13/05/2020

வாழ்வாங்கு வாழ்ந்த வீரபுருஷர்




-ம.கொ.சி.இராஜேந்திரன்



மதுரை அ.வைத்தியநாத ஐயர்

(பிறப்பு: 1890, மே 16 - மறைவு: 1955 பிப். 23)

பாரத தேசமெங்கும் மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்கள் உச்சகட்டத்தைத் தொட்ட காலம். காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் தியாகத்தின் வடிவங்களாகவே வாழ்ந்த காலமது. சத்யாக்கிரகமும் அகிம்சையுமே ஆயுதமாகக் கொண்டு தங்கள் எதிர்ப்புகளை ஆவேசமாக காங்கிரஸ் வெளிப்படுத்திக்கொண்டிருந்த வேளை. தமிழகத்திலும் ராஜாஜி , வேதரத்தினம் பிள்ளை ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாக்கிரகம் நடைபெறுகிறது. ராஜாஜியும் வேதரத்தினமும் கைது செய்யப்பட்ட பின்னும் போராட்டம் தொடர்கிறது, மதுரை அ.வைத்தியநாத ஐயர் தலைமையில்.


தடையை மீறிப் பேசிய வைத்தியநாத ஐயரை, ஆத்திரமுற்ற ஆங்கிலேய காவலர்கள் புளியமர விளாரால் தாக்கினர்; அத்தோடு மட்டுமில்லாமல் வழக்கறிஞரும் அமைதியான சுபாவம் கொண்டவருமான வைத்தியநாத ஐயரை சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தரையோடு சேர்த்து இழுத்துச் சென்றனர்; உடலெங்கும் ரத்தக் காயத்துடன் சிறையில் அடைத்தனர்.

தான் மட்டும் அல்லாது தனிநபர் சத்யாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளையும் ஈடுபடச் செய்தார். அவரும் பல மாதங்கள் வேலூர் சிறையில் கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அவரும் பல மாதங்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார்.

தனது மூத்த மகனின் மரணத்திலும் அவரது இறுதிச் சடங்கிலும் பங்கேற்காமல் அலிப்புரம் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் வைத்தியநாத ஐயர். தனது மகளின் திருமணத்தைக்கூட சிறைத் தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தி தேச விடுதலைக்காக தனது குடும்பத்தையே ஆகுதியாக்கிய தியாக தீபம் அவர்.

தீண்டாமையை ஒழித்த தீரர்:
.
தமது வாழ்நாளில் மிகப் பெரிய லட்சியமாக தேச விடுதலைக்கு அடுத்து ஹரிஜன மக்களின் நலன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு என்பதையே கொண்டிருந்த கொள்கை வீரர் வைத்தியநாதய்யர். சொல்லில் மட்டுமில்லாது செயலிலும் அதை நிருபித்து காட்டியவர் வைத்தியநாத ஐயர்.

தனது வீட்டில் எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களை தங்கவைத்து அவர்களது முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்டிருந்த ஹரிஜன சேவக சங்கத்தின் தலைவர். 1934லேயே மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு தன்னோடு ஹரிஜன மக்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் செய்யவைத்த ஆற்றல் மிக்கவர்.

இவ்வாறு பல கோயில்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை பல முறை அழைத்து சென்று தீண்டாமையை வேரோடு அழிக்க உண்மையாக உழைத்த உத்தமர். ஆசாரம் மிகுந்த பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஒருபோதும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளிலிருந்து சற்றும் பிறழாத சாதகர்.

சொல்லும் செயலும் ஒருங்கிணைந்த செயல்வீரர்:
.
தமிழக வரலாறு மறக்க முடியாத நாள் 1939 ஜூலை, 8ஆம் நாள், காலை 10 மணி. ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்த கக்கன் (காமராஜர் மந்திரி சபையில் மந்திரியாய் இருந்த மகான்), முருகானந்தம், பூவலிங்கம், சின்னய்யா, முத்து மற்றும் விருதுநகர் நகராட்சி கவுன்சிலர் எஸ்.எஸ்.சண்முக நாடார் என ஆறு பேர் கொண்ட குழுவை தலைமை தாங்கி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் செய்து மாபெரும் அறப்புரட்சி செய்தார் வைத்தியநாத ஐயர்.

கொலை மிரட்டல் விடுக்கப் பட்டாலும், தனது ஜாதியினரால் சாதி விலக்கம் செய்யப்பட்டாலும், உறுதியுடனும் அஞ்சாமலும் ஆலயப்பிரவேசம் செய்த அருந்திறல் வீரர். மேற்கண்ட ஆலயப் பிரவேசத்துக்காக ஆதரவும் ஆலோசனையும் அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அப்போதைய சென்னை மாகாண பிரதம மந்திரியாக இருந்த ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர்.

முன்னதாக ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ராமசாமி பங்கேற்றபோது மேடையில் தீ வைக்கப்பட்டது அப்போது மேடைக்கே ஓடிவந்து அவரைக் காப்பாற்றி தனது காரிலேயே அழைத்துச் சென்றவர் வைத்தியநாத ஐயர். அதன் பிறகும் தொடர்ந்த எதிர்ப்புகளை மீறி, ஆலயப் பிரவேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து சட்டமாக்க உத்தரவு பிறப்பித்தார் ராஜாஜி. அதற்கு மூல காரணமாக இருந்த வைத்தியநாத ஐயரைப் பாராட்டி பெருமிதம் கொண்டார் மஹாத்மா காந்தி.

தேசத்தின் விடுதலைக்காக தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகு வைத்தும் செலவு செய்த சத்தியசீலர். ஒருமுறை நீதிமன்றம் விதித்த அபராதத்திற்காக வைத்தியநாதய்யரின் கார் மற்றும் அவரது சட்டப் புத்தகங்களையும் ஜப்தி செய்தது ஆங்கில அரசு.

நினைவு கூர்வோம் தேசத்தின் நாயகனை:

தான் பிறந்த தேசத்தின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் குடும்பம், சொத்து உள்பட எல்லாவற்றையும் அர்ப்பணித்த ‘மதுரை வீரர்’ வைத்தியநாதய்யர் அவர்களின் பிறந்தநாளான இன்று (16.05.1890) அவரை நினைவு கூர்வோம். இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த வீரபுருஷராம் வைத்தியநாத ஐயரை வணங்குவோம்; அவர் வழி நடப்போம்.


குறிப்பு:.


திரு. ம.கொ.சி.இராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் தமிழக மாநில அமைப்புச் செயலாளர்.



காண்க:

No comments:

Post a Comment