13/05/2020

கணித மேதையின் கதை - 2

-ஆதலையூர் த.சூரியகுமார்

ஸ்ரீனிவாச ராமானுஜன்
(டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920)

கணித மேதையின் கதை
(ஸ்ரீனிவாச ராமானுஜன் பற்றிய 100 சுவாரஸ்யமான தகவல்கள்)


26. கணிதப் பேராசிரியரின் கணிப்பு:

ஒருநாள் ராமானுஜனின் நோட்டுப் புத்தகம் ஒன்றை அங்கிருந்த கணிதப் பேராசிரியர் ராமானுஜாசாரியார் எதேச்சையாகப் பார்த்தார். அதில் பல கணக்குகளை எழுதி வைத்திருந்தார் ராமானுஜன். அந்தக் கணக்குகளும், இராமானுஜன் அவற்றுக்கு எழுதி இருந்த விடைகளும் பேராசிரியரை ஆச்சரியப்பட வைத்தன.

பேராசிரியர் ராமானுஜாசாரியார் ராமானுஜரை சோதிக்க விரும்பினார். பல கடினமான கணக்குகளை ராமானுஜனிடம் கொடுத்து அவற்றுக்கு எல்லாம் தீர்வு கண்டு வரும்படி சொன்னார். ராமானுஜம் சிறிதும்கூட தயக்கம் காட்டாமல் உடனடியாக அந்தக் கணக்குகளைப் போட்டு ச் சொன்னார். பேராசிரியர் ஆச்சரியப்பட்டுப் போனார். வழக்கமான முறையில் இருந்து விலகி புதிய முறையில் அந்த கணக்குகளுக்குத் தீர்வு சொல்லியிருந்தார் ராமானுஜன்.

27. பேராசிரியர் தந்த பரிசு:

ராமானுஜனை எப்படியாவது அங்கீகரிக்க வேண்டும் என்று நினைத்தார் பேராசிரியர் ராமானுஜாசாரியார். எனவே ராமானுஜனை உடனடியாக கல்லூரி முதல்வர் திரு. டயஸ் அவர்களிடம் அழைத்துச் சென்றார். தனது பங்குக்கு முதல்வரும் ராமானுஜனின் கணிதத் திறமையை சோதித்துப் பார்த்தார். மிக எளிமையான முறையில் கணக்குகளை எல்லாம் மிகச் சரியாக போட்டுக் காட்டினார் ராமானுஜன். கல்லூரி முதல்வர் டயஸ் ராமானுஜனை வெகுவாகப் பாராட்டினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இதனால் பிரபலமானார் ராமானுஜன். பல மாணவர்களும் அவருடன் ‘பிரெண்ட்ஷிப்’ வைத்துக்கொள்ள விரும்பினார்கள்.

28. கல்லூரி முதல்வரின் கருணை:

தன் வறுமையான சூழ்நிலையிலும் கல்லூரிப் படிப்பில் ராமானுஜன் கவனம் செலுத்தினார். கல்லூரி முதல்வர் டயஸ் ராமானுஜனைப் பற்றி பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டார். ஒருமுறை ராமானுஜனை டயஸ் அழைத்துப் பேசினார். அவரது குடும்ப சூழ்நிலையும் கல்விக் கட்டணம் செலுத்தக் கூட வழியில்லாமல் இருப்பதையும் கேட்டபோது வருத்தமாக இருந்தது. ராமானுஜனுக்கு ஆறுதல் சொன்னதோடு 'பாதிக் கட்டணம் செலுத்தினால் போதும், மீதியை நானே கட்டி விடுகிறேன்' என்று உறுதிமொழி அளித்தார். கல்லூரி முதல்வரின் அந்த உதவி ராமானுஜருக்கு அப்போதைக்கு மிகப்பெரிய தேவையாக இருந்தது. மட்டுமல்லாமல் பிற பேராசிரியர்களும் உதவி செய்தார்கள். அதனால் ராமானுஜனின் கல்விச் செலவு சுமை ஓரளவுக்குக் குறைந்தது.

