25/01/2020

தை 2020 மின்னிதழ்


 உள்ளடக்கம்:

1. அமுதமொழி -1
-மகாத்மா காந்தி
-மகாகவி பாரதி

3. மகத்தான மாமனிதரின் நூற்றாண்டு துவக்கம்
-சேக்கிழான்

4. விடுதலையின் போர்ப்படைத் தளபதி

-இல.நாராயணன்

5. மாற்றம் விரும்பிய சனாதனி

-முத்துவிஜயன்

6. தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்
-பக்தன்

7. மன்னித்துவிடு மகாத்மா!

-ஆதலையூர் த.சூரியகுமார்

8. பெண்ணுரிமை காத்த பாஞ்சாலி   

-தஞ்சை வெ.கோபாலன்

-ம.கொ.சி.இராஜேந்திரன்

10. சைவத் திருமுறைகள் வளர்த்த தமிழ்

-நெல்லைச் சொக்கர்
-டி.எஸ்.தியாகராஜன்
-ஆசிரியர் குழு

அமுதமொழி -1


சுதந்திரமானவன் யார்?

எவன் ஒருவன் தனக்குத்தானே 
மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, 
அவனே சுதந்திர மனிதனாவான்.

-மகாத்மா காந்தி

பாரத சமுதாயம்

-மகாகவி பாரதி



(ராகம் - பியாக்;  தாளம் - திஸ்ர ஏகதாளம்)

பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய (பாரத)

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)

மகத்தான மாமனிதரின் நூற்றாண்டு துவக்கம்


-சேக்கிழான்
தத்தோபந்த் தெங்கடி
(1920 நவ. 10- 2004 அக். 14)

.
தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதீய சிந்தனையாளர்களுள் அமரர் திரு. தத்தோபந்த் தெங்கடிக்கு முதன்மையான இடமுண்டு. அவர் சிந்தனையாளர் மட்டுமல்லாது நிகரற்ற அமைப்பாளராகவும் விளங்கினார். கட்சி அரசியலைத் தாண்டி ஹிந்துத்துவ சிந்தனையைக் கொண்டுசென்று, தனக்கே உரிய வழியில் அதற்கு நவீன வடிவமும் கொடுத்தார் தெங்கடி. இன்று அவரது பிறந்த நூற்றாண்டு துவங்குகிறது.

1920 நவம்பர் 10இல் அன்றைய மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் ஆர்வி கிராமத்தில் தஎங்கடி பிறந்தார். பெற்றோர்: பாபுராவ் தெஜீபா தெங்கடி- ஜானகி தேவி.

15 வயதிலேயே தன்னையொத்த குழந்தைகளை இணைத்து வார்தா வட்ட காங்கிரஸ் கட்சிக்குள் வானர சேனை என்ற அமைப்பைத் துவங்கி இயங்கியவர்; படிக்கும் காலத்தில் (1936- 38) ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற அமைப்பில் இணைந்து விடுதலைக்காகப் போராடியவர் தெங்கடி.

விடுதலையின் போர்ப்படைத் தளபதி

-இல.நாராயணன் 



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 

(பிறப்பு: ஜன. 23, 1897)

‘உங்கள் ரத்தத்தைத்தாருங்கள்... உங்களுக்குவிடுதலையைத்தருகிறேன்’’
என்று முழங்கியவர் நேதாஜி.

ஆறரை அடி உயரம், அப்பழுக்கில்லாத குழந்தை முகம், அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கருவிழிகள், சொக்கவைக்கும் செக்கச் சிவந்த மேனி...

தூய கதராடை, துள்ளும் புலி நடை... இதுதான் சுபாஷ்சந்திர போஸ்.

மாற்றம் விரும்பிய சனாதனி

-முத்துவிஜயன்


மகாதேவ கோவிந்த ரானடே

(பிறப்பு: ஜன. 18, 1842 - நினைவு: ஜன. 16, 1901)

நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பெருமக்களில் ஒருவர் மகாராஷ்டிராவில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே. சிறந்த அறிவுஜீவி, சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நீதிபதி, அரசியல் தலைவர் என்ற பல பரிமாணங்களை உடையவர் ரானடே.

