13/05/2020

தமிழ் வளர்த்த சமணர்கள்

-சேக்கிழான் 

மதுரை சமணர் பள்ளி

பாரதத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் பேரிடம் வகிக்கும் சமண சமயம், தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்துள்ளது. வைதீக சமயத்தை மறுக்க மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண சமயம் காலப்போக்கில் தனி சமயமாக நிலைபெற்று ஹிந்துத்துவத்தின் அங்கமாகிவிட்டது. பொ.யு.மு. 600 காலகட்டத்தில் வாழ்ந்த மகாவீரர் தனக்கு முந்தைய திர்த்தங்கரர்களின் அடியொற்றி புதிய சமயத்தை நாடு முழுவதும் பரப்பினார். அதன் பிரதான அம்சம் துறவும் தொண்டுமே.

அந்த அடிப்படையில், பாரதத்தின் மறுமலர்ச்சியில் துறவையிம் தொண்டையும் மையப்படுத்தியோர் சமணர்களே. அதுபோலவே, கல்வி கற்பிப்பதிலும், நீதிநூல்களை போதிப்பதிலும் சமணர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அவர்கள் இருந்த இடங்கள் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டன. இன்று நாம் பயிலும் கல்வி நிறுவனங்கள் பள்ளி என்று அழைக்கப்படுவதற்கான மூலம் அதுவே.

அக்காலத்தில் சமணரும் சனாதனத்தின் ஒரு பிரிவாகவே இயங்கினர். வைதீகமும் சமணமும், பௌத்தமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு கலைகளையும் கல்வியையும் வளர்த்தன. இந்த மூன்று சிந்தனைகளிடையிலான வாதங்களும் உரையாடல்களுமே பாரத ஞானக் கருவூலங்களாக இன்றும் விளங்குகின்றன.
.
தமிழில் சமணர் பங்கு: 
இளங்கோ அடிகள்

பொதுயுகத்துக்கு முந்தைய 500 ஆண்டு காலகட்டத்தில் தமிழின் இலக்கிய சான்றாதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. நமக்குக் கிடைத்துள்ள தொன்மையான தமிழ் இலக்கியம் சங்க இலக்கிய நூல்களே. அவை பொதுவாக வைதீக மரபு சார்ந்தவையாகவே உள்ளன.

அடுத்து காப்பியக் காலம் துவங்குகிறது. இதில் முதன்மையான சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சமணத் துறவியான இளங்கோ ஆடிகள். சீவக சிந்தாமணியை சமணத் துறவி திருத்தக்கத் தேவர் இயற்றினார். முழுமையாகக் கிடைக்காத வளையாபதியும் சமணரால் இயற்றப்பட்டதே.

அதேபோல, ஐஞ்சிறு காப்பியங்களான உதயணகுமார காவியம் (கந்தியார்), நாககுமார காவியம் (சமண பெண் துறவி- பெயர் தெரியவில்லை), யசோதர காவியம் (வெண்ணாவலுடையார் வேள்), சூளாமணி (தோலாமொழித்தேவர்), நீலகேசி (ஆசிரியர் பெயர் தெரியவில்லை) ஆகியனவும் சமணர்களால் எழுதப்பட்டவை. இவை அனைத்தும் பொ.யு.பி. 900 காலத்துக்குப் பிந்தையவை.

குணாத்தியர் என்பவரால் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட ‘பிரகத் கதா’என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டது பெருங்கதை. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்நூலை ஆக்கியவர் ‘கொங்குவேளிர்’ என்ற சமணர் ஆவார். காஞ்சிபுரத்தில் பொ.யு. 1,400களில் வாழ்ந்த வாமன முனிவர் இயற்றியது மேரு மந்திர புராணம். இன்னும், வர்த்தமானம், வாமனசரிதை, மல்லிநாதர் புராணம், அமிர்தபதி போன்ற பல நூல்களை சமணர்கள் அளித்துள்ளனர்.

