடு முழுவதிலும் நடத்துவதற்கு அனுமதி அளித்தது. பின்னர் 2017 ஆம் வருடம் முதல் அது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் வருடா வருடம் மாணவர்கள் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் திராவிட அமைப்புகள் உள்ளிட்ட பலவும் ஆரம்பம் முதலே நீட் தேர்வினை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்துவிட்டு, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

அதிமுக அரசு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வது என்பது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும் என  தேர்தல் அறிக்கையில் கூறியது. அதன் தலைவர்களும் அந்த வாக்குறுதியை தொடர்ந்து மக்களிடத்தில் தேர்தலின்போது பரப்புரை ஆற்றி வந்தார்கள்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஜூன் ஐந்தாம் தேதி நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவினை அமைத்துள்ளது. அந்தக் குழு தேர்வின் தாக்கம் குறித்து மக்களிடத்தில் கருத்துகளைப் பெற்று ஒருமாத காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்குமெனச் சொல்லப்பட்டது. தற்போது அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் மதம் எது?

-சுந்தர்ராஜசோழன்


மாமல்லபுரம்- மஹிஷாசுர மண்டபம் சிற்பம்

எதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம், ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இந்து மத வெறுப்பைக் கொட்டுவதற்கு அந்த வார்த்தைகள் ஒரு பயன்படு கருவி, அவ்வளவுதான். பெளத்தம், சமணத்தைப் பற்றி இவர்களுக்கு எள் முனையளவும்கூடத் தெரியாது.

அத்திவரதர் புத்தர் சிலையாம். ஏனென்றால் படுத்திருக்கிறாராம். இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக்கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும். இனிமேல் காற்று வரவில்லை என்று திண்ணையில் படுத்திருப்பவரை புத்தர் என்று சொற்பொழிவு கேட்காமல் இருந்தால் சரி.

அதாவது சிலப்பதிகாரம் ஒரு சமண நூல். ஆனால் அது தமிழகத்தின் இந்து மத தொன்மத்தையும்,சான்றுகளையும் மிக நேர்மையாக பதிய வைக்கிறது. ஆயர்களிடம் மகாபாரதம் இருந்ததைச் சொல்கிறது.

"திருஅமர்மார்பன் கிடந்த வண்ணமும்" 

"செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்"

திரு அமர் மார்பன் என்றால் ஸ்ரீநிவாஸன் என்பதன் தமிழ் வடிவம். அவர் படுத்திருக்கும் திருவரங்கத்தையும், அவர் நின்று அருள்புரியும் திருப்பதியையும் காண வந்தேன் என மாங்காட்டு மறையவன், ஏன் தான் தமிழகம் வந்தேன் என்று கோவலனிடம் சொல்கிறான்.

மேலும் சில முது தமிழ் சான்றுகள்...

பௌத்தமும் தமிழும்- ஒரு பார்வை

-பத்ரி சேஷாத்ரி



மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1940-ல் ‘பௌத்தமும் தமிழும்’ என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பௌத்தம் பற்றித் தமிழில் வந்துள்ள புத்தகங்களிலேயே இன்றுவரையில் அதி உச்சம் இந்தப் புத்தகம்தான் என்கிறார்.

இப்புத்தகத்தில் மயிலையார், இவ்வாறு சொல்கிறார்: “பௌத்த மதம் தோல்வியுற்றது, ஆனால் அதன் கொள்கை வெற்றிபெற்றது”. 

எப்படி என்பதற்கு ஐந்து காரணங்களை முன்வைக்கிறார் மயிலையார்...

(1) புத்தரை வைணவர்கள் விஷ்ணுவின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டனர். சைவர்கள் புத்தரை சாஸ்தா/ ஐயனார் என்றாக்கித் தம் படையினரில் ஒருவராகவும், பின்னர் முருகர்/சுப்பிரமணியரோடு தொடர்புபடுத்தினர்.

