15/03/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 8

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1


16. நல்லந்துவனார்

‌‌நமது சங்கப்புலவர்கள் ஒவ்வொருவரும் பாடல் இயற்றுவதில் ஒவ்வொரு தனித்தன்மையை உடையவர்களாக விளங்கியுள்ளனர். அந்தத் தன்மையின் அடிப்படையில் பார்த்தால் நல்லந்துவனார் தாம் இயற்றிய எல்லாப்பாடல்களிலும் கற்பொழுக்கத்துக்கு முன்னுரிமை தந்து அகச்சுவை கலந்து அளக்கும் துகளை வழங்கியுள்ளார். காதல் உணர்வு பொதிந்துள்ள பாடல்களிலும் அறமும் ஆன்மிகமும் கொண்ட கருத்துகள் இழைய இவர் பாடியிருக்கும் விதமே அலாதியானது.

' அந்துவம்' என்னும் சொல் யானையைப் பிணைத்துவைக்கும் சங்கிலி என்ற பொருளைத் தருகிறது. யானைகளுக்குச் சிறப்பிடம் பெற்ற சேர மன்னர்கள் அந்துவன் என்ற இணைப்புப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் கொங்குநாட்டுப் பகுதிகளில் அந்துவன் குழு என்ற மக்கட் சமுதாயமும் உண்டு. எனவே குழுப்பெயரைத் தம்பெயராகத் தோற்றி இவர் நல்லந்துவனார் என அழைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

இவர் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். எனவே அவர் தம் ஊர்ப்பெயரோடு சேர்த்து மதுரைத் திருப்பரங்குன்றத்து நல்லந்துவனார் என அழைக்கப்படுகிறார். புலவர் மதுரை மருதன் இளநாயனார் அகநானூறு பாடல்-59ல்-

“சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை”

-எனப் பாடியதிலிருந்து இவர் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகிறது.

நவில்தொறும் விதவிதமான நயங்கள் தரும் நூல்களில் சிறப்பிடம் பெற்றது கலித்தொகை ஆகும். அக்கலித்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல், நெய்தற்கலியில் 32பாடல் என 33 பாடல்களைப் பாடியுள்ளார். அந்நூலை இவரே தொகுத்து வழங்கியும் உள்ளார்.

பரிபாடலில் முருகனுக்கு ஒன்றும், வையை ஆற்றுக்கு 3ம் என 4 நெடும்பாடல்களை இயற்றியுள்ளார். நற்றிணையில் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் என மொத்தம் 39 அரிய பாடல்களை அன்னைத்தமிழுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.

நமது பழந்தமிழரின் நெறி வேதநெறியே என நல்லந்துவனாரின் பாடல்கள்மூலம் அறுதியும் உறுதியும் செய்யப்படுகிறது. பரிபாடல் -8ல் செவ்வேள் முருகனைக் குறித்த பாடலில்,

‘அவிழ்துழாய் செல்வத்து-புள்கொடியோன்’ என திருமாலையும், ‘புங்கவம் (ஆனேறு) ஊர்வோன்’ எனசிவபிரானையும், ‘மலர்மிசைமுதல்வன்’ என பிரம்மனையும், ‘உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும்’ (12) என பன்னிரு ஆதித்தியர்களையும், ‘மருந்துரை இருவரும்’ என அச்வினி தேவர்கள் இருவரையும், ‘திருந்துநூல் எண்மரும்’ என அஷ்டவசுக்களையும், ‘ஆதிரை முதல்வனிற் பன்னொருவரும்’ என ஏகாதச உருத்திரரையும் ’நன்திசைக் காப்போர்’ என அஷ்டதிக்பாலர்களையும், ‘தேவர், அசுரர், முதுமொழி முதல்வர்’ என சமூகத்தில் முதன்மையாகத் திகழ்ந்த நான்மறைகளை நித்தம் ஓதுகின்ற பிராமணர்களையும் ரிஷிகளையும் குறித்து இவர்களெல்லாம் வாழ்கின்ற திருப்பரங்குன்றம் தனிச்சிறப்புஉடையது. மேலும் அது இமயமலை தனக்கு நிகரானது எனவும் பெருமிதம் கொள்கின்றார்.

கலித்தொகை நெய்தற்கலி பாடல்- 7ல்,

“ஞாலம் மூன்று அடித்தாய முதல்வர்க்கு
முதுமுறைப் பாலன்ன மேனியான்”

-என பலராம கிருஷ்ணர் இருவரையும் குறிப்பிடுகின்றார்.

கலித்தொகை நெய்தற்கலி பாடல்- 9ல்,

“இனநாரை முக்கோல் கொள்அந்தணர்
முதுமொழி நினைவார் போல்
எக்கர்மேல் இறை கொள்ளும்”

-என, நாரைகள் மீனுக்காகக் காத்திருப்பதை நான்மறை ஓதுமாதவசிகள் செய்யும் தியானத்தோடு ஒப்பிடுகிறார்.

கலித்தொகை நெய்தற்கலி பாட-13ல்,

“ஐயர் அவிர்அழல் எடுப்ப”

-என்று அக்னிஹோத்ரம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

கலித்தொகை நெய்தற்கலி பாடல்-28ல்,

“மாயவன் மார்பில் திருப்போல் பவள்சேர”

-என்று நாரணனையும் நன்றாய் அவன் மார்பினில் வாழ்கின்ற திருமகளையும் குறிப்பிடுகின்றார்.

கலித்தொகையை சிவபிரானில் ஆரம்பித்து சிவபிரானிலேயே முடித்து வைத்திருக்கிறார்.

குறிப்பாக இவர்தம் பாடல்களில் நெறிபிறழும் தலைவர்க்கு-ஆண்மகற்குத் தலைவி, தோழி, முதுபெண்டிர் கூற்றாக அறிவுறுத்தும் பாடல்கள் மிகுதியாக இயற்றியுள்ளார். அதில் ஓர் அற்புதமான பாடலாக, கலித்தொகையில் நெய்தற்கலி பாடல்-16 திகழ்கிறது. அதில் ஒருபகுதி பின்வருமாறு:

“ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு என்பதன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”


-என்று நல்வாழ்க்கைக்கான நவபண்புகளை நல்லந்துவனார் நயமாக எடுத்துரைத்து தாம் ஒருநல்லாசிரியர் என்பதனை நிறுவியுள்ளார்.




காண்க: பொன்.பாண்டியன்

No comments:

Post a Comment