16/08/2020

ஆவணி 2020 மின்னிதழ்

 

உள்ளடக்கம்

1. அமுத மொழி -8

-மகாகவி பாரதி


-ஆசிரியர் குழு

-ஔவையார்


-சேக்கிழான்


-மகாகவி பாரதி


-நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை


-ம.கொ.சி.இராஜேந்திரன்

-ம.பொ.சிவஞானம்


-நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை


-மாலன்

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

-தஞ்சை வெ.கோபாலன்







அமுத மொழி - 8


வாழிய செந்தமிழ்!

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

-மகாகவி பாரதி

ஆவணித் திங்கள்- ஆன்றோரும் சான்றோரும்

-ஆசிரியர் குழு

வ.உ.சிதம்பரம் பிள்ளை
வ.உ.சிதம்பரம் பிள்ளை


ஆவணி மாதம் அவதரித்த, உலகு நீங்கிய 
ஆன்றோர், சான்றோரின் நினைவிற்குரிய நாட்கள் 
இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

ஸ்ரீ சார்வரி வருடம், ஆவணித் திங்கள்  (17.07.2020 - 16.09.2020)

விநாயகர் அகவல் (கவிதை)

 – ஔவையார்

(ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வரும் 

விநாயகர் சதுர்த்திக்காக இக்கவிதை இங்கு வெளியாகிறது)


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

வையத் தலைமை கொள்! (பகுதி- 1, 2)

-சேக்கிழான்

(புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)


1. தமிழ்த்தாயும் தமிழ்மகளும்…

தமிழகத்தின் தவப்புதல்வரான பாரதி, தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தோய்ந்தவர். பல மொழிகளை அறிந்திருந்த அவர் தமிழின் சிறப்பில் தன்னை மறந்தவர். அதனால்தான்

 ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம் 

-என்று அவரால் பாட முடிந்தது. அதுமட்டுமல்ல,

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை 

-என்றும் பாடி மகிழ்ந்தார் பாரதி. 

ஒரு பொருளைப் பாராட்ட வேண்டுமானால், பல பொருள்களை அவர் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் அதனை திறமையாக ஒப்பிட முடியும் என்பதை அறிந்தவர்களுக்கு, பாரதியின் விசாலமான ஞானம் புலப்படும். தாய்மொழி மட்டுமல்லாது, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தவர் பாரதி. ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிடத்தும், சமஸ்கிருதக் கவிஞன் காளிதாசனிடத்தும் தனது மனதைப் பறிகொடுத்தவர் அவர். தனது பெயரையே ஷெல்லிதாசன் என்றும் காளிதாசன் என்றும் வைத்துக் கொண்டவர் அவர். அதனால்தான், தான் அறிந்த புலவர்களில் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போல இப்புவியில் வேறு யாரும் இல்லை என்று பெருமிதமாகப் பாட அவரால் இயன்றது. 

மகாபாரத இதிகாசம் மீது மிகுந்த காதலுற்றவர் பாரதி. அதனால்தான், ‘பாஞ்சாலி சபதம் என்ற தனிக் காவியத்தை அவர் பாடினார். அதுபோலவே, ஔவையின் பாடல்களிலும் தன்னைப் பறிகொடுத்தவர் அவர்.


சாதி இரண்டொழிய வேறில்லை என்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்!

நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும்

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்! 


-என்று அவர் பாடுகையில், தமிழ்மகள் என்று ஔவையைக் குறிப்பிடுகையில் (பாரத தேசம்), அவரது இலக்கிய ஞானம் நம்மை வியக்க வைக்கிறது.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

-என்பது ஔவையின் ‘நல்வழிபாடல் (2). இதையே வேறு வரிகளில் பாடும் பாரதியின் திறன் மகிழத் தக்கது.

இதனையே பாரதி, ‘பாப்பாப் பாட்டுபாடலில்,

‘சாதிகள் இல்லையடி பாப்பா- குலத்

தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்த மதி, கல்வி- அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர் 

-என்று சொல்லிச் செல்கிறார். அதாவது ஔவையை ஆழ்ந்து கற்றிருந்தாலும், அவரது கருத்தை காலத்துக்கு ஏற்றவகையில் இளம் பருவத்தினருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் இதில் புலப்படுகிறது. 

நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை

-மகாகவி பாரதி



நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே பிரஸ்தாபிக்க விரும்புகின்றோம். நம் பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும், வீரர்களையும் பற்றிச் சரியான பயிற்சி அளிக்கப் படுவதில்லை. இந்த விஷயத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் எழுதினாலும் போதாது. எனினும் இங்கு அதை மிகவும் சுருக்கமாக விவரிப்பது பயனில்லாத விஷயமாக மாட்டாது. 

நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப் படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வி யுறுகின்றார்கள். 

தமிழன் இதயம் (கவிதை)

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை



தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

சோதனைகளை சாதனையாக்கிய சரித்திர நாயகன்

- ம.கொ.சி.இராஜேந்திரன்


 ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை
(1891 செப். 15  –  1934 மே 26)

“ஜான்சி! கவலைப்பட வேண்டாம் எனக்காக நீ உனது கடமைகளை செய்தாயா?” என்றவாறே தனது வலது கையை மெதுவாக நீட்டி,  “எனது லட்சியங்களை நீ நிறைவேற்ற வேண்டும் !” என தழுதழுத்த குரலில் வேண்டிக்கொண்டான் அந்த வீரன்.

அவனது மனைவியான லட்சுமிபாயும் தனது கைகளால் கணவரின் கையை பிடித்து சத்தியம் செய்வது போல மெதுவாக தட்டியபடி,  “கட்டாயம் நிறைவேற்றுவேன்! ஆணையிடுங்கள்” என்றாள்.

தொடர்ந்தான் மாவீரன்: “பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் அதன் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பரக்கும் கம்பீரமான யுத்தக்கப்பலில்தான் நான் பாரதம் திரும்புவேன் என்பதே எனக்கு லட்சியமும் சபதமும் ஆகும். ஆனால் இப்பொழுதுள்ள நிலைமையில் சுதந்திர பாரதத்தை காண்பதற்கு முன் இறந்துவிட்டால் எனது அஸ்தியை பத்திரப் படுத்திவை. நமது தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு, நமது சுதந்திரக் கோடிப் பறக்கும் அதே கப்பலில் எனக்காக நீ போ! நாம் பிறந்த தமிழ்நாட்டின் நாஞ்சில் பகுதியில் எனது தாயாரின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் எனது அஸ்தியின் ஒரு பகுதியை கரைத்துவிடு. மீதியை வளம்மிக்க தமிழ்நாட்டின் வயல்களில் தூவிவிடு. மேலும் நான் விட்டுச் செல்லும் பாரத சுதந்திரத்துக்கான பணிகளைத் தொடர்ந்து நீ செய்து நாடெங்கும் நமது சுதந்திரக் கொடி பறக்கும் என்னை நீ நினைத்துக்கொள்...‘ஜெய்ஹிந்த்’ என்றே கோஷமிட்டு அந்தக் கோடியை வணங்கு!”   

இவ்வாறு மூச்சுத் திணறியவாறே சொல்லி முடித்தவுடன் தனது பூதவுடலை விட்டு என்றும் அழியாத புகழுடம்பை எய்திய அந்த மாவீரனுக்கு அப்போது வயது 42. அவனது மனைவி லட்சுமிபாய்க்கோ வயது 28.

இலக்கியத்தின் எதிரிகள்

-ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம்


ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது, குறை மட்டுமல்ல குற்றமுமாகும்.

பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூகச் சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்ல முடியாது. ஆம், அந்தத் திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது.

இலக்கியத் துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ரா.வுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.

ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ரா.வுக்கு அவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்ப முடியும்?

பாரதி வழங்கிய படிப்பினை!

-நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை


(1956 செப்டம்பர் 11-இல் சென்னை பாரதி சங்கத்தின் சார்பில் சென்னை, தியாகராயநகர், வாணி மகாலில் நடைபெற்ற பாரதியார் விழாவில் தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரை இது...)

அன்பர்களே!

வணக்கம். 

அமரனாகி விட்டதால் கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் நம்முடைய கருத்தில் நின்று காட்சியளிக்கும் தேசிய மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு நாமனைவரும் முதலில் அஞ்சலி செய்வோம்! 

பாரதியை நாம் மறந்து விடாமல், அவர் பாடித் தந்த அறவொழுக்கங்களை வாழ்க்கையில் மேற்கொள்ள நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே இந்த பாரதி சங்கத்தை ஏற்படுத்தி தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் அரும்பெரும் சேவைகள் செய்து அமரராகிவிட்ட ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம்.