29. பேராசிரியர்களுக்குப் பெருமை:

வகுப்பறையில் கணிதப் பேராசிரியர்கள் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள். நீண்ட நேரம் அந்த கணக்கிற்காகச் செலவிடுவார்கள். அப்போது ராமானுஜன் எழுந்து இந்தக் கணக்கை இன்னும் சுலபமாகப் போடலாம் என்று சொல்லி, உடனடியாக வந்து சில எளிய வழிமுறைகளில் ஒரு சிலபடி நிலைகளிலேயே அந்தக் கணக்குகளை எல்லாம் போட்டுவிடுவார். ராமானுஜனின் நண்பர்களும் உடன் படிக்கும் மாணவர்களும் அவரது திறமையைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். பேராசிரியர்களும் ராமானுஜனின் திறமையை நினைத்து பெருமை கொள்வார்கள்.

30. சீண்டிப் பார்த்த பேராசிரியர் சிங்காரவேலு:
பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்து வந்த மற்றொரு கணிதப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார், ராமானுஜனிடம் கணிதப் புதிர்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்; விவாதங்கள் செய்வார். அந்த விவாதங்களில் எல்லாம் ராமானுஜன் வெற்றி பெறுவார். வேண்டுமென்றே விவாதங்களை புதிது புதிதாக உருவாக்குவார். அதன் மூலம் ராமானுஜனின் கணிதத் திறமையை மேம்படுத்த முயற்சி செய்வார்; ஆனால் ஒருபோதும் பொறாமைப்பட மாட்டார். சந்தோஷத்தில் பாராட்டுவார்.

31. காட்சி எல்லாம் கணிதம்:

ராமானுஜன் தாம் பார்க்கும் பொருள்களை எல்லாம் கணிதமாகவே பார்ப்பார். வானத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் சந்தோஷத்தில் கை தட்டுவோம். மகிழ்ச்சி அடைவோம். ஆனால் ராமானுஜன் பறவைகள் பறப்பதைக்கூட கணக்காகவே பார்ப்பார். அங்கேயும் தனது கணிதப் புலமையை வெளிப்படுத்துவார். பறவைகளுக்கு இடையே உள்ள கோணங்களையும் கோண இடைவெளியையும் குறித்து ஒரு சக நண்பர்களிடம் பேசுவார். உலகின் இயக்கம் ஒருவித கணித அமைப்பிலேயே நடப்பதாக ராமானுஜன் புதிய வாழ்க்கை தத்துவத்தை சொல்லிக் கொண்டிருப்பார். 

32. கணிதமே மூச்சு:

பச்சையப்பன் கல்லூரியில் நான்கு மாதங்களே அவரால் படிக்க முடிந்தது. ஏனென்றால் அவருக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. கல்விக் கட்டணம் செலுத்துவதில் இப்போது பிரச்னை இல்லை. பிற செலவுகளுக்கும் இப்போது பிரச்னை இல்லை. கல்லூரிப் படிப்பைத் தொடர எல்லாவிதமான வசதிகள் இருந்த நிலையிலும் கூட அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. உடல்நிலை சரியில்லாததால் படிப்பைத் தொடர முடியாமல் கும்பகோணத்துக்கு திரும்பிச் சென்றுவிட்டார். அங்கும் அவருடைய உடல்நிலை சரியாகவில்லை; மோசமாகிக் கொண்டே போனது. ஆனால் அந்த நிலையில் கூட அவர் தனது கணித ஆராய்ச்சியைக் கைவிடவில்லை; தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். தன்னைச் சந்திப்பவர்களிடம் கணிதம் பற்றியே பேசுவார். கணிதம், கணிதம், கணிதம் என்பதே அவருடைய மூச்சாக இருந்தது; பேச்சாக இருந்தது.

33. அப்பாவின் கோபம்:
ராமானுஜனின் அப்பா சீனிவாச ஐயங்கார் மகன் மீது கோபமாக இருந்தார். எப்போது பார்த்தாலும் ராமானுஜம் கணிதம்.. கணிதம்.. என்று புலம்பிக்கொண்டே இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால் ராமானுஜனுடன் படித்தவர்கள் எல்லாம் பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து, வாழ்க்கையில் ‘செட்டில்ஆகி விட்டார்கள். ஆனால் ராமானுஜன் எஃப்.ஏ. தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தது அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயம் தாயார் கோமளத்தம்மாள் மட்டும் ராமானுஜனை விட்டுக்கொடுக்காமல் ஆதரவாகப் பேசிக் கொண்டிருப்பார்.

