15/05/2021

மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமம்

-ஜடாயு



பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தருக்கு அஞ்சலி!

நமது காலகட்டத்தில் தமிழ்நாட்டின் புகழ்மிக்க வேதாந்த ஆசாரியராகவும் ஆன்மிகத் தலைவராகவும் திகழ்ந்த பூஜ்யஸ்ரீ சுவாமி ஓங்காரானந்தர் மே 10, 2021 மாலை, மதுரையில் சித்தியடைந்தார். கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருவத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுவாமிகளின் மறைவு தமிழ் இந்துக்களுக்கு ஈடுசெய்ய இயலாத மிகப் பெரிய இழப்பாகும்.

1956ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பேரூரில் பரம்பரையான வைதிக அந்தணர் குடும்பத்தில் வைத்தியநாத கனபாடிகள் – அலமேலு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் சுவாமிகள். அவரது பூர்வாசிரமப் பெயர் கோஷ்டேசுவர சர்மா. வேத நிஷ்டையும் வறுமையும் கலந்த குடும்பச் சூழல்.

இளம்வயதிலேயே வேதபாடசாலை வழி பாரம்பரியமாக வேத, சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். சுவாமி சித்பவானந்தரின் நூல்களைத் தொடர்ந்து வாசித்து வந்ததால், ஆன்மிக நாட்டமும், ஸ்ரீராமகிருஷ்ணர் - விவேகானந்தர் குறித்த பரிச்சயமும் அவருக்கு ஏற்பட்டது.

இல்லறத்தில் புக விரும்பாமல் துறவு வாழ்க்கையையே அவர் மனம் நாடியதால், குடும்பத்தினர் திருமணப் பேச்சை எடுப்பது குறித்த செய்தி தெரியவந்தபோதே, வெளியூரில் இருக்கும்போது சூரியனை சாட்சியாக வைத்து சன்னியாசம் ஏற்றுக்கொண்டதாகவும், பின்பு திருப்பராய்த்துறைக்கு வந்து சுவாமி சித்பவானந்தரை குருவாக அடைந்ததாகவும் 2020ம் ஆண்டு ஓர் உரையில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். “ஓங்காரானந்த” என்ற தீட்சா நாமத்தை அளித்தவர் சுவாமி சித்பவானந்தர் தான். 

பின்னர், பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரது சீடரான சுவாமி பரமார்த்தானந்தரை சாஸ்திர குருவாகக் கொண்டு வேதாந்த சாஸ்திரங்களை ஆழமாகவும், விரிவாகவும் முறையாகக் கற்றார். அதன்பின், சதாசிவ பிரம்மேந்திரர் வழிவந்த அத்வைத அவதூத மரபைச் சார்ந்த புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதியாகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இங்ஙனம் மூன்று மகத்தான ஆசாரிய பரம்பரையினரின் புனித சங்கமமாக விளங்கியவர் சுவாமி ஓங்காரானந்தர்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் வேதாந்தச் சுடரொளியாக விளங்கிய சுவாமி சித்பவானந்தர், ஆன்மிகத்தில் மட்டுமல்லாது, கல்வி, சமய விழிப்புணர்வு, இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் மிகுந்த கவனமும் ஈடுபாடும் கொண்டிருந்தார். தனது குருவின் பெயரால் தேனியில் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் வேதபாடசாலையுடன் கூடிய  ‘ஸ்ரீ சித்பவானந்த ஆசிரமம்’ என்ற அற்புதமான ஆசிரமத்தை நிறுவிய சுவாமி ஓங்காரானந்தரும் இந்த அனைத்து விஷயங்களிலும் அதே அளவு ஈடுபாடு கொண்டிருந்தார்.

கிறிஸ்தவ மதமாற்றப் பிரசாரங்களும், இந்து விரோத அரசியல் பரப்புரைகளும் தமிழ்நாட்டை மாசுபடுத்திவரும் சூழலில் அதனை எதிர்கொள்ளக் களப்பணியாற்றும் தொண்டர்களைக் கொண்ட ‘தர்ம ரக்ஷண சமிதி’ என்ற அமைப்பை சுவாமி தயானந்த சரஸ்வதி உருவாக்கினார். அவருக்குப் பிறகு அதன் தலைமைப் பொறுப்பை சுவாமி ஓங்காரானந்தர் ஏற்றுக்கொண்டார். இந்தப் பணியில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி முதலான இந்து இயக்கங்களுடனும், சைவ ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களுடனும் ஒருமித்து இணைந்து தம் வாழ்நாள் இறுதிவரை சிறப்பாகப் பணியாற்றினார். 

ராமேஸ்வரம் ‘ராம சேது’ பாலத்தைக்காப்பாற்றிட நீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்குத் தொடுத்தவர் சுவாமிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிகள் அடிப்படையில் ஒர் ஆசிரியர். அவரது மையமான பணி என்பது, நமது ஞான நூல்களை ஆழமாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்பிப்பது என்பதாகவே இருந்தது. உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத்கீதை, திருக்குறள், திருவாசகம், கைவல்ய நவநீதம், சங்கரரின் விவேக சூடாமணி, ஆத்மபோதம், தத்வபோதம் முதலான நூல்கள், தாயுமானவர் பாடல்கள் எனப் பல நூல்களையும் குறித்து பல நாட்கள் பல மணி நேரங்கள் அவர் விரிவுரையாற்றியிருக்கிறார். 

‘கீதையும் குறளும்’, ‘தாயுமானவர் பாடல்களில் அத்வைதம்’ போன்ற தலைப்புகளில் இந்துமதத்தின் அடிப்படையான தத்துவ ஒருமையையும் இணைவையும் சுட்டிக்காட்டியுள்ளார். நேரடியாக மட்டுமின்றி, இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் அவரது யூட்யூப் சேனலில் வழியாக இந்த உரைகள் உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்களைச் சென்றடைந்திருக்கின்றன.

