13/05/2020

அம்பிகையின் வாளில் ரத்தம் ...


-பேரா. இளங்கோ ராமானுஜம்

பேலூர் கோயிலில் அருளும் பவதாரிணி தேவி

ஆம் ! உண்மைதான் !

இன்று அம்பிகையின் வாளில் ரத்தம் சொட்டிக்கொண்டேயிருக்கிறது! இது அனைவரின் கண்களுக்கும் புலனாகிறது. கொத்துக் கொத்தாக மனித இனம் கொரோனாவுக்கு பலியாகிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், அவள் வரம்பு மீறிய மனிதனுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறாள்! அம்பிகை வெறும் விக்கிரகமில்லை! கோயிலில் குடிகொண்டிருக்கும் அந்த அம்பிகைத் தெய்வம் மனித இனத்துக்குப் பல சேதிகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறது!

பாரத தேசத்தின் கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் வெறும் கற்சிலைகள் அல்ல. அவை உயிர் ததும்பும் தெய்வங்கள். ஒவ்வொன்றும் ஓர் ஆன்மிக அற்புதச் செய்தியை பறைசாற்றுகின்றது."There is an ideal behind every idol" என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு.

இதற்குப் பின்னால் பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் இருக்கிறது.

சரித்திரத்தை சற்றே ஆராய்ந்து பாருங்கள்...

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றின் சுவடு படாத அந்தக் காலகட்டத்தில் பாரம்பரியத்தின் மங்கிய ஒளி கூட தொடாத அந்தத் தருணங்களில் இறையுணர்வில் மூழ்கித் திளைத்த நமது ரிஷிகள் தங்களது ஆழ்ந்த தியானத்தில் பரமாத்மாவோடு பாலம் அமைத்து அந்தப் பரம்பொருளிடமிருந்து நுட்பமான மந்திரங்களைக் கற்றுத் தெரிந்து கொண்டனர். அறிந்தகொண்ட அந்த நிர்குண ப்ரம்மத்தை அனைவரும் அறிய சகுண ப்ரம்மம் ஆக்கி கோயில்களில் அர்த்தம் பொதிந்த விக்கிரகங்களை நிறுவி அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆன்மிகச் செய்தி சொன்னார்கள்.

ஆனாலும் அம்பிகையின் அர்த்தம் பொதிந்த கரங்கள் சொல்லும் செய்தி மனிதனைச் சென்றடையவில்லையே!

நமக்கெல்லாம் வாழ்க்கைப் பயிற்சி அளிக்கிறாள் அம்பிகை என்னும் இயற்கைத்தாய். மனிதன் இணக்கமாக இருக்கும்வரை இயற்கைத்தாயாகிய அன்னை பராசக்தி சாந்த சொரூபிணியாக இருக்கிறாள். இணக்கம் தவறினால், ஒழுக்கம் கட்டுப்ப்பாட்டை மீறினால் பராசக்தி காளிகாதேவியாக மாறி மனிதனை வதம் செய்கிறாள்.

“காளிகாதேவிக்கு நான்கு கரங்கள் இருக்கின்றன. இடப்பக்கமுள்ள இரண்டு கரங்களுள் ஒன்றில் ஓங்கிய வாளைப் பிடித்திருக்கிறாள். அந்த வாளில் ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. இடப்பக்கமுள்ள மற்றொரு கையில் வெட்டப்பட்ட தலை ஒன்றைப் பிடித்திருக்கிறாள். அது அவளுடைய சொரூபத்தில் ஒரு பகுதியாகும். வலக்கரங்களில் மேலேயுள்ள கரம் அபயமளிக்கிறது. மற்றொரு கை சிவனாரை அடைவதற்கு வழிகாட்டுகிறது. பிரபஞ்சத்தை முறைதவறிக் கையாளுகின்றவர்களுக்கு மரணம்தான் தண்டனையாக வந்தமையும். இயற்கைத்தாயோடு சரியான இணக்கம் வைக்கத் தெரிந்துகொண்டால் அச்சத்துக்கு இடமில்லை. சரீரம் என்னும் சுடுகாட்டில் வாழ்ந்திருக்கும் நாம் பிரபஞ்ச வாழ்வைச் சரியாக பயன்படுத்துவோமானால் பஞ்சேந்திரியங்களை வென்று பழகுவோமானால் நிலையற்ற பொருளிலுள்ள பற்றுதலை நீக்குவோமானால் யாண்டும் அழியாது உள்ளத்தில் இலங்கும் பரவஸ்துவை தரிசிக்கும் தகுதி நமக்கு வருகிறது. அன்னை பராசக்தி பயங்கர வடிவத்தில் காளிகாதேவியாக இருந்துகொண்டு பயத்தை ஊட்டி பயத்தை வெல்வதற்கான வழியையும் சொல்லிக் கொடுத்து நம்மை வாழ்க்கைக்குத் தகுதியுடையவர்களாக ஆக்குகின்றாள்." 