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

-பக்தன்


சுவாமி சகஜானந்தர்
(பிறந்த தினம்: ஜன. 27, 1890)

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.

மன்னித்துவிடு மகாத்மா!

- ஆதலையூர் த.சூரியகுமார்

மகாத்மா காந்தி
(பலிதான தினம்: ஜனவரி 30, 1948)

(நினைவஞ்சலிக் கவிதை)

புயலொன்று புறப்பட்டுவந்தபோது,
ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க.
அணைகள் கட்டிப் பார்த்தார்கள் தடுக்க.
நீ மட்டும்தான் பூவாக நின்று போராடினாய்.

அன்னியர்கூட்டம் அணு ஆயுதம் ஏந்தி நின்றபோது
நீ மட்டுமே அன்பை ஆயுதமாக ஏந்தி நின்றாய்.
முரட்டுக் கூட்டங்களுக்கு முன் நீ முன்வைத்ததெல்லாம்
முன்பு யாரும் சொல்லாத மந்திரம்.

பெண்ணுரிமை காத்த பாஞ்சாலி

-தஞ்சை வெ.கோபாலன்


மகாகவி பாரதியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் நம் மனதில் தோன்றுகின்ற எண்ணம், அவனது தேசபக்தி, இறையுணர்வு, இலக்கியத் தேடல், சுதந்திரத்தில் நாட்டம், இவற்றோடு தனது மானசீக குருவாகப் போற்றிய சகோதரி நிவேதிதா தேவியின் சந்திப்பால் ஏற்பட்ட பெண் சமத்துவம் ஆகிய உணர்வுகளாம்.

தேச சுதந்திரம் அவன் வாழ்ந்த காலகட்டத்தில் எல்லா சுதேசிகளுக்கும் உண்டான இயல்பான உந்துதல். இறையுணர்வு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணில் உதித்து இறைவனைத் துதித்துப் போற்றிய பெரியோர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சி. இலக்கியத் தேடல் அவனுடைய இயற்கையோடு ஒன்றிய இயல்பான வாழ்க்கை. பெண் சுதந்திரம் என்பது சகோதரி நிவேதிதா அம்மையார் அவன் மனதில் இட்ட ஒரு சிறு தீப்பொறி. 

அவன் பாடிய அந்த அக்னிக் குஞ்சை அவன் மனதில் விதைக்கக் காரணமாக இருந்தவர் சகோதரி நிவேதிதை. இந்தத் தாக்கத்தால்தான் பாரதியாரின் பாடல்களில் பெரும்பாலும் பெண்களை உயர்வு செய்யும் எண்ணங்களே பிரதிபலிக்கின்றன. அவன் எழுப்ப விரும்பிய பெருந்தீக்குத் தொடக்கமாக அவன் வைத்த அக்கினிக் குஞ்சுதான் அவனுடைய புதிய ஆத்திசூடி. அதில் “தையலை உயர்வு செய்” என்று அவன் விடுத்த செய்தி, பெரியவர்களுக்கு அல்ல; குழந்தைகளுக்கு. பயிரை விதைக்க வேண்டிய இடம் பார்த்து விதைத்தான், எதிர்காலம் தையலர்க்குப் பெருமை சேர்க்கும் என்ற அவனது உள்ளுணர்வினால். “தையல் சொல் கேளேல்” எனும் அறிவுரை நிலவி வந்த காலத்தில் “தையலை உயர்வு செய்” என உரக்கக் குரல் கொடுக்கத் துணிந்தவன் மகாகவி பாரதி.

விவேகானந்தம்: நூல் அறிமுகம்

-ம.கொ.சி.இராஜேந்திரன்


விவேகானந்தம்

(சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்கும் படைப்புகள்)



அன்புடையீர்,

வணக்கம்!

