13/05/2020

கோளறு பதிகம்

-திருஞானசம்பந்த நாயனார்



பாடல் பிறந்த வரலாறு:

.
திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும், சமயக்குரவர் நால்வருள் ஒருவராவார். இவர் பொ.யு. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாத ஹிருதயர், தாயார் இசைஞானியார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித்  ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.

வாழ்நாள் முழுதும் தமிழகத்தின் பல்வேறு சிவத் தலங்களுக்கும் சென்று இறைவனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரத்தின் முதல் மூன்று திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.

தேவார மூவரில் மூத்தவரும், சமயக் குரவர் நால்வரில் ஒருவருமான அப்பர் என்று திருஞான சம்பந்தரால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரச நாயனாரும் சம்பந்தரும் சம காலத்தவர்கள். இவரும் திருஞான சம்பந்தரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பை  மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர்.
.
திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசரோ, அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

அப்போது, “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்).

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது தமிழக மக்களுக்கு  ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. 

புவியில் 16 ஆண்டுகளே வாழ்ந்த ‘ஆளுடைய பிள்ளை’ என்றழைக்கப்படும்,  சமயக்குரவர் நால்வரில் இளையவரான திருஞானசம்பந்தர், தமிழகத்தில் சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மகான் ஆவார்.

***

கோளறு பதிகம்

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் 
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் 
உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி 
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே. (1)


என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க 
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து 
என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ 
டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (2)


உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் 
வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து 
என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி 
திசை தெய்வமான பலவும் 
அறநெறி நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (3)


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து 
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல்
அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் 
கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (4)


நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் 
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் 
அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் 
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (5)


வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் 
மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி 
வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் 
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (6)


செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக 
விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான 
பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (7)


வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து 
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி 
வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் 
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (8)


பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் 
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு 
தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (9)


கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு 
குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் 
அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் 
அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை 
நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. (10)


தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் 
வானில் அரசாள்வர் ஆணை நமதே! (11)



No comments:

Post a Comment