15/03/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 7

 -பொன்.பாண்டியன் 


பகுதி-1



15. ஔவையார்

பாரத நாட்டுப் பெண்மணிகள் அறிவிலும் பிற ஆற்றல்களிலும் தொன்றுதொட்டு சிறந்து விளங்கி வருகின்றனர். அவருள் தமிழ்ப் புலமையில் தன்னேரில்லாத் தகைமையாளராக விளங்குபவர் ஔவையார் ஆவார்.

ஔவை என்பது பெண்பாற் பெயர்ச்சொல் ஆகும். அதன் பொருள் முதிர்ந்தவள் என்பதாகும். அறிவால் முதிர்ந்தவள்; வயதால் முதிர்ந்தவள்; தவத்தால் முதிர்ந்தவள் எனவும் கொளலாகும்.

இங்கு நாம் காணும் ஔவை இளமைநலம் ததும்பும், புலமைத்திறம் முதிர்ந்தவர் ஆவார். சின்னஞ்சிறுவனுக்குப் பெரியண்ணன் என்றும் பெரிய மூதாட்டிக்கு சின்னப்பொண்ணு என்றும் பெயரிடுவதில்லையா? அதுபோலத்தான் இந்த ஔவைப் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

தன் இளமை எழில்நலத்தை வர்ணித்து வேந்தன் ஒருவன் விளித்ததாகவும் தான் அவனுக்குப் பதிலளித்ததாகவும் புறநானூறு பாடல்-89ல் பின்வருமாறு பாடுகின்றார்:

“இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி
பொருநரும் உளரோ? நும்அகன்றலை
நாட்டுஎன வினவல் ஆனாப்
பொருபடை வேந்தே”

அதாவது “அழகிய மணிகள் கோர்த்த மேகலை அணிந்த இடையையும்; மைதீட்டிய விழிகளையும்; வாளின் வளைவு போன்ற நெற்றியையும் உடைய விறலியே” என அந்த மன்னர் தன்னை அழைப்பதாக ஔவையே கூறுகிறார்.

இதன்மூலம் ஔவை இளங்குமரி என்பது துணிபு. அப்படியானால் ‘ஔவைப்பாட்டி’ என அழைக்கப்படுகிறாரே என்ற கேள்வி எழலாம். அதற்கான விளக்கம் பின்வருமாறு:

ஔவை விறலியாகிய பாணர்குலத் திருமகள் ஆவார். விறலியானவள் பாண்மகள் ஆவாள். அவள் பாணி, பாடினி என்றும் பாட்டி என்றும் அழைக்கப்படுவாள்.

“வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை அமலை வெஞ்சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனிப் பெய்து”

-என்று பரணர் அகநானூறு பாடல்- 196ல் பாண்மகளைப் பாட்டி என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு 'ஔவைப் பாடினி' யானவர் 'ஔவைப் பாட்டி' ஆகிவிட்டார்.

கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு பாணி- வாணி என்ற பெயர்களும் உண்டு. ஔவை சரஸ்வதி தேவியின் அம்சமாக காலம்காலமாகப் போற்றப்படுகிறார். ஔவை ஒரு நல்ல தோழி; நல்ல மதியூகி; அஞ்சாமை, நன்றி மறவாமை எனப் பலப்பல நற்பண்புகளை உடையவர் என அவர்தம் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது. அவற்றை இனிதே இனி காணலாம்.

கபிலர்க்குப் பாரி போலவும்; பரணர்க்குப் பேகன் போலவும்; ஔவைக்கு அதியமான் மாசற்ற நட்புரிமை பூண்டிருந்தார்.

ஔவையார் புறத்திணைக் கருத்துகளை புறநானூற்றில் மட்டுமே பாடியுள்ளார். புறநானூற்றில் அவர் பாடிய மொத்தம் 33 பாடல்களில் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறித்து மட்டும் 21 பாடல்களும், அவருடைய மகன் பொகுட்டெழினியைக் குறித்து 3 பாடல்களும் ஆக 24/33 பாடல்கள் அதியமான்குடிக்கே பாடியுள்ளார்.