இனி, பாரதிப் புலவனை நினைவிற் கொள்ளுவோம். பாரதி எதற்காகத் தோன்றினார்? என்ன செய்தார்? அவர் பாடித் தந்த பாட்டுகளின் குறிக்கோள் என்ன? இப்போதுள்ள சூழ்நிலையில் அவருடைய பாடல்கள் நமக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியவை என்பனவற்றைச் சிறிது சிந்தனை செய்வோம்.

அடிமைத் தனத்தால் நமக்குள் வளர்ந்திருந்த அன்னிய மோகங்களால் மங்கிக் கிடந்த தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி தந்தவன் பாரதிப் புலவன். தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்ப் பண்புகளின் நன்மைகளையும் முற்றிலும் மறந்து கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பிப் புத்துயிர் கொடுத்துப் பழந்தமிழில் நிறைந்து கிடக்கும் நல்லறிவுகளுக்குப் புது மெருகு கொடுத்தவன் பாரதிப் புலவன். தெய்வ நம்பிக்கைக்கும் தினசரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேசப்பட்டு வந்த திண்ணை வேதாந்தத்தைத் திணறச் செய்தவன் பாரதிப் புலவன். தெய்வத்தைக் காணவேண்டுமானால் இல்வாழ்க்கையை வெறுக்க வேண்டும் என்றும், மனைவியையும், மக்களையும் மறக்க வேண்டும் என்றும், சுக போகங்களைத் துறக்க வேண்டும் என்றும் பொது அறிவாகப் போதிப்பது தமிழறிவுக்குப் பொருந்தாது என்பதைச் சொல்லிலும் பாட்டிலும் வாழ்க்கையிலும் வற்புறுத்திக் காட்டியவன் பாரதிப் புலவன்.

ஆங்கில ஆட்சியின் அடக்கு முறையின் காரணமாக மிகத் தீவிரமுள்ள தேசபக்தரான பாரதி, நிச்சயமான வருவாய்க்கு வழியில்லாமல் புதுச்சேரியில் புகுந்திருக்க நேர்ந்தது. அங்கே வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் இல்லாமல் பல நாள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது. அப்படியிருந்தும் அவர் எழுதியதும் பாடியதும் என்ன? வாழ்க்கையை வெறுத்தாரா? மனைவி மக்களைத் துறந்தாரா? உலகத்தை நிந்தித்தாரா? இல்லை. தனக்கும் தன்னைப் போலவே எல்லா மனிதர்களுக்கும் நல்ல உணவு, நல்ல உடை, நல்ல இருப்பிடம் முதலியன கிடைக்க வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிப் பாடினார். எல்லா மக்களும் இல்லறத்தைச் சரியாக நடத்தி உலக இன்பங்களையெல்லாம் நல்ல முறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் அப்படி அனுபவிக்கும் போதே, அதற்கென்று வேறு முயற்சியில்லாமல் எல்லாச் செயல்களிலும், எல்லாப் பொருள்களிலும் ஈசனை உணர வேண்டும் என்றே பாடினார். மொத்தத்தில் தமிழ் நாட்டின் தேசியப் பரம்பரையான நல்ல பண்புகளுக்கெல்லாம் புதுவாழ்வு காட்டியவன் பாரதி புலவன்.

மேலே சொன்ன குறிப்புகளின் உண்மையை பாரதியின் பாடல்களில் பார்ப்போம்.

புதிய கல்விக் கொள்கையைப் புரிந்து கொள்ள...

-மாலன்


உடல் விறைத்திருக்க, கால்கள் நடுநடுங்க “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு” என்று நகைச்சுவை நடிகர் சொல்வதைக் கேட்டு நாம் பலமுறை சிரித்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் அந்தத் துணுக்கு இடம் பெறும் போதும் சிரித்திருக்கிறோம். ஆனால் நம் கல்வி முறை அப்படித்தான் இருக்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?

நமது அரசாங்கங்கள் நம் நாட்டின் கல்விக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து எத்தனை காலம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தல்ல, இருபது அல்ல, 34 நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாகக் கல்விக் கொள்கை என்ற ஒன்று அறிவிக்கப்பட்டது 1986ஆம் ஆண்டு. இந்த 34 ஆண்டுகளில் உலகம், வாழ்க்கை முறை, தேவைகள் எப்படி மாறி வந்திருக்கிறது, அதற்கேற்ப இளைஞர்களைத் தயார் செய்வதைப் பற்றி அரசாங்கங்கள் யோசிக்கவே இல்லை என்பதற்கு இது ஒரு சாட்சி.

