-ஈரோடு சரவணன் |
பாரதியின் ‘இந்தியா’ இதழில் கருத்துப்படம் (கார்ட்டூன்) |
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, பொது மக்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கவும், எழுத்துரிமை, பேச்சுரிமை மூலம் அரசியல் விழிப்புணர்வு பரவவும், இதழியல் துறை பெரும் பங்காற்றியது. தாய்மொழியில் தோன்றிய சுதேசமொழி இதழ்கள் பாரதவாசிகளுக்கு எழுச்சியூட்டின. இதன் ஆபத்தை உணர்ந்து ஆங்கில அரசு, 1878-ல் அன்றைய கவர்னர் ஜெனரல் லிட்டன் பிரபு, சுதேசி பத்திரிக்கைகள் சட்டம் கொண்டுவந்து ஒடுக்கத் துவங்கினார்.
இந்திய விடுதலைப் பேரியக்கத்தை தாதாபாய் நௌரோஜி, திலகர், பெசன்ட், காந்தி என்று பல வளர்ச்சிக் கட்டங்களாக எவ்வாறு பகுக்க முடியுமோ, அதேபோல, அதன் சாயல்களோடு தமிழ் பத்திரிகை வரலாற்றையும், ஜி.சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க., கல்கி என்று வகுக்க முடியும். ஆரம்பகால தமிழ் இதழியல் வரலாற்றின் உயிர்நாடி, இந்திய விடுதலைப் பேரியக்கமாகும்.
தமிழகத்தில் விடுதலைக் காலகட்டத்தில், சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, தேசபக்தன், நவசக்தி, தமிழ்நாடு, தினமணி, சுதந்திரம், ஜனசக்தி, விமோசனம், ஞானபானு, பிரபஞ்சமித்திரன், இந்திய தேசாந்திரி, சேலம் சுதேசாமானி, சர்வஜனமித்திரன், ஆனந்த விகடன், தமிழ் நேஷனல் பத்திரிகை, வந்தே மாதரம், ஊழியன், குமரன், சுதேசி, ஸ்வராஜ்யா, தாய்நாடு, தேசபந்து, இளந்தமிழன், சுயராஜ்ய பேரிகை, காந்தி நவ இந்தியா போன்ற இதழ்கள் வெளி வந்தன.
இந்த இதழ்களின் போராட்டக் காலத்தில் ஆங்கில அரசால் துன்பத்திற்குள்ளான இதழ்கள் வெகு சிலவே. சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு, தினமணி, தினசரி, பாரததேவி, நவஇந்தியா, தேசபக்தன், நவசக்தி, சண்டமாருதம் ஆகிய நாளிதழ்கள் சுதந்திரப் போருக்கு குரல் கொடுத்தவற்றுள் முதன்மையானவை.