(சுவாமி சித்பவானந்தர் - 'அம்பிகையின் மகிமை' 
- 1981ல் நவராத்ரி விழாவில் சேலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு )

காட்டாற்று வெள்ளத்தில் அதை எதிர்த்து நீந்தும் ராட்சத யானை அடித்துச் செல்லப்படுகிறது. சுண்டுவிரல் அளவில் உள்ள மீன் துள்ளிக் குதித்து எதிர்நீச்சல் போடுகிறது. வளையும் நாணல் உயிர் பிழைக்கிறது; எதிர்க்கும் தென்னை சாய்ந்து மடிகிறது. அம்பிகை என்னும் இயற்கைத்தாயோடு இணக்கமாக இருப்போர் இயற்கையின் கடுங்கோபத்துக்கு பலியாவதில்லை. இணக்கமற்றோர் மரணத்தைத் தழுவுகின்றனர். அப்போது அம்பிகைத்தாயின் வாளில் ரத்தம் சொட்டத் துவங்குகிறது.

அம்பிகை என்னும் இயற்கைத்தாயை சீண்டிப் பார்த்துவிட்டான் மனிதன்!

இந்த இயற்கைத்தாய் தன் ஆதிக்கத்திலுள்ள பஞ்சபூதங்களில் ஆகாசத்தைத் தவிர மற்ற நான்கையும் மனிதகுலத்தின் மீது பாயவிட்டு பயமுறுத்திப் பார்த்துவிட்டாளே!

அப்படியும் மனிதனின் பேராசை அடங்கவில்லையே ! மீண்டும் மீண்டும் பூமித் தாயின் உடலைக் கீறி புண்படுத்திக்கொண்டிருக்கிறானே !

எண்ணெயையும் தாதுக்களையும் தேவைக்கு அதிகமாக எடுத்துவிட்டானே !

கடல் தாயைக் கிளறி அதன் செல்வங்களை மிதமிஞ்சி எடுத்து வணிகம் செய்யும் மனிதன் பூமியும் கடலும் உண்டு செரிக்கமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி பாழ்படுத்திவிட்டான்.

இயற்கை உரங்களை மறந்து ரசாயனக் கலவையை பூமியில் விதைத்து அதை புண்ணாக்கும் கொடூரம்!

ஐக்கிய நாடுகள் சபையின் அறிவியல் ஆய்வாளர்கள் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் கெடு வெறும் பத்து ஆண்டுகளே! அதற்குள் அவன் தன் புண்படுத்தும் கரங்களைப் பண்படுத்தக் கற்றுக்குக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாக நேரும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் மனிதனின் எண்ணிக்கை 1 % விலங்குகள் 99 %. ஆனால் 2011ல் மனிதனின் எண்ணிக்கை 32 % வனவிலங்குகள் 1 %. மீதமுள்ள 67 %  விலங்குகள் மனிதனின் உணவுக்காகவென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் விலங்குகளே இல்லாத நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இப்படி பூமித்தாயின் மற்ற குழந்தைகளை அழிப்பதற்கு மனிதனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அம்பிகை என்னும் இயற்கைத்தாயைத் துன்புறுத்தும் மனிதனை நோக்கித் தான் அவளது ரத்தம் சிந்தும் வாள் பாய்கிறது.

கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டி மலைகள் பருவநிலை மாற்றத்தால் உருகத் தொடங்கி கடல் மட்டத்தை உயர்த்தத் தொடங்கிவிட்டன. பருவநிலை மாற்றத்துக்கு மனிதன் தன பேராசையால் பூமித்தாயைப் புண்படுத்துவதுதானே இதற்குக் காரணம்! இதில் இன்னொரு அழிவு என்னவென்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டிக்குள் உறங்கிக்கொண்டிருந்த தொற்றுக்கிருமிகள் இப்போது உயிர் பெற்றுவிடும் அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மனிதனுக்கு வாழ்க்கைப்பாடம் புகட்டும் அம்பிகைத்தாய் தன் ரத்தம் சொட்டும் வாளை உயர்த்தாமலா இருப்பாள்?