(2) பிராமணர்கள் வேள்வியில் உயிர்ப்பலி கொடுத்துவந்தனர்; பின்னர் பௌத்தத் தாக்கத்தால் நிறுத்திவிட்டனர்.

(3) இன்றைய இந்துக்கள் அரச மரத்தை வழிபடுகின்றனர். இது பௌத்தத்திலிருந்து வந்தது.

(4) இன்று இந்துமதத்தில் சைவ/ வைணவ/ ஸ்மார்த்த மடங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. இவையெல்லாம் பௌத்தத்தின் சங்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

(5) அத்வைதம் என்பதே மகாயான பௌத்தக் கொள்கை. எப்படியென்றால் இராமானுஜரும் மத்வரும் இக்கொள்கையை ‘பிரச்சன்ன பௌத்தம்’ [மறைமுக பௌத்தம்] என்றனர். எனவே அத்வைதம் பௌத்தமே.

ஆக, மேலே சொன்ன ஐந்து கருத்துகளின் அடிப்படையில் பௌத்தம் என்னும் மதம் தோல்வியடைந்து காணாமல் போயிருந்தாலும், அதன் கொள்கைகள்தான் இன்றும் இந்துமதத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்த எனது கருத்துகள்...


ஐந்தடுக்கு கோபுரம் (கவிதை)

-கவிஞர் நந்தலாலா



பார்ப்பனர் தொடங்கி
பஞ்சமர் வரைக்கும்
ஐந்தடுக்கில் அமைந்த
அன்றைய சமுதாயத்தில்
தேவ சிற்பங்களாய் சமைந்திருந்தோம்.

கலசநுனி காட்டும்
அகண்டவெளி அன்று 
அத்தனை பேருக்கும் இலட்சிய எல்லை.

பூமியைக் கிண்டி புழுக்களைத் தேடு; 
வானத்து நட்சத்திரங்கள்
வயிற்றுப் பசி தீர்க்குமா என்று-
சிறகிருந்தும் நிலத்தையே கீறிய
குப்பைக் கோழிகளின் உலகியல் வாதம்
உவப்பாகவும் இல்லை.

அறிவுசார் சொத்துரிமை: தேவை விழிப்புணர்வு

-சேக்கிழான்


இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனிநபராயினும், தொழில் நிறுவனங்களாயினும், தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் சிறப்பாக உயரவும், தங்கள் தயாரிப்பின் அடிப்படையைப் பாதுகாக்க வேண்டி உள்ளது. இல்லாவிடில், அதிக முதலீட்டு செய்யத் திறனுள்ள எவரும், எந்த ஒரு உற்பத்திப் பொருளையும் எளிதாக நகலெடுத்துத் தயாரித்துவிட முடியும். அதனால், அந்தக் குறிப்பிட்ட பொருளை முதன்முதலில் கண்டுபிடித்தவர் அல்லது தயாரித்தவர் எதிர்பாராத நஷ்டத்தை அடைய நேரிடும்.

இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கவே, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Prortey Right) என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டினுள்ளும், பல நாடுகளுக்கிடையேயும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான படைப்புக்கும் தனிநபரோ, ஒரு நிறுவனமோ உரிமையைப் பதிவு செய்யலாம். அந்த உரிமை உள்ள தனி நபர் அல்லது நிறுவனத்தின் படைப்பு அல்லது பொருளைப் பயன்படுத்துவோர், அதற்கு உரிமைத் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கும். இதுவே அறிவுசார் சொத்துரிமைக்கான எளிய விளக்கம்.

இந்த அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் இந்தியாவில் இன்னமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. உலகமய பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைக்கு பிரதான இடம் இருப்பதால், அண்மைக்காலமாகத் தான் இந்தியாவில் இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.