34. மூன்றாவது தோல்வி:

ராமானுஜன் மூன்றாம் முறையாக தேர்வு எழுதத் தயாரானார். 1907ஆம் ஆண்டில் தேர்வு எழுதினார். ஆனால் இந்த முறையும் அவர் தோல்வி அடைந்தார். இப்போது ராமானுஜன் தன்னை நினைத்து நொந்து போனார். தன் தந்தையின் முகத்தில் எப்படி விழிப்பது என்று வருத்தப்பட்டார். கணிதத்தில் என்னதான் திறமை இருந்தாலும் தன்னுடைய மகன் எஃப்.ஏ. தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையே என்று சீனிவாச ஐயங்கார் வருத்தப்பட்டார். ராமானுஜன் தனக்குள் வருந்தினாலும்கூட தன் கணித ஆய்வுகளை எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார். இதிலிருந்து மாணவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். கணிதத்தில் திறமை உள்ள ஒருவர் மற்ற துறைகளில் தேர்வு எழுதும்போது தவறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தனக்குள் எந்தத் திறமை இருக்கிறதோ அந்தத் திறமையில் முன்னேற வேண்டுமே தவிர, இன்னொரு திறமை நமக்கு இல்லை என்று வருத்தப்படக் கூடாது. ராமானுஜன் எஃப்.ஏ. தேர்வு தேர்ச்சி பெற முடியவில்லையே தவிர கணிதத்தில் அவர் புலியாகவே இருந்தார்.

35. திருமணக் கணக்கு:

ராமானுஜனின் அம்மா கோமளத்தம்மாள் வேறுவிதமாக கணக்குப் போட்டார். தன்மகன் ராமானுஜனுக்கு திருமணம் செய்து வைத்தால் ஒருவேளை அவன் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக முடியும். ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடிவு செய்வான் என்று நினைத்தார். எனவே ராமானுஜனுக்கு பெண் பார்க்கத் தொடங்கினார். ஆனால், ராமானுஜன் திருமணத்தை விரும்பவில்லை. தான் வாழ்க்கையில் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல், நிலையான வருவாய் இல்லாமல் இருக்கும்போது, திருமணம் இப்போது தேவையா என்று யோசித்தார். ஆனால் பெற்றோருடைய பேச்சை மீற முடியவில்லை. எனவே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

36. வேலை வேண்டுமே!

ராமானுஜனுக்கும் ராஜேந்திரம் என்ற ஊரைச் சேர்ந்த ஜானகி என்பவருக்கும் 1909 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கும்பகோணத்தில் அவருடைய வீட்டிலேயே குடும்ப வாழ்க்கை தொடங்கியது. இருந்தாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை. மனைவி, குடும்பம் என்று வந்து விட்டதால் ஒரு வேலையில் சேர வேண்டும் அவசியமும் ஏற்பட்டது. இதுவரை கணிதத்தை மட்டுமே தனது உயிர் மூச்சாக நினைத்துக் கொண்டிருந்த ராமானுஜன் வேலை தேடும்போது தான் அதன் சிரமத்தை உணர்ந்தார். கணிதத் திறமை ஒன்று மட்டுமே தனக்கு நல்ல எதிர்காலத்தைத் தந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த அவர் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனபோது வருத்தப்பட்டார்.

37. சென்னைப் பயணம்:

வேலைதேடி பலரையும் சென்று பார்த்தார் ராமானுஜன். கும்பகோணத்தில் இருந்த ராமசாமி ஐயர் என்ற ஒரு பெரியவரையும் சந்தித்துப் பேசினார். இவ்வளவு பெரிய கணித மேதையான ராமானுஜனுக்கு வேலை கிடைப்பதில் இருக்கக்கூடிய பிரச்னையைப் பார்த்து ராமசாமி ஐயர் வருத்தப்பட்டார். அதேசமயம் இவருடைய திறமை கும்பகோணத்திலேயே முடங்கிவிடக் கூடாது என்று நினைத்து, அவரை சென்னைக்கு அனுப்பிவைக்க விரும்பினார். சென்னையில் உள்ள சில வி.ஐ.பி.களுக்கு சிபாரிசு கடிதங்கள் எழுதி ராமானுஜனை சென்னைக்கு அனுப்பினார். அதுமட்டுமல்லாமல் ராமானுஜன் சென்னை செல்லத் தேவையான செலவுகளையும் ராமசாமி ஐயர் ஏற்றுக்கொண்டார்.