இன்றைக்கு மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்களான மைக்கேல் டீ. கிளேர்,  ஜான் விடால் ஆகியோர் இதே கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றனர்:

“The only way to avert such a catastrophe and assure ourselves that Earth will not become an avenger planet is to heed Mother nature’s warning and cease the further desecration of essential ecosystems…this is one of Mother Nature’s ways of resisting humanity’s assault on her essential life systems…understandably, our forebears came to view such calamities as manifestations of the fury of Gods incensed by human disrespect for and mistreatment of their universe, the natural world. 
Today, educated people generally dismiss such notions, but scientists have recently been discovering that human impacts on the environment, especially the burning of fossil fuels,, are producing feedback loops causing increasingly severe harm to communities across the globe, in the form of extreme storms, persistent droughts, massive wildfires, and recurring heat waves of an deadlier sort…it is high time humanity reconsidered its relationship with nature…human mistreatment of the natural environment has turned out to have distinctly  painful boomerang effects…in all such ways, Mother Nature , you might say, is striking back…you might think of this as mother saying,’ Stop! Do not go past this point or there will be dreadful consequences.”
(‘Is the Covid19 Pandemic Mother Nature’s Response to Human Transgression?’- Michael T. Klare in ‘Common Dreams’ on April 02, 2020)

இயற்கைத்தாய் பொறுமையின் சின்னம். கொஞ்சம் கொஞ்சமாக தன் குழந்தைகளை கண்டித்துத் திருத்துகிறாள். பஞ்சபூதங்களை மனித இனத்தின் மீது திருப்பிவிட்டு திருத்தப் பார்க்கிறாள். அவையெல்லாம் பலனற்றுப் போகும்போதுதான் ‘கொரோனா’  என்ற ப்ரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளாள்.

நீரை மாசு படுத்தும் மனிதன் எல்லை மீறும்போது அம்பிகையின் சினம் கரைபுரளும் வெள்ளமாகிறது. அமைதியே வடிவெடுத்து ஆறுகளில் நீர் ஓடும்போது என்ன அழகு! அதே நீர் கடுங்கோபத்தோடு காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்து அனைவரையும் கபளீகரம் செய்துவிடுகிறது.

அப்போது அம்பிகையின் வாளில் ரத்தம் சொட்ட ஆரம்பிக்கிறது.ஆனாலும் மனிதன் திருந்தவில்லை.

யாகசாலையில் ஒளிரும் அக்னி உணவை உருவாக்க உதவும். அதே அக்னி ஆஸ்திரேலியாவின் காடுகளை துவம்சம் செய்யும் போது, மனிதனுக்கு தானே பருவநிலை மாற்றம் செய்து பூமியைக் கொதிக்க வைத்துவிட்டது தெரியவில்லையே!

அப்போது வாளைச்சுழற்றி அம்பிகை ரத்தம் சிந்த வைத்துவிட்டாளே! ஆனாலும் மனிதன் மாறவில்லை .

பொறுமைக்கு எடுத்துக்காட்டு பூமித்தாய். அவளை மனிதன் எவ்வளவு புண்படுத்துகிறான்! ராட்சதத் துளையிட்டு அவளின் செல்வத்தைக் கொள்ளையடித்து பூமியின் சமநிலையை ஆட்டங்காண வைத்தது மனிதன்தானே! எவ்வளவு சகிப்புத்தன்மை, பொறுமை பூமித்தாய்க்கு!கழிவுகளை ஜீரணித்து உரமாக்குகிறாள்! அவள் சுத்தம் பார்க்கவில்லையே! மனிதன் எல்லை மீறும்போது பொறுமை இழந்த பூமித்தாய் மனித இனத்தை பூகம்பத்தால் காவு வாங்குகிறாளே!

பிறகு அம்பிகையின் வாள் அவனை பதம் பார்க்காதா? ஆனாலும் மனிதன் அம்பிகையின் சக்தியை உணரவில்லையே!