உலக அளவில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருவனவாக அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமங்கள் உள்ளன. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் உடனடியாக காப்புரிமம் பெறுவது அந்த நாடுகளில் சுமார் 100 ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சாதாரண செயலிக்கும் கூட காப்புரிமம் பெறுவது அங்கு ஒரு வர்த்தக நடவடிக்கையாக உள்ளது. அதன்மூலமாக, அந்தச் செயலியைப் பயன்படுத்தும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கான உரிமைத் தொகையை அளிக்கின்றன. இது ஓர் உதாரணம் மட்டுமே.

இயந்திரங்கள், ஆயுதங்கள், சாதனங்கள், மருந்துப் பொருட்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி- ஆராய்ச்சி நிறுவனங்களால் உருவாக்கப்படும்போது, அதனால் அந்தக் கல்வி நிறுவனமும், சார்ந்த நாடும் காப்புரிமங்களால் லாபம் அடைகின்றன. இந்த விஷயத்தில் நமது நாட்டின் கல்வி- ஆராய்ச்சி அமைப்புகள் மிகவும் பின்தங்கி உள்ளன. நமது அரசு 1990களுக்குப் பிறகே இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்தது; அப்போதுதான் அதற்கான சட்டங்களும் வடிவமைக்கப்பட்டன.

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 13

-பொன்.பாண்டியன்

காண்க: முந்தைய பகுதிகள்




22. அள்ளூர்நன்முல்லையார்

நமது ஹிந்து ஸநாதன தர்மத்தில் இல்லற தர்மத்தில் வாழ்பவருக்கு தினசரி ஆற்ற வேண்டிய இன்றியமையாத பஞ்ச மஹா வேள்விகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

1. பித்ரு யக்ஞம் 
(இறந்தாரை நினைந்து வழிபடல்)

2. தேவ யக்ஞம் 
(தெய்வ வழிபாடு)

3. அதிதி யக்ஞம் 
(விருந்தோம்பல்)

4. ரிஷியக்ஞம் 
(அறிஞர்; முனிவர்கள்; சான்றோர்; பெரியோர் முதலானவர்களை வழிபடுதல்; அவர்கள் தந்த நூல்களை ஓதுதல்)

5. பூத யக்ஞம் 
(அனைத்து வகையான ஜீவராசிகளையும் போற்றுதல். பச்சரிசிக் கோலமிட்டு எறும்பு முதலானவற்றையும் காக்கைக்கு அன்னமிட்டு பறவைகளையும் உணவிட்டு வணங்குதல்).

இவற்றுள் தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையும் அதிதிகள் எனப்படும் விருந்தினரையும் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து போற்ற வேண்டும் என்பது கடப்பாடு.

அசோகவனத்தில் அன்னை சீதா, திரிசடையிடம் விருந்தினரைப் போற்ற இயலவில்லையே எனக் கூறி வருந்துகிறார். அதேபோல அன்னை கண்ணகி தன் கணவன் கோவலனிடம் உங்கள்பிரிவால்,

"அறவோர்க்கு அளித்தலும்
அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு
எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

-என்று கூறி வருந்துகிறார்.

எப்பிறப்பில் காண்பேன் இனி?

-இரா.மாது


பேரா. சோ.சத்தியசீலன்
(1933 ஏப். 14  -  2021 ஜூலை 9)


(தேசிய சிந்தனைக் கழகத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்த 
அமரர் பேரா. சோ.சத்தியசீலன் அவர்களுக்கு அஞ்சலி- 1)
 

நீண்ட நெடிய பராம்பரியத்தின் நிறைவான கனி மரம் ஒன்று சாய்ந்தது. குரு பரம்பரையின் தெளிவான எடுத்துக் காட்டாய் விளங்கிய பெருமகன் நம் கண்ணை விட்டு மறைந்தார். குருவிற்கேற்ற சீடராய்ப் பிறர் நலன் குறித்து வாழ்ந்த நயனுடையாளர் இவ்வுலகு வாழ்வு நீத்தார். நற்றமிழால் நாளும் தொண்டு செய்த நாவீறு நம்மைத் தவிக்கவிட்டுப் பறந்து சென்றுவிட்டது. "டேய், நான் யார் பேச்சைக் கேட்டும் அழுததில்லை. உன் கர்ணன் பேச்சைக் கேட்டு அழுதேன் அடா!" என்று பேராசிரியர் அ.ச.ஞா.போற்றிய பெருந்தகை எங்கு சென்றார்?