38. சென்னையில் வேலை:

1911ஆம் ஆண்டு பூங்கா நகர் அருகேயுள்ள தனது நண்பர் நரசிம்மனுடன் ஒரே அறையில் தங்கினார் ராமானுஜன். அங்கிருந்துகொண்டே வேலை தேடிக் கொண்டிருந்தார். எவ்வளவு முயற்சி செய்தாலும் அவருக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை. பிறகு திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய அறை எடுத்து தங்கினார். அப்போதுதான் கும்பகோணத்தைச் சேர்ந்த நண்பர் விஸ்வநாதன் என்பவரை சென்னையில் சந்தித்தார். கும்பகோணம் நண்பரைப் பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருந்தார் ராமானுஜன். முதலில் ஏதாவது வருமானம் வேண்டும் என்பதால் நண்பர் விஸ்வநாதன் அவருக்கு ஒரு யோசனை சொன்னார், அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தார் ராமானுஜன். அதில் ஓரளவுக்கு வருமானம் வந்தது.

39. அயல்நாட்டுக்குச் சென்ற ஆய்வுகள்:

சென்னையில் தங்கியிருந்தபோது பச்சையப்பன் கல்லூரியின் கணிதப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியாரை மீண்டும் போய்ப் பார்த்தார் ராமானுஜன். அப்போது சிங்காரவேலு முதலியார் ஒரு யோசனை சொன்னார். ”உங்களுடைய கணிதக் கண்டுபிடிப்புகளை எல்லாம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வையுங்கள். நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும்” என்றார் அவர். ஆனால் ராமானுஜன் தயங்கினார். சிங்காரவேலு முதலியார் அவரை விடவில்லை. “உங்கள் கணிதத் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது மேற்கத்திய நாடுகளின் அறிஞர்களுடைய கணிதத் திறமைக்கு உங்களுடைய கணிதத் திறமைகொஞ்சமும் குறைந்ததில்லை. நீங்கள் தயங்காமல் அனுப்புங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று ஊக்கப்படுத்தினார்.

40. பல்கலைக்கழகத்துக்கு பயணிப்பது எப்படி?

தன்னுடைய கணித ஆய்வுகளை எல்லாம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பலாம் என்ற ஆர்வம் இருந்தாலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு எப்படி அனுப்புவது என்று ராமானுஜனுக்குத் தெரியவில்லை. அப்போதுதான் ‘நெல்லூர் கலெக்டர் திவான்பகதூர் ராமசந்திர ராவ் அவர்களைச் சென்று சந்தியுங்கள்’ என்று ஒரு நண்பர் ராமானுஜனிடம் கூறினார். அவருடைய அறிவுரைப்படி நெல்லூர் கலெக்டரை சந்தித்தார். அந்த கலெக்டர் அப்போது கணித சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார். முதலில் ராமானுஜனை அவர் கண்டுகொள்ளவே இல்லை. தனது கணித ஆய்வுகளை எல்லாம் கலெக்டர் மேஜையில் வைத்துவிட்டு வந்தார் ராமானுஜன். இரண்டாவது சந்திப்பின் போதும்கூட கலெக்டர் ராமசந்திர ராவ் ராமானுஜத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்கள் கணித ஆய்வுகள் எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது” என்று கலெக்டர் கூறினார். கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் ராமானுஜன் தன்னுடைய கணிதப் புதிர்களை எல்லாம் விளக்கிக் கூறினார். மூன்றாவது முறையாக சந்தித்த போதுதான் ராமானுஜனின் கணிதத் திறமையை கலெக்டர் புரிந்துகொண்டார். ‘நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்கிறேன்’ என்றும் சொன்னார். மேலும் ராமானுஜனின் கணித ஆய்வுகளில் மிகுந்த ஆர்வமாகிவிட்டார் கலெக்டர். ராமானுஜன் அப்போது கலெக்டரிடம் ‘எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தாருங்கள்’ என்று கேட்டார். ராமானுஜனின் மீது பச்சாதாபம் பிறந்தது. 'உங்களுக்கு எல்லா உதவியும் நான் செய்கிறேன் ; உங்கள் கணித ஆய்வுகளை மட்டும் நீங்கள் தொடருங்கள்’ என்று உறுதியளித்தார் கலெக்டர் ராமசந்திர ராவ்.