இலக்கணமும் நிகண்டுகளும்:

தமிழ் மொழிக்கு சிறப்பான கட்டமைப்பை ஏற்படுத்திய இலக்கண நூல்களை அளித்ததில் சமணர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நன்னூல் (பவணந்தி முனிவர்), நம்பியகப்பொருள் (நாற்கவிராச நம்பி), நேமிநாதம், வெண்பாப் பாட்டியல் (குணவீர பண்டிதர்), யாப்பருங்கலக்காரிகை (அமுதசாகரர்), இந்திரகாளியம் (இந்திரகாளியார்) போன்ற பல இலக்கண நூல்களை சமணர்கள் வழங்கி உள்ளனர்.

மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் சொற்களின் களஞ்சியத்தை உருவாக்கியதிலும் சமணர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. திவாகர நிகண்டு (பொ.யு.பி. 700- திவாகரர்), சூடாமணி நிகண்டு (பொ.யு.பி. 1600, மண்டலபுருடர்) ஆகியவை அவற்றில் குறிப்பிடத் தக்கவை. இன்றைய அகராதிகளூக்கு முந்தைய வடிவம் நிகண்டுகளே.

நீதிநூல்கள்:

காப்பிய காலத்துக்குப் பின் தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக (பொ.யு.பி. 250 முதல்600 வரை) களப்பிரர் காலம் குறிக்கப்படுகிறது. தமிழ்ப் பேரரசுகளின் வீழ்ச்சியால் சிற்றரசர்கள் கோலோச்சிய காலகட்டம் அது. அக்காலத்தில் நீதிநூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. அவற்றில் பல சமணர்கள் இயற்றியவை.

நாலடியார் (பெயர் தெரியாத முனிவர்கள்), பழமொழி நானூறு (முன்றுரை அரையனார்), ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்), சிறுபஞ்சமூலம் (காரியாசான்), ஆசாரக்கோவை (பெருவாயின் முள்ளியார்) ஆகியவை சமணரால் எழுதப்பட்டவை. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சமணர் என்று ஒரு கருத்துண்டு. ஆனால், திருவள்ளுவர் தம் குறள்களில் வைதீக சமயக் கருதுக்களை அதிக அளவில் முனவைத்துள்ளதால் அவரை சமணராகக் கொள்ள முடியாது.

இவையல்லாது, பெருங்குருகு, பெருநாரை, சயந்தம், சிற்றிசை, பேரிசை ஆகிய இசை நூல்களும் சமணரால் இயற்றப்பட்டுள்ளன. கலம்பக வகையில் ஒன்றான சதகங்களும் சமணரால் எழுதப்பட்டுள்ளன. நேமிநாத சதகம் அதில் குறிப்பிடத்தக்கது. ஜினேந்திரமாலை, உள்ளமுடையான் ஆகிய ஜோதிட நூல்கள், கெட்டி எண்சுவடி, கனக்கதிகாரம், அவினந்தமாலை உள்ளிட்ட கணித நூல்கள், கலைக்கோட்டுதண்டம் (நிகண்டனார்) என்னும் ஓவிய நூல் ஆகியவையும் சமணரால் அளிக்கப்பட்டவை.

சமணர்கள் சுமார் 1500 ஆண்டுகள் தமிழ் வளர்ச்சிக்கும் பண்பாட்டு மலர்ச்சிக்கும் காரணமாக இருந்தமைக்குச் சான்றாக தமிழகத்தின் பல பகுதிகளில் சமணச் சிற்பங்களும், சமணர் பள்ளிப் படுக்கைகளும் காணப்படுகின்றன.

அக்காலத்தே, சமயப் பூசலில்லாது, ஞானத்தை மேம்படுத்தும் உரையாடல்களுக்கு வழிவகுப்பதாக தமிழ் மரபு விளங்கியுள்ளது. வைதீக சமயத்தினரும் சமணரும் பௌத்தரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம்ழி மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். அதனால்தான், உலகில் வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத சுமார் 2,500 ஆண்டுகால மொழி வரலாறும் தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண நூல்களின் தொகுதியும் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் சமணர்தம் சிறந்த பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும்.

நன்றி: பசுத்தாய் பொங்கல் மலர் (2020)
குறிப்பு:
கட்டுரையாளர் திரு. சேக்கிழான், பத்திரிகையாளர்.




No comments:

Post a Comment