16/06/2021

தேசிய கல்விக் கொள்கை: தவறான கருத்துக்களும் புரிதல்களும்

-பேரா. ஈ.பாலகுருசாமி



அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் நாடு போற்றும் சிறந்த கல்வியாளருமான பேராசிரியர் திரு. ஈ.பாலகுருசாமி தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு,  ‘புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏன் அமலாக்கம் செய்ய வேண்டும், எங்கெங்கு தவறான புரிதல் உள்ளது, அமலாக்கம் செய்யவில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும்’ என்பது குறித்து சிந்தனையைத் தூண்டும் வகையில் கடிதம் ஒன்றை கடந்த ஜூன் 3 அன்று அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:


ஈ.பாலகுருசாமி

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

மத்திய அரசு அண்மையில் ஒப்பதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்து தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தேவையில்லாத வகையில் எதிரான கருத்துகளைக் கூறி வருவதை, தமிழக மக்களாகிய நாம் நன்கு அறிவோம்.

அத்தகைய கருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடும். அல்லது அந்தக் கொள்கை ஆவணத்தை முழுமையாகப் படிக்காமலோ, அதன் உள்ளடக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமலோ கூறப்பட்டிருக்கலாம். அவ்வாறு கருத்துகள் கூற்வோர், தரமான கல்வி குறித்த நுட்பமான பார்வை இல்லாமல் இருக்கக் கூடும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தக் கல்விக் கொள்கை நடப்புக் கல்விச் சூழலுக்குக் கட்டாயம் தேவைப்படுவதாகும். இந்தியக் கல்வி முறையை உலகக் கல்வி முறையோடு இணைக்கும் நோக்கில் இக்கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

மனப்பாடக் கல்வி முறை போன்ற நடைமுறையை மாற்றி, மாணவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை, தேசிய பெருமிதம் ஆகியவற்றை ஊட்டும் வகையிலும் இது அமைந்துள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியக் கல்வியின் எதிர்காலம் குறித்து இதுவரை எழுதப்படாத அளவுக்கு, ஒருங்கிணைந்த நுட்பமான அறிவுபூர்வமான ஆவணங்களில் ஒன்றாகும்.

1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொள்கை ஆவணத்தை அடுத்து 34 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் முதல்முறையாக வடிவமைக்கப்பட்ட மிகச் சிறந்த கொள்கை ஆவணம் இது.

இந்தியாவில் 21ம் நூற்றாண்டுக்கான கல்வித் தேவைகளை எட்டும் வகையில் விரிவான வழிவகைகளையும் சிறந்த வழிகாட்டுதல்களையும் இக்கொள்கை கொண்டிருக்கிறது.

இக்கல்விக் கொள்கையில் ஏராளமான நெறிகள் உள்ளன, இந்நிலையில் இதற்கு எதிராகக் கருத்துக் கூறுவது நாகரிகமானது அல்ல. கல்வியின் தரம் குறித்தும் அதன் நேர்மறையான தாக்கம் குறித்தும் கவலைப்படும் அனைவரது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் தகுதியுடையது தேசிய கல்விக் கொள்கை.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக இருப்பது கல்விதான். பல மொழிகள், பல கலாசாரங்கள் கொண்ட, மாநிலங்கள் அளவில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தியாவைப் போன்ற ஒரு பரந்துபட்ட தேசத்திற்குத் தேவையான, வலுவான இலக்குகளை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த கல்வி குறித்த ஒரு தேசிய கொள்கை இன்றியமையாதது,

இந்தியா உலக அளவில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) 130-வது இடத்தில் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது மிகவும் மோசமான நிலையாகும். எனவே, இந்தியாவின் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) சரியான தருணத்தில் கொண்டு வரப்படுவது அவசியமாகும்.

அனைவருக்கும் அணுக்கமான (Access), சமமான (Equity), தரமான (Quality), விலை மலிவான (Alfordability), பொறுப்பு மிக்க (Accountability) கல்வியை வழங்க வேண்டும் என்ற அடிப்படைச் சவால்களை எதிர்கொள்ளும் தேசிய கல்விக் கொள்கை (NEP) இரண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. அவை:

1. தேசத்தின் பொருளாதார மேம்பாட்டில் நமது இளைஞர்கள் பங்களிப்பு செலுத்தும் வகையில் அவர்களது படைப்பாற்றல் (Creative), விமர்சனச் சிந்தனைப் போக்கு (Critical Thinking) ஆகிய திறன்களை மேம்படுத்துவது;  அவர்களின் புதுமை தேடல் மற்றும் ஆய்வு மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பது.

2. நமது நாட்டை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்று, சமூக மேம்பாட்டை அடைவதற்காக வழிகாட்டும் வகையில் இளைஞர்களை நெறிசார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறிவார்ந்தவர்களாகவும் தாராள சிந்தனைகள் கொண்டவர்களாகவும் உருவாக்குவது.

இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தப் புதிய கல்விக் கொள்கை, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் அனைத்து நிலைகளிலும் தொலைநோக்கு சீர்திருத்தங்களைக் கொண்டிருக்கிறது.

மாநிலங்களே தங்களது தேவைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப சில பரிந்துரைகளை வடிவமைத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு முழுச் சுதந்திரமும் நெகிழ்வுத் தன்மையும் உள்ளது என்பது இந்தக் கொள்கையின் சிறப்பம்சம் ஆகும்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து நிலவும் சில கட்டுக் கதைகள்

கட்டுக் கதை 1.

இக்கொள்கை தமிழக மக்கள் மீது இந்தியைத் திணிக்கிறது.

இது ஆதாரமற்ற கருத்து. எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று இக்கொள்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில், பள்ளிக்கூடங்களில் தாய்மொழி அல்லது மாநில மொழி வழிக் கல்வியைப் பரிந்துரைக்கிறது.

கட்டுக் கதை 2:

மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையானது.

இது மிகவும் தவறான கருத்தாகும். மும்மொழித் திட்டம் என்று கூறப்படுவது பள்ளிகளில் இரு இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்க வாய்ப்பு அளிப்பதாகும்.

இதில், எந்த மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதும் எந்த மொழியும் எந்த மாணவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது என்பதும் மும்மொழிக் கொள்கையின் பாராட்டத் தக்க அம்சங்கள் ஆகும்.

மேலும், இந்தக் கொள்கை நாட்டில் தற்போது உள்ள பன்முகத் தன்மையைப் பராமரிக்க வகை செய்யும். நம் நாட்டின் பலமொழி, பல கலாசாரத் தன்மையை நமக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருத வேண்டும். ஒருவர் அரசியல் பார்வையோடு குறுகிவிடாமல், இன்னொரு மொழியைக் கற்று, எழுச்சி பெறுவதற்கான அரிய வாய்ப்பாகக் கருத வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மொழியைத்தான் கற்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தாவிட்டாலும், பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியைக் கற்பது நம் இளைய தலைமுறைக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.

உண்மையில், நமது மாநிலத்திலேயே கூட தனியார் பள்ளிகளிலும், மத்திய செகண்டரி கல்வித் திட்டத்தில் (CBSE) நடத்தப்படும் பள்ளிகளிலும் படிக்கும் ஏராளமான மாணவர்கள் மும்மொழித் திட்டத்தில்தான் கல்வி பயில்கிறார்கள்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த சிறந்த வாய்ப்புகளை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

கூடுதலாக ஒரு மொழியைக் கற்பதால் நம் மாணவர்கள் எதை இழக்கிறார்கள்? “ஒரு மொழியைக் கற்றுக் கொள். அதனால் நீ போர் மூளாமல் தவிர்ப்பாய்” (Learn a language and you can avoid a war) என ஓர் அரபு நாட்டுப் பழமொழி இருக்கிறது. அது எவ்வளவு சரியான கருத்து! பல மொழிகளைக் கற்பதற்கு நமது மாணவர்களுக்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

கட்டுக் கதை 3:

மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்
தேர்வுகள் (Board Exams) நடத்தி மாணவர்கள் வடிகட்டப்படுவர்.

இது உண்மையே அல்ல. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே அந்தத் தேர்வுகளை நடத்த வேண்டுமேயன்றி, மேல் வகுப்புக்கு மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்காக அல்ல என்று தேசிய கல்விக் கொள்கை தெளிவாகப் பரிந்துரைக்கிறது.

தேர்வு முறை குறித்து மாநிலங்களே தங்களது சூழலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளவும் வகை செய்கிறது.

தற்போது உள்ளதைப் போல 10-வது மற்றும் 12-வது வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் (Board Exams) நடத்தப்படும்.

இவை மட்டுமின்றி, மாணவர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக பாடத்திட்ட வடிவமைப்பில் தனித்துவமான சீர்திருத்தங்கள், கற்றல் – கற்பித்தல் முறை பள்ளிக் கல்வி முறையில், மதிப்பீட்டு முறைகள் ஆகியவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன,

கட்டுக் கதை 4:

இக்கல்விக் கொள்கை  ‘குலக் கல்வி’ முறையை பள்ளியில் கொண்டுவரும்.

தொழிற்கல்வி முறைக்கும் (Vocational Education) எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஈ.வெ.ரா. அவர்கள் விமர்சித்த குலக் கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாட்டை, கற்றறிந்த, இளம் அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது,

‘நவீன இந்தியாவின் கல்விக் கொள்கை’ என நாட்டின் சிறந்த கல்வியாளர்களும் போற்றும் இக்கல்விக் கொள்கையை ‘குலக் கல்வி’ என்பதுடன் பொருத்திப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது!