இந்த பூதங்களெல்லாம் மனிதனை திருத்தமுடியாமல் போனபோதுதான் இயற்கைத்தாய் ‘கொரோனா’ என்ற கொடூர தொற்றுக்கிருமிகளை மனிதன் மீது ஏவி விட்டு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறாள்.

கொரோனா தொற்றுக்கிருமிகளோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வௌவால்களையும், எபோலா தொற்றுக்கிருமிகளோடு உயிர் வாழும் சிம்பன்சி குரங்குகளையும் தொந்தரவு செய்யாத வரை அந்தக் கிருமிகள் மனிதனை ஒன்றும் செய்வதில்லை. ஷிஜென்கிலி (Shizhengli) என்ற வௌவால் ஆராய்ச்சியாளர் கொரானா தொற்றுக்கிருமிகளை தன் உடலில் தாங்கிக்கொண்டிருக்கும் குதிரையின் பாதங்களைப் போன்ற முகத்தை உடைய வௌவால்களும், அவை இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இணக்கத்தோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

அதே போல தமிழகத்தில் பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் கொரானா கிரிருமிகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் வவ்வால்களும், அந்தக் கிராமத்து மக்களும் இணக்கத்தோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வௌவால்களுக்குத் தொந்தரவு தரக்கூடாது என்ற எண்ணத்தில் பட்டாசு கூட வெடிப்பதில்லை.

இணக்கமாக இருந்தால் யாருக்கும் தொந்தரவுயில்லை. அதனால்தான் ஷிஜென்கிலி என்ற அந்த ஆராய்ச்சியாளர்,  ‘கொரோனா பரவல் இயற்கை கொடுத்த தண்டனை' என்கிறார்.

John Vidal reiterates this point in his article “Tip of the Iceberg: Is our destruction of nature responsible for Covid 19?”- ‘We disrupt eco system and we shake viruses loose from their natural hosts. When that happens, they need a new host, often we are it.’

அபாயகரமான தொற்றுக் கிருமிகள் அப்பாவியான விலங்கினிடம் இணைந்து வாழ்வதற்கு அவர்களிடையே உள்ள இணக்கம் காரணம்.

இயற்கைத்தாய் கற்றுத் தரும் பாடம் எதுவெனில், நாம் அனுசரித்து இணக்கமாக வாழும் பரியந்தம் கொலைவெறி கொண்ட கொரோனாவால் கூட நமக்கு ஆபத்து இல்லை. இணைந்து வாழும் இந்த வாழ்க்கை ரகசியத்தை நாம் புரிந்துகொண்டால் இந்த கொரோனா பிரச்னைக்கு எளிதில் தீர்வு காணலாம். ஆனால் என்றைக்கு Pandora Boxஐ உடைக்கிறோமோ அன்று கொடுமையான தொற்றுக்கிருமிகள் கொலைவெறி கொண்டு மனிதனைத் தாக்க ஆரம்பித்துவிடும்.

Andrew Cunningham, a Biologist from Zoological Society of London says, “When bats are stressed out- when they are being hunted or their habitats are damaged – its immune system gets challenged. It finds it harder to cope with pathogens that it otherwise may have taken in the stride…understanding how bats cope with these pathogens can help us learn how to deal with them if and when it spills over  to humans…bats are actually the solution and not the problem.” 
(The New Indian Express, dated 16th April, 2020 Page 4.)

கொலைவெறி கொண்டு கொரோனா மனிதஇனத்தைத் தாக்கி, ஏன், உலகின்  மிகப்பெரும் சக்தியாக விளங்கும் அமெரிக்காவையே துவம்சம் செய்து அடிபணிய வைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இயற்கைத்தாயிடம் மானுடம் கொண்டுள்ள தவறான அணுகுமுறையே. எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டால் இயற்கைத்தாயின் கோபத்தினின்று தப்பிக்கலாம் என்பதற்கு தீர்வினை நமது கலாச்சாரம், நமது ஹிந்து தர்மம்,  பாரதீய சிந்தனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தந்துவிட்டது.

