13/01/2021

உடையவரின் உற்ற துணைவர்

 -செங்கோட்டை ஸ்ரீராம்


கூரத்தாழ்வார்
(திருநட்சத்திரம்: தை – ஹஸ்தம்)

 .
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்,  (பொது யுகத்திற்குப் பின் 1010),  சௌம்ய வருடம்,  தை மாதம்,  ஹஸ்த நட்சத்திரத்தில்,  காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில், வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் ராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது.
குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ‘ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர்’ என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.
 .
காஞ்சியில் ராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் ‘எதிராசர்’ என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது, கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார்.
 .
வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு ராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர்.
எப்போதும் ராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். ராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார்.
 .
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் ‘இதனை யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், ராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.
 .

***

 .
ஒரு முறை ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் ராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.
 .
“இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்”.
 .
“சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்”.
 .
“எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்ய வேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்”.
 .
“சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்”.
 .
“உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்”.
 .
குலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது.
 .

***

 .
“கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே? தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது?”
  .
கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய 88 வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய 80 வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் ராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார்.
 .
வயதில் மிகவும் முதிர்ந்த, ராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது,அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ்நிலை ஏற்பட்ட காலம் அது.
 .
ஒரு  நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் கோயிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.
 .
“இது அரசகட்டளை. ராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை”
 .
“ஆகா,  இது என்ன கொடுமை? வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது”
 .
“ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு ராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்”
 .
“ஐயோ,  இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே! ஐயா வாயில் காப்போரே! நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும்! எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்!”
 .
மிகுந்த வருத்தத்தோடு திருக்கோயிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.
 .

***

 .
எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு 108வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மீது கூரத்தாழ்வான் ‘வரதராஜ ஸ்தவம்’ என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் ராமானுசர்.
 .
“ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்”
 .
“அப்படியே செய்கிறேன் சுவாமி”
 .
“ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்”
 .

***

 .
திருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.
 ..
“மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?”
 .
“தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?”
 .
“என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்”.
 .
“அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு ராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்”
 ..
“அப்படியே தந்தோம்”
 .
ராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, ‘தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்’ என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.
 .

***

 .
“என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா? நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா? உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது”
 .
ராமானுசரின் வாக்கின் படி திருக்கோயிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.
“கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?”
 .
“தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்”.
 .
“ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்”
 .
“ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு”
 .
மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். ராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக் கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை ராமானுசர் கொண்டாடினார்.
 .


காண்க:


No comments:

Post a Comment