25/01/2020

மகத்தான மாமனிதரின் நூற்றாண்டு துவக்கம்


-சேக்கிழான்
தத்தோபந்த் தெங்கடி
(1920 நவ. 10- 2004 அக். 14)

.
தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதீய சிந்தனையாளர்களுள் அமரர் திரு. தத்தோபந்த் தெங்கடிக்கு முதன்மையான இடமுண்டு. அவர் சிந்தனையாளர் மட்டுமல்லாது நிகரற்ற அமைப்பாளராகவும் விளங்கினார். கட்சி அரசியலைத் தாண்டி ஹிந்துத்துவ சிந்தனையைக் கொண்டுசென்று, தனக்கே உரிய வழியில் அதற்கு நவீன வடிவமும் கொடுத்தார் தெங்கடி. இன்று அவரது பிறந்த நூற்றாண்டு துவங்குகிறது.

1920 நவம்பர் 10இல் அன்றைய மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் ஆர்வி கிராமத்தில் தஎங்கடி பிறந்தார். பெற்றோர்: பாபுராவ் தெஜீபா தெங்கடி- ஜானகி தேவி.

15 வயதிலேயே தன்னையொத்த குழந்தைகளை இணைத்து வார்தா வட்ட காங்கிரஸ் கட்சிக்குள் வானர சேனை என்ற அமைப்பைத் துவங்கி இயங்கியவர்; படிக்கும் காலத்தில் (1936- 38) ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற அமைப்பில் இணைந்து விடுதலைக்காகப் போராடியவர் தெங்கடி.


எம்.ஏ., எல்.எல்.பி. பட்டங்களைப் பெற்ற அவர், அப்போது வளர்ந்துவந்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்தார். மிக விரைவில் அதன் முழுநேர ஊழியராக ஆனார். ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் பிரசாரகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குடும்ப வாழ்வைத் தியாகம் செய்து, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரிகளாக இருக்கிறார்கள். தெங்கடியும் 1942 முதல் இறக்கும் வரை (2004) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசாரகராகவே, 62 ஆண்டுகள் இருந்தார்.

தெங்கடி மிகச் சிறந்த செயல்வீரர். தன்னுடன் பழகுவோரை ஈர்க்கும் திறனும், அவர்களையும் சமூகப்பணியில் ஈடுபடுத்தும் ஆற்றலும் கொண்டவராக அவர் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது புதிய அமைப்புகளைக் கட்டமைத்து உருவாக்குவதில் அவர் மிகவும் திறமையானவராக இருந்தார். அவரது திறமையை உணர்ந்த அப்போதைய இரண்டாவது தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், அவரை சங்கத்தின் சிந்தனைகள் பிற துறைகளில் பரவுவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு பணித்தார்.

அதையேற்று தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் துறையில் பணிபுரிய விரும்பிய தெங்கடி அப்போது பிரபலமாக விள்ங்கிய ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தில் (காங்கிரஸ்) இணைந்தார். 1950-51இல் அந்த அமைப்பின் ம.பி. மாநில அமைப்புச் செயலாளராகவும் உயர்ந்தார். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் தபால் - ரயில்வே தொழிற்சங்கத்திலும்  சிறிதுகாலம் பணியாற்றினார். அங்கு கிடைத்து கள அனுபவங்களின் அடிப்படையில் 1955இல் அவர் நிறுவிய அமைப்பே பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.). இன்று உலக அளவில் புகழ் பெற்றதாகவும், தேசிய அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டதாகவும் பி.எம்.எஸ். வளர்ந்திருக்கிறது.

அதற்கு முன்னதாகவே (1949) மாணவர்களுக்கான அமைப்பின் தேவையை உணர்ந்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) துவங்கப்பட்டது. அத நிறுவன உறுப்பினராக பால்ராஜ் மதோக், எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோருடன் செயல்பட்டார் தெங்கடி. இன்று தேசத்தின் முதற்பெரும் மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி. உள்ளது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர் 1979இல் பாரதீய கிசான் சங்கத்தை நிறுவினார். அதேபோல, நாட்டின் பொருளாதார சிந்தனை சுதேசிமயமாக வேண்டும் என்ற நோக்க்த்தில் ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச் அமைப்பை 1991இல் நிறுவினார். (அண்மையில் கையெழுத்தாக இருந்த சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அரசு விலகச் செய்தது இந்த அமைப்பே). சமூக ஒருமைப்பாட்டு அமைப்புகளான சமாஜிக் சமரஸதா மன்ச், சர்வபந்த் சமாதார் மன்ச் ஆகிய அமைப்புகளை நிறுவியவரும் தெங்கடியே.

1951இல் பாரதீய ஜனசங்கம் (இப்போதைய பா.ஜ.க.வின் முந்தைய வடிவம்) துவங்கப்பட்டபோது, சியாம பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, நாணாஜி தேஷ்முக் ஆகியோருடன் நிறுவன உறுப்பினராகச் செயல்பட்டார். கட்சி ஓரளவு வளர்ந்தவுடன் அரசியல் பணிகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் கவனம் கொடுக்கத் துவங்கினார்.

வழக்கறிஞர் அமைப்பான அகில பாரத அதிவக்தா பரிஷத், நுகர்வோர் அமைப்பான அகில பாரத கிரஹக் பஞ்சாயத், சிந்தனையாளர் அமைப்பான பாரதீய விசார் கேந்திரம் உள்ளிட்ட பல சங்க பரிவார் அமைப்புகளின் நிறுவன உறுப்பினராக அவர் விளங்கினார். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. அவரது எளிமையும் ஆளுமையும் புதிய செயல்வீரர்களை புதிய களங்களில் இயங்கச் செய்தது. அதன் ஒட்டுமொத்த விளைவே தேசத்தில் இன்று அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று சொன்னால் மிகையில்லை.

