13/01/2021

கடவுளைக் காட்டும் காந்தி (கவிதை)

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

மகாத்மா காந்தி
(நினைவு தினம்: 1948 ஜன. 30)



ஒப்புடன் உண்மைக் காக
    உயிர்தர வேண்டும் என்றே
எப்படி விரும்பி னாரோ
    அப்படி இறந்தார் காந்தி.
இப்படி உயிரை ஈந்தோர்
    உலகினில் எவரும் இல்லை
தப்புற நினைக்க வேண்டாம்
    தர்க்கமும் தருமம் அல்ல!

அற்புதப் பிறவி காந்தி
    அற்புத மரண முற்றார்;
கற்பனை கடந்த சாந்தன்
    கடவுளிற் கலந்து கொண்டார்;
பற்பல நினைந்து பேசிப்
    புலம்புதல் பயித்தி யந்தான்!
நற்குணச் சீலன் காந்தி
    சொற்படி நடப்போம் வாரீர்!

உடலோடு வந்து போகும்
    உருவினில் தெரிவ தன்றிக்
கடவுளை உலகில் யாரும்
    நேருறக் காண்ப தில்லை;
அடைவரும் கருணை அந்தக்
    கடவுளின் அன்பு தன்னை
நடைமுறை வாழ்விற் செய்த
    காந்தியே நமது தெய்வம்!

எத்தவம் முயலு வோர்க்கும்
    இருந்திட வேண்டு மென்னும்
சத்தியத் தூய வாழ்வின்
    சற்குணப் பாறை போன்று
நித்தமும் நமக்கு முன்னால்
    நின்றுகொண் டறிவு சொல்லும்
உத்தமன் காந்தி எம்மான்
    உடலுக்கா உளைந்து போவோம்?

நோன்புடன் மறைந்த காந்தி
    நுண்ணிய உடலின் சாரம்
சாம்பலில் கரைந்து இன்று
    நதிகளிற் கலந்து சத்தாய்த்
தேம்பிடும் உலகம் தேறத்
    திரைகடல் மூலம் சென்று
ஏம்பலைப் போக்கி ஞான
    எழுச்சியைக் கொடுக்கும் எங்கும்!

சூரியன் இறப்பான்; காணும்
    சந்திரன் சூன்ய மாவான்;
பாரொடு விண்ணில் மின்னப்
    பார்க்கிற யாவும் மாயும்.
தேரிய அறிவு கூறும்
    தெய்விக மெய்ம்மை காட்ட
நேரிய காந்தி ஞானம்
    நிரந்தரம் நிலைத்து வாழும்!

காண்க: 




No comments:

Post a Comment