தொழிற்கல்வி (Vocational Education) மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன், அவர்களிடம் சமூகத் திறன், சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.

நம் நாட்டில் இளைஞர்களின் ஆற்றலும் படைப்புத் திறனும் முழுமையாகப் பயன்படுவதற்காக தொழிற்கல்வி தேவைப்படும் தருணம் இது.

இந்தியாவில் தொழிற்கல்வி பெறும் இளைஞர்கள் 10 சதவீதம் மட்டுமே. ஆனால், கொரியாவில் 96 சதவீதம் பேரும், ஜப்பானில் 80 சதவீதம் பேரும், ஜெர்மனியில் 75 சதவீதம் பேரும், பிரிட்டனில் 68 சதவீதம் பேரும் தொழிற்கல்வி பெறுகிறார்கள்.

கட்டுக் கதை 5:

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது.

இது முழுக்க முழுக்கத் தவறான வாதம் ஆகும். கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அதில், தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக கல்வியில் தேவையான மாற்றங்களையும் கொள்கைகளையும் கொண்டுவருவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 676 மாவட்டங்களில், 6,600 வட்டாரங்களில், இரண்டரை லட்சம் கிராம ஊராட்சிகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், கூட்டங்கள் இரண்டு ஆண்டுகள் நடத்தி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகே இறுதி வடிவம் பெற்றுள்ளது.

இறுதி வடிவம் பெற்ற கொள்கைத் திட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப கூறியுள்ள யோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இவ்வளவு நடைமுறைகள் மேற்கொண்டுள்ள போது கூட்டாட்சித் தத்துவம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது ஏன்?

இவை மட்டுமின்றி, தேசிய கல்விக் கொள்கை (NEP) பரந்துபட்ட அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கொண்ட ஒரு கொள்கை ஆவணம் ஆகும்.

அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாநிலங்கள் தங்களது பிரேதசங்களின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிச் செயல்படுத்தலாம்.

கட்டுக் கதை 6:

இந்தக் கல்விக் கொள்கையில் சமூக நீதிக்கு இடமில்லை

இது முற்றிலும் தவறான நம்பிக்கை ஆகும். இக்கல்விக் கொள்கை அனைத்துத் தனிப்பட்டோரும் தங்களது கல்வி இலக்கைத் தொடர்வதற்கு சமமான வாய்ப்புகள் பெற வகை செய்கிறது.

பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் அனைவரும் எளிதாக அணுகி (Accessibility), சமமாக (Equity) சேருவதற்கு (Inclusion) பல்வேறு முன்முயற்சிகளை இக்கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

பாலின சேர்க்கை நிதி (Gender Inclusion Funds), தேசிய உதவித்தொகைக்கான இணையவாசல் (Portal for National Scholarship), பட்டியிலனத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகைத் திட்டம் (Incentive Schemes for SC, ST and OBC students), சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புக் கல்வி மண்ட லங்களை (Special Education Zones for disadvantaged groups) அமைத்தல் ஆகிய பரிந்துரைகள் மிகவும் பாராட்டத் தக்கவை.

‘தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் மேட்டுக்குடியினரும் வசதியானவர்களும் மட்டுமே பயனடைவர்’ என்று ஒரு தலைவர் கூறுகிறார்.  கற்றறிந்த ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்து வருவது துரதிர்ஷ்ட வசமானது. மேலும் அது தவறான திசை திருப்பும் தகவல் ஆகும்.

கட்டுக் கதை 7:

இக்கொள்கை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும்

இக்கொள்கையில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து வெளிப்படையான குறிப்பு ஏதும் இல்லை என்பது உண்மைதான். அது, தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நீடிக்கும் என்பதையே உணர்த்துகிறது.

இது தொடர்பாக, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை எந்தக் காரணத்திற்காகவும் நீர்த்துப் போகாது என்று மத்திய கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.

இவை மட்டுமின்றி, கல்வியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியோர் ஆகியோரின் சேர்க்கையை மேம்படுத்துவதற்கு இந்தக் கல்விக் கொள்கையில் பல சிறப்பான நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கட்டுக் கதை 8: 

கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் இக்கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது.

இது அடிப்படை எதுவும் இல்லாத வாதமாகும். இப்போதே ஏராளமான கல்வி நிறுவனங்கள் கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகின்றன.