தெளிவான உச்சரிப்பு, கம்பீரமான குரல், எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு சுலோகத்தையும், பாடலையும் சொற்பொருள், உட்பொருள், அதிலுள்ள தத்துவ சிந்தனை ஆகியவற்றை இணைத்து விளக்கும் பாங்கு, தமிழ் - சம்ஸ்கிருதம் என இருமொழிகளிலிருந்தும் சரளமாக மேற்கோள்களை எடுத்துக் காட்டுதல் என அவரது உரைகளில் பல சிறப்பம்சங்கள் உண்டு. 

அனாவசியமான நகைச்சுவைகளும், துணுக்குகளும் அவரது பேச்சில் ஒருபோதும் கிடையாது என்றாலும், சுவாரஸ்யம் சிறிதும் குன்றாத பேச்சு அவருடையது. சில சமயங்களில் இயல்பான நகைச்சுவை இழையோடும் – “தமிழ் நாட்டுல தமிழைப் பொருத்த வரை பரம அத்வைதம் தான். ல, ள, ழ எதற்கும் பேதமே இல்லை” என்பது போல.

சுவாமிஜி திருக்குறளில் ஆழ்ந்த புலமையும் பற்றும் உடையவர்.  ‘வாழும் வள்ளுவம்’ என்ற தலைப்பில் திருக்குறள் பேருரைகள் ஆற்றியதோடு, தனது அனைத்து வேதாந்த வகுப்புகளிலும் குறள் மேற்கோள்களைத் தக்க இடங்களில் கூறி விளக்குபவர். திருக்குறளைப் பரப்புவதற்கென்றே ஒரு அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் வருடந்தோறும் திருக்குறள் முற்றோதல் மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளையும் நடத்தி வந்தவர். ஆனால் அவர் அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. பெரியாரிஸ்டு அமைப்பு ஒன்று திருக்குறள் மாநாடு என்று அறிவித்து, சனாதன தர்மம், அறம் இத்யாதி குறித்து அவர்களது தரப்பின் வழக்கமான அபத்த புரிதல்களையும் பொய்ப் பிரசாரங்களையும் முன்வைத்தபோது, அதனைக் கண்டித்து உறுதியாக அவர் எதிர்வினையாற்றினார் (வீடியோ இங்கே).

திராவிட இயக்க அமைப்பான கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசம் குறித்து மலினமான அவமதிப்புகளைச் செய்தபோது, அதற்கெதிராக கடும் எச்சரிக்கை விடுத்ததோடு, கந்தசஷ்டி கவசத்தின் சிறப்புகளை முழுமையாக்க விளக்கி உரைகளும் ஆற்றினார். திருமாவளவனின் வக்கிரமான இந்து வெறுப்புப் பேச்சைக் கண்டித்ததோடு, அவர் மீதும் மற்றும் இதுபோல வெறுப்புணர்வைத் தூண்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுவாமிகள் கோரிக்கை விடுத்தார் (வீடியோ இங்கே). அவரது கண்டனங்கள் அனைத்தும் உறுதியாகவும் அதே சமயம் மிகவும் சாத்வீகமாகவும், சாந்தமான மொழியிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

சன்னியாச ஆசிரமத்தின் இயல்பிற்குரிய வகையில், இந்து வெறுப்புணர்வைப் பரப்பும் கும்பல்களுக்கும் இறைவன் நல்ல புத்தியை அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக அவை அமைந்துள்ளன. துறவியும் ஆன்மீகத் தலைவருமாக இருக்கும் ஒருவர் இந்து தர்மத்தை அவமதிக்கும் வெறுப்புப் பிரசாரங்களுக்கு எந்தவகையில் உறுதியான எதிர்ப்பையும் எதிர்வினையையும் பதிவுசெய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதற்கான ஆதர்ஷ வழிகாட்டுதலாக சுவாமிகளின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன.

பாரதியாரின் வேதாந்தப் பாடல்களில் ஆழமாகத் தோய்ந்தவர் சுவாமிகள். பாரதியாரின் ‘சுயசரிதை’யில் உள்ள கீழ்க்காணும் அழகிய பாடலை சுவாமிகள் தனது பல சொற்பொழிவுகளிலும் இறுதியில் ஓதி, கேட்பவர்களையும் திரும்பக் கூறச் செய்வதைக் கவனித்திருக்கலாம். தனிப்பட்ட அளவில், போற்றுதலுக்குரிய ஒரு வேதாந்த ஞானி, ஆசாரியார் இத்தகு அன்புடன் பாரதியின் பாடல்களைக் கூறுவதும் மேற்கோள் காட்டிவந்ததும் என்னைப் போன்ற பாரதி பக்தர்களுக்கு மிகவும் உவகையும் பெருமையும் அளித்தது என்றால் மிகையில்லை.

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை,
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்று இவை அருளாய்,
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப் பரம்பொருளே.

(பொறிகளின் – ஐம்புலன்களின்; குறி – அடையாளம்)

சுவாமிகளின் புனித நினைவைப் போற்றி எனது இதயபூர்வமான சிரத்தாஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஓம் சாந்தி!

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

– திருக்குறள்

वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद् यतयः शुद्धसत्त्वाः ।
ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥

வேதாந்த உட்பொருளை
தீர முடிவுசெய்தோர்
துறவெனும் யோகத்தால்
உள்ளம் தூய்மையுற்றோர்
மேலான அமுதநிலை அடைவர்.
ஈற்றிறுதிக் காலத்தே
முற்றிலும் விடுபட்டு
பிரம்ம நிலை அடைவர்.

– முண்டக உபநிஷதம்







No comments:

Post a Comment