13/01/2021

திருச்சந்த விருத்தம் –பகுதி-1 (கவிதை)

 -திருமழிசை ஆழ்வார்


திருமழிசை ஆழ்வார்
(திருநட்சத்திரம்: தை- மகம்)


(சந்தக் கலி விருத்தம்)


752:
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? (1)

753:
ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய்,
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்,
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்,
ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே. (2)

753:
ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்,
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே,
ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று,
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே? (3)

755:
மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்,
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய,
தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்,
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே. (4)

756:
நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோ றும் ஆவியாய்,
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று,
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்,
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே? (5)

757:
நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை,
நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்,
மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து,
ஏகமேந்தி நின்றநீர்மை, நின்கணேயி யன்றதெ. (6)

758:
ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்,
ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்,
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினுனு முன்னையேத்த வல்லனே? (7)

759:
ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து,
ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ,
ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி,
ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே? (8)

760:
தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால்வ ணங்குபாத நின்மலா.நி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (9)

761:
தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே. (10)

761:
தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (10)

762:
சொல்லினால்தொ டர்ச்சிநீ சொலப்படும்பொ ருளும்நீ,
சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ,
சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள் சொல்ல வல்லரே? (11)

763:
உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்தி, மீண்-
டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்,
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே? (12)

764:
இன்னையென்று சொல்லலாவ தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரு மாதியும்,
நின்னையார் நினைக்கவல்லர் நீர்மையால்நி னைக்கிலே. (13)

765:
தூய்மையோக மாயினாய்து ழாயலங்கல் மாலையாய்,
ஆமையாகி யாழ்கடல்து யின்றவாதி தேவ,நின்
நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்,
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே? (14)

766:
அங்கமாறும் வேதநான்கு மாகிநின்ற வற்றுளே,
தங்குகின்ற தன்மையாய்த டங்கடல்ப ணத்தலை,
செங்கண்நாக ணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய்,
சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே? (15)

767:
தலைக்கணத்து கள்குழம்பு சாதிசோதி தோற்றாமாய்,
நிலைக்கணங்கள் காணவந்து நிற்றியேலும் நீடிருங்,
கலைக்கணங்கள் சொற்பொருள்க ருத்தினால்நி னைக்கொணா,
மலைக்கணங்கள் போலுணர்த்தும் மாட்சிநின்றன் மாட்சியே. (16)

768:
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்,
போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந லங்கடல்கி டந்து,மேல்
ஆகமூர்த்தி யாயவண்ண மெங்கொலாதி தேவனே. (17)

769:
விடத்தவாயொ ராயிரமி ராயிரம்கண் வெந்தழல்,
விடத்துவீழ்வி லாதபோகம் மிக்கசோதி தொக்கசீர்,
தொடுத்துமேல்வி தானமாய பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ தென்கொல்வேலை வண்ணாணே. (18)

770:
புள்ளாதாகி வேதநான்கு மோதினாய்அ தன்றியும்,
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ டிப்பிடித்த பின்னரும்,
புள்ளையூர்தி யாதலால தென்கொல்மின்கொள் நேமியாய்,
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி டத்தல்காத லித்ததே. (19)

771:
கூசமொன்று மின்றிமாசு ணம்படுத்து வேலைநீர்,
பேசநின்ற தேவர்வந்து பாடமுன்கி டந்ததும்,
பாசம்நின்ற நீரில்வாழு மாமையான கேசவா,
ஏசவன்று நீகிடந்த வாறுகூறு தேறவே.

