-சேக்கிழான் மகாவீரர்
(மகாவீரர் ஜயந்தி: சித்திரை திரயோதசி- ஏப் 25, 2021)
பாரதப் பண்பாட்டு வளர்ச்சியிலும் மலர்ச்சியிலும் சமண சமயத்திற்கு பெரும் பங்குண்டு. , கொல்லாமை, அஹிம்சை, வாய்மை உள்ளிட்ட பாரதத்திற்கே உரித்தான குணநலன்களை சமயம் வாயிலாக மக்களிடம் பதிவு செய்தவர்கள் சமணர்களே.
சமண சமயத்தைப் பரப்ப உதித்தவர்கள் ‘தீர்த்தங்கரர்கள்’ எனப்படுகின்றனர். அதன் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்.
பாரதத்தின் வடபகுதியில், (தற்போதைய பீகாரில் ஜமுயி மாவட்டத்தில்) லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்ற இடத்தில், சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் மகனாக, பொது யுகத்திற்கு முன் 599-ஆம் ஆண்டில், சைத்ர மாதம், வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (பங்குனி உத்திரம்) வர்த்தமானர் பிறந்தார்.
அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே நாட்டில் வளங்களைப் பெருக்கியதாக நம்பப்படுகிறது; அவர் பிறக்கும் தறுவாயில் அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி காணப்பட்டது. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய ‘வர்த்தமானன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
அரசி திரிசாலாவுக்கு மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், அவர் கருவுற்றிருக்கையில் 14 சுப கனவுகளைக் கண்டதாகவும் சமண புராணங்கள் கூறுகின்றன. உலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜெயின் – ஜைனர்கள்) அவரது பிறந்தநாளை மகாவீர் ஜெயந்தியாகக் கொண்டாடுகின்றனர்.