- பத்மன்சொந்த நாட்டில் அடிமைகளாய் வாழ்கின்ற துர்பாக்கிய நிலைமை, தமிழக ஹிந்துக்களுக்கு நீடிக்கிறது. இங்கே ஹிந்துக்களின் மதச் சுதந்திரம், அரசியல் கபடதாரிகளின் முன்னே மண்டியிட்டுக் கிடக்கிறது. இவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான விசை, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்னும் வடிவிலே தற்போது கிடைத்துள்ளது.
கடந்த ஜூன் 7-ஆம் தேதியன்று (07.06.2021), போற்றுதலுக்குரிய இந்தப் புனிதத் தீர்ப்பை அளித்த நீதிபதிகள் திரு. ஆர்.மகாதேவன், திரு. பி.டி.ஆதிகேசவலு ஆகிய இருவரையும் சாட்சாத் அந்த பரமேஸ்வரன், மகாவிஷ்ணு என்றே துதிக்கத் தகும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்து அறநிலையத் துறையிடம் அறமும் இல்லை, ஹிந்து கலாசாரப் பாரம்பரியத்தைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது.
225 பக்கங்கள் கொண்ட இந்த பிரம்மாண்டத் தீர்ப்பு, தமிழக அரசும் அதன் ஹிந்து அறநிலையத் துறையும் மேற்கொள்ள வேண்டிய கடமைகளுக்கான 75 உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
ஹிந்துக் கோயில்களின் சொத்துகளையும், விக்ரகங்களையும் மட்டுமல்ல, கோயில்களைச் சார்ந்துள்ள கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றுத் தொன்மை, இசை, இலக்கியம், கலைகள், ஆகம விதிகள், வழக்கமான நடைமுறைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்பதை, இத் தீர்ப்பு, வெறும் மரச் சுத்தியலால் அல்ல, பெரிய சம்மட்டியாலேயே அடிப்பதைப் போன்று அடித்துக் கூறியுள்ளது.
இந்த வியத்தகு தீர்ப்புக்கான விதையை ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் தன்னையறியாமலேயே விதைத்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அந்நாளிதழின் வாசகர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தின் அடிப்படையில், அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வால் தானாக முன்வந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பு இது.
கோயில்கள் உள்ளிட்ட வரலாற்றுப் புராதனச் சின்னங்களைக் காப்பாற்றுவதற்காக, 17 உறுப்பினர்களைக் கொண்ட பாரம்பரியக் காப்பாணையக் குழு (Heritage Commission) அமைப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று 2012-இல் தமிழக அரசு அறிவித்து, அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகும், அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதை ‘Silent Burial’ என்ற தலைப்பிலான அந்த வாசகர் கடிதம் சுட்டிக்காட்டியிருந்தது.