-திருமுருக கிருபானந்த வாரியார்
“ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்”
என்பது கந்த புராணத் திருவாக்கு. இறைவனுக்கு ஊர், குணம், அடையாளம், செயல் பேர், காலம், பற்றுக்கோடு, போக்கு, வரவு, உயர்வு, ஒப்பு முதலிய ஒன்றும் இல்லை.
பேரும் ஊரும் இல்லாத பெருமான் ஆன்மாக்களின் பொருட்டு – ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு பேரும் உருவும் தாங்கி வருகின்றான்.
இத்திருவருளின் இயல்பை உள்ளவாறு உணராத புலவர்கள் இறைவனுக்கு நாம ரூபம் நம்மால் கற்பிக்கப்பட்டன என்பார்கள்.
மூவாண்டுடைய சீகாழிப்பிள்ளையார் அழுதலும் அவருடைய பண்டைத் தவ வலிமையால் இறைவன் திருவுருவுடன் காட்சி தருகின்றான். வெள்ளை விடையும், பவளமலை போன்ற திருவுருவும், அருகில் மரகதக் கொடி போன்ற அம்பிகையும், பிறையணிந்த திருமுடியும், மான்மழு ஏந்திய திருக்கரங்களும், நீல கண்டமும், தோடணிந்த தாழ்செவியும், கருணை பொழியும் மலர்க் கண்களும், நீறணிந்த திருமேனியுங் கண்டு, அச்சிறியபெருந்தகையார் “தோடுடைய செவியன்” என்று பாடுகின்றார். அத்திருமேனியை மூவாண்டுக் குழந்தை கற்பனை புரியவில்லை. கண்ட காட்சியைக் கழறுகின்றது.