சாலையில் செல்லும் VVIPயின் காரை ஒரு கான்ஸ்டபிள் நிறுத்தினார். ‘இது என்ன, ஆயிரம் என்கிற எண்ணை தலைகீழாக எழுதியிருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். காரின் உள்ளே இருந்தது அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. அவருக்கு முதலாம் எண் கார் ஒதுக்கப்பட்டது. வெறுமனே 1 என்று எழுதுவதற்கு பதிலாக 0001 என்று எழுதச் சொன்னார் அவர்.
முதலமைச்சரின் காரை கான்ஸ்டபிள் நிறுத்தும் நிலையும் ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? நல்லன எல்லாமே, ஓ அது அந்தக் காலம் என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது.
ஜெயலலிதா எங்காவது பயணப்படுகிறார் என்றால் அவர் செல்லும் சாலைகள் மணிக்கணக்கில் மக்களுக்குச் சொந்தமில்லை. அவருக்கு முன்னும் பின்னும் இதுவே சடங்கு என்றாலும், அவர் காலத்தில் இது ரொம்ப ரொம்ப அதிகம் என்றிருந்தது.
நம் மாநிலத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் மந்திரிமார்கள் செல்கிறார்கள் என்றால் அந்தப் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை. யார் எந்த அவசரம் என்றாலும் பாதுகாப்புக்குட்பட்ட அந்தச் சாலையை தாண்ட முடியாது.
மத்திய மந்திரி, பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் வரும்போதும் போகும்போகும் சாலைகள் அடைக்கப்படுகின்றன. என்ன அவசரம் என்றாலும் யாரும் சாலையைத் தாண்டிப் போக முடியாது.
20 வருடங்களுக்கு முன், சட்டமன்றத் தேர்தல் காலத்தில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு காரில் மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டேன். அப்போது கத்திபாராவில் தெற்கே செல்லும் எல்லா வாகனங்களையும் நிறுத்தினார்கள். நான் பத்திரிகையாளன் என்று சொல்லிக்கொண்டு ஒரு வகையாகப் புறப்பட்டேன். நான் திருச்சி செல்லும் வரையில், அந்தச் சாலையில் எனக்கு முன்போ பின்போ எதிரிலோ எந்த வாகனமும் இல்லை. மதியம் 2.30 மணிக்கு திருச்சியிலும் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். என்ன காரணம்? ராஜிவ் காந்தி திருச்சியில் இருந்து சென்னை வருகிறார் என்பதால். எப்படி வந்தார்? விமானத்தில். அந்த விமானத்தை நான் படாளம் தாண்டிப் பார்த்தேன். விமானத்தில் சென்றவரை சாலையில் பாதுகாத்த நம் காவல் துறை, பொது இடத்தில் அவரைக் காப்பாற்ற முடியவில்லையே!
சமீபத்தில் ஜனாதிபதி தன் சொந்த ஊருக்குச் சென்றபோது ஒரு மேம்பாலத்தில் போக்குவரத்து பலமணி நேரம் நிறுத்தப்பட்டிருந்ததால், மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் பெண்மணி அங்கேயே உயிரிழந்தார். ஜனாதிபதி காவல் துறையை மன்னிப்பு கேட்கச் சொன்னார். அதனால் மட்டும், போன உயிர் திரும்பி வந்துவிடுமா?
இதுவரை இப்படி VVIP வாகனங்களினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த காலத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போராடியவர்களின் கதை சோகமானது. நாடு நெடுக இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
கடந்த 30 வருடங்களில் 20 நாடுகளுக்குமேல் பயணம் செய்திருக்கிறேன். சில நாடுகளில் மாதக்கணக்கில் வாரக்கணக்கில் தங்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் எந்த நாட்டிலும் அரசியல்வாதிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதை நான் பார்த்ததில்லை. மக்களோடு மக்களாக VVIP பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். நம் நாட்டில்தான் இப்படிபட்ட அலங்காரமும், அகங்காரமும்.
விழாக்களினால் விளம்பரம் பெறுபவர்கள் VVIPக்கள்; மக்களுக்கு எந்த லாபமும் இல்லை.
இவர்கள் திறந்து வைக்காவிட்டாலும் பாலத்தில் வாகனங்கள் ஓடும். இவர்கள் தொடங்கிவைக்காவிட்டாலும் கல்வி நிலையங்கள் இயங்கும். இவர்கள் தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை. மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக்கொண்டு தங்கள் பயணங்களில் மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள் இவர்கள். இந்த நிலை தொடரத்தான் வேண்டுமா?
என்று நம் நாட்டில் VIPகள், VVIPகள் என்று சொல்லப்படுபவர்கள் மக்களோடு மக்களாகப் பயணிப்பார்களோ அப்போது அவர்கள் நம்மவர்கள். இப்போது அவர்கள் மேலானவர்கள்.
அவர்களுக்கென்று தனியாக மேம்பாலம் கட்டலாம்; ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் வழங்கலாம். அல்லது விமான நிலையம் அருகிலேயே விழாக்களை நடத்திவிடலாம். விமான நிலையங்கள் இல்லாத ஊர்களுக்கு VVIP கள் வர வேண்டாம்.
என்று நம் நாட்டில் VIPகள், VVIPகள் என்று சொல்லப்படுபவர்கள் மக்களோடு மக்களாகப் பயணிப்பார்களோ அப்போது அவர்கள் நம்மவர்கள். இப்போது அவர்கள் மேலானவர்கள்.
அவர்களுக்கென்று தனியாக மேம்பாலம் கட்டலாம்; ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் வழங்கலாம். அல்லது விமான நிலையம் அருகிலேயே விழாக்களை நடத்திவிடலாம். விமான நிலையங்கள் இல்லாத ஊர்களுக்கு VVIP கள் வர வேண்டாம்.
கொரோனாவின் தயவினால் இப்போது காணொலி வாயிலாக விழாக்கள் நடைபெறுகின்றன. இனியும் அப்படி நடக்கலாமே. மந்திரிகளும் தங்கள் இடத்தைவிட்டு நகரவேண்டாம். மக்களும் ரோட்டில் சுதந்திரமாக நடமாடலாம்.
குறிப்பு:
திரு. ஆர்.நடராஜன், தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; சென்னையில் வசிக்கிறார். இக்கட்டுரை, ‘துக்ளக்’ இதழில் வெளியானது.நன்றி: துக்ளக்
No comments:
Post a Comment