இப்போது வெளியாகியிருக்கும் புதிய கல்விக் கொள்கை, பலவீனமான அடித்தளத்தின் மேல் அடுக்கிக் கொண்டே போகாமல் அடித்தளத்தை வலுப்படுத்தி அதன் மேல் காலத்திற்கேற்ற திறன்களை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. 

மனம் போல வாழ்வு

-வ.உ.சிதம்பரம் பிள்ளை



1. நினைப்பும் ஒழுக்கமும்

'மனம்' என்பதும் 'நினைப்பு' என்பதும் ஒரே பொருளைக் கொடுக்கும் சொற்கள், ''மனம் போல வாழ்வு'' என்பது, ''மனிதனது நினைப்புக்குத் தக்கவாறு அவனுடைய வாழ்வு அமைகின்றனது' என்பதே. மனிதன் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே ஆகிறான். மனிதன் எவ்வாறு நினைக்கின்றானா அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிலைமையும் அமைகின்றன. மனிதன் எதை நினைக்கிறானோ அதே ஆகிறான். அவனது நினைப்புகளின் தொகுதியே அவனுடைய ஒழுக்கம்.

பூமியில் மண்ணுள் மறைந்து கிடக்கும் வித்தினின்றே மரம் உண்டாகிறது. அதுபோல, மனிதனுடைய அகத்துள் மறைந்து கிடக்கும் நினைப்பினின்றே அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகின்றது. வித்து இல்லாமல் மரம் உண்டாதல் இல்லை. அதுபோல நினைப்பு இல்லாமல் செயல் உண்டாதல் இல்லை. மனதாரச் செய்கின்ற செயல்களைப் போலவே, தாமேயாகவும் சுபாவமாகவும் நிகழ்கின்ற செயல்களும் நினைப்பினின்றே உண்டாகின்றன.

தமிழகத்தின் சர்தார்!

 -தஞ்சை வெ.கோபாலன்


சர்தார் வேதரத்தினம் பிள்ளை
(1897 25 பிப்ரவரி 25-  1961   ஆகஸ்டு 24)

வேதரத்தினம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் நினைவுக்கு வரும்; ராஜாஜி நினைவுக்கு வருவார். கடுமையான தியாகமும், முரட்டு கதர் உடையும் நம் நினைவுக்கு வரும். அது மட்டுமா? வேதாரண்யத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் 'கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம்' நம் நினைவுக்கு வரும். 

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி அவர் காலமான அறுபதுகள் வரை, வேதரத்தினம் பிள்ளையின் பெயர் சொல்லாமல் எந்த காங்கிரஸ் இயக்கமும் தமிழ்நாட்டில் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவர் தன்னை காங்கிரஸ் இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர், பொதுநலத்துக்காக சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தியாகசீலராக விளங்கியவர். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரைக் கிராமமான வேதாரண்யம் இவரது ஊர். இவரது தந்தையார் அப்பாகுட்டி பிள்ளை என்பவர். உப்பு சத்தியாக்கிரகம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இவரது உடமைகளுக்கும் ஆபத்து வந்து, இவர் கைது செய்யப்படப்போகிறார் என்ற நிலையில் அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒருவர், 90 வயதைக் கடந்த முதியவர் அப்பாக்குட்டி பிள்ளையிடம் வந்து, "ஐயா! நீங்களோ பெரிய குடும்பத்தில் வந்தவர். கெளரவமான குடும்பம். உங்கள் மகன் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டால், அவர் மீது எந்த வழக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்றார். 

அதற்கு அந்த முதிய தேசபக்தர் என்ன சொன்னார் தெரியுமா? எப்படியாவது தனது மகன் ஜெயிலுக்குப் போகாமல் தப்பி, சொத்துக்களும் பறிமுதல் ஆகாமல் போனால் சரி, கேவலம் ஒரு மன்னிப்புக் கடிதம் தானே, கொடுத்துவிடலாம் என்றா எண்ணினார்? இல்லை. இல்லவே இல்லை. அவர் சொன்னார், "என் மகன் வேதரத்தினம் உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதிலும், அவன் சிறைக்குச் செல்வதையே நான் விரும்புவேன்" என்றார். அந்த முதியவரின் தேசப்பற்றுக்கு எதனை உவமை கூற முடியும்?