15/03/2021

திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் (கவிதை)

-காரைக்கால் அம்மையார்

 

 கொங்கை திரங்கி நரம்பெழுந்து

  குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்

  நீள்கணைக் காலோர்பெண்பேய்

தங்கி அலறி உலறுகாட்டில்

  தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  1


கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக்

  கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை

விள்ள எழுதி வெடுவெடென்ன

  நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்

துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்

  சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி

அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  2


வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப

  மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே

கூகையொ டாண்டலை பாடஆந்தை

  கோடதன் மேற்குதித் தோடவீசி

ஈகை படர்தொடர் கள்ளிநீழல்

  ஈமம் இடுசுடு காட்டகத்தே

ஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  3 


குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக்

  குறுநரி தின்ன அதனைமுன்னே

கண்டிலோம் என்று கனன்றுபேய்கள்

  கையடித் தோடிடு காடரங்கா

மண்டலம் நின்றங் குளாளம்இட்டு

  வாதித்து வீசி எடுத்தபாதம்

அண்டம் உறநிமிர்ந் தாடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  4 


விழுது நிணத்தை விழுங்கியிட்டு

  வெண்தலை மாலை விரவப்பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளியென்று

  பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழுதி துடைத்து முலைகொடுத்துப்

  போயின தாயை வரவுகாணா

தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  5


பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய்

  பருந்தொடு கூகை பகண்டைஆந்தை

குட்டி யிடமுட்டை கூகைபேய்கள்

  குறுநரி சென்றணங் காடுகாட்டில்

பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட

  பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே

அட்டமே பாயநின் றாடும்எங்கள் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  6


சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்

  சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்

தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்

  தான்தடி தின்றணங் காடுகாட்டிற்

கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்

  காலுயர் வட்டணை இட்டுநட்டம்

அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  7


நாடும் நகரும் திரிந்துசென்று

  நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத் திட்டமாடே

  முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்

காடுங் கடலும் மலையும் மண்ணும்

  விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி

ஆடும் அரவப் புயங்கன்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  8


துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்

  உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

  தகுணிதம் துந்துபி தாளம்வீணை 

மத்தளங் கரடிகை வன்கைமென்றோல்

தமருகங்   குடமுழா மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  9


புந்தி கலங்கி மதிமயங்கி

  இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்

சந்தியில் வைத்துக் கடமைசெய்து

  தக்கவர் இட்டசெந் தீவிளக்கா

முந்தி அமரர் முழவின்ஓசை

  திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க

அந்தியில் மாநடம் ஆடும்எங்கள்

  அப்பன் இடந்திரு ஆலங்காடே.  10


ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி

  ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்

பப்பினை யிட்டுப் பகண்டை யாடப்

  பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப

அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்

  அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்

செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்

  சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.  11

 

 ***

காரைக்கால் அம்மையாரின் பாடல்கள்

சைவ இலக்கியமான பன்னிரு திருமுறைகளில், பதினொராம் திருமுறை பன்னிரு ஆசிரியர்களால் பாடப்பெற்ற நாற்பது சிற்றிலக்கியங்களின் தொகுப்பாகும். இதில், தேவார ஆசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

பதினொராம் திருமுறையில் சைவ அடியவர்கள் குறித்த இலக்கியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடியார் சிறப்புரைக்கும் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு, பதினொராம் திருமுறைத் தொகுப்பும் ஒரு காரணமாக அமைந்தது.

பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்கள் காரைக்கால் அம்மையார் அருளியன. இவரது நான்கு பனுவல்கள் இத்தொகுப்பில் உள்ளன.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்

மூத்த திருப்பதிகம்

திருவிரட்டை மணிமாலை

அற்புதத் திருவந்தாதி

-என்பன அவை

அம்மையாரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத்தொகையுள்  ‘பேயார்என்று குறித்துள்ளார். இவர் அருள் வரலாறு பெரியபுராணத்துள் விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானால்அம்மையேஎன்று அழைக்கப் பெற்ற பெருமை மிக்கவர். யாது வேண்டும் என்று சிவன் வினவியபோது அம்மையார் உரைத்த மறுமொழிகள் பெரிதும் சிறப்புடையன.