1984 ஆம் வருடம், ஜனவரி மாதம் 17 ஆம் தேதி என் தந்தையார் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு தத்தளித்த நின்ற எம் குடும்பத்தைக் காத்து நின்றவர் அண்ணன் நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள். அன்று என் கரம் பற்றி "நானிருக்கிறேன்" என்றார். அவர் மறைவு வரை பற்றிய என் கரத்தை அவர் விடவில்லை. 'பற்றுக அப்பற்றான் பற்றினை' என்பது போல அவர் கரம் பற்றிய நானும் விடவில்லை. அவர் விடவில்லை என்பதைக் காட்டிலும், நானும் குரங்குக் குட்டியைப்போல் அவரைப் பிடித்துக் கொண்டேன் என்பதே உண்மை.

பேரா. சோ.சத்தியசீலன்: பாடவும் தெரிந்த மயில்!

-திருப்பூர் கிருஷ்ணன் 


 பேரா. சோ.சத்தியசீலன்

(பேரா. சோ.சத்திய சீலன் ஐயாவுக்கு அஞ்சலி- 2)

பகுத்தும் தொகுத்தும் மிக அழகாகப் பேசக்கூடிய ஆற்றல் மிகுந்த இலக்கியச் சொற்பொழிவாளர், ‘நாவுக்கரசர்’ முனைவர் சோ.சத்தியசீலன்.

நாவுக்கரசர் என்ற பட்டம், எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட அவருக்குப் பொருந்துவதுபோல வேறு எவருக்கும் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்துவதில்லை.

நான் மிகவும் விரும்பும் என் பெருமைகளில் ஒன்று, அவரது மாணவன் நான் என்பது. திருச்சி தேசியக் கல்லூரியில் சிறிதுகாலம் நான் பயின்றபோது அவரது தமிழ் மாணவனாய் இருக்கும் பேறு பெற்றேன்.

அப்போதைய தேசியக் கல்லூரியில் ஏறக்குறைய வாயில் கதவுகள் என்று சொல்லத்தக்க அளவு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றிற்குக் கதவுகள் உண்டே தவிரக் கம்பிகள் கிடையாது.

மாணவர்கள் தாழ்வான அந்தச் சாளரத்தின் வழியே வெளியே போய்விட முடியும்.

ஆசிரியர் வருகைப் பதிவேடைப் பதிவு செய்யும்போது இருக்கையில் இருந்து  ‘உள்ளேன் ஐயா!’  எனக் குரல் கொடுக்கும் மாணவர்கள், அவர் வருகைப் பதிவேட்டை வாசித்து முடித்து நிமிர்வதற்குள் சாளரத்தின் வழியே மாயமாய் விடுவார்கள்!

ஆசிரியர்களும் அதைக் கண்டுகொள்ளாமல், வகுப்பில் எஞ்சியிருக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள்.

சத்தியசீலன் வகுப்பில் மட்டும் ஒரு புதுமை நிகழும். பிற வகுப்பு மாணவர்களும் கூட அவர் வகுப்பில் தாமே விரும்பி வந்து உட்கார்ந்து அவர் தமிழை அனுபவிப்பார்கள்.

வகுப்பு முழுவதும் மாணவர்களால் நிறைந்து வழியும். மாணவர்களிடம் அவர் தமிழுக்கு அப்படியொரு ஈர்ப்பு இருந்தது.

WAY TO RAMA RAJYA

- SRI SWAMI SIVANANDA



Blessed Immortal Selves!

