-செங்கோட்டை ஸ்ரீராம்
நம்மாழ்வார்
(திருநட்சத்திரம்: வைகாசி – விசாகம்)
பாண்டிய நாடு தாமிரபரணி நதியால் வளம் பல பெற்று மலர்ச்சியோடு திகழும் பூமி. அந்த தாமிரபரணி நதிக்கரையில் திருக்குறுகூர் திருத்தலம், சிறப்புறத் திகழ்ந்தது. அவ்வூரின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக ஒரு கதையும் விளங்குகிறது. அந்தக் கதை…
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு யோகி இருந்தார். அவர் அன்புடன் ஒரு நாயை வளர்த்து வந்தார். நாள்தோறும் அந்த நாய் வைணவப் பெரியவர் வீடுகளின் முன் கிடக்கும் எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு திரும்பி வரும். இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் வழக்கம்போல் திருநகரிக்குச் சென்ற நாய் வெகு நேரம் வரையில் திரும்பி வரவில்லை. அதனால் மனம் வருந்திய அந்த யோகி, பொருனையாற்றின் வடகரையில் நின்று தென்கரையிலிருக்கும் திருநகரியினை நோக்கி அந்த நாயின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த நாய் நட்டாற்றில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் பெருவெள்ளம் சூழ்ந்துவிட்டது. அவ் வெள்ளத்தை எதிர்த்து நாய் ஆனமட்டும் நீந்திக் கரையைக் கடக்க முயன்றது. ஆனால் வெள்ளத்தை அதனால் கடக்க முடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அதன் கால்களும் ஓய்ந்துவிட்டன. அது நீரில் மூழ்கி மேலே வந்தது. வயிறு நிறைய ஆற்று நீரையும் குடித்து விட்டது.
அதனால் நாயின் மண்டை வெடித்தது. அந்த மண்டையின் வழியே நாயின் ஆத்மா பேரோளியுடன் எழுந்து விண்வெளி நோக்கிச் சென்றது. அதைக் கண்ட யோகி பெரும் வியப்படைந்தார். நாய் வீடுபேறு பெற்றதை எண்ணினார். ‘எதனால் அதற்கு வீடுபேறு கிடைத்தது?’ என்று சிந்தித்தார். ஆழ்வார் திருநகரியில் வாழும் வைணவர்கள் சாப்பிட்ட இலையிலிருந்த மீதத்தை உண்டதால்தான் அந்த நாய்க்கு இந்த அரும்பெரும் பேறு கிடைத்தது என்பதை முடிவில் உணர்ந்தார். அதனால் அவர் மனம் உருகி கண்களில் நீர் மல்கியது.
வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடமளித்தால் பழுதோ? பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவிச்சொல்லு ஞான தமிழ்க்கடலே!
– என்று இந்தச் சிறப்பு உண்டாகக் காரணமான நம்மாழ்வாரைப் போற்றி பல பாடல்களைப் பாடிப் பணிந்தார். அது முதல் நம்மாழ்வார் மீது ஆராக் காதலும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார். முடிவில் நம்மாழ்வாரின் அருளால் அந்த யோகியும் பரமபதம் அடைந்தார்.
இவ்வளவு பெருமை அந்தத் தலத்துக்கு வரக் காரணமாக அமைந்தவர்தான் சுவாமி நம்மாழ்வார்.