தன்னாட்சி அதிகாரம் பெறுவது மட்டுமே வணிகமயமாக்கலுக்கு வழி வகுத்துவிடாது.  கல்வி நிறுவனத்தில் முறையான கணக்குகள் பராமரிக்கப்படாததும் சரியான கட்டுப்பாடுகள் இல்லாததும் வணிகமயமாக்கலுக்கும் நிதி ஆதாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும் வழி வகுக்கிறது,

கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் (necessary guidelines), பொறுப்பு நடவடிக்கைகள் (accountability measures) ஆகியவை தேசிய கல்விக் கொள்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நமது கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்புப் பெறுவதற்கும் மிகவும் இன்றியமையாத் தேவைகளில் தன்னாட்சி ஒன்றாகும்.

புதிய பாடத் திட்டங்களை வடிவமைப்பது, சிறந்த படிப்புகளை அறிமுகம் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, மதிப்பீட்டு முறைகளை வகுத்துக் கொள்வது, கல்விக் கூட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வது போன்றோவற்றுக்கு தன்னாட்சி வகை செய்கிறது.

கட்டுக் கதை 9:

இக்கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது

கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு என்பது நம் நாட்டிற்குப் புதியதல்ல. 70 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகளும் 30 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளும் தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படுபவையே.

இந்தக் கல்விக் கொள்கை 2030ம் ஆண்டுக்குள் பள்ளிகளில் சேருவதை 100 சதவீதமாக உயர்த்துவதற்கும், உயர்கல்வியில் 2035ம் ஆண்டுக்குள் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio) 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது தற்போதைய மாணவர் சேர்க்கையை விட தனியார் நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைவது நடைமுறை சாத்தியமில்லாதது,

எனவே, கல்வியில் முதலீடு செய்வதற்குத் தனியார் பெரு நிறுவனங்களைத் தூண்டும் விதத்தில் தேவையான கொள்கை வழிகாட்டுதல்களும் சலுகைகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.

கட்டுக் கதை 10:

கல்விக் கொள்கையின் பல லட்சியத் திட்டங்களை நிறைவேற்ற இயலாது.

இந்த கல்விக் கொள்கையில், அப்படி செயல்படுத்த இயலாத திட்டங்கள் எதுவுமே கூறப்படவில்லை .  ‘இலக்கு இருந்தால் வழி நிச்சயம்’ (Where there is a will there is a way) என்பது பழைய ஆங்கிலப் பழமொழி ஆகும்.

இது கடின உழைப்பு, குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை வலியுறுத்துகிறது, இந்தக் கல்விக் கொள்கை மாற்றம், தேர்வு மற்றும் நம்பிக்கை (Change, Choice and Confidence) என்ற இலக்குகளை அடைய வழி வகுக்கிறது.

அதை எப்படி நாம் செயல்படுத்துவது? கூட்டாட்சி அமைப்பில், இத்தகைய லட்சியங்களை அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் கட்டு முயற்சியால்தான் எட்ட முடியும். குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் ஒத்துழைப்பு தேவை. 

எல்லாவற்றையும் விட, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 6 சதவீதத்தைக் கல்விக்காகவும், 2 சதவீதத்தை ஆராய்ச்சிக்காகவும் ஒதுக்குவது என்ற பரிந்துரை மிகவும் முக்கியமானதாகும். விரும்பிய லட்சியங்களை அடைவதற்கும், கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு உறுதுணையாகவும் இது இருக்கும். 

தேசியக் கல்விக் கொள்கையில் நாம் இடம்பெறாவிட்டால் ஏற்படும் விளைவுகள்:

கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. எனவே, மத்திய அரசின் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துவது மாநில அரசுகளின் கடமையாகும்.

இக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்த விரும்பாத மாநிலங்கள் தங்களது உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.

1. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சிறந்த சில சாதனைகளை அடைவதற்கும் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்பை மாநிலம் இழக்கக் கூடும்.

2. உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் சில சிரமங்களைச் சந்திக்கக் கூடும். பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) போன்ற தேசிய அளவிலான கல்வித் தரக் குழுமங்களுடன் இணங்கிச் செயல்படுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும்.

3. மாநிலங்கள் தங்களது ஆய்வுத் திட்டங்களுக்கும் பல்வேறு கல்வி மேம்பாட்டுக்கும் மத்திய ஒழுங்காற்று அமைப்புகளிடமிருந்தும் (central regulatory agencies) மத்திய அரசின் துறைகளிடமிருந்தும், நிதியுதவி பெறுவதில் இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். 

ஐயா, எதிர்கால இந்தியக் கல்வி குறித்து இதுவரை வரையப்படாத, விரிவான, தீவிர மாற்றத்துக்கான, நுட்ப அறிவுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கையை, ஆற்றல் மிக்க பகுத்தறிவுச் சிந்தனையுள்ள தங்களது தலைமையில் செயல்படும் தமிழக அரசு, நிச்சயமாக நமது மாநிலத்தின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற மாற்றங்களுடன் மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.




No comments:

Post a Comment