13/01/2021

பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்

 -ஜடாயு

மகாகவி பாரதி

மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல். 2000ம் ஆண்டு வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவின் சிலிர்ப்பூட்டும் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ & இளையராஜாவின் உள்ளத்தைத் தீண்டும் குரல்களின் வழியாக இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. சரளமான வரிகளுடன் எளிமையாக உள்ள இந்தப் பாடலின் தத்துவ ஆழமும் ஆன்மீக உச்சமும் பிரமிப்பூட்டுபவை. இந்து தர்மம் கூறும் வாழ்க்கை மதிப்பீடுகளின், வேதாந்த தரிசனத்தின் சாரமாக, விடுதலை விழைவோனின் (முமுக்ஷு) பயணமாக, கீதையின் உட்பொருளின் எதிரொலியாகவே இப்பாடல் உள்ளது என்று கூறலாம்.

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்.

சோம்பலும், பயமும், தூக்கமும் தாமச குணத்தினின்று பிறப்பவை. பல மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பல சமயங்களில் தமோகுணத்தின் ஆளுகைக்குக் கீழ் சென்று மீளமுடியாதபடி அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. பாரதியின் சொந்த வாழ்க்கையிலேயே இத்தகைய காலகட்டங்கள் வந்து கொண்டிருந்தன என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதை உடைத்துக் கொண்டு வெளிவருவதற்கான உறுதியும் அருளும் தெய்வம் தரவேண்டும் என்று இங்கே வேண்டுகிறார்.

‘கீழ்களின் அவமதிப்பும் – தொழில்
கெட்டவர் இணக்கமும் – கிணற்றினுள்ளே
மூழ்கிய தவளையைப் போல் – நல்ல
முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும் …
வாதனை பொறுக்கவில்லை – அன்னை
மாமகளடியிணை சரண்புகுவோம்”

என்று மற்றோர் பாடலிலும் இதனை பாரதி குறிப்பிடுவார்.

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்
.

சோம்பலும் அச்சமும் தொலைந்த மனதில், பொன்னுக்கும் புகழுக்குமான ஆசை, லௌகீக வெற்றிகளுக்கான விழைவு வேகம் கொள்கிறது. ராஜசம் எனப்படும் ரஜோகுணத்தின் ஆளுகை இது. செயல் புரிவதற்கான, போரிடுவதற்கான உத்வேகத்தையும், உற்சாகத்தையும், சக்தியையும், தடைகளைக் கண்டு மீண்டும் மீண்டும் தமோகுணத்தில் சென்று சிக்கிக் கொள்ளாத தன்மையையும் இங்கே கவி வேண்டுகிறார்.

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்.

தன்னலத்தில் விளைந்த செயலூக்கம் என்பதே பெருவாரியான மனிதர்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது. ரஜோகுணம் எனப்படும் இப்பண்பே மானிடத்தின் மையமான இயல்பாகும். இதற்கு அடுத்த நிலை தன்னல மறுப்பில் விளையும் நற்பண்புகளால் ஆன சாத்விகம் என்னும் சத்வ குணம். சத்வ குணத்தால் தூண்டப்பட்டு நிகழும் செயல்கள் அனைத்தும் சாதாரணத் தளத்திலிருந்து உயர்ந்து யக்ஞமாக, வேள்வியாக, தெய்வத்தின் செய்கைகளாக, கர்மயோகமாக ஆகிவிடுகின்றன. அத்தகைய செயல்கள் மேலும் மேலும் விழைவுகளையும் விருப்பு வெறுப்புகளையும் தூண்டாமல் சாந்தியையும் நிறைவையும் தருவதாக உள்ளன. ‘நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்’ என்ற வரி இதனைக் குறிக்கிறது.

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நின்னைச் சரணடைந்தேன்

சாத்விகத்தின் தன்னல மறுப்பும் ராஜசத்தின் செயலூக்கமும் இணையும்போது அதனால் விளையும் சக்தியின் தாக்கம் மிகப்பெரிது. இதுவே மாபெரும் அரசர்களையும் வீரர்களையும் தலைவர்களையும் ஆசாரியர்களையும் அருளாளர்களையும் உருவாக்குகிறது. இந்த சக்தியால் தூண்டப்படும் மனிதரின் மொழிகளும் செயல்களும் அவரளவில் மட்டுமல்ல, உலகத்திற்கே நன்மை தருவதாக அமைந்து விடுகின்றன. அவரது வாழ்க்கை யோகக்ஷேமம் (பிழைப்புக்கான வழி) என்பதிலிருந்து லோகஸங்க்ரஹம் (உலகை ஒருங்கிணைத்தல்), லோகக்ஷேமம் (உலக நலன்) என்பதை நோக்கிச் சென்று விடுகிறது. ‘வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்று கேட்டவர் பாரதி. ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று பிரார்த்தனை செய்தவர். அதே இலட்சியத்தைத் தான் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட என்று இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

நல்லது தீயது நாமறியோம்; அன்னை
நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக
நின்னைச் சரணடைந்தேன்.

வேதாந்த தத்துவத்தின் படி, ஒரு உயிரின் இறுதி விடுதலை என்பது உலக நன்மை என்ற புள்ளியோடு நின்று விடுவதல்ல. அடிப்படை இயல்புகளான சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும், நன்மை தீமை ஆகிய இருமைகளையும் கடந்து உயிரின் உள்ளுறை பொருளான ஆத்மாவை, பிரபஞ்சத்தின் உள்ளுறை பிரம்மத்தை உணர்தலே. அத்தகைய ஒருமை ஞானம் கூடிய நிலையில் அனைத்தும் அன்னையின் அருளாகவே தோன்றுகிறது. அதுவே முழுமையான சரணாகதி, ஆத்ம சாக்ஷாத்காரம், பிரம்ம ஞானம், ஜீவன்முக்தி.

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயுமில்லை; உனக்கே பரம்; எனக்குள்ளவெல்லாம்
அன்றே உனதென்றளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

(அபிராமி அந்தாதி).

மகாகாளி, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று தேவி வடிவங்களையும் முறையே தமஸ், ரஜஸ், சத்வ குணங்களுக்கு அதிதேவதைகளாகவும் அவற்றிலிருந்து கடத்திச் செல்லும் சக்திகளாகவும் தேவி மகாத்மியம் உருவகிக்கிறது. இவை மூன்றையும் உள்ளடக்கி மூன்றையும் கடந்து நிற்பவள் மகாமாயையாகிய பராசக்தி. இவ்வுலகனைத்தும் அவள் விளையாட்டன்றி வேறில்லை. அவளே இப்பாடலில் பாரதி போற்றும் கண்ணம்மா.

நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.


காண்க:

ஜடாயு

நன்றி: தமிழ் ஹிந்து 

(மகாகவி பாரதியின் நினைவுதின நூற்றாண்டு 2020-21) 


No comments:

Post a Comment