உடுக்கில் பிறந்தது ஓசை.
ஓசையிலிருந்து
பொறுக்கி எடுத்த
உயிரொலியும்
மெய்யொலியும்
உயிர் மெய்யொலியும்
முறைப்படிப் புணர
பிறந்தது மொழி.
பின் மொழியின் ஜாலத்தில் பிறந்தன
கவிதை, கதை, காவியம்.
விரிந்த இப்பிரபஞ்சத்தில்
காவிய நேர்த்தி.
வாசித்துத் தீரா வனப்பு.
சொல்லொன்றும் புகாத
மழலை மனதில்
பிரதிபலித்த பொருட் பிரபஞ்சம்
சொற்குறி பெற்று சொல்லே ஆயின.
வான், வளி, அனல், புனல்,
மணல் என
அத்தனையும் சொல்மயம்.
இன்னும் பேர் சூட்டப்படாத
நட்சத்திரங்கள்,
பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்து
வருகின்றன-
உடுக்கிலிருந்து.
கூத்தா
உன் காலசைய
கையசைய
இடையசைய
விழியசைய
உடுக்கும் அசைய
ஆனந்த நடனம் ஆடுகிறாய்.
இச்சுந்தர நடனத்தின்
சுவையறியாதவன்
சுடலையில் பிணம்.
No comments:
Post a Comment