“சுவாமி விவேகானந்தரின் எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த பக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று’’ என்று சொல்வார் மகாத்மா காந்தி.

“ஆன்மிகத் துறையின் உச்சியை அடைந்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் தனது வாழ்நாட்களை இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் அர்ப்பணித்தார். அவர் இப்போது உயிருடன் இருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையில் இன்றைய இந்தியா அவரால் உருவாக்கப்பட்டதாகும்’’ என்பார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

சைவத் திருமுறைகள் வளர்த்த தமிழ்

-நெல்லைச் சொக்கர்
சைவ சமயக் குரவர்கள் நால்வர்

தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன எனினும் அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை; தொகுக்கப்படவுமில்லை. பரிபாடல் போல நெடிய செய்யுளாக இல்லாமல், கலிப்பா வகையினதாக, நான்கடி கொண்டதாக, இனிய, எளிய சொற்களால் இயன்ற அந்த தோத்திர இலக்கியங்கள், தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்திலும் திருமுறைகள் தங்கள் செல்வாக்கினைச் செலுத்தின. அறுபத்துமூவரின் வரலாறுகளை அங்கு சரிதமாகவே பாடும் அளவுக்கு, வீரசைவத்தில் தனது தாக்கத்தைச் செலுத்தும் அளவுக்கு திருமுறைகளின் செல்வாக்கு வளர்ந்திருந்தது.

A Seer’s Visualization of Indian History

-Prof. Dr.C.I.Issac


Introduction:


This is an year specific to the Bharatha Varsha, the 150th birth time of a lofty seer, Swami Vivekananda. As a Sanyasin he was not only confined to the frontiers of the traditional ascetic space but he had also registered his presence in his contemporary material space of Mother India. He marked his charisma in the spiritual as well as material, empirical as well as epistemological terrain of the nation. He tendered his firm belief in the ability of Indian youth and it is attested by quoting the Upanishad mantra of “Amruthasya puthraha”[sons of immortal bliss].

India has a long, but constant and continuous history of about ten thousand years. No other nation has such a long sequential tradition like India. All movements and waves that appeared in the long ride of its onward movement one can see several spins in its history. No doubt all these gyrate were in conformity with its age old traditions and good practices. Such twist never nullifies the earlier but always be a modified version that fit to the time. This is the general phenomena of Indian history from the days of Vedas to the present. It can be seen in its Ithihasa-Purana tradition, Buddhist, Jain literatures and literatures both spiritual and secular. That is why one can say its tradition of history is unbroken.
But the real problem that reflects in the academia is the approach to our history. Since the days of colonialism professional historians as well as academic circles much depending on the Euro-centric tools to interpret our past. This generated a schism in the inner psyche of the society in general and particularly in the campus. Such crumbles in the general social psyche were identified by the Greatest Psyches of India and proposed appropriate remedies in time to time.
One of our great lines of such wise men is Swami Vivekananda. Basically he himself was a sage and philosopher and had well aware of the role of true history to reveal Truth. Let us scrutinize his idea about history in general and particularly of ours.

‘விவேகானந்தம்’ நூல் வெளியீட்டு விழா

-நிகழ்வுகள்-



‘விவேகானந்தம்’ நூலை வெளியிடும் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன், சுவாமி கமலாத்மானந்த மஹராஜ், பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.இராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கவிஞர் குழலேந்தி ஆகியோர். 


சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின ஆண்டு 2012-13 இல் நாடுமுழுவதும் மிகுந்த உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அச்சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்புவதற்காக தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் ‘விவேகானந்தம்150.காம்’ என்ற இணையதளம் துவக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த இணையதளத்தில் தினந்தோறும் சமூகத்தின் பல்வேறு தரப்பில் உள்ள பெரியோர்கள், ஆளுமைகள், சான்றோர்களின் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகி வந்தன. அவ்வாறு வெளியானவை சுமார் 700 படைப்புகள்.