நமது ஹிந்து ஸநாதன தர்மத்தில் யாகங்கள் நிகழ்த்துவது இன்றியமையாத கடமையாகும். பகவான்ஸ்ரீ கிருஷ்ணன் தமது ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறுகிறார்,

“தேவான்பாவயதானேனதேதேவா
பாவயந்துவ:” ( 3-11)

நீங்கள் யாகத்தால் தேவர்களைப் பேணுங்கள். தேவர்கள் உங்களைப் பேணுவார்கள் –என்பது அதன் பொருளாகும். அதுபோல அதியனின் முன்னோர் செய்த யாகத்தை,

“அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழிசூட்டிய தொன்னிலை
மரபின் நின்முன்னோர்போல”

-என்று புறநானூறு பாடல்-99ல் ஔவை பாடியதன் மூலம் பழந்தமிழகம் மிகத் தொன்மையான ஆதிகாலத்திலிருந்தே வேதநெறி வழுவாது வாழ்ந்துவந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

அதியமான் இன்றைய தர்மபுரி பகுதியை தகடூர் என்னும் பெயரில் ஆண்டுவந்தவர் ஆவார். அவரின் முன்னோர்களே உலகிற்குக் கரும்பு வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர் ஆவர் என்று இந்தப் பாடலின் மூலம் தெரிய வருகிறது.

நமது பாரத தேசத்தில் நெல்லிக்கனிக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு. குறிப்பாக அக்கனியை ஒட்டி இரு முக்கிய நிகழ்வுகளைக் கூறலாம். அதில் ஒன்று இது...

ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஒருமுறை பிக்ஷைக்குச் சென்றார். அவர் பிக்ஷை கேட்ட இடம் மிகவும் ஏழ்மையான குடிசை. அந்த வீட்டில் பிக்ஷை இட ஏதுமில்லை. ஒரே ஒரு நெல்லிக்கனிதான் இருந்தது. அதனையும் தமக்கென வைக்காமல் அந்த வீட்டு ஏழைத்தாய் பிக்ஷை அளித்துவிட்டார். அந்தத் தாயின் தியாகத்தை நினைத்து ஆதிசங்கரர் நெகிழ்ந்து போனார்.

அந்தத் தாயின் மீது கருணை கொண்டு திருமகளை வேண்டி ‘கனகதாரா ஸ்தோத்திரம்' பாடினார். லக்ஷ்மிதேவியும் கூரை பிய்த்துக்கொள்ளும் வகையில் பொன்மாரி பொழியச் செய்தார்.

நெல்லிக்கனிக்கு வடமொழியில் 'அம்ருத பலம்' என்றும், தமிழில் ‘அமுதக்கனி' என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு.

ஆம். உண்மைதான். நெல்லிக்கனியை உண்பவர்களின் வாழ்நாள் நீடிக்கும். அவர்கள் நோயற்று வாழ்வர். நாம் பார்க்கப் போகும் அடுத்த முக்கிய நிகழ்வு...

அதியமான் நெடுமான் அஞ்சி ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அப்போது அங்கிருந்த மலைவாழ் மக்களில் ஒருவர் அதியமானிடம் ஒரு கருநெல்லிக் கனியைத் தந்தார். அதைத் தான் உண்பதைவிட மன்னர் உண்பது சிறப்பாகும்.

