அன்று மாலை சன் தொலைக்காட்சியில் ‘திராவிட மாடல் × குஜராத் மாடல்’ என்ற தலைப்பில் விவாதம் நடத்தினார்கள். நாட்டிலேயே வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழகம். (முதலிடம் மகாராஷ்டிரம்). ஐந்தாம் இடத்தில் இருப்பது குஜராத். பொருளாதாரம் மட்டுமல்ல, மத்திய அரசு வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தும் 15 குறியீடுகளில் 10க்கும் மேற்பட்ட குறியீடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இப்படியிருக்க, ஏன் மேற்கு வங்கம் அல்லது ராஜஸ்தான் அல்லது உத்தரப்பிரதேசம் அல்லது கேரள மாடல்களை (தமிழக) திராவிட மாடலுடன் ஒப்பிட்டும் முரண்பட்டும் விவாதிக்கவில்லை?
நாம் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்; கருத்து இல்லாமல் இல்லையே?
ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (1971) அப்போதைய முதல்வர் திரு. மு.கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிலர் அது வாங்கப்பட்டது என்கிறார்கள். நமக்கு அந்தச் சர்ச்சை தேவையில்லை. ஆனால் பட்டம் வழங்கப்பட்டதை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்தார்கள்; ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காவல் துறை தடியடி நடத்தியது. அந்தக் கலவரத்தில் சுகுமாரன் என்ற மாணவர் இறந்து போனார். பிணத்தின்மீது நின்று டாக்டர் பட்டம் வாங்கினார் என்று எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டனர்.
2006 டிசம்பர் 15ஆம் தேதி, மாநில அரசின் பல்கலைக்கழகமான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அப்போதைய மாநில முதல்வர் திரு. மு.கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவர் முரசொலியில் ‘மு.க’ என்றோ ‘மு.கருணாநிதி’ என்றோ கையெழுத்திட்டு கடிதம் எழுதினாலும், 1971 முதல் ‘டாக்டர் கலைஞர்’ என்ற கோஷமே 2018 வரையிலும் தமிழ் மண்ணில் முழக்கம் இடப்பட்டது.
அவருக்குப் பின் முதல்வரான திரு. எம்.ஜி.ஆருக்கு இரண்டுகௌரவ டாக்டர் பட்டங்கள்!(சென்னை & அமெரிக்க பல்கலைக்கழகம்). அவருக்குப் பின் வந்த செல்வி ஜெ.ஜெயலலிதா, ஐந்து கௌரவ டாக்டர் பட்டங்கள் (தனியார் & அரசு பல்கலைக்கழகங்கள்) பெற்று, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்தார். திராவிடத் தலைவர்கள் விட்டு வைத்திருப்பது கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தை மட்டும் தான்.
இந்த விஷயத்தில், திராவிட மாடலுக்கும் குஜராத் மாடலுக்கும் ஓர் ஒப்பீட்டைப் பார்க்கலாம்.
2014இல் திரு. நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். 2016 இல் காசி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன்வந்தபோது, அதைப் பெற அவர் மறுத்துவிட்டார். அவர் குஜராத் முதல்வராக மூன்று முறை இருந்தபோதும், பலமுறை பல பல்கலைக்கழகங்கள்அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முனைந்தன. அவற்றையும் அவர் பணிவுடன் மறுத்துவிட்டார்.
இந்த விஷயத்தை எடுத்துக் கூறி விடுவார்களோ என்று அஞ்சி, பாஜக மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எவரையும் சன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. ஒருபக்கம் சார்ந்தவர்களை மட்டும் வைத்துக்கொண்டு- மறுபக்க வாய்ப்பே இல்லாமல்- விவாத நிகழ்ச்சி என்று திராவிட முன்மாதிரி, தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
***
ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்டது வீராணம் ஏரி. தமிழகத்தின் விவசாயத்தையும் நீர்வளத்தையும் மேம்படுத்தத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட செயற்கை ஏரி, மிகப் பெரிய ஏரி அது. தொண்டை மண்டலத்தில் (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) இருந்த பல சிறு, குறு ஏரிகளை வீட்டு வசதி வாரியம் மூலம் அழித்த ‘டாக்டர்’ மு.கருணாநிதி, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்திற்கு (திரு. சி.என்.அண்ணாதுரை முதல்வராக அடிக்கல் நாட்டினார்) ஆரம்பம் முதலே பொறுப்பு.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, சென்னைக்கு 235 கி.மீ. தொலைவில் உள்ளது. ராட்சதக் குழாய்கள் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவரத் திட்டம். குழாய்களின் தயாரிப்புப் படங்கள் நாளிதழ்களில் வந்தன. திரைப்படங்களில் நாயக, நாயகிகள் மழைக்கு அந்தக் குழாயில் ஒதுங்கி ஆடினர்; குடித்தனம் நடத்தினர். இதெல்லாம் ஆரம்பத்தில். ஆனால், சென்னைக்குத் தண்ணீர் வரவே இல்லை.
