16/06/2021

திருப்புகழ் விநாயகர் துதி (கவிதை)

 -அருணகிரிநாதர்


அருணகிரிநாதர்


(இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)


தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான


கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி

கப் பியகரிமுகன் - அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!

கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொருதிரள் புய - மதயானை

மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை

மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய - முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்

அப்புன மதனிடை - இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் - பெருமாளே! 1

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி

ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி;

இன்பரசத் தேபருகிப் பலகாலும்

என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே;

தம்பிதனக் காகவனத் தணைவோனே;

தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே

ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 2


பக்கரைவி சித்ரமணி பொற் கலணை யிட்ட நடை

பட்சிபெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய

பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்;

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு

சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு

செப்பென எனக்கருள்கை மறவேனே;

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புனெய்

எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள

ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக்கொளொரு

விக்கநச மர்த்தனெனும் அருளாழி!

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடைய பெருமாளே! 3

விடமடைசு வேலை அமரர்படை சூலம்

விசையன் விடு பாண மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்

வினையின்விளை வேதும் அறியாதே;

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

கலவிதனில் மூழ்கி வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு

கழலிணைகள் சேர அருள்வாயே;

இடையர்சிறு பாலை திருடிகொடி போக

இறைவன் மகள் வாய்மை அறியாதே

இதயமிக வாடியுடையபிளை நாத

கணபதியெ னாம முறைகூற;

அடையலவர் ஆவி வெருவ அடி கூர

அசலுமறி யாமல் அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

அறிவருளும் ஆனை முகவோனே! 4


***
திருப்புகழ்

அருணகிரிநாதர், தமிழ்நாட்டில் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். 
இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1,088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழின் உள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை. தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் திருப்புகழ் பிரதான இடம் வகிக்கிறது.
திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். 

No comments:

Post a Comment