16/06/2021

அன்னைத்தமிழ் வளர்த்த அற்புதப் புலவர்கள் - 12

-பொன்.பாண்டியன்



21.அம்மூவனார்

காண்க: முந்தைய பகுதிகள்

அன்றைய சேரநாடு இன்றைய கேரள மாநிலம். அங்கு ‘அம்மூ’ என்று ஆண்களுக்குப் பெயர் வைப்பது பிரசித்தம். அந்தப் பகுதியைச் சேர்ந்த நமது புலவர் ‘அம்மூவனார்’ நெய்தல் திணையில் பாடுவதில் வல்லவர்.

நெய்தல் நிலத்தின் உணர்வு கடல் எவ்வாறு ஓயாது அலை பாய்ந்து கொண்டிருக்கிறதோ அதுபோல மனதின்கண் நிகழும் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாம். ஆம். இவருடைய பாடல்கள் மனதைப் பிசையும் தன்மை உடையன. அதற்கு இவர் பாடிய ஐங்குறுநூறு – நெய்தல் பகுதியின் இரண்டாம் பத்து தோழிக்கு உரைத்ததே சான்றாகும்.

தவப்பயன் குறித்து நம் தேசத்தினர் கொண்டிருக்கும் நம்பிக்கை வெகு இயல்பானது. அதையும் வெளிப்படுத்துகிறது கீழ்க்காணும் பாடல்:

“சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல்
ஆற்றாதேமே”

( ஐங்குறுநூறு - 111 )

அகநானூறு-140ல்,  “உழாஅது செய்த வெண்கல் உப்பு” என்று உப்பங்கழியை வயலாக உருவகிக்கும் பாங்கு அருமை. அதேபாடலில்  “நெல்லின்நேரே வெண்கல் உப்பு” என பண்டமாற்று வணிகத்தைக் குறிப்பிடுகிறார்.


அகநானூறு- 280ஆம் பாடலில்,

“இருநீர்ச்சேர்ப்பின் உப்புடன் முழுதும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம், பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ
.....பரதவன்தமக்கை”.

-என்கிறார். இப்பாடலில், உப்பங்கழியில் வேலை பார்த்து அடுத்து இருந்து பணிவிடை செய்தால், தன் மகளை நமக்குத் தருவானோ எனத் தலைவன் தனக்குள் புலம்புவது சுவையானது.

மஹாபாரதத்தில் சந்தனு மஹாராஜா மீனவப் பரதவனிடம் பெண் கேட்டுக் கெஞ்சுவதை இது நினைவுறுத்துகிறது. பெண்கள் மிக உயர்வாகவும் மிக கௌரவமாகவும் போற்றப்பட்டனர் என்பதற்குச் சான்றாகவும் இப்பாடல் விளங்குகிறது. ஆண்களும் அறநெறிக்கு உட்பட்டு நடந்துகொண்டனர் என்பதையும் இது காட்டுகிறது.

அகநானூறு- 370ஆம் பாடலில், தலைவியானவள் கடற்கரையில் நிற்பதை,  “கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு” என்று கடல்தேவதையாகக் கடலில் தோன்றிய திருமகளாக வர்ணிக்கிறார்.

அகநானூறு-35ஆம் பாடலில்,

“வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
நடுகல் பீலிசூட்டித்;
துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளொடு
துரூஉப் பலிழ கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம்”

-என்கிறார். இதன்மூலமாக, ஊருக்கு வெளியே எல்லைப்புறத்தில் கானகத்தில் போர்த்தொழில் மறவர்கள் அக்காலத்தில் ஆற்றிய ஆவேசத் தெய்வங்களின் வழிபாடு குறித்துப் பாடி உள்ளார். நடுகல் வழிபாடு குறித்தும் நம்மால் அறிய முடிகிறது.

இவர் இயற்றியவை:
  • அகநானூற்றில் 6 பாடல்கள் 
  • நற்றிணையில் 10 பாடல்கள் 
  • குறுந்தொகையில் 11 பாடல்கள் 
  • ஐங்குறுநூற்றில் நெய்தல் திணை (101 - 200) 100 பாடல்கள்.

இவற்றின்மூலமாக, தமிழுக்கும் பாரதப் பண்பாட்டிற்கும் வளமை சேர்த்துள்ளார்.



No comments:

Post a Comment