திராவிடப் பரிணாம வளர்ச்சியின் உச்சம் என தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட ‘டாக்டர்’ செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியில் (2004) தண்ணீர் சென்னைக்கு வந்தது. அதற்கு 37 ஆண்டுகள் ஆனது. அது மட்டுமல்ல, செலவும் பல மடங்கு எகிறியது. அவர் வீராணம் திட்டத்தில் ஊழல் செய்த டாக்டர் மு.கருணாநிதி மீது விசாரணை கமிஷன் அமைத்தார். விசாரணைக்கு வராமல் இழுத்தடித்தார் டாக்டர் கலைஞர். இப்பொழுது இரண்டு பேரும் மெரினா கடற்கரையில் அடுத்தடுத்து புதைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் (ஊழல் & திறமையின்மை விஷயத்தில்) திராவிட மாடல் இன்னும் புதைக்கப்படவில்லை.
தேசத்தின் எல்லை ஓரத்தில் உள்ள பாலைவனப் பகுதி கட்ச். சாதாரணப் பாலைவனம் அல்ல, உப்புப் பாலைவனம். கொஞ்சநஞ்சம் தண்ணீரும் உப்புநீர் தான். குடிநீரே இல்லை என்றால், விவசாயம் செய்வது எப்படி?
குஜராத் முதல்வராக திரு. மோடி பொறுப்பேற்ற பிறகு அந்தப் பகுதியில் சிறிதளவான மழைப்பொழிவைப் பயன்படுத்தி நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை மாற்றினார்.
சுமார் 900 கி.மீ. தொலைவில் உள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் நீரை மடைமாற்றினார். 2003இல் திட்டம் நிறைவேறியது. இன்று கட்ச் பகுதியில் குடிநீர்ப் பிரச்னை இல்லை என்பது மட்டுமல்ல, விவசாயமும் நடக்கிறது.
துக்ளக் ஆண்டு விழாவிற்கு சென்னை வந்த அன்றைய முதல்வர் மோடி, ‘அந்தக் குழாய்களில் மாருதி காரில் குடும்பத்தோடு பயணிக்கலாம். அந்த அளவுக்குப் பெரியது மட்டுமல்ல உறுதியானதும் கூட’ என்று கிண்டலடித்தார். நம் மனக்கண் முன்பு வீராணம் குழாய்களின் இடிபாடுகள் வந்து சென்றன. 235 கி.மீ. × 900 கி.மீ. இதுதான் திராவிட மாடல் × குஜராத் மாடல்.
***
காஞ்சி முனிவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மகா பெரியவா) பட்டமேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்தபோது கூவம் ஆற்றோரம், காலையில் சந்தியாவந்தனம், பூஜைகள் செய்தார் என்று படித்திருக்கிறேன். (கலைமகள் பத்திரிகை). சென்னையில் பிறந்து வளர்ந்த நான் பார்த்தது, கூவம் என்ற திறந்தவெளிச் சாக்கடையை மட்டுமே. அதில் பழையபடி படகு விடுவேன் என்றார் திராவிட ‘டாக்டர்’ கருணாநிதி.
திட்டமும் அறிவிக்கப்பட்டது. நிதி 'ஒதுக்க'ப்பட்டது. படகுத் துறைகள் கட்டப்பட்டன. இரண்டு படகுகள், உல்லாசச் சவாரி (எல்லாம் சாக்கடையில்தான்) என புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுடன் சரி. எதிர்கட்சிகள் சட்டசபையில் கேள்வி எழுப்பின. ‘கூவம் ஆற்றில் முதலைகள் உலாவுவதால் ஊழியர்கள் வேலைக்கு வர அஞ்சுகின்றனர். எனவே திட்டம் நிறுத்தப்பட்டது’ என்றார் ‘டாக்டர் கருணாநிதி. (காண்க: மாரிதாஸ் காணொளி).
உலகிலேயே மிக உயரமான சிலையாக (182 அடி உயரம்) தேச ஒற்றுமையின் அடையாளமான, வல்லபபாய் படேலின் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது. இதற்காக இரும்பு சிறிய அளவிலேனும் ஒவ்வோர் இந்தியக் கிராமத்தில் இருந்தும் பெறப்பட்டது. சீனாவில் இருந்து எஃகுத் தகடுகள் வந்தன என்று எதிர்க்கட்சிகள் விதண்டாவாதம் செய்ய, அவை அனைத்தையும் புறந்தள்ளி (2018ல்)உயர்ந்து நின்றார் 'சர்தார்' வல்லபபாய் படேல்.