ஏனெனில் அது நெல்லிக்கனி வகைகளில் கிடைப்பதற்கு அரிதான கருநெல்லிக்கனி ஆகும். அதை உண்டவர் நெடுங்காலம் நோயில்லாமல் உலகில் வாழலாம். ஆகவே மன்னர் அதனை உண்டு நெடுங்காலம் வாழ்ந்து இந்நாட்டையும் மக்களையும் காத்தருள வேண்டும் என தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதைப் பெற்றுக்கொண்ட மன்னர் சிந்தித்தார். அதை தான் உண்பதைக் காட்டிலும், தற்போது அரண்மனைக்கு வருகை புரிந்துள்ள ஔவையார் உண்டால் நெடுங்காலம் வாழ்ந்து நாட்டையும் தமிழையும் வாழவைப்பார் என்று தீர்மானித்தார். அரண்மனைக்கு வந்தார். ஔவையிடம் ஒன்றும் கூறாமல் அக்கனியை உண்ணச் செய்தார். அதை உண்ட பிறகுதான் ஔவைக்கு அந்தக் கனியின் சிறப்பு குறித்துத் தெரியவந்தது. அதியனின் தியாகத்தை நினைந்து நெகிழ்ந்து போனார். 

அவருக்கு உடனே நினைவுக்கு வந்தது என்ன தெரியுமா? தேவர்களும் மற்ற உயிர்களெல்லாம் வாழ அமிழ்தம் தந்து தான் மட்டும் விஷம் அருந்தினாரே அந்தத் தியாகராஜன் சிவபெருமான் நினைவுக்கு வந்தார். அதுகுறித்து புறநானூறு பாடல் -91ல் வாழ்த்துகிறார்:

“பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெருமநீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே”

-இந்த நிகழ்வை நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் தமது சிறுபாணாற்றுப்படையில்-

“நெல்லி அமிழ்து விளை தீங்கனி
ஔவைக்கு ஈந்த அதியன்”

-என்று பாடி உறுதிப்படுத்துகிறார். இதுபோன்ற தியாகங்களால் தான் தமிழும் நமது ஹிந்து ஸநாதன தர்மமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருசிலர் பிறரை வஞ்சகமாகப் புகழ்வதையும் ஏளனம் செய்வதையும் வேடிக்கையாகச் செய்வர். அதில் கிண்டலடித்தவர் மகிழ்வார்; கிண்டல் செய்யப்பட்டவர் மனம் வருந்துவார். அல்லது சினம் கொள்வார். வேறு நல்ல பலன் ஒன்றும் கிட்டாது.

ஆனால் ஔவை பயன்படுத்திய வஞ்சப்புகழ்ச்சி, நடக்கவிருந்த ஒரு பெரும்போரையே நிறுத்திவிட்டது. ஒளவை ஒரு சிறந்த மனோதத்துவ அறிஞர்; இனிய தமிழ்ப்புலவர் மனம் நோகாமல் புகழ்வதைப் போலக் கண்டிப்பதும்; கண்டிப்பதைப் போல புகழ்வதும் அவருக்குக் கைவந்த கலை ஆயிற்றே!

ஒருசமயம் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. அதியமானுக்கு அப்போது போர் புரிவதற்கான உகந்த சூழல் இல்லை. இதையறிந்த ஔவையார் அதியனின் சார்பாக சமாதானத்தூது செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மன்னர் தொண்டமானைக் காண காஞ்சிபுரத்திற்கு விரைந்தார். தொண்டமானும் ஔவையைச் சிறப்பாக வரவேற்றார். அவருக்கு தன்னுடைய படைவலிமையின் மீது சற்று கர்வம் இருந்தது. அதைப் பறைசாற்றும் வகையில் ஔவையை தனது படைக்கலச்சாலைக்கு அழைத்துச்சென்றார். ஔவையும் உடன் சென்றார்.

அங்கே சென்றவர் மிகவும் வியந்துபோனார். விதவிதமான ஆயுதங்கள், பிடிகள் திருத்தப்பட்டு நறுநெய் பூசப்பட்டு, மயிற்பீலிகளால் அலங்கரிக்கப்பட்டு மலர்மாலைகள் சூட்டப்பட்டு போருக்குத் தயாராக இருந்தன. ஆயுதங்களை மலரிட்டு வழிபடுவது ஹிந்துக்களின் வழக்கம்தானே. இதற்கு 'வாள்மங்கலம்' என்ற பெயரும் உண்டு.