41. கோட்டை கட்டினார்:

நெல்லூர் கலெக்டர் கொடுத்த நம்பிக்கை ராமானுஜனுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. தனது கணித ஆராய்ச்சியை தொடர்ந்துகொண்டே வேலையும் தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் சென்னை கோட்டையில் இருந்த கணக்காளர் அலுவலகத்தில் ராமானுஜனுக்கு ஒரு வேலை கிடைத்தது. மாதம் 20 ரூபாய்தான் சம்பளம். ஆனால் அந்த இருபது ரூபாய் சம்பளத்துக்கான வேலையே கூட ஒரு பேராசிரியரின் சிபாரிசு மூலம்தான் கிடைத்தது. குறைவான வருமானம் என்றாலும் மிகச் சிறப்பாக இந்த வேலையைச் செய்தார். இன்னொரு நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த வேலையில் தொடர்ந்து இருக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் ராமானுஜன்.

42. துறைமுகத்தில் வேலை:

சென்னை போர்ட் டிரஸ்டில் (துறைமுகம்) ஒரு வேலை காலியாக இருப்பதைத் தெரிந்துகொண்டார். ஆனால் அந்த வேலைக்கு பெரிய இடத்து சிபாரிசு வேண்டும் என்றும் கேட்டார்கள். நெல்லூர் கலெக்டரிடம் சிபாரிசு கேட்டார் ராமானுஜன். ராமானுஜனின் நிலையை எண்ணி இரக்கப்பட்ட நெல்லூர் கலெக்டர் உடனடியாக அவருக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்ததுடன், சென்னை போர்ட் டிரஸ்ட் தலைவர் 'சர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங்' அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ராமானுஜன் பற்றி ஒரு குறிப்பும் அனுப்பினார். கலெக்டரின் கடிதம் என்பதால் அந்த கடிதத்துக்கு நிறைய மரியாதை இருந்தது. ராமானுஜனுக்கு துறைமுகத்தில் மாதம் 30 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

43. சென்னைக்கு வந்த குடும்பம்:

30 ரூபாய் சம்பளம் ராமானுஜனுக்கு மறுபடியும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. சென்னைக்கு குடும்பத்தை அழைத்து வந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். ராமானுஜன் தன்னுடைய அம்மாவையும் மனைவியையும் சென்னைக்கு அழைத்து வந்தார். ஜார்ஜ் டவுன் பகுதியில் ஒரு வீடு எடுத்துக் குடியேறினார் ராமானுஜன். 30 ரூபாய் சம்பளம் என்றாலும் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லை என்பதால், பகுதிநேரமாக சில மாணவர்களுக்கு வழக்கம்போல் டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வேலையும் செய்து வந்தார். குறிப்பாக இந்த மாணவர்களுக்கு கணிதத்தை அதிக ஈடுபாட்டுடன் சொல்லிக் கொடுப்பார் .

44. எதிர்பாராத திருப்பங்கள்:

ராமானுஜனின் வாழ்க்கையில் நாடகம் போல இந்தக் கட்டத்தில் சில சம்பவங்கள் நடந்தன. ராமானுஜன் வேலைபார்க்கும் துறைமுகத்தின் தலைவர் 'பிரான்சிஸ் ஸ்ப்ரிங்' ஒரு என்ஜினீயர். அவர் கணக்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடன் பணியாற்றும் பணியாளர்களுடன் எப்போதும் அன்புடன் நடந்துகொள்ளக்கூடியவர். ராவ்பகதூர் நாராயண ஐயர் என்பவர் துறைமுக பொறுப்புக் கழகத்தின் மேலாளராக இருந்தார். மேலும் இந்திய கணித சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் நாராயண ஐயர். இந்த இடத்தில்தான் பணிபுரிந்து வந்தார் ராமானுஜன். அப்போதுதான் அவர் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நாடகம் போல் நிகழ்ந்தன.