அந்த சுற்றுலாத் தலத்தில் உல்லாசப் படகுச் சவாரி மட்டுமல்ல, நீர்வழி விமானச் சவாரியும் உள்ளது. விமானம் தண்ணீரில் இறங்கும்; தண்ணீரிலிருந்து மேலே ஏறிப் பறக்கும். இன்று ஆமதாபாத்தில் இருந்து விமானத்தில் பறந்து, சிலையருகே நீரில் இறங்கலாம். தண்ணீரிலிருந்து மேலே ஏறிப் பறந்து ஆமதாபாத் சொல்லலாம்.
அந்த சுற்றுலாப் பகுதியில் ஆற்றில் முதலைகள் இருந்தன. குஜராத்தில் முதலைகள் நடமாட்டம் சாதாரணம். ஒரு சிறிய முதலையை சிறு வயதில் மோடி வீட்டுக்குக் கொண்டுவந்த செய்தியை அவரே சொல்லியிருக்கிறார். (காண்க: ஜெயமோகன்.இன் /125072 – தேதி: 16-8-2019). படேல் சிலைப் பகுதியில் முதலைகள் நடமாடியதை சுற்றுலாப் பயணிகள் பார்த்தார்கள்; புகார் சொன்னார்கள்.
சுமார் 60 கூண்டுகளைப் பயன்படுத்தி 200 முதலைகள் பிடிக்கப்பட்டு, சர்தார் சரோவர் அணையில் விடுவிக்கப்பட்டன என்கிறது ஹொரல்டு பத்திரிகை செய்தி. இது காங்கிரஸ் ஆதரவு பத்திரிகை. ஆங்கில நாளேடுகள் பலவற்றிலும் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து) வந்த இந்தச் செய்தியை தமிழ் ஊடகங்களில் வெளிவராமல் மறைத்தது ‘திராவிட மாயை’.
முதலைச் செய்தியால் படகு நின்றால் அது திராவிட மாடல். நிஜ முதலையே வந்தாலும் சவாரியை நிறுத்த முடியாது என்றால் அது குஜராத் மாடல்.
***
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அடுத்து வந்த முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவருக்கு அடுத்து வந்த முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி, இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்தார். புகார் எழுப்பிய திரு. ஓ.பன்னீர்செல்வம் கமிஷன் முன்பு ஆஜராகாமல்- மூன்று முறை அழைத்தும் ஆஜராகாமல்- ஒளிந்தார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயல்லிதா மரணத்தில் மர்மம் விலகும்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்றது தி.மு.கழக தேர்தல் அறிக்கை. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் அடுத்த ஆறு மாதங்களில் விசாரணை கமிஷன் மூடப்படும் என்று மறைமுகமாக- நீதிமன்றக் கேள்வியின் மூலமாக- சமிக்ஞை காட்டியிருக்கிறது தி.மு.கழக அரசு.
ஊழல் புகாரில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டபோது ‘டாக்டர்’ கருணாநிதி என்ன செய்தார்? தான் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது என்று கூறி, கட்சியினர் மூலம் நிதி வசூலித்தார்.
செல்வி ஜெயலலிதாவோ, ஊழல் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை தமிழில் தர வேண்டும் என்றும், நீதிமன்றம் வந்து போவதில் பாதுகாப்புப் பிரச்னை உள்ளது என்றும், உடல்நலம் சரியில்லை என்றும் கூறி, வாய்தா வாங்கி இழுத்தடித்தது வரலாறு.
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் குறித்து அன்றைய மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது; சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டது. அவப்பெயர் ஏற்படுத்துவதில் ஊடகங்கள் மட்டுமல்ல, அன்றைய மத்திய (சோனியா) காங்கிரஸ் அரசும் முனைந்து நின்றது.
நீதிமன்ற விசாரணை, சி.பி.ஐ. விசாரணை, அன்றைய ரயில்வே அமைச்சர் - மாட்டுத்தீவன ஊழல் புகழ் – லாலு பிரசாத் யாதவ் அமைத்த துறை சார்ந்த விசாரணை கமிஷன் என அவரவர் சக்திக்கு ஏற்ப ஏராளமான விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அனைத்திலும் குற்றவாளியாகக் குறிக்கப்பட்டார், திரு. நரேந்திர மோடி. அடுத்த குற்றவாளி திரு. அமித் ஷா.
