-ஜடாயு
பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தருக்கு அஞ்சலி!
நமது காலகட்டத்தில் தமிழ்நாட்டின் புகழ்மிக்க வேதாந்த ஆசாரியராகவும் ஆன்மிகத் தலைவராகவும் திகழ்ந்த பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காரானந்தர் மே 10, 2021 மாலை, மதுரையில் சித்தியடைந்தார். கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருவத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாமிகளின் மறைவு தமிழ் இந்துக்களுக்கு ஈடுசெய்ய இயலாத மிகப் பெரிய இழப்பாகும்.
1956ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பேரூரில் பரம்பரையான வைதிக அந்தணர் குடும்பத்தில் வைத்தியநாத கனபாடிகள் – அலமேலு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் சுவாமிகள். அவரது பூர்வாசிரமப் பெயர் கோஷ்டேசுவர சர்மா. வேத நிஷ்டையும் வறுமையும் கலந்த குடும்பச் சூழல்.
இளம்வயதிலேயே வேதபாடசாலை வழி பாரம்பரியமாக வேத, சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். சுவாமி சித்பவானந்தரின் நூல்களைத் தொடர்ந்து வாசித்து வந்ததால், ஆன்மிக நாட்டமும், ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் குறித்த பரிச்சயமும் அவருக்கு ஏற்பட்டது.
இல்லறத்தில் புக விரும்பாமல் துறவு வாழ்க்கையையே அவர் மனம் நாடியதால், குடும்பத்தினர் திருமணப் பேச்சை எடுப்பது குறித்த செய்தி தெரியவந்தபோதே, வெளியூரில் இருக்கும்போது சூரியனை சாட்சியாக வைத்து சன்னியாசம் ஏற்றுக்கொண்டதாகவும், பின்பு திருப்பராய்த்துறைக்கு வந்து சுவாமி சித்பவானந்தரை குருவாக அடைந்ததாகவும்
2020ம் ஆண்டு ஓர் உரையில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். “ஓங்காரானந்த” என்ற தீட்சா நாமத்தை அளித்தவர் சுவாமி சித்பவானந்தர் தான்.
பின்னர், பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரது சீடரான சுவாமி பரமார்த்தானந்தரை சாஸ்திர குருவாகக் கொண்டு வேதாந்த சாஸ்திரங்களை ஆழமாகவும், விரிவாகவும் முறையாகக் கற்றார். அதன்பின், சதாசிவ பிரம்மேந்திரர் வழிவந்த அத்வைத அவதூத மரபைச் சார்ந்த புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதியாகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர்.