15/03/2021

துர்க்கா ஸுக்தம் (தமிழாக்கம்)

-ஜடாயு



    சம்ஸ்க்ருத மூலத்தில் உள்ள வேத மந்திரங்களை தமிழாக்கம் செய்து, தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. அவரது துர்க்கா ஸுக்தம் - தமிழாக்கம் இங்கே...
-ஆசிரியர் குழு


***

யஜுர்வேதத்தில் உள்ள பரம பவித்திரமான ஸூக்தம் இது. துர்கா என்ற சொல்லுக்கு கடக்க முடியாத, செல்லமுடியாத என்பது பொருள். துர்காணி – கடக்கமுடியாத ஆபத்துக்கள். அன்னை மகா பிரகிருதியும் ஆதி சக்தியுமானவள், அறியமுடியாதவள் என்பதனால் இச்சொல் அவளது திருப்பெயராக இலங்குகின்றது. இந்த இரண்டு பொருள்களிலும் இச்சொல் இந்த ஸூக்தத்தில் பயின்று வருகிறது.

அக்னியையும், இந்திரனையும் வேண்டுவதும், அவர்களுடைய சக்திக்கு அதிதேவதையான துர்க்கையிடம் வேண்டுவதும் ஒன்றேயாகும் என்பதும், வைஷ்ணவீ என்று விஷ்ணு ரூபமாக இலங்குவதும் தேவியின் சக்தியே என்பதும் இந்த ஸூக்தத்தினால் பெறப்படுகிறது. இதன் கடைசி மந்திரம் துர்க்கா தேவிக்கு உரிய காயத்ரி மந்திரமாக உள்ளது.



மூலம்: யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் 4.10.2

தமிழில்: ஜடாயு


ஜாதவேதஸ் எனும் அக்னிக்கு
சோமத்தைப் பிழிந்து அளிப்போம்
அறிவுருவான அவன்
எமது பகைகளைப்
பொசுக்கிடுக
எமது ஆபத்துக்கள் அனைத்தையும்
போக்கிடுக
கடலைக் கடக்கும் கப்பலென
அக்கரை சேர்த்திடுக (1)

அக்னி வண்ணத்தினள்
ஒளியால் ஜ்வலிப்பவள்
ஞானவிழியால் காணப்பட்டவள்
கர்மபலனைக் கூட்டுவிப்பவள்
துர்க்கா தேவி.
அவளைச் சரணடைகிறேன் யான்
கடத்துவிப்பவளே
கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம் (2)

அக்னியே
போற்றத்தக்கவன் நீ
நல்வழிகளால்
எல்லா ஆபத்துக்களிலிருந்தும்
எம்மைக் கரையேற்றிடுக
உறைவிடமும் விளைநிலமும்
எமக்கு நிறையக் கூட்டிவைத்திடுக
எம் புத்திரர்களுக்கும் பேரர்களுக்கும்
நன்மையளித்திடுக. (3)

ஆபத்தை அழிக்கும் ஜாதவேதஸ்
கப்பலால் கடல் கடப்பது போல்
அனைத்துப் பாவங்களினின்றும்
எம்மைக் கடத்துவிப்பாய்
அக்னியே
அத்ரியைப் போல
அனைவரும் இன்புறுமாறு
மனதார அருளிக்கொண்டும்
எம் உடல்களைக் காத்துக்கொண்டும்
நாங்கள் இருக்கவேண்டும். (4)

எதிரிப்படைகளை வெல்லும்
அடக்கியாளும்
உக்கிரமான அக்னியை
பரமபதத்திலிருந்து
அழைக்கிறோம்
துன்பங்களுக்கும்
அழியக்கூடியவற்றுக்கும்
தவறுகளுக்கும்
அப்பால்
அவன் எம்மை அழைத்துச் செல்க.
எம்மைக் காத்திடுக. (5)

வேள்விகளில் தொழப்படுபவன்
இன்பத்தை வளர்ப்பவன் நீ
கர்மபலனை அளிப்பவனும்
வேள்வியைச் செய்பவனும்
புகழப்படுபவனும்
நீயே ஆகின்றாய்
அக்னி
ஹவிஸ்ஸால் மகிழ்வுற்ற உடலுடன்
அனைத்து நற்பேறுகளையும்
எமக்கு அருள்க. (6)

பாவத்தொடர்பின்றி
புனிதச் செல்வங்களுடன் கூடி
அமுதமயமாக
எங்கும் பரந்த உன்னை
சேவிக்கிறேன்
இந்திர சக்தியே
சுவர்க்கத்தின் உச்சியிலுறையும் தேவர்கள்
விஷ்ணுவில் கலந்தவனாகிய எனக்கு
இவ்வுலகில் மகிழ்ச்சியை அருள்க. (7)

ஓம்
காத்யாயனியை அறிவோம்.
கன்யகுமாரியை தியானிப்போம்
அந்த துர்க்கை
எம்மைச் செலுத்திடுக. (8)

ஓம் சக்தி.


குறிப்பு:

துர்க்கா ஸூக்தம், தேவநாகரி லிபியில் இங்கே.

சள்ளகரே சகோதரர்களின் துல்லியமான ஸ்வர உச்சரிப்புகளுடன் ஒலி வடிவில் இங்கே.

ஜடாயு வேத மந்திரங்களையும் உபநிஷதங்களையும் தொடர்ந்து மொழியாக்கம் செய்து விளக்கக் குறிப்புகளுடன் எழுதி வருகிறார்.  இது தொடர்பான அவரது அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம். 

காண்க: ஜடாயு

No comments:

Post a Comment