இறுதியில், அனைத்து விசாரணை கமிஷன்களும் நீதிமன்றமும் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று உறுதியாகக் கூறின. அதுமட்டுமன்றி விசாரணைக்கு அழைத்தபோது எல்லா நேரங்களிலும் தவறாமல் மோடி ஆஜரானார் என்பதையும் பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணையின்போது வேண்டுமென்றே பல மணி நேரம் அவர் காக்க வைக்கப்பட்டார் என்றும் விசாரணை கமிஷனின் பதிவுகள் கூறுகின்றன.
ஷொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் மாநில அமைச்சராக இருந்த திரு. அமித் ஷா சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று கூறி, நீதிமன்றம் அவரை மாநிலத்தைவிட்டு வெளியேறச் செய்தது. அதனால் அவர் டில்லியில் ஓராண்டுக் காலம் வசிக்க நேரிட்டது. செல்வி ஜெயலலிதா விஷயத்தில் வழக்கைத்தான் வேறு மாநிலத்திற்கு நீதிமன்றம் மாற்றியது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
ஊழல் விசாரணைக்கு நிதி திரட்டுவது, வழக்கை மாநிலத்தை விட்டே விரட்டுவது, விசாரணை கோரினால் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்தால் - அது திராவிட மாடல்.
எல்லாவிதமான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பைத் தந்து, குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டாலும், குற்றவாளி போலச் சித்தரிக்கப்பட்டால் அது குஜராத் மாடல்.
***
“அடியே மீனாட்சி, உனக்கு எதற்கடி மூக்குத்தி? கழற்றடி’ என்று மக்களின் மத உணர்வைப் புண்படுத்திய திராவிடத் தலைவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடப்படும். அங்கு காட்சிப்பொருள் போல அமர்ந்திருக்கும் தலைவரைக் கண்டு கும்பிட்டுவிட்டுப் போவதற்கே தொண்டர்கள் குடத்தில் பணம் போட வேண்டும். இது திராவிட மாடல்.
ஓர் இந்து, ஒவ்வோர் ஆண்டும் தனது பிறந்த நாளைக் கொண்டாடா விட்டாலும், அறுபதாவது ஆண்டை மட்டுமாவது, எளிமையாகவாவது நினைவுபடுத்திக் கொள்வார். முதல்வராக இருந்தபோது, நரேந்திர மோடி தனது அறுபதாவது ஆண்டை சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நாளாக அறிவித்து, உண்ணாவிரதம் இருந்து கொண்டாடினார். அந்த ஆண்டு வெவ்வேறு மாவட்டங்களில் நல்லிணக்க நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருக்கும் போதிலும் அவருக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டவற்றை ஏலம் விட்டு, அந்தப் பணத்தை அரசுக் கருவூலத்தில் சேர்த்து வருகிறார். இது திராவிட மாடலுக்கு மாறான, இன்றும் தொடரும் சீரிய குஜராத் மாடல்.
***
சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, சீனாவின் ஊஹான் வைரஸுக்கு, ஒரே ஆண்டில் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம். நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, பிற நாடுகளுக்கும் இலவசமாக அது வழங்கப்பட்டது. ஆனால், ‘நீ போட்டாயா? உன் மருந்தை நம்ப மாட்டேன், முதலில் நீ போடு’ என்று பிரதமர் மீதும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட அறிவியலாளர்கள் மீதும், மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தினர் திராவிடத் தலைவர்களும் ஊடகங்களும்.
முன்களப் பணியாளர்களுக்கு அடுத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி என்றபோது பொது மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. அதேசமயம், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த திராவிட ஆட்சியில் அரசு பொது மருத்துவமனையை நம்பாமல் தனியார் மருத்துவமனையில், சட்டையில்லாமல் முண்டா பனியனுடன் ஒரு தலைவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிழற்படத்தை வெளியிட்டால், அது திராவிட மாடல்.
***
அடுத்த தலைமுறை மீது கடன் சுமையை ஏற்றுகிறோம் (பெட்ரோல் கடன் பத்திரம்) என்று சொன்ன முந்தைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அசிங்கப்படுத்தாமல், அவரது அரசு வைத்துச் சென்ற கடனை தற்போதைய அரசு அடைத்தால், அதற்காக இன்றைய பிரதமர் அவதூறு செய்யப்பட்டால், அது குஜராத் மாடல். தேர்தல் வாக்குறுதி குறித்துக் கேட்கும்போது மாநில நிதியமைச்சர் ‘தேதி போட்டோமா?’ என்று திருப்பிக் கேட்டால் அது திராவிட மாடல்.
சுருக்கமாகச் சொன்னால் குஜராத் மாடல் முழுநிலவு; கூடிக் கொண்டாடலாம். திராவிட மாடல் அமாவாசை; அன்று பிராயசித்தம் செய்வார்கள்.
காண்க: திருநின்றவூர் இரவிக்குமார்
No comments:
Post a Comment