இறவாத இன்ப அன்பு
   
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
   
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
   
வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது
   
அடியின்கீழ் இருக்க என்றார்

(பெரிய புராணம் - 1781)

திருஞானசம்பந்தர், அம்மையார் பிறந்த காரைக்கால் மண்ணைக் காலால் மிதிக்கவும் அஞ்சியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

மூத்த திருப்பதிகங்கள்

காரைக்கால் அம்மையார் பனுவல்களில் வடதிருஆலங்காட்டு இறைவன் மேல் பாடப்பெற்ற ‘கொங்கை திரங்கி' - எனத் தொடங்கும் நட்டபாடைப்பண் அமைந்த பதிகமும், ‘எட்டி இலவம்’ எனத் தொடங்கும் இந்தளப்பண் அமைந்த பதிகமும் மூத்த திருப்பதிகங்கள் எனப் போற்றப்படுகின்றன.

சிவனை பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதியால் தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடினர். இவற்றைத் தேவாரப் பதிகங்கள் என்பர். இவற்றுக்குக் காலத்தால் முற்பட்டன காரைக்கால் அம்மையார் பதிகங்கள். எனவே, இவரது பாடல் தொகுதியை மூத்த திருப்பதிகங்கள் என்று குறித்துள்ளனர்.

சமயத்துறையில் பண் ஒன்றிய பாடல்களாகத் தோன்றியன இப்பதிகங்களேயாகும். ‘கொங்கை திரங்கிஎன்று தொடங்கும் அம்மையாரின் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், சப்தஸ்வரங்கள் எனக் கூறப்படும் ஏழு ஓசைகளுக்கும் தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. ‘துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை, பண் கெழுமப்பாடிஎன்பது அப்பாடல் பகுதி.

மணிமாலை - அந்தாதி

இரட்டை மணிமாலை என்பது கட்டளைக் கலித்துறையும் வெண்பாவும் அடுத்தடுத்து அமைய 20 செய்யுள்களால் அந்தாதித்தொடை அமையப் பாடப்படுவது. அம்மையாரின் திருவிரட்டை மணிமாலை இவ்வகையில் அமைந்த முதல் நூலாகும். இதனை, ‘ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதிஎன்று சேக்கிழார் குறிக்கிறார்கட்டளைக் கலித்துறை என்ற புதிய யாப்பும் இந்நூலிலேயே முதன் முதல் கையாளப்பட்டுள்ளது

அம்மையார் பேய்வடிவம் வேண்டிப் பெற்ற போது பாடிய பனுவல் தொகுதியே அற்புதத் திருவந்தாதி எனப்படுகிறது. இந்நூல் வெண்பா யாப்பில் அந்தாதித் தொடை அமைய 101 பாடல்களால் பாடப்பட்டுள்ளது. பக்திக் கனிவும், சிவனின் அளப்பரும் கருணையும் இந்நூலுள் பெரிதும் பேசப்பட்டுள்ளன. அம்மையாரின் பக்திச் சிறப்பை,

இடர்களையா ரேனும் எமக்குஇரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடருருவில்
என்பு அறாக் கோலத்து எரியாடும் எம்மனார்க்கு
அன்பு அறாது என்நெஞ்சு அவர்க்கு

(அற்புதத் திருவந்தாதி -2)

என்ற அரிய பாடல் எடுத்துக்காட்டுகின்றது. மேற்கூறிய பாடலின் பொருளாவது

நம் துன்பங்களை நீக்காவிட்டாலும் நமக்கு இரக்கம் காட்டாவிட்டாலும், செல்ல வேண்டிய நெறி இதுவென்று கூறாவிட்டாலும் கூட, தீ வடிவில் எலும்பு அணிந்து ஆடும் இறைவனிடம் கொண்டுள்ள அன்பை என் நெஞ்சம் மறக்காது.

அம்மையாரின் வாழ்வும் வாக்கும் பின்வந்த நூலாசிரியர்களால் பலபடப் பாராட்டப்பட்டுள்ளன.

 

               

 

 




No comments:

Post a Comment