13/01/2021

அவரும் இவரும்

-திருநின்றவூர் இரவிக்குமார்


சுவாமி அகண்டானந்தர்


காந்திஜியும் ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளும்

1946-இல் நவகாளியில் நடந்த மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யும் பணி நடந்து வந்தது. அதைப் பார்வையிட சுவாமி சாரதேஷானந்தர் போயிருந்தார்.  மகாத்மா காந்திஜியும் அங்கு வந்திருந்தார். 

காந்திஜியை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவிகள் தொடர்பு கொண்டபோது அவர்  ‘ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ படிப்பதில் ஆர்வம் காட்டினார். எனவே தினமும் சாரதேஷானந்தர் காந்திஜிக்கு ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளைப் படித்துக் காட்டினார். சில நாட்கள் இது தொடர்ந்து நடந்து வந்தது. 

முஸ்லிம் லீக் தலைவர்களின் நிர்பந்தத்தால் காந்திஜி திடீரென்று நவகாளியை விட்டுப் போய்விட்டார். எனவே காந்திஜிக்கு அமுதமொழிகளைப் படிப்பது நின்றுவிட்டது. 

படித்துக் காட்டிக் கொண்டிருந்த நாட்களில், ஒரு நாள் வழக்கம்போல படிப்பதற்காகப் போன சாரதேஷானந்தரை  காந்திஜியின் செயலாளர் நிர்மல் போஸ் தடுத்து, ‘காந்திஜி வேலையில் ஆழ்ந்திருக்கிறார். அதில் குறுக்கீடு செய்ய முடியாது’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். 

பிறகு இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட காந்திஜி, ‘என்னுடைய வேலைகளில் அதைக் கேட்பதும் ஒன்று இல்லையா?’ என்று வருத்தப் பட்டாராம். இதை நிர்மல் போஸின் மாணவராக இருந்து பின்பு துறவியான சுவாமி யுக்தானந்தர்  கேள்விப்பட்டிருக்கிறார்.

பின்னாளில் அவர் சுவாமி சாரதேஷானந்தரைச் சந்தித்தபோது இதுபற்றிச் சொல்லும்படி கேட்டார். அதற்கு சாரதேஷானந்தர், ‘அதுபற்றிச் சொன்னால் அது தற்புகழ்ச்சி ஆகிவிடும். காந்திஜி மிகவும் உயர்ந்த மனிதர்’ என்றாராம்.

(அவர்: சுவாமி சாரதேஷானந்தர் அன்னை சாரதையிடம் மந்திர தீட்சை பெற்று, பின்னர் துறவியானவர். பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் பல காலம் பணியாற்றியவர்.)



 “கேட்காவிட்டால் மேலும் அதிகம் கிடைக்கும்”

- சுவாமி கௌதமானந்தர் 

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகண்டானந்தர் உடல்நலம் குன்றி இருந்தார். சாரகாச்சியில்  இருந்த அவருக்கு சுவாமி நிராமயானந்தர் (விபூதி மகராஜ்) செயலாளராக இருந்தார். அப்போது காசி இந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவராக இருந்த ஒரு மாணவர் தன் விடுமுறை நாட்களில் அகண்டானந்தருக்குத் தொண்டு செய்ய முன்வந்தார். அவர் பெயர் மாதவ சதாசிவ கோல்வல்கர். அவர் பின்னாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரானார். 

இந்தத் தொண்டர் எப்போது குளிப்பார், எப்போது உணவு உண்பார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏனெனில் அவர் எப்போதும் தன் குருவின் அருகிலேயே இருப்பார்; பணிவிடைகள் செய்வார். 

ஒருநாள் நிராமயானந்தர் சுவாமி அகண்டானந்தரின் அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது, இளம் கோல்வல்கர் தன் குருவிடம் மண்டியிட்டு பிரம்ம ஞானத்தை அருளும்படி வேண்டியதைப் பார்த்தார். அகண்டானந்தரும், “தேரா பிரம்ம ஞானன் ஹோ ஜாயேகா” உனக்கு பிரம்ம ஞானம் கிடைக்கும்- என்று கோல்வல்கரை  ஆசீர்வதிப்பதையும் பார்த்தார். தானும் இதுபோன்ற ஆசியை கேட்டிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டார். 

கோல்வல்கர் போன பிறகு அறையை விட்டு வெளியே வந்த அகண்டானந்தர் அங்கு நிராமயானந்தர்  நிற்பதைப் பார்த்தார். அவரிடம்,  “விபூதி, கேட்பவர்களுக்கு கேட்டது கிடைக்கும். கேட்காதவர்களுக்கு அதைவிட அதிகம் கிடைக்கும்” என்றார். 

அர்த்தம் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் பிரம்ம ஞானத்தைக் கேட்காவிட்டால் உங்களுக்கு பிரம்ம ஞானம் நிச்சயம் கிடைக்கும். அது மட்டுமல்ல, மனித வடிவில் இறைவனுக்குச் சேவை செய்யும் மடத்தின் சேவைப் பணிகளால் உங்களுக்கு இறை இன்பமும் கிட்டும். 

(இவர்: சுவாமி கௌதமானந்தர், ராமகிருஷ்ண அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராகவும் சென்னை மடத்தின் தலைவராகவும் இருக்கிறார்)

- நன்றி: வேதாந்த கேசரி, டிசம்பர்  2020

காண்க:

No comments:

Post a Comment