பாரதம் ஒரு யோகபூமி. நமது முன்னோர்கள் இயற்கைத்தாயை எப்படி அணுக வேண்டும் என்று நமது சாஸ்திரங்களில் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். அகிலாண்டமெங்கும் அழகே வடிவெடித்தவளாக அம்பிகைத் தாய் இருக்கிறாள். அவளது அழகை முறையாக ரசித்தால் அது தெய்வ வழிபாடு ஆகிறது. மனிதன் இயற்கையை தெய்வமாக, அன்னையாக அணுகும்போது ஆங்கு இயற்கையை அழிக்கும் எதிர்மறைச் சிந்தனை மனிதனுக்குத் தோன்றாது. பக்திபூர்வமான சிந்தனை மனதில் தோன்றும்; இயற்கையை அழிக்கும் உணர்வு அவனுக்கு உதிக்காது.

மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் சிந்தனையில் ஒட்டுமொத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனக்குத் தீங்கிழைத்த மனித இனத்தை திரும்பித் தாக்க ஆரம்பித்துவிட்டாள் இயற்கை அன்னை என்று அவர்கள் ஓங்கிக் குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். மனிதனுக்கு இறையுணர்வோடு கூடிய மனப்பான்மை வர வேண்டும் என்று ஆணித்தரமாக நம்ப ஆரம்பித்துவிட்டனர். 

நமது பாரதீய சிந்தனை இன்று உலகுக்குக் கைகொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆம், உண்மைதான். நாம் பக்தி உணர்வோடு இயற்கையின் சௌந்தர்யத்தை ரசிக்கவும், வழிபடவும் ஆரம்பித்து விட்டால் அம்பிகையின் சொரூபத்தை உணர்ந்தவர்களாவோம்.

குருமஹராஜ் ராமகிருஷ்ணர் இயற்கை அன்னை அம்பிகையை வழிபட்ட முறை உலகுக்கே எடுத்துக்காட்டாக அமையும். அவர் பஞ்சேந்திரியங்கள் மூலம் மனதின் துணை கொண்டு காண்பதையெல்லாம் சக்தி சொரூபமாக உணர்ந்தார்.

“அறிவிப்பான் நீயென்றால் ஐம்புலம் கடந்து அந்
நெறிநிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே”


-என்று தாயுமானவர் தனது பராபரக்கண்ணியில் கூறுகின்றார். மனதின் பான்மை மனப்பான்மை. மனிதனின் மனப்பான்மையில் மாற்றம் வர வேண்டும். பண்பட்ட மனிதனுக்கு பிரபஞ்சம் முழுவதுமே தெய்வீகமாகக் காட்சி கொடுக்கிறது. பரமஹம்சருக்கு அவரது பஞ்சேந்திரியங்கள் பிரபஞ்சத்தை கடவுள் காட்சியாக காட்டின. ஒருநாள் அவர் வயல்வெளியில் சில தாய்மார்களோடு நடந்து செல்லும்போது பசுமை நிறைந்த வயல் பரப்பையும், மேலே ஆகாயத்தில் கூடியுள்ள கருமேகக்கூட்டத்தையும், அக்கருமேகக்கூட்டத்தின் கீழ் வெள்ளைநிற கொக்குகள் பறந்து போவதாகிய அழகிய காட்சியையும் கண்டார். அக்காட்சி அவருடைய மனத்தை அதீதத்தில் எடுத்துச்சென்றது. அந்த இயற்கை அழகில் அவர் அம்பிகையைப் பார்க்கிறார்.

( சுவாமி சித்பவானந்தரின் விளக்கம் )

பிரபஞ்சம் என்னும் பள்ளியில் உலகிலுள்ள மனிதன் ஒவ்வொருவனும் பாடம் கற்று தன்னை அறிவிலும், உணர்விலும் மேம்படுத்திக்கொள்கிறான். ‘இந்தப் பிரபஞ்சத்தை அவன் பயன்படுத்தலாம்; ஆனால் பாழ்படுத்தக்கூடாது.'( சுவாமி சித்பவானந்தரின் விளக்கம் ). இன்று பிரபஞ்சத்தைத் தன சுயநலனுக்காகப் பாழ்படுத்தியதன் விளைவுதான் ‘கொரோனா’ என்னும் கொடூரக் கிருமிகளின் கோரத்தாண்டவம்.