Out of the fullness of my heart and love for you all I send a Message Divine to inspire you, to instantly elevate and to transform your life. It will transport you from weakness to tremendous strength, from failure to flaming success, from sorrow to blessedness and joy. Hearken, therefore, with utmost attention to this message of Ramanavami.

The most sacred Ramayana abounds with innumerable life-redeeming lessons. But in receiving a message, the receiver eagerly looks for something therein which will throw light upon and guide him in the most pressing problems of the day. He seeks solutions for the crying questions of the moment. And at the present period the one matter that is terribly agitating all minds and hearts is the wide-spread Adharma—falsehood and passion, that is rampant everywhere in the world. To know the cause of it and the direct way to quickly remove it is the thing needed now. And to this end, out of the countless lessons teeming in the Ramayana, I wish to awaken you all to the most important and timely ones for humanity now. All the main ills of the modern world will be removed if these two lessons from the ideal life of Rama are adopted in our lives individually as well as nationally.

மேதா ஸூக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு

சம்ஸ்க்ருத மூலத்தில் உள்ள வேத மந்திரங்களை தமிழாக்கம் செய்து, தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. அவரது மேதா ஸுக்தம் - தமிழாக்கம் இங்கே...

 -ஆசிரியர் குழு

***

மேதா தேவி
மகிழ்வுற்று எம்மிடம் வருக.
எங்கும் நிறைந்தவள்
மங்கலை
நலமருள்பவள்.
வீண்மொழிகளில் களித்திருந்த
நாங்கள்
உனது ஆசியாலேயே
நல்லறிவு பெற்று
வீரர்களாகி
உயர் உண்மைகளைப் பேசலுற்றோம். (1)

திராவிட மாடல் × குஜராத் மாடல்

-திருநின்றவூர் இரவிக்குமார்



இரண்டு வாரங்களுக்கு முன் (2 ஜூலை, 2021) மாநில வளர்ச்சிக்கான ஆலோசனைக்குழு- திரு ஜெயரஞ்சனைத் துணைத்தலைவராகக் கொண்டது- மாநில முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. அதில் திரு. ஸ்டாலின் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதான முன்னேற்றமே தமது நோக்கம் என்றும், அதுவே திராவிட மாடல் (வளர்ச்சி வரைதிட்டம்) என்றும், அதை மையமாகக்கொண்டு பரிந்துரைகளை வழங்குமாறும் தெரிவித்தார்.

அன்று மாலை சன் தொலைக்காட்சியில் ‘திராவிட மாடல் × குஜராத் மாடல்’ என்ற தலைப்பில் விவாதம் நடத்தினார்கள். நாட்டிலேயே வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகம். (முதலிடம் மகாராஷ்டிரம்). ஐந்தாம் இடத்தில் இருப்பது குஜராத். பொருளாதாரம் மட்டுமல்ல, மத்திய அரசு வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தும் 15 குறியீடுகளில் 10க்கும் மேற்பட்ட குறியீடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இப்படியிருக்க, ஏன் மேற்கு வங்கம் அல்லது ராஜஸ்தான் அல்லது உத்தரப்பிரதேசம் அல்லது கேரள மாடல்களை (தமிழக) திராவிட மாடலுடன் ஒப்பிட்டும் முரண்பட்டும் விவாதிக்கவில்லை?

நாம் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்; கருத்து இல்லாமல் இல்லையே?

பண்டிட் தீனதயாள் உபாத்யாய - பொன்மொழிகள் - 2

-பேரா. பூ.தர்மலிங்கம்

***
பொருளாதாரத்தின் இலக்கு:

நமது பொருளாதாரம், தேசத்தின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு தனிமனிதனின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய வேண்டும். இந்த குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்திற்கும் மேலாக, பாரத தேச உணர்வின்/ நெறிமுறைகளின் அடிப்படையில் தனி மனிதனும் தேசமும் உலக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான வழிகளைப் பெறுதல் வேண்டும்.

***