இவற்றைக் கண்ணுற்ற ஔவையார், “தாங்கள் பரவாயில்லை. தங்களுடைய படைக்கலன்களை அழகாக அலங்கரித்து மிக நேர்த்தியாக வைத்துள்ளீர்கள். அதியமானின் படைக்கலச்சாலையிலோ, கூர்மழுங்கி, நுனிவளைந்து கைப்பிடிகள் உடைந்தும் இருக்கின்றன. பட்டறையில் அவற்றை ஓய்வின்றி பழுதுபார்த்துக் கொண்டே உள்ளனர். இதற்கெல்லாம் நேரமே இல்லை. ஓயாமல் போர் புரிந்துகொண்டே இருந்தால் இதற்கு நேரம் ஒதுக்குவது எப்படி?” என்னும் பொருள்பட புறநானூறு பாடல்-95ல்

“இவ்வே பீலிஅணிந்து மாலைசூட்டிக்
கண்திரள் நோன்காழ்
திருத்தி நெய்யணிந்து..”

-என்று வஞ்சப்புகழ்ச்சி அணி தொனிக்கப் பாடினார். அந்தத் தமிழ்ப்பாட்டில் மனம் பறிகொடுத்த தொண்டைமான் போர்புரியும் எண்ணத்தைக் கைவிட்டார். ஔவையின் மதியூகம் இவ்வாறு ஒரு பெரும் போரையே நிறுத்திவிட்டது.

ஔவையார் நட்புக்கு இலக்கணமானவர். பாரி வள்ளல் இறந்த பிறகு யாருமற்று நின்ற அவர் மகள்கள் இருவரை புலவர் கபிலர் தமது மகள்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மன்னர்மரபில் மணமகனைத் தேடினார். அதுமுடியாமல் போகவே திருக்கோவலூர் அக்ரஹாரத்தில் இருந்த பிராமணர்களிடத்து அடைக்கலம் ஆக்கினார்.

கபிலரிடம் நட்பு பூண்டிருந்த ஔவையார் இதைக் கேள்விப்பட்டு அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு திருக்கோவலூர் சிற்றரசன் தெய்வீகனுக்கு மணமுடித்து வைத்தார். இத்திருமணத்திற்கு வேள்பாரியிடம் பகை கொண்டிருந்த மூவேந்தர்களும் பகை மறந்து மனம்மாறி வந்து கலந்துகொண்டனர். இவ்வாறு ஔவை நட்புக்கு ஏற்பட்ட இடுக்கண் களைவதில் கருத்துடையவராக விளங்கினார்.

நமது தமிழ் மரபு தொன்றுதொட்டு வைதிக மரபாகத்தான் இருந்திருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையோ,வேத விரோதமான கருத்துக்களோ பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் எங்கும் காணக் கிடையாது.

சங்க காலத்திற்குப் பிறகுதான் தமிழகத்திற்கு அப்பாற்பட்ட மாநிலங்களிலிருந்து, குறிப்பாக களப்பிரர் காலத்தில் தமிழரின் இயல்புக்கு மாறான நாஸ்திகக் கருத்துக்கள் மெல்ல ஊடுருவி ஆக்கிரமிக்கத் தொடங்கின எனலாம். 

வேள்வி நடத்துதல் என்பது தமிழரின் இன்றியமையாத கடமையாகும். வேள்வி நடத்தி வைக்கும் தலைவன் 'வேள்' அல்லது 'வேளாளன்' ஆவான். பின்னர் வேள் என்னுஞ் சொல் தலைவனைக் குறிக்கும் சொல்லாயிற்று. வடமொழியிலும் அவ்வாறே யக்ஞம் அதாவது யாகத்தை நடத்தி வைக்கும் தலைவன் யக்ஞமான் ஆவான். அதுவே பின்னாளில் 'யஜமான்' என்றாகி, தலைவன்; முதல்வன், முதலாளி என்று பல பொருள்கள் தரும் சொல்லாயிற்று.

