-செங்கோட்டை ஸ்ரீராம்
|
கூரத்தாழ்வார் (திருநட்சத்திரம்: தை – ஹஸ்தம்)
|
.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், (பொது யுகத்திற்குப் பின் 1010), சௌம்ய வருடம், தை மாதம், ஹஸ்த நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில், வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் ராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது.
குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ‘ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர்’ என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.
.
காஞ்சியில் ராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் ‘எதிராசர்’ என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது, கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார்.
.
வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு ராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர்.
எப்போதும் ராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். ராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார்.
.
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் ‘இதனை யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், ராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.