தெங்கடி தொலைநோக்குச் சிந்தனையாளர். அதுமட்டுமல்ல, ஒரு தீர்க்கதரிசி. சோவியத் ரஷ்யா என்னும் வல்லரசு பல துண்டாகச் சிதறும் என்று 1980களிலேயே கணித்தவர் அவர். மேற்கத்திய முதலாளித்துவக் கோட்பாட்டுக்கும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கம்யூனிசக் கோட்பாட்டுக்கும் மாற்றாக பாரதத்தின் வழிமுறையே உலகிற்கு வழிகாட்டும் என்று சொன்ன அவர், அதனை  ‘மூன்றாவது வழி என்று கூறினார். கம்யூனிசம் அதன் உச்சத்தில் எதேச்சதிகாரத்தின் வடிவமாக மாறும் என்று அவர் 1970களிலேயே எச்சரித்தார். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விரைவில் திவாலாகும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

பாரதத்தின் குடும்ப அமைப்பு முறையும், ஆதிக்கம் செலுத்தாத உலகம் தழுவிய தத்துவக் கோட்பாடுகளும் எதிர்காலத்தில் வழிகாட்டும் என்பதே அவரது சிந்தனைகளின் அடிநாதம். அந்த அடிப்படையில்தான் பல அமைப்புகளை தேசிய அளவில் கட்டி எழுப்பினார். அவை ஒவ்வொன்றும் தத்தமது துறைகளில் முதன்மையானவையாக நாட்டிற்கு வழிகாட்டுகின்றன.

டாக்டர் பீமராவ் அம்பேத்கர் மும்பையில் பட்டியலின ஜாதிக் கூட்டமைப்பு சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு தேர்தல் முகவராக தெங்கடி பணியாற்றி இருக்கிறார். அம்பேத்கருடன் அவருக்கு மிகுந்த நல்லுறவு இருந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தபோதும் அரசியல் எல்லைகளைக் கடந்த நட்புறவுகளை பல கட்சிகளிலும் கொண்டிருந்தார் அவர்.

அதேபோல, பாஜக அரசின் பல முடிவுகள் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கும் தொழில் துறைக்கும் பாதகமாக அமைந்தபோது 2003இல் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை எதிர்க்கவும் அவர் தயங்கவில்லை. அப்போது வாஜ்பாயை அவர் மிகக் கடுமையாகவே விமர்சித்தார். அதற்காகவே 2003இல் இந்திய அரசு அளித்த பத்மபூஷண் விருதைப் பெற அவர் மறுத்தார்.

பாஜக அரசின் (1998- 2004) பல செயல்பாடுகளுக்கு அணை கட்டியவராகவும், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பி.எம்.எஸ். தலைமையில் ஒருங்கிணைப்பவராகவும் அவர் திகழ்ந்தார். உலகளாவிய தொழிற்சங்கக் கூட்டமைப்பில் அவர் சிறப்பான இடம் வகித்தார்.

அதிகார அரசியலில் அவருக்கு என்றும் நாட்டமில்லை. அவரது எண்ணம் என்றும் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள், தொண்டர்களின் வளர்ச்சி குறித்தே இருந்தது. அதற்காகவே அவர் வாழ்நாளெல்லாம் பாடுபட்டார். 1964 முதல் 1976 வரை அவர் ராஜ்யசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் அரசியலில் உயர்ந்த பதவிகளைப் பெற்றிருக்கலாம். அதை அவர் நாடவில்லை.

தெங்கடி சிறந்த எழுத்தாளரும் கூட. ஹிந்தியில் 26 நூல்களையும், ஆங்கிலத்தில் 12 நூல்களையும், மராத்தியில் இரு நூல்களையும் அவர் எழுதி இருக்கிறார். அவற்றில் ‘Third way’ என்ற அவரது மூன்றாவது வழி முதன்மையானது.

சமுதாய நலனுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் தெங்கடி. அரசியல் மாற்றம் நிக்ழ வேண்டுமானால் சமுதாய மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இன்று அவர் கண்ட கனவுகள் ஒவ்வொன்றாகப் பலிதமாகி வருகின்றன. அவரது செயலூக்கம், தலைமைப்பண்பு, அமைப்பாற்றல் ஆகியவற்றின் பயன்களை சங்க பரிவாரத்தின் (ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்புகள்) செல்வாக்காக நாடு உணர்ந்து வருகிறது.

திரு.தத்தோபந்த் தெங்கடி மஹாராஷ்டிர மாநிலம், புனாவில் 2004 அக்டோபர் 14ஆம் தேதி இறைவனுடன் கலந்தார். அவரது 84 ஆண்டுகால வாழ்வில் 62 ஆண்டுகள் சமூகப் பணிக்காகவே வாழ்ந்தார். துறவு மனப்பான்மை உள்ளவர்களால் தான் ஆட்சியாளர்களையும் ஆள முடியும் என்பதற்கு தெங்கடியின் வாழ்வு சிறந்த உதாரணம்.

இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு. தனக்கென வாழாப் பெருந்தகையோரே உலகை ஆக்கப்பூர்வமான முறையில் செழிக்கச் செய்கிறார்கள். அத்தகையவர்களுள், தேசத்தின் மகான்கள் வரிசையில் தவப்புதல்வர் தெங்கடி. அவரை நினைந்து போற்ற வேண்டிய தருணம் இது.