25/01/2020

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

-ஆசிரியர் குழு


தாயுமானவர்

(திருநட்சத்திரம்: தை விசாகம்)
(ஜன. 19)


தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது காலம்: பொ. யு.பின் 1705 – 1742. தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்.
இவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை. திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள்திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன.
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!

(பராபரக்கண்ணி - 221)
-என்ற இவரது பாடல், ஆன்மிக நேயர்களின் இலக்காகஎன்றும் மிளிர்வதாகும்.
தாயுமானவர், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்: கேடிலியப்ப பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர்.

கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும்,அவர் மனைவி ராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.

ஒருமுறை முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர், அரசனுக்கும் அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.

மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். மனைவியின் மறைவுக்குப் பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப் பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் இவரது தலமானது. இன்றும் ஆண்டுதோறும் இங்கு தாயுமானவர் குருபூஜை தை மாத விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் லட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

No comments:

Post a Comment