45. துண்டுச்சீட்டுகளின் கணக்கு:

ராமானுஜன்தான் கணிதத்தில் புலி ஆயிற்றே! கனவுகூட அவருக்கு கணிதத்தில் தானே வரும்! உறங்கும்போதும் விழிக்கும்போதும் கணக்கு, கணக்கு என்றுதானே செயல்படுவார்! அப்படித்தான் துறைமுகத்தில் வேலை பார்க்கும் பொழுதும் கிடைக்கின்ற துண்டுச் சீட்டுகளில் கூட ஏதாவது ஓர் ஆய்வை எழுதி வைப்பார். அப்படி எழுதி வைத்த ஒரு கணிதக் குறிப்பு அலுவலகக் கோப்புடன் சேர்ந்து முதலில் நாராயண ஐயரிடம் சென்றது. அவரிடமிருந்து அந்தக் குறிப்புகள் துறைமுகத்தின் தலைவர் பிரான்சிஸ் ஸ்ப்ரிங்கிற்குச் சென்றுவிட்டது. பிரான்சிஸ் ஸ்பிரிங் அந்தக் குறிப்புகளைப் பார்த்தார். 'இந்தக் குறிப்புகளை எல்லாம் நாராயண ஐயர்தான் எழுதி இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் கணித சங்கத்தின் தலைவராக இருக்கிறார்' என்று நினைத்து நாராயண ஐயரை அழைத்தார். ‘இப்படி வேலை பார்க்கும் நேரத்தில் ஏன் வேலையை செய்யாமல் இப்படி கணிதக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நாராயண ஐயரோ ‘இது என்னுடைய கையெழுத்து அல்ல. இங்கு வேலை பார்க்கும் ராமானுஜன்தான் இந்த வேலையெல்லாம் செய்திருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். அடுத்த அழைப்பு ராமானுஜனுக்கு வந்தது.

46. பயந்துபோன ராமானுஜன்:

துறைமுகக் கழகத்தின் தலைவர் ஸ்ப்ரிங், ராமானுஜனை அழைத்தார். ராமானுஜனும் மிகவும் அச்சத்துடன் தலைவரிடம் சென்றார். எதற்காக அழைத்திருக்கிறார் என்று தெரியவில்லையே என்று வருந்தியபடியே ஸ்பிரிங் அவர்களை நேரில் சந்தித்தார்.

“அலுவலகப் பணிகளை விட்டுவிட்டு ஏன் இப்படி தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஸ்ப்ரிங் கடுமையாகப் பேசினார். அதுமட்டுமல்லாமல் அவர் எழுதி வைத்திருந்த பிற நோட்டுகளையும் கணித ஆய்வுகளையும் கேட்டு வாங்கிக் கொண்டார்.

47. அடுத்த அழைப்பு:

இப்பொழுது மேனேஜர் நாராயண ஐயர் ராமானுஜத்தை அழைத்துவரச்சொன்னார். நாராயண ஐயரிடம் பயந்தபடியே சென்றார் ராமானுஜன். “இனிமேல் நீங்கள் ரெக்கார்டு பிரிவில் வேலை செய்யக் கூடாது என்று சேர்மன் சொல்லியிருக்கிறார்” என்று ராமானுஜனிடம் சொன்னார் நாராயண ஐயர். ராமானுஜன் கைகளை கட்டிக்கொண்டு ‘இனிமேல் அலுவலக வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்ய மாட்டேன்’ என்று பயந்து நடுநடுங்கிக் கொண்டே சொன்னார். 'ஐயா நீங்கள் தான் எப்படியாவது சேர்மன் அவர்களிடம் சொல்லி இந்த வேலையில் என்னைத் தொடர அனுமதிக்க வேண்டும்’ என்றும் கேட்டார் ராமானுஜன். நாராயண ஐயர் இப்பொழுது வித்தியாசமாக சிரித்தார். ராமானுஜனுக்கு காரணம் தெரியவில்லை. 'ராமானுஜன், நீங்கள் இனிமேல் வருத்தப்பட வேண்டாம், உங்களுக்கு சேர்மன் தனி அறையை ஒதுக்கச் சொல்லியிருக்கிறார். நீங்கள் அந்த அறையில் உட்கார்ந்து கொண்டு உங்களுடைய கணித ஆராய்ச்சிகளை எல்லாம் தொடரலாம். மேலும் நீங்கள் கண்டுபிடிக்கும் கணிதக் குறிப்புகளை எல்லாம் தொடர்ந்து சேர்மனுக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்' என்று சொன்னார். ராமானுஜனால் இதை நம்பவே முடியவில்லை.

