25/01/2020

‘விவேகானந்தம்’ நூல் வெளியீட்டு விழா

-நிகழ்வுகள்-



‘விவேகானந்தம்’ நூலை வெளியிடும் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன், சுவாமி கமலாத்மானந்த மஹராஜ், பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.இராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கவிஞர் குழலேந்தி ஆகியோர். 


சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தின ஆண்டு 2012-13 இல் நாடுமுழுவதும் மிகுந்த உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அச்சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்புவதற்காக தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் ‘விவேகானந்தம்150.காம்’ என்ற இணையதளம் துவக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த இணையதளத்தில் தினந்தோறும் சமூகத்தின் பல்வேறு தரப்பில் உள்ள பெரியோர்கள், ஆளுமைகள், சான்றோர்களின் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகி வந்தன. அவ்வாறு வெளியானவை சுமார் 700 படைப்புகள்.

சுவாமிஜியின் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்த பிறகு, மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்களின் முயற்சியால், அந்த இணையதளத்தில் இடம்பெற்ற படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 190 கட்டுரைகள், கவிதைகளைத் தொகுத்து நூல் வடிவமாக்கும் முயற்சி நடைபெற்றது.

அது தற்போது முழுமை அடைந்து 1208 பக்கங்கள் கொண்ட 3 தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. பதிப்பகத் துறையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அல்லயன்ஸ் நிறுவனம் இந்தத் தொகுப்பை ‘விவேகானந்தம்’ என்ற பெயரில் பதிப்பித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த விலை: ரூ. 1155/-
இந்த நூல், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் வெளியிடப்பட்டது. விழாவுக்கு சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். சுவாமி தத்பிரபானந்தர் வரவேற்றார். நூல் குறித்து தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.இராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கவிஞர் குழலேந்தி ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

விவேகானந்தம்’ நூலை சுவாமி கமலாத்மானந்தர் வெளியிட, சமயச் சொற்பொழிவாளர் பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன், பேராசிரியர் இரா.இளங்கோ, ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு மாநில அமைப்புச் செயலாளர் சுடலைமணி, மதுரை மாநகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தேசிய இளைஞர் தின விழாவை ஒட்டி நடத்தப்பட்டகட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் ஆகியோர் சுவாமி விவேகானந்தர் குறித்து சிறப்புரையாற்றினர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



No comments:

Post a Comment