772:
அரங்கனே. ரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ்,
மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய்,
நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார்,
குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே. (21)

773:
பண்டுமின்று மேலுமாயொர் பாலனாகி ஞாலமேழ்,
உண்டுமண்டி யாலிலைத்து யின்றவாதி தேவனே,
வண்டுகிண்டு தண்டுழாய லங்கலாய். லந்தசீர்ப்,
புண்டரீக பாவைசேரு மார்ப.பூமி நாதனே. (22)

774:
வானிறத்தொர் சீயமாய்வ ளைந்தவாளெ யிற்றவன்,
ஊன்நிறத்து கிர்த்தலம ழுத்தினாய். லாயசீர்,
நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு,
பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே? (23)

775:
கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் மண்ணலே,
அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்,
சிங்கமாய தேவதேவ, தேனுலாவு மென்மலர்,
மங்கைமன்னி வாழுமார்ப. ஆழிமேனி மாயனே. (24)

776:
வரத்தினில்சி ரத்தைமிக்க வாளெயிற்று மற்றவன்,
உரத்தினில்க ரத்தைவைத்து கிர்த்தலத்தை யூன்றினாய்,
இரத்தநீயி தென்னபொய்யி ரந்தமண்வ யிற்றுளே
கரத்தி,உன்க ருத்தையாவர் காணவல்லர் கண்ணனே. (25)

777:
ஆணினோடு பெண்ணுமாகி யல்லவோடு நல்லவாய்,
ஊணொடோ சை யூறுமாகி யொன்றலாத மாயையாய்,
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்,
காணிபேணும் மாணியாய்க்க ரந்துசென்ற கள்வனே. (26)

778:
விண்கடந்த சோதியாய்வி ளங்குஞான மூர்த்தியாய்,
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே,
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்,
மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே? (27)

779:
படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பௌவநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய்,
மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக,

படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே. (28)

780:
பரத்திலும்ப ரத்தையாதி பௌவநீர ணைக்கிடந்து,
உரத்திலும்மொ ருத்திதன்னை வைத்துகந்த தன்றியும்,
நரத்திலும்பி றத்திநாத ஞானமூர்த்தி யாயினாய்,
ஒருத்தரும்நி னாதுதன்மை யின்னதென்ன வல்லரே. (29)

781:
வானகம்மும் மண்ணாகம்மும் வெற்புமேழ்க டல்களும்,
போனகம்செய் தாலிலைத்து யின்றபுண்ட ரீகனே,
தேனகஞ்செய் தண்ணறும்ம லர்த்துழாய்நன் மாலையாய்,
கூனகம்பு கத்தெறித்த கொற்றவில்லி யல்லையே? (30)


782:
காலநேமி காலனே. கணக்கிலாத கீர்த்தியாய்,
ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே,
வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீர,நின்
பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே. (31)

783:
குரக்கினப்ப டைகொடுகு ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச ரந்துரந்த வாதிநீ,
இரக்கமண்கொ டுத்தவற்கி ரக்கமொன்று மின்றியே,
பரக்கவைத்த ளந்துகொண்ட பற்பபாத னல்லையே? (32)

784:
மின்னிறத்தெ யிற்றரக்கன் வீழவெஞ்ச ரம்துரந்து,
பின்னவற்க ருள்புரிந்த ரசளித்த பெற்றியோய்,
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பின்னைகேள்வ. மன்னுசீர்,
பொன்னிறத்த வண்ணானாய புண்டரீக னல்லையே? (33)

785:
ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்,
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்,
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே? (34)

786:
அம்புலாவு மீனுமாகி யாமையாகி ஆழியார்,
தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் மீசனே. (35)

787:
ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்
வீடுவைத்த வெய்யகொங்கை ஐயபால முதுசெய்து,
ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ? (36)

788:
காய்த்தநீள்வி ளங்கனியு திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து,மாபி ளந்தகைத்தலத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை யுண்டுவெண்ணெ யுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ ரேனமாய வாமனா. (37)

789:
கடங்கலந்த வன்கரிம ருப்பொசித்துஓர் பொய்கைவாய்,
விடங்கலந்த பாம்பின்மேல்ந டம்பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய கொண்டல்வண்ண. தண்டுழாய்,
வடங்கலந்த மாலைமார்ப, காலநேமி காலனே. (38)

790:
வெற்பெடுத்து வேலைநீர்க லக்கினாய்அ தன்றியும்,
வெற்பெடுத்து வேலைநீர்வ ரம்புகட்டி வேலைசூழ்,
வெற்பெடுத்த இஞ்சிசூழி லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ண னல்லையே. (39)

791:
ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்,
ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்,
ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்து,முன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே? (40)