48. கனவா? நனவா?

ராமானுஜன், நாராயண ஐயர் சொன்னதை நம்ப முடியாமல் தவித்தார். அவர் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். 'நாம்தான் எப்போதும் கணக்கு, கணக்கு என்று கனவு கண்டு கொண்டிருப்போமே! அப்படித்தான் ஒரு கனவு வருகிறது என்று நினைத்துக் கொண்டார். ஆனால் நிகழ்ந்தது உண்மை. நாராயண ஐயர் மறுபடியும் விளக்கமாகச் சொன்னார். “நேற்று உங்களிடம் இருந்த எல்லாம் கணக்கு நோட்டுகளை எல்லாம் சேர்மன் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு சென்றார் இல்லையா? எல்லாக் கட்டுரைகளையும் படித்துப் பார்த்திருக்கிறார். உங்கள் கணிதத் திறமை அவர் புரிந்துகொண்டார். நீங்கள் ஒரு கணிதமேதை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அதனால் உங்களுடைய கணிதத் திறமையை ஊக்குவிப்பதற்காக உங்களுக்காக தனி அறை ஒதுக்கச் சொல்லி இருக்கிறார்” என்று நாராயண ஐயர் விளக்கம் கொடுத்தார். ராமானுஜன், அவருடைய மனைவி, ராமானுஜரின் தாயார் எல்லோருமே இந்த நிகழ்வால் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

49. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராமானுஜா?

இப்படி ஒரு பாராட்டுக்காகவும் வாய்ப்புக்காகவும்தானே ராமானுஜன் காத்துக் கொண்டிருந்தார்? தனது ஆய்வுகளில் முன்னைவிட தீவிரமாக ஈடுபட்டார். அதோடு தனது ஆய்வு முடிவுகளை எல்லாம் இந்திய கணித சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். அவருடைய கணித ஆய்வுகள் 1911 ஆம் ஆண்டு முதல் கணித சங்கம் வெளியிட்ட பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்த ஆய்வுக் கட்டுரைகளை பல கணிதப் பேராசிரியர்கள் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டார்கள். இந்தியாவிலிருந்த கணித மேதைகள் அப்போதுதான் ராமானுஜன் என்ற கணித ஆய்வாளரை திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். ராமானுஜனின் கணித ஆய்வுக் கட்டுரைகளைத் பத்திரிகைகளில் தொடர்ந்து எதிர்பார்க்கவும் தொடங்கினார்கள்.

50. நூலகக் கணக்கு

துறைமுக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு தனது ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார் ராமானுஜன். அந்த அலுவலகத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அந்த நூலகத்தில் இருந்த கணக்குப் புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கொண்டுவந்து படிக்க ஆரம்பித்தார். அந்த நூல்களை எல்லாம் தனது ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டார். பல்வேறு கணித பத்திரிகைகளின் தொகுப்புகளோடு வெளிநாட்டுக்கு பத்திரிகைகளின் தொகுப்புகளும் அந்த நூலகத்தில் இருந்தன. அவை எல்லாம் ராமானுஜனுக்கு கணித விருந்து படைத்தன. அந்தப் புத்தகத்தில் இருந்த கணிதப் புதிர்களை எல்லாம் தீர்த்து விடை எழுதுவார். அதன்மூலம் கிடைத்த அறிவைப் பயன்படுத்திக் கொண்டு நிறைய ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவார். அவற்றையெல்லாம் பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.

(தொடரும்)


குறிப்பு: 



முனைவர் திரு. ஆதலையூர் த.சூரியகுமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவைக் குழு (செனட்) உறுப்பினர்.



No comments:

Post a Comment