நாம் கொஞ்சம் கண்களைத் திறந்து, காதுகளைத் தீட்டி இப்பிரபஞ்சத்தை இப்போது, இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த 50 நாள் காலகட்டத்தில் உற்று நோக்கினால் கங்கையிலும், யமுனையிலும்,  மற்ற நதிகளிலும் மாசற்ற சுத்தமான நீர் மகிழ்ச்சியாக, நதிகளாகிய தாங்களே நன்குத் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி துள்ளிக் குதித்துப் பயணிப்பது தெரிகிறது.
இதுவரை நம் தேசத்துக்கு வந்திராத அரிய வகைப்பறவைகள் நம் நீர்நிலைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. நமது வீடுகளில் கூட இதுவரை கேட்டிராத பறவைகளின் இனிய கீதத்தை ரசிக்க முடிகிறது.

கண்களை உயர்த்தி அண்ணாந்து வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் வானம் முழுதும் பரவி எப்போதும் இருந்திராத எண்ணிக்கையில் மின்னிக் கொண்டிருக்கிறது.

அடேயப்பா! எவ்வளவு பெரிய மாற்றத்தை இயற்கைத்தாய் நமக்குக் கொடுத்திருக்கிறாள்! அதுவும் வெறும் 50 நாட்களில்! இந்த குறுகிய காலத்தில் இயற்கையில் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழுமானால், ஏ மனிதா! கொஞ்சம் பூமித்தாயைப் புண்படுத்துவதை நிறுத்தி அவளை தெய்வமாக ஆராதனை செய்து பாரேன்! தாயின் கையில் இருக்கும் சேயைப்போல நீ பத்திரமாக இருப்பாய்!

பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்குப் பாடம் புகட்டி அவனைப் பக்குவப்படுத்துகிறாள் இயற்கைத்தாய் அம்பிகை. கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதனை இயற்கை அன்னை அவனது தவறினைச் சுட்டிக்காட்டித் திருத்துகிறாள். இன்று மனித இனமே தான் இயற்கைச் செல்வத்தைச் சூறையாடி இயற்கையின் சீற்றத்துக்கு ஆளானதை எண்ணி  எண்ணி வேதனைப்படுகிறது. பஞ்சேந்திரியங்களை மனிதன் தனது போகத்திற்காகப் பயன்படுத்தி இயற்கையைச் சீரழித்துவிட்டான். அதற்குரிய தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறான். நல்ல பாடத்தை இயற்கை அன்னை கற்று கொடுத்துக்கொண்டு இருக்கிறாள். மனிதனின் அசுரத்தன்மையை நீக்கி அவனை உயர்ந்த பரிணாம நிலைக்குக் கொண்டு போவதே இயற்கை அன்னையாகிய அம்பிகையின் திட்டம். அது இன்று நடந்து கொண்டிருக்கிறது. 

இயற்கை அன்னை உலகத்திலுள்ள உயிர்களை தனது பிரபஞ்சம் என்னும் பள்ளியில் பக்குவப்படுத்திக்கொண்டு இருக்கிறாள். உயிர்பலி கொடுத்து மனித இனம் பாடம் கற்றுக்கொண்டு தன்னை உன்னதமாக்கிக்கொண்டிருக்கிறது. இயற்கை தெய்வத்தை பாரபட்சம் இல்லாமல் உலகில் ஒவ்வொருவரும் வழிபட்டுக்கொண்டுஇருக்கிறார்கள். தாயைச் சார்த்திருக்கும் குழந்தை கவலையற்று இருப்பதுபோல, இயற்கைத் தாயோடு மனிதன் இணக்கமாக இருந்து பக்திபூர்வமாக அவளை வழிபட்டு அமைதியான, நோயற்ற வாழ்க்கை வாழ இயற்கைத் தாய் அம்பிகை மனித இனத்துக்கு நல்வழி காட்ட அவளைப் பிரார்த்தனை செய்வோம்.

அம்பிகையின் ரத்தம் சொட்டும் வாள் நல்லதொரு பாடத்தை மனிதனுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.

-------------------------------------------------------------------------------------

(ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன நிறுவனர் பூஜ்யஸ்ரீ தவத்திரு சுவாமி சித்பவானந்தரின்  ‘அம்பிகையின் மகிமை’ என்ற நவராத்ரி விழா சொற்பொழிவில் (1981 -சேலம்) அவர் அருளிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது இக்கட்டுரை).


குறிப்பு:



மதுரை, திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேராசிரியர் திரு. இளங்கோ ராமானுஜம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினர்.

No comments:

Post a Comment