சுவாமிஜியின் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்த பிறகு, மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்களின் முயற்சியால், அந்த இணையதளத்தில் இடம்பெற்ற படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 190 கட்டுரைகள், கவிதைகளைத் தொகுத்து நூல் வடிவமாக்கும் முயற்சி நடைபெற்றது.

அது தற்போது முழுமை அடைந்து 1208 பக்கங்கள் கொண்ட 3 தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. பதிப்பகத் துறையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அல்லயன்ஸ் நிறுவனம் இந்தத் தொகுப்பை ‘விவேகானந்தம்’ என்ற பெயரில் பதிப்பித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த விலை: ரூ. 1155/-

தேசிய இளைஞர் தின விழாக்கள்

-நிகழ்வுகள்-


தருமை ஆதீனக் கல்லூரியில் 
தேசிய இளைஞர் தின விழா

 ‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ என்ற நூல் வெளியீடு.


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்வி நிறுவனங்களும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் தின விழா, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எம்.ஆர்.ரகுநாதன், அரியலூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியின் முதல்வர் சேகர், தருமபுரம் ஆதீனம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் செல்வநாயகம்,தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஆதவன் தருமு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருமதி ரேணுகா சூரியகுமார் எழுதிய ‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு ஆசீர்வாதமும் பிரசாதமும் வழங்கினார்.

தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி பரமாச்சாரிய சுவாமிகள்
தே.சி.க. மாநிலச் செயலாளர் ஆதவன் தருமுவுக்கு ஆசி வழங்குகிறார்.

***
கோவை கொங்குநாடு கல்லூரியில் 
தேசிய இளைஞர் தின விழா

விழாவில் பேசுகிறார் கல்லூரி மாணவி.

கோவை, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து நடத்திய தேசிய இளைஞர் தின விழா கல்லூரியின் சகோதரி நிவேதிதை அரங்கில் ஜனவரி 13ஆம் தேதி காலை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் செயலர் முனைவர் சி.ஏ.வாசுகி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.இலட்சுமணசாமி வரவேற்றார். கல்லூரி மாணவர்கள் இருவர் சுவாமி விவேகானந்தர் குறித்து அற்புதமாக உரையாற்றினர்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குழலேந்தி, கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவி பூவரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் விவேகானந்தா வாசகர் வட்ட நிர்வாகி பேராசிரியை மோகனப்பிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  பேராசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின்
விவேகானந்தா வாசகர் வட்ட நிர்வாகிகளுடன் தே.சி.க. நிர்வாகிகள்.



அன்றே சொன்னார் அண்ணல்!

-டி.எஸ்.தியாகராசன்


 
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் அவர் அடையாளப்படுத்திய ஏழு பாவங்களை விலக்கி வாழ சற்றே வரலாற்றை திருப்புவோம். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30-இல் புது தில்லியில் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.

அப்போது பத்திரிகைகளுக்கு ஒருவர் விடுத்த செய்தி. “பாபு நமக்கு விட்டுச் சென்றுள்ள பணியை இனிது நிறைவேற்ற நாம் பகீரத முயற்சி செய்ய வேண்டும். பாபு வாழ்ந்ததும், இறந்ததும் நம் அனைவருக்காகவுமே. ஆண், பெண், குழந்தை ஒவ்வொருவருக்குமாக.

பகைமை, பேராசை, வன்முறை, பொய்மை என்னும் தீய வழியிலிருந்து நம்மைத் திருப்பும் பொருட்டும் பாபு தன் வாழ்நாளில் ஓயாது உழைத்தார். அதற்காகவே மரணத்தையும் தழுவினார்.

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

-ஆசிரியர் குழு


தாயுமானவர்

(திருநட்சத்திரம்: தை விசாகம்)
(ஜன. 19)


தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது காலம்: பொ. யு.பின் 1705 – 1742. தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்.