தீயை வழிபடும் தமிழர் அதைக் ‘கந்தழி’ வழிபாடு என்று குறிப்பிட்டனர். வேள்வி நடத்துவது என்பது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக உள்ளது.

அவற்றுள் முதலாவது சதுர வடிவில் யாக குண்டம் அமைத்து அதில் தீ வளர்த்து வழிபடுவது ' ஆகவனீயம் ' எனப்படும். அது தனிநபர் நலன், அரசநலன், அரசாட்சி,வேத ஸம்ரட்சணத்திற்காக நடத்தப்படுவது ஆகும்.

இரண்டாவது, முக்கோண வடிவில் யாக குண்டம் அமைத்து அதில் தீ வளர்த்து வழிபடுவது ‘தக்ஷிணாக்னீயம்’ எனப்படும். இது தேவர்களைப் பேணுவதற்காகவும் மழை வேண்டியும் நடத்தப்படுவது ஆகும்.

மூன்றாவது வில் அல்லது இதய வடிவில் யாக குண்டம் அமைத்து அதில் தீ வளர்த்து வழிபடுவது ‘காருகபத்தியம்' எனப்படும். அது உலக நன்மைக்காகவும், உழவு, நெசவு போன்ற தொழில்களின் மேன்மைக்காகவும் நடத்தப்படுவது ஆகும்.

நமது ஔவைப் பெருமாட்டி மட்டுமல்ல, நமது பழந் தமிழினமே வைதிக நெறியில் பிடிப்புள்ளதாகும். ஒரு நிகழ்வில், சேர மன்னன் மாவண் கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருசேர இருந்தபோது ஔவை அம்மூவரையும் ஒன்றாகக் கண்டு மனம் மகிழ்ந்து புறநானூறு பாடல்- 367ல் கீழ்க்கண்டபடி பாடுகிறார்:

“ஏற்ற பார்ப்பார்க்கு
ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும்
புனல்படச் சொரிந்து
........................................
ஒன்று புரிந்து அடங்கிய
இரு பிறப்பாளர்
முத்தீப் புரையக்
காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக்
கொடித் தேர் வேந்திர்
........................................
உயர்ந்து மேந்தோன்றிப்
பொலிக நும் நாளே’’

-என்று முத்தீயாக மூவேந்தர்களை உருவகப்படுத்தி வாழ்த்திப் பாடுகின்றார்.

மேலும் புறநானூறு பாடல்- 93ல், போரில் விழுப்புண் பெறாமல் இறந்து போகும் வீரமறவர்களை தர்ப்பைப் புல்லில் கிடத்திச் செய்யும் சடங்கை,

“அறம் புரி கொள்கை
நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல்
பரப்பினர் கிடப்பி"

-என்று பாடுகிறார்.

ஒளவையார் புறத்திணைப் பாடல்கள் மட்டுமல்ல, அகத்திணைப் பாடல்களையும் அற்புதமாகப் பாடியுள்ளார். மலரினும் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் ஔவையின் பாடல்கள் அருமையானவை.

குறுந்தொகையில் 15, அகநானூறில் 4, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என மொத்தமாக 59 பாடல்களை அவர் பாடியுள்ளார்.

அதியன் தந்த அமிழ்து விளை தீங்கனி நெல்லிக் கனியை உண்டதால் தானோ என்னவோ, சங்க காலம் தொடங்கி, பலநூறு ஆண்டுகள் வரை பல ஔவையார்கள் தோன்றி பலப்பல பாடல்கள் பாடி, தமிழை வளர்த்தும் பாதுகாத்தும் வந்தனரோ?

வாழிய ஔவைக் கலைமாது!



No comments:

Post a Comment