792:
ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்வி ரும்பினாய்,
ஆய.நின்னை யாவர்வல்ல ரம்பரத்தொ டிம்பராய்,
மாய.மாய மாயைகொல்அ தன்றிநீவ குத்தலும்,
மாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே. (41)

793:
வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை,
கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை,
ஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச, பேசுகூச மின்றியே. (42)

794:
வெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா,
கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே,
வஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்,
அஞ்சனத்த வண்ணானாய ஆதிதேவ னல்லையே? (43)

795:
பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்,
போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்,
நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்,
மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே? (44)

796:
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று,
எண்ணுமெண்ண கப்படாய்கொல் என்னமாயை, நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியா,பு னந்துழாய லங்கலம்பு னிதனே. (45)

797:
தோடுபெற்ற தண்டுழாய லங்கலாடு சென்னியாய்,
கோடுபற்றி ஆழியேந்தி அஞ்சிறைப்புள் ளூர்தியால்,
நாடுபெற்ற நன்மைநண்ண மில்லையேனும் நாயினேன்,
வீடுபெற்றி றப்பொடும்பி றப்பறுக்கு மாசொலே. (46)

798:
காரொடொத்த மேனிநங்கள் கண்ண. விண்ணிண் நாதனே,
நீரிடத்த ராவணைக்கி டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை யில்லையென்ப ராதலால்,
சேர்விடத்தை நாயினேன் தெரிந்திறைஞ்சு மாசொலே. (47)

799:
குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து,மண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து பன்றியாய்,
நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே? (48)

780:
கொண்டைகொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்,
உண்டைகொண்ட ரங்கவோட்டி யுள்மகிழ்ந்த நாதனூர்,
நண்டையுண்டு நாரைபேர வாளைபாய நீலமே,
அண்டைகொண்டு கெண்டைமேயு மந்தணீர ரங்கமே. (2) (49)

781:
வெண்டிரைக்க ருங்கடல்சி வந்துவேவ முன்னோர்நாள்,
திண்டிறல்சி லைக்கைவாளி விட்டவீரர் சேருமூர்,
எண்டிசைக்க ணங்களுமி றைஞ்சியாடு தீர்த்தநீர்,
வண்டிரைத்த சோலைவேலி மன்னுசீர ரங்கமே. (50)

802:
சரங்களைத்து ரந்துவில்வ ளைத்துஇலங்கை மன்னவன்,
சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்,
பரந்துபொன்நி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்,
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே. (51)

803:
பொற்றையுற்ற முற்றல்யானை போரெதிர்ந்து வந்ததை,
பற்றியுற்று மற்றதன் மருப்பொசித்த பாகனூர்,
சிற்றெயிற்று முற்றல்மூங்கில் மூன்றுதண்ட ரொன்றினர்,
அற்றபற்றர் சுற்றிவாழு மந்தணீர ரங்கமே. (52)

804:
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்,
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோட,வாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்,
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே. (53)

805:
இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்,
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்,
குலைத்தலைத்தி றத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு,
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே. (54)

806:
மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய்,
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும்,
உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய்,
பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே? (55)

807:
இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக,
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே,
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்,
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே? (56)

808:
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்,
அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்,
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்,
பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே. (57)

809:
மரங்கெடந டந்தடர்த்து மத்தயானை மத்தகத்து,
உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா,
துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாத, வேதியர்
வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே? (58)

810:
சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்,
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா,
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை,
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே. (59)

811:
செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திட, யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே?   (60)

(தொடர்ச்சி…காண்க: பகுதி-2)

***

திருமழிசை ஆழ்வார் பாடல்கள்: ஓர் அறிமுகம்


திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தை மாதம் மக நட்சத்திரத்தில், திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக, திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.

காண்க:

நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இதில் திருச்சந்த விருத்தம் இங்கே (நாலாயிரத் திவ்ய பிரபந்த தொகுப்பு எண்ணுடன்) இடம் பெற்றுள்ளது.

